ஊரின் மிக அழகான பெண்

மேற்கண்ட தலைப்பில் என்னுடைய ஒரு மொழிபெயர்ப்பு நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மறுபதிப்பாக இருந்தாலும் இதில் ஜான் பால் சார்த்ர் எழுதிய சிறுகதை சுவர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்த சிறுகதை அது. படிகள் பத்திரிகையில் வெளிவந்தது. கீழே சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி எழுதிய ஊரின் மிக அழகான பெண் சிறுகதை.

புத்தகத்தை வாங்குவதற்கான விவரங்கள்:

ஊரின் மிக அழகான பெண்

சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி

அந்த ஐந்து சகோதரிகளில் காஸ்தான் மிகவும் அழகானவள். இளையவள். ஊரிலேயே மிகவும் அழகான பெண் அவள்தான். பாதி செவ்விந்தியத்தன்மை கொண்ட அவள் உடம்பு ஒரு பாம்பைப் போன்ற லாவகமும், வசீகரமும் கொண்டது. தீப்பொறி பறக்கும் கண்கள். அதே போன்ற உடம்பு. திரவ வடிவில் உலவும் தீ அவள். ஆவியைப் போல் பீறிட்டுக் கிளம்பும் தீவிரத்தைத் தாங்க முடியாததைப் போன்றதொரு ரூபத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களைப்போல் தோன்றுவாள். அவளுடைய உடம்பைப் போலவேதான் அவள் கூந்தலும், நீண்டு, கருத்து பட்டுப் போன்ற மென்மையுடன் சுருள் சுருளாக இருக்கும். காஸ், ஒன்று, படு உற்சாகமாக இருப்பாள். அல்லது, படு சோர்வாக இருப்பாள். இடைப்பட்ட நிலை என்பதே காஸிடம் கிடையாது. அவள் ஒரு பைத்தியம் என்றார்கள் சிலர். அவர்கள் சராசரிகள். சராசரிகளால் காஸைப் புரிந்துகொள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்தவரை அவள் ஒரு செக்ஸ் மெஷின்.  அவள் பைத்தியமா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. காஸ் நடனமாடுவாள். ஆண்களின் சகவாசம் உண்டு. அவர்களை முத்தமிடுவாள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ரொம்பவும் நெருங்கப் பார்த்தால் விலகிவிடுவாள்.

அவள் புத்தியைப் பயன்படுத்தாமல் தன் அழகைத் தவறாகப் பயன்படுத்துகிறாள் என்று குறைகூறுகிறார்கள் அவளுடைய சகோதரிகள். ஆனால் காஸூக்கு புத்தியும் உண்டு, அறிவும் உண்டு.  ஓவியம் தீட்டுவாள். நடனமாடுவாள். பாடுவாள். களிமண்ணில் சிற்பங்கள் செய்வாள். அதோடு, யாராவது மனதளவிலோ, உடல் ரீதியாவோ பாதிக்கப்பட்டால் மிகவும் கவலைப்படுவாள். அவள் மிகவும் வித்தியாசமானவள். அவளுடைய போக்கு, நடைமுறை வாழ்க்கைக்குக் கொஞ்சமும் ஒத்துவராதது. அவள் சகோதரிகளுக்கு அவள் மீது பொறாமை. காரணம் – அவர்களுடைய ஆண் நண்பர்களுக்கு  அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அவர்களையும் அவள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அவள் மீது அவர்களுக்குக் கோபம். அசிங்கமானவர்களுடன் நட்பாக இருப்பதுதான் அவள் சுபாவம். கம்பீரமான ஆண்களைப் பார்த்தால் எரிச்சல் அடைவாள். “டப்பாப் பயல்கள். காதிலும் மூக்கிலும் சவாரி செய்யும் வெற்றுப் பயல்கள். உள்ளே சரக்கு இல்லாத வெறும் பயல்கள்” என்று கண்டபடி திட்டுவாள். கோபம் வந்தால் அவள் பைத்தியம் என்று சிலர் சொல்கிறார்கள். அவளுடைய அப்பா குடித்தே செத்தான். மகள்களைத் தனியே விட்டு விட்டு ஓடிவிட்டாள் அம்மா. பெண்கள் ஒரு உறவினர் வீட்டுக்குச் செல்ல அவர்கள் அந்தப் பெண்களை ஒரு காப்பகத்தில் கொண்டுபோய் விட்டு விட்டார்கள். காஸின் சகோதரிகளை விட காஸூக்குத்தான் அந்தக் காப்பகம் பெரும் துன்பமாக அமைந்தது. அங்கிருந்த பெண்கள் காஸைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். காஸ் பதிலுக்கு அவர்களோடு சண்டை போட்டாள். அப்படி நடந்த இரண்டு சண்டைகளில் அவளுடைய இடது கை முழுவதும் கத்திக் காயங்கள் ஏற்பட்டன. இடது கன்னத்திலும் ஒரு நிரந்தரமான வெட்டுக்காயம். ஆனால் அது அவளுடைய அழகைக் குறைப்பதற்குப் பதிலாக கூடுதலாகவே ஆக்கிக் காட்டியது. அந்தக் காப்பகத்திலிருந்து வெளியேறிய பிறகு அவளை நான் வெஸ்ட் எண்ட் பாரில் பல இரவுகளில் சந்தித்திருக்கிறேன். ஐந்து பேரிலும் கடைசி என்பதால், காப்பகத்திலிருந்தும் அவள் கடைசியாகவே வெளியேற முடிந்தது. நேராக வந்து என்னருகே அமர்ந்தாள். அநேகமாக இந்த ஊரில் நான்தான் மிகவும் அசிங்கமானவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவள் என்னிடம் வந்திருக்க வேண்டும்.

“குடிக்கிறாயா?” என்று கேட்டேன்.

“ஓ, குடிக்கலாமே…”

அன்று இரவு நடந்த உரையாடலில் எந்த அசாதாரணத் தன்மையும் இருந்ததாகத் தெரியவில்லை. காஸை சந்தித்த ஒரு உணர்வு மட்டுமே இருந்தது. அவள் என்னைத் தேர்ந்தெடுத்ததால். அவ்வளவுதான். குடிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. நிறையவே குடித்தாள். குடிப்பதற்குரிய வயதுள்ளவளாகத் தெரியவில்லை. ஆனால் பார் பணியாளர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஒருவேளை பொய்யான அடையாள அட்டை வைத்திருக்கிறாளோ என்னவோ. எப்படியோ, அவள் ஒவ்வொரு முறை கழிப்பறைக்குப் போய்விட்டு வந்து என்னருகே அமரும்போதும் எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. ஊரிலேயே மிகவும் அழகானவள் என்பது மட்டுமல்ல, நான் பார்த்த பெண்களிலேயும் அழகானவள் அவள்தான். அவள் இடுப்பில் கையை வைத்து அவளை முத்தமிட்டேன்.

“நான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டாள்.

“நிச்சயமாக அழகு மட்டுமல்ல. வேறு ஏதோ வசீகரமும் உன்னிடம் இருக்கிறது.”

“எல்லோரும் என்னை அழகி என்றே சொல்கிறார்கள். உண்மையிலேயே நீ அப்படி நினைக்கிறாயா?”

“அழகு என்ற வார்த்தை ரொம்பக் கம்மி. உன் அழகு அதை விட மேல்…”

காஸ் தன் கைப்பையில் எதையோ தேடினாள்.

கைக்குட்டையாக இருக்கும் என்று நினைத்தேன். இல்லை, அவள் கையில் இருந்தது ஒரு கூர்மையான நீண்ட ஊசி. நான் தடுப்பதற்குள் அந்த ஊசியைத் தன் மூக்கின் பக்கவாட்டில் வைத்து அழுத்திக் குத்தி விட்டாள். பயங்கர அதிர்ச்சியும், அருவருப்புமாக உணர்ந்தேன். அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே “இப்போது என்னை அழகி என்று சொல்வாயா? இப்போது என்ன நினைக்கிறாய், மகனே?” என்று கேட்டாள். முதலில் அவள் மூக்கில் குத்திக்கொண்டு நின்ற அந்த ஊசியை எடுத்துவிட்டு, என் கைக்குட்டையை வைத்து ரத்தத்தை நிறுத்தினேன். அங்கிருந்த பலரும் – பார் பணியாளன் உட்பட – இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  பிறகு பார் பணியாளன் ஓடி வந்தான்.

“இதோ பார், இன்னொரு தடவை இப்படிச் செய்தால் நீ வெளியே போக வேண்டிருக்கும்.  உன்னுடைய நாடகம் இங்கே எங்களுக்குத் தேவையில்லை.”

”Oh, Fuck you man!” என்றாள் அவள்.

“அவளைக் கொஞ்சம் ஒழுங்காக நடந்துகொள்ளச் சொல்” என்று என்னிடம் சொன்னான் அவன்.

“சரியாகி விடுவாள்” என்றேன் நான்.

“இது என்னுடைய மூக்கு. இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அது என் இஷ்டம்.”

“வேண்டாம். நீ அப்படிச் செய்தால் எனக்கு வலிக்கிறது.”

“என்ன சொல்கிறாய்? என் மூக்கை ஊசியால் குத்தினால் உனக்கு வலிக்கிறதா?”

“ஆமாம், வலிக்கிறது. நிஜமாகத்தான்.”

“ஓகே. இனிமேல் செய்யவில்லை. Cheer up!”

கைக்குட்டையால் மூக்கைப் பிடித்தபடி, வலியைப் பொறுத்துக் கொண்டே அவள் என்னை முத்தமிட்டாள். பார் மூடிய பின் நாங்கள் என் அறைக்குத் திரும்பினோம். பியர் அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அவளைப் பற்றி எனக்கு முழுமையாகப் புரிந்தது. அவன் அன்பினாலும், கருணையினாலுமே உருவானவள். அவளையும் அறியாமலேயே அவள் அப்படியிருந்தாள். அதே சமயம், சட்டென்று ஒரு கொந்தளிப்பான மனோநிலைக்குப் பாய்வதற்கும் தவறுதில்லை. Schitzi!* ஓர் அழகான, ஆன்மீக ரீதியான Schitzi.

ஓருவேளை யாராவது ஒருவன் அல்லது ஒரு விஷயம் அவளை முற்றிலுமாக அழித்து விடக்கூடும். ஆனால் அது நானாக இருக்க மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம். நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். நான் விளக்கை அணைத்த பிறகு காஸ் கேட்டாள்.

“எப்போது வேண்டும் உனக்கு? இப்போதா, காலையிலா?”

“காலையில்” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்தேன்.

காலையில் எழுந்து காஃபி போட்டுக்கொண்டு வந்து அவளை எழுப்பினேன். சிரித்தாள்.

“இரவில் வேண்டாம் என்று மறுத்த முதல் ஆள் நீதான்.”

“பரவாயில்லை. வேண்டுமானால் அதை முழுவதுமாகவே கூட தவிர்த்து விடலாம்.”

“இல்லை. பொறு. எனக்கு இப்போது வேண்டும். பாத்ரூம் போய் விட்டு வருகிறேன்.”

சீக்கிரமாகவே திரும்பி வந்தாள். அப்போது அவள் அற்புதமாக இருந்தாள். அவளுடைய கருங்கூந்தல் ஜொலித்தது. அவள் கண்களும், உதடுகளும் கூட ஜொலித்தன. அவளே ஜொலித்துக்கொண்டுதான் இருந்தாள்… அவள் தன் உடலை ஒரு அற்புதமான பொருளைப்போல் மிக மெதுவாகக் காட்டினாள். பிறகு படுக்கையில் படுத்தாள்.

“வா, என் காதலனே.”

நானும் அவளருகே சென்று படுத்தேன். அளப்பரிய முத்தங்களைக் கொடுத்தாள். அவள் அசைவுகளில் அவசரமேயில்லை. என் கைகளை அவள் மீதும் அவள் கூந்தலின் மீதும் படரவிட்டேன். அவள் மீது ஏறி இயங்கினேன். அவள் உறுப்பு சூடாகவும், இறுக்கமாவும் இருந்தது. நீண்ட நேரம் தொடர வேண்டும் என்று மெதுவாக இயங்கினேன். அவள் கண்கள் என்னை நேரடியாகப் பார்த்தன.

“உன் பெயர் என்ன?” என்று கேட்டேன்.

“தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது?”

நான் சிரித்துவிட்டுத் தொடர்ந்து இயங்கினேன். பிறகு அவள் ஆடைகளை உடுத்திக் கொண்டாள். அவளை பாரில் கொண்டுபோய் விட்டேன். அவளை மறக்க முடியவில்லை. அதன்பிறகு நான் எதுவும் செய்யவில்லை. மதியம் இரண்டுமணி வரை தூங்கினேன். பிறகு எழுந்து தினசரியைப் படித்தேன். அவள் ஒரு பெரிய ’யானைக் காது’ இலையை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தபோது நான் குளியல் தொட்டியில் இருந்தேன்.

“இந்நேரம் நீ குளியல் தொட்டியில்தான் இருப்பாய் என்று நினைத்தேன். அதனால்தான் அதை மறைக்க இந்த இலையைக் கொண்டு வந்தேன் ஆதிமனிதா…”

குளியல் தொட்டியில் கிடந்த என்மீது அந்த ’யானை’ இலையை எறிந்தாள்.

“நான் குளியல் தொட்டியில் இருப்பேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?”

“எப்படியோ தெரியும்.”

அநேகமாக தினமுமே நான் குளியல் தொட்டியில் இருக்கும் போது காஸ் வருவாள். அது வெவ்வேறு நேரமாகக் கூட இருக்கும். ஆனால் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவாள். அபூர்வமாகவே தவறவிட்டிருக்கிறாள். நிச்சயம் கையில் அந்தப் பெரிய ‘யானைக் காது’ இலை இருக்கும்.  பிறகு, கலவி கொள்வோம். ஒருசில இரவுகளில் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். குடித்துவிட்டுத் தகராறு செய்து மாட்டிக் கொண்டு விடுவாள். நான்தான் ஜாமீன் கொடுத்து ஜெயிலிலிருந்து அழைத்து வருவேன்.

“தேவடியாப் பயல்கள்… இரண்டு பெக் வாங்கிக் கொடுத்து விட்டால் என் பேண்டைக் கழற்றிவிடலாம் என்று பார்க்கிறான்கள்.”

“அவர்கள் வாங்கிக் கொடுப்பதை நீ ஏற்றுக் கொள்ளும் போதே பிரச்சினை ஆரம்பம் என்றுதான் அர்த்தம்…”

“அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்று நினைத்தேன். என் உடம்பை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்று யார் கண்டது?”

“எனக்கு உன்னையும் பிடித்திருக்கிறது. உன் உடம்பையும் பிடித்திருக்கிறது. ஆனால் மற்ற ஆண்களால் உன் உடம்பை மீறி யோசிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

ஆறுமாதங்கள் நான் ஊரில் இல்லை. எங்கெங்கோ பொறுக்கித்திரிந்து விட்டு ஊர் திரும்பினேன். அந்த நாட்களில் நான் என்றுமே காஸை மறந்ததில்லை. எங்களுக்குள் சில வாக்குவாதங்கள் நடந்துள்ளன. எப்படியிருந்தாலும் விலகிவிடத்தான் வேண்டும் என்று தோன்றும். நான் திரும்பி வந்தபோது, இத்தனை நாட்களில் அவள் இந்த இடத்தைவிட்டுப் போயிருப்பாள் என்றே நினைத்தேன். ஆனால் வெஸ்ட் எண்ட் பாரில் நான் உட்கார்ந்திருந்த போது முப்பது நிமிடங்களில் வந்து விட்டாள். வந்து என்னருகில் அமர்ந்தாள்.

“Well bastard!  கடைசியில் திரும்பி வந்துவிட்டாய்…”

நான் அவளுக்கும் சரக்கை ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்தேன். கழுத்து வரை மூடிய சட்டை அணிந்திருந்தாள். இம்மாதிரி உடையில் அவளை நான் இதுவரை பார்த்ததில்லை. அதோடு, ஒவ்வொரு கண்ணின் கீழும் ஒரு ஊசி குத்தப்பட்டிருந்தது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் அந்த ஊசிகளின் முனையைத்தான்.

“அடப்பாவி… இன்னமும் நீ உன் அழகைச் சிதைத்துக் கொண்டுதான் இருக்கிறாயா?”

“இது ஒன்றும் நிஜ ஊசி இல்லை, முட்டாள்.”

“நீ ஒரு பைத்தியம்.”

” I have missed you.”

“வேறு யாரும் உண்டா?”

“ம்ஹூம், யாரும் இல்லை. நீ மட்டும்தான். ஆனால் தொழில் செய்கிறேன். பத்து டாலர். உனக்கு மட்டும்தான் இலவசம்.”

“முதலில் அந்த ஊசிகளை எடு.”

“அது நிஜ ஊசியில்லை.”

“அதைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருகிறது.”

“நிச்சயமாக?”

“ஆமாம், நிச்சயமாக”

காஸ் மெதுவாக அந்த ஊசிகளை எடுத்துத் தன் பர்ஸில் வைத்துக் கொண்டாள்.

“ஏன் உன் அழகோடு பிரச்சினை செய்துகொண்டிருக்கிறாய்? ஏன் நீ அதோடு சமாதானமாக வாழக்கூடாதா?”

“முடியாது. ஏனென்றால் என்னிடம் அது ஒன்றுதான் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். அழகு ஒன்றுமேயில்லை. அழகு நிரந்தரமானதல்ல. அசிங்கமானவனாக இருக்க நீ எவ்வளவு அதிர்ஷடம் செய்திருக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாது.”

“ஓகே. நான் அதிஷ்டக்காரன்தான்.”

“நீ அசிங்கம் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் நினைக்கிறார்கள். உன் முகம் மிகவும் வசீகரமானது.”

“நன்றி.”

மீண்டும் குடித்தோம்.

“இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“ஒன்றும் செய்யவில்லை. எதிலும் ஈடுபாடு வரவில்லை.”

“அந்நியர்களோடு உறவு கொள்வது என்னால் முடியும் என்று தோன்றவில்லை. அது மிகவும் சலிப்பூட்டுவது.”

“ஆமாம், சலிப்பூட்டுவதுதான். எனக்கு எல்லாமே சலிப்பூட்டுகிறது.”

ஒன்றாகவே கிளம்பினோம். தெருக்களில் இன்னமும் மக்கள் காஸை உற்றுத்தான் பார்த்தார்கள். காஸ் ஒரு அழகான பெண். ஒருவேளை முன்னைவிட இப்போது இன்னும் அழகாக இருந்தாளோ என்னவோ. என்னுடைய இடத்துக்குச் சென்றோம். ஒரு ஒயின் பாட்டிலைத் திறந்தேன். பேசிக்கொண்டிருந்தோம். காஸூக்கும் எனக்கும் இயல்பாகவே ஒத்துப் போனது. அவள் கொஞ்ச நேரம் பேசினாள். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு நான் பேசினேன். எங்கள் உரையாடல் எந்தக் கஷ்டமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து சில ரகசியங்களைக் கண்டுபிடிப்பதாகத் தோன்றியது. ஒரு நல்ல ரகசியத்தைக் கண்டுபிடிக்கும்போது காஸ் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு… அவளால் மட்டும்தான் அப்படிச் சிரிக்க முடியும். தீயிலிருந்து கிளம்பும் சிரிப்பு அது. பேச்சினிடையே முத்தமிட்டுக் கொண்டோம். இன்னும் நெருக்கமாக அமர்ந்து கொண்டோம். மிகவும் சூடாகி விட்டதால் படுக்கைக்குச் சென்றோம். அவள் தன் சட்டையைக் கழற்றியபோதுதான் அதைப் பார்த்தேன். கழுத்தில் தாறுமாறாக வெட்டப்பட்ட அசிங்கமான ஒரு காயம். மிகப் பெரிய ஆழமான காயம்.

“அடப்பாவி… அடப்பாவி… என்ன செய்து வைத்திருக்கிறாய் நீ?”

“ஒரு உடைந்த பாட்டிலை வைத்து ஒரு நாள் இரவு முயற்சி செய்தேன். இனிமேல் என்னை உனக்குப் பிடிக்காதா? நான் இன்னமும் அழகாக இருக்கிறேனா?”

நான் அவளைக் கட்டிலுக்கு இழுத்து முத்தமிட்டேன். அவள் என்னைத் தள்ளிவிட்டு நகைத்தாள். “சில பேர் பத்து டாலரைக் கொடுத்து விட்டு நான் ஆடையைக் களைந்ததும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து விடுகிறார்கள். நான் அந்தப் பத்து டாலரை எடுத்துக் கொள்வேன். வேடிக்கைதான்.”

“என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை… காஸ் bitch . ஐ லவ் யூ… உன்னை அழித்துக் கொள்வதை நிறுத்து. நான் பார்த்ததிலேயே மிக மிக ஜீவனுள்ள பெண் நீ ஒருத்திதான்.”

நாங்கள் மீண்டும் முத்தமிட்டோம். காஸ் சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள். அவள் கண்ணீரை என்னால் உணர முடிந்தது. மரணத்தின் கொடியைப் போல் அவளுடைய நீண்ட கருங்கூந்தல் என்னருகே விழுந்து கிடந்தது. நாங்கள் நீண்டதொரு அற்புதமான கலவியில் ஈடுபட்டோம். காலையில் எழுந்து காலை உணவைத் தயார் செய்து கொண்டிருந்தாள் காஸ். அவள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதைப் போலிருந்தது. பாடிக்கொண்டிருந்தாள். நான் படுக்கையிலேயே இருந்து அவள் சந்தோஷமாக இருப்பதை ரசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் என்னருகே வந்து ”ஏய், பாஸ்டர்ட்! எழுந்து வா, கொஞ்சம் உன் மூஞ்சியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு சாப்பிட வா…” என்று சொல்லி எழுப்பினாள்.

அன்று அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். அது ஒரு வேலை நாள். இன்னும் கோடைக் காலம் ஆரம்பமாகவில்லை. அதனால் கடற்கரை கூட்டமில்லாமல் அழகாக இருந்தது. சிலர் படுத்துக் கிடந்தார்கள். சிலர் கல்பெஞ்சுகளில் அமர்ந்து முட்டாள்தனமான இந்த வாழ்வின் கதியில் எப்போதோ இறந்துபோன தங்கள் கணவன்மார்கள் வைத்து விட்டுப்போன ஆஸ்திகளை எப்படி விற்பது என்று பேசி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் அந்த காற்றில் ஓர் அமைதியிருந்தது. நாங்கள் நடந்து சென்று ஒரு இடத்தில் அமர்ந்தோம். அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து இருப்பதே சந்தோஷமாக இருந்தது. சான்ட்விச்சும், சிப்ஸூம், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வந்தேன். பிறகு காஸை அணைத்துக் கொண்டேன். ஒரு மணிநேரம் தூங்கினோம். கலவியில் ஈடுபடுவதைவிட இது நன்றாக இருந்தது. அது ஒரு அற்புதமான உணர்வு. தூங்கி எழுந்து என்னுடைய இடத்துக்கு வந்தோம். இரவு உணவைத் தயார் செய்தேன். சாப்பிட்ட பின் அவளிடம் “நாம் இருவரும் சேர்ந்தே இருக்கலாமே?” என்றேன். என்னைப் பார்த்தப்படியே நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு ‘வேண்டாம்’ என்று மெதுவாகச் சொன்னாள். அவளை பாரில் கொண்டுவிட்டு சரக்கு வாங்கிக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். மறுநாள் எனக்கு ஒரு ஃபாக்டரியில் ஒரு கூலி வேலை கிடைத்தது. அந்த வாரம் முழுவதும் அந்த வேலையிலேயே கழிந்தது. வேலை காரணமாக மிகவும் களைப்பாக இருந்ததால் பாருக்கும் போக முடியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை இரவு வெஸ்ட் எண்டுக்குச் செல்ல முடிந்தது. காஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். மணிக்கணக்கில் ஆனது. அவளைக் காணோம். எனக்கு நல்ல போதை ஏறிய பிறகு பார் பணியாளன் என்னிடம் வந்து “உன் தோழிக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்” என்றான்.

“என்ன சொல்கிறாய்?”

“ஐ யாம் ஸாரி, உனக்குத் தெரியாதா?”

“தெரியாது.”

“தற்கொலை செய்து கொண்டாள். நேற்றுதான் புதைத்தார்கள்.”

“என்ன, புதைத்தார்களா?” என்னால் அவன் சொல்வதை நம்பமுடியவில்லை. எந்தக் கணத்திலும் வாசல் கதவைத் திறந்து கொண்டு வந்துவிடுவாள் என்பது போல்தான் இருந்தது. அவள் எப்படி செத்திருக்க முடியும்?

“அவளுடைய சகோதரிகள்தான் அவளைப் புதைத்தார்கள்.”

“தற்கொலையா? எப்படிச் செத்தாள் என்று சொல்ல முடியுமா?”

“கழுத்தை அறுத்துக் கொண்டாள்.”

“ஓ… எனக்கு இன்னொரு பெக் கொடு.”

பார் முடியும் வரை குடித்தேன். அந்த ஐந்து சகோதரிகளில் காஸ்தான் மிகவும் அழகானவள். இந்த ஊரிலேயே அழகானவளும் அவள்தான். எப்படியோ என் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அவளை என்னோடு தங்க வற்புறுத்தியிருக்க வேண்டும். அவள் மறுத்தவுடன் நான் தலையை ஆட்டி ஒப்புக் கொண்டது பெரும் தவறு. அவள் என்னை வெகுவாக நேசித்தாள் என்றே அவளுடைய ஒவ்வொரு செய்கையும் உணர்த்தியது. நான்தான் புரிந்துகொள்ளாமல் அசட்டையாக இருந்து விட்டேன். நான்தான் அவளைக் கொன்று விட்டேன். எனக்கு மரணதண்டனைதான் சரி. நான் ஒரு நாய். அதுசரி, நாய்களை ஏன் திட்ட வேண்டும்? எழுந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்து மடமடவென்று அவ்வளவையும் குடித்தேன். வெளியே யாரோ ஹார்ன் அடிக்கிறார்கள். தொடர்ந்து பலமாக அடித்துக்கொண்டிருந்தார்கள். நான் பாட்டிலை வைத்து விட்டுக் கத்தினேன். “டேய் தேவடியாள் மகனே… நிறுத்துடா.” இரவு நீண்டு கொண்டிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.