143. ந. முத்துசாமி ந. முத்துசாமி என்று ஒர்த்தர்…

என்ன இருந்தாலும் பொதுஜனம் பொதுஜனம்தான், எழுத்தாளர் எழுத்தாளர்தான் என்பதை பொதுஜனமும் நிரூபித்து விட்டது, எழுத்தாளர்களும் நிரூபித்தி விட்டார்கள்.  பொதுஜனம் என்னைத் திட்டாத திட்டு இல்லை.  எடுத்து எடுப்பில் செத்துப் போ, புழுத்துப் போய் சாவாய்.  ஆஹா.  யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் பரம்பரையிடம் வந்து செத்துப் போ செத்துப் போ என்றால் என்ன பயம் வரும்.  இந்தப் புழு மேட்டர்தான் கொஞ்சம் நடுங்க வைக்கிறது.  ரொம்பத் தாங்க முடியாமல் போனால் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஒரு கருணைக் கொலை ஊசியைப் போடச் சொல்லி விட வேண்டியதுதான்.  நான் என்ன சொன்னாலும் செய்வார்கள்.  அப்படிப்பட்ட நண்பர்கள்.  எழுத்தாளர்களும் என்னை பெருமிதத்தில் மிதக்கச் செய்து விட்டார்கள்.  ஒருத்தர் கூட செத்துப் போ என்றெல்லாம் சொல்லவில்லை.  புழு புழுக்கும் என்றும் சொல்லவில்லை.  என்ன இருந்தாலும் எழுத்தாளனிடம் ஈரம் இருக்கும் என்று நிரூபித்து விட்டார்கள்.  ஒரே ஒருத்தர்தான் கோபம் தாங்க மாட்டாமல் ங்கோத்தா ங்கொம்மா பாணியில் ரொம்ப ரொம்பக் கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தார்.  பாவம், என் வயதுக்காரர்.  ரொம்ப மரியாதை வைத்திருந்தேன்.  என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.  ஆனாலும் என்ன செய்ய, அவருடைய கடவுளைத் திட்டி விட்டதாக அவர் நினைத்து விட்டார். 

பொதுஜனத்துக்கு மீண்டும் சொல்கிறேன்.  எஸ்பிபி ஒரு மக்கள் கலைஞன்.  எட்டு கோடி மக்கள் திரளின் சுகதுக்கங்களில் ஒன்றாகப் பிணைந்தவர்.  அவரது மரணத்துக்கு நீங்கள் எனக்கு சாபம் கொடுப்பதை விட அரசாங்க விடுமுறை அறிவிக்கச் சொல்லியிருக்க வேண்டும்.  அவரது மரண ஊர்வலத்துக்கு ராணுவ மரியாதையோடு அரசு அடக்கம் செய்திருக்க வேண்டும்.  என்னைத்தான் நீங்கள் பேசவே விடவில்லையே?  நான் நூறு முறை சொல்லி விட்டேன், என் பிராது எழுத்தாளர்களோடு என்று.  உங்கள் கண்ணீரை விட அந்த மக்கள் கலைஞருக்கு ஒரு நாள் அரசு விடுமுறையும் ராணுவ மரியாதையுடனான அடக்கமும் கொடிக்கம்பங்கள் அரை உயரத்தில் பறப்பதுதான் செய்ய வேண்டிய மரியாதை.  அதுதான் நடந்திருக்க வேண்டும்.  அதுதான் முறையும் கூட.  ஆனால் நீங்கள் தியாகராஜ பாகவதரையே மறந்தவர்கள்.  பி.யு. சின்னப்பாவையே மறந்தவர்கள்.  கண்ணதாசனையே மறந்தவர்கள்.  நாளை எஸ்பிபியையும் மறந்து போவீர்கள்.  எனக்கு நீங்கள் கொடுத்த சாபம் மட்டும் உங்களிடம் என் மீதான வெறுப்பாகத் தங்கிப் போகும்.  உடம்பில் சேரும் கெட்ட கொழுப்பைப் போல.  அதை விடுங்கள்.  உங்களோடு எனக்குப் பேச்சே இல்லை.

எழுத்தாளர்களுக்கு வருகிறேன்.  காதலன் படத்திலேயே எஸ்பிபியைப் பற்றியும் அவரது நடனத்தைப் பற்றியும் வரிந்து வரிந்து எழுதியவன் நான்.  எஸ்பிபி ஒரு பிரமாதமான நடனக்காரர், பிரமாதமான நடிகர்.  இப்போதும் அதை எழுதுவேன்.  வெகுஜனக் கலாச்சாரத்துக்கு நான் எதிரி அல்ல.  ஆனால் எழுத்தாளன் என்பவன் சினிமா ரசனையை வைத்தா உருவாகிறான்?  அதன் மூலமாகவா உங்கள் கைத்தொழில் உங்களுக்குப் பழகியது?  Craft என்ற வஸ்துவைச் சொல்கிறேன்.  கவிதைக்கு 3000 வருடமும் உரைநடைக்கு 150 வருடமும் தந்த கொடையின் மூலம் உங்களுக்கு அந்தத் திறமை வந்தது.  அதன் வாரிசுகளில் ஒருவர்தான் ந. முத்துசாமி என்பவர்.  அவர் மரணத்துக்கு ரஜினி கமல் தவிர மற்ற பெரும்பாலான சினிமாக்காரர்கள் வந்து சிறப்பித்தனர்.  அது ஒரு கல்யாணச் சாவு.  காரணம், அவருடைய நாடகப் பட்டறை சினிமா நடிகர்களை உருவாக்கும் பள்ளியாக மாறியது.  அவரும் சினிமாக்காரர்களால் அறியப்பட்டார்.  அவர் பாதம் தொட்டே அவர்கள் பேச ஆரம்பிப்பர்.  ஆனால் எழுத்துக்காரராக நீங்கள் முத்துசாமியின் மரணத்துக்குக் கவிதை எழுதவில்லையே?  இப்போது எஸ்பிபியின் மரணத்துக்குக் கவிதை எழுதாத கவிஞனே இல்லையே?  காரணம், உங்கள் உள்ளியக்கம் சினிமாவினால் செயல்படுகிறது.  உங்கள் சிந்தனையை சினிமாதான் கட்டமைக்கிறது.  நீங்கள் வெகுஜன கலாச்சாரத்தால் உருவாகியிருக்கிறீர்கள்.  அதனால்தான் ந. முத்துசாமியின் மரணம் உங்களில் கவிதையை உருவாக்கவில்லை.  உங்களைக் கசிந்து அழச் செய்யவில்லை.  சார்வாகனின் மரணத்துக்குச் சென்ற நான் இங்கே இன்னொரு பிணமும் விழுந்து விடும் அசோகமித்திரன் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு ஓடி வந்து விட்டேன்.  ஞானக்கூத்தனின் மரணத்துக்கும் போகவில்லை.  என்னால் அவரது உடலைக் காணப் பற்றியிருக்காது.  நெஞ்சு வெடித்திருக்கும்.  ஆனால் ஞானக்கூத்தனிடமிருந்து பூர்வீக சொத்தாக மொழியைப் பெற்றிருக்கும் நீ அவருடைய மரணத்தின் போது என்ன செய்தாய்?  இப்போது உருகியதைப் போல் உருகினாயா?  பெயரைச் சொல்லி விட மனசு துடிக்கிறது.  எல்லா எழுத்தாளர்களையுமே கேட்கிறேன்.  ஞானக்கூத்தனுக்கு முப்பது பேர் வந்திருந்ததாக ஒரு நண்பர் எழுதியிருந்தார்.  முப்பதா இருபதா?  அசோகமித்திரனுக்கு இருபது பேர்.    இப்படி மிகச் சமீபத்தில் ஒவ்வொரு எழுத்தாளனும் கவிஞனும் அனாதைப் பிணங்களாக செத்துக் கொண்டிருந்தபோது பதறாத நீ எட்டு கோடி பேரின் இதயத்தில் வீற்றிருக்கும் ஒரு பாடகன் மறைந்ததும் எப்படியடா பதறித் துடிக்கிறாய்?  நானும் எட்டுக் கோடியில் ஒருத்தன் என்று மனசறிந்து பொய் சொல்லாதே.  நீ அந்நியன்.  உன்னை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது.  என்னதான் நீ அவர்களது வழிபாட்டு நாயகனுக்காகக் கவிதை எழுதினாலும் உருகினாலும் அவர்கள் உன்னை அவர்களில் ஒருத்தனாக ஏற்காது.   ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது.  என்னதான் இலக்கிய வெளியில் நீங்கள் புழங்கினாலும் நீங்கள் வெகுஜனக் கலாச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறீர்கள்.  மற்றபடி அபிலாஷ், எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் அனிருத் தான்.  பாடகி ஷகீராதான்.