ஜனவரி 4 விழாவுக்கு அழைக்கிறார், அராத்து…

நண்பர்களே, விழாவிற்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.

ஏன் இந்த விழாவை நடத்த வேண்டும்? ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் இவ்வளவு அவதூறு, வசவுகளை வாங்க வேண்டும்?

நகரத்தில் 1008 சினிமா விழாக்கள், அரசியல் விழாக்கள் நடக்கின்றன.  ஐந்து நட்சத்திர விடுதியில் தினமும் பல்வேறு பார்ட்டிகள் நடக்கின்றன.

அதிகாரம் குவிந்திருக்கும் ஆளின் பேத்தி வயதுக்கு வந்ததற்கு பரிசுப் பொருட்கள் கொடுக்க ஒரு மைல் தூரம் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் வரிசையில் நின்று விழா கொண்டாடுகின்றனர். அதைப் பற்றியெல்லாம் ஒரு புகாரும் இல்லை.

ஜெமோ சொல்லியிருக்கிறார். மிகப்பெரிய எழுத்தாளருக்கே அதிக பட்சம் 1000 பிரதிகள் விற்பதே சாதனை என்று. சாருவின் எக்ஸைல் 4000 பிரதி விற்றது விதிவிலக்கு.

தற்கொலை குறுங்கதைகள் 1000 பிரதி விற்றாலும் 180* 1000 = 1,80,000/- அதில் கழிவுகள் போக 1,50,000/- . அதில் கிடைக்கும் ராயல்டி 15,000 /- ஒரு வருடத்திற்கு.

இந்தக் கணக்கை ஏன் சொல்கிறேன் என்றால், சடாரென ஒரு சினிமா இயக்குநராகி ஒரு கோடி சம்பாதித்தால் கூட  குருட்டு அதிர்ஷ்டத்தில் பெரிய ஆள் ஆயிட்டான் என நினைத்துப் பொறாமை கொள்ளலாம், திட்டலாம்.  சரி பணத்தை விடுங்கள், பெரிய புகழ் கிடைக்கிறதே என வாதம் புரிந்தால், அதைவிட காமடி ஏதும் இருக்க முடியாது.  ஏற்கனவே பெரிய எழுத்தாளர்களாக இருக்கும் சாரு, எஸ்.ரா. வுக்கு எல்லாம் சமுதாயத்தில் என்ன பெரிய மயிரு மரியாதை உள்ளது? ரயிலில் ஈக்யூவில் டிக்கட் கூட எடுக்க முடியாது.

நான் ட்வீட்ஸும், தற்கொலை குறுங்கதைகளும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் எழுதியது. எத்தனையோ இரவுகள் தூங்காமல் நண்பர் சுபாஷுடன் அவர் டிசைன் செய்த போது உடனிருந்திருக்கிறேன்.  கவர் டிசைன்,  அரசின் பொறுப்பில் இருக்கும் ஹால்,  காவல் துறை சான்றிதழ்,  இரண்டாயிரத்துக்கும் அதிகமான போன் கால்கள் என கடுமையாக அலைந்திருக்கின்றேன்.

யார் வேண்டுமானாலும் எழுதலாம், மெனக்கெடலாம், விழா நடத்தலாம்.  கொஞ்சம் அலைந்தால் பப்ளிஷரும் கிடைப்பார்.  முயற்சி செய்யாமலேயே, முனைப்பு இல்லாமலேயே புலம்புவதில் அர்த்தம் இல்லை நண்பர்களே.  இந்த போஸ்ட் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் என் மனம் அன்பால் நிறைந்திருக்கிறது.  அதனால் உண்மையிலேயே உள்ளன்போடு சொல்கிறேன்…  புலம்பிக்கொண்டு, திட்டிக் கொண்டு, அவதூறு செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் வீணாகப் போய் விடுவீர்கள்.  திட்டி அவதூறு செய்து பெரிய ஆள் ஆனதற்கு உதாரணமே இல்லை.  கடைசியில் வெளிவர முடியாத மனநோயில் மாட்டிக் கொள்வீர்கள்.  ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய ஆரம்பியுங்கள்;  கொஞ்சம் தாமதமானாலும் பலன் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டில், ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை நினைத்துப் பார்த்து, நானும் அதையே தேர்வு செய்யலாம் என இருக்கிறேன். நன்றி ரஹ்மான்.

என் முன்னால் இரண்டு தேர்வுகள் இருந்தன. வெறுப்பின் வழி, அன்பின் வழி.  நான் அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என சொன்னார். எவ்வளவு அனுபவித்துவிட்டு சொல்லியிருப்பார் ?

சாரு அவருடைய எக்ஸைல் வெளியீட்டை விட இதில் அதிக ஆர்வம் செலுத்தினார்.  என்னை தினமும் எனக்கே எரிச்சல் வரும் அளவுக்கு நோண்டிக் கொண்டு இருந்தார்.  எரிச்சல் மண்டிக் கிடக்கும் இலக்கிய உலகில், இது என்னுடைய புத்தகம், இது என்னுடைய விழா என்று சொல்லிய சாருவின் மனநிலை அவரைப் பார்த்த பிறகு கூட எனக்கு வருமா என்பது சந்தேகமே.

விழாவிற்கு வரும் விஐபி களை சாருதான் அழைத்தார்.   “என்னை விட ஒரு படி தாண்டிட்டாருங்க, நீங்க விழாவுக்கு வரணும்” என்று சொல்லி அழைத்தார்.   இதைவிட  சிறந்த பாடத்தை நான் எங்கு படிக்க முடியும்?

சாரு வாசகர் வட்ட நண்பர்கள், தங்கள் புத்தக வெளியீட்டுக்குக் கூட இப்படி வேலை பார்ப்பார்களா எனத் தெரியவில்லை. கணேசன் அன்பு பல இரவுகள் தூங்காமல் வேலை பார்த்தார். செல்வகுமார் கணேசன், கார்த்திக், முருகன், ்ரீதர், ஈரோடு, முருகன் கடற்கரை, கோபால கிருஷ்ணன், சுதாகர் இன்னும் பலர் பல வேலைகளைப் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

இது அல்லாமல் தக்க சமயத்தில்  வந்து உதவிய சுந்தர பாண்டியன், ஹரீஷ், ஹேமங்க் போன்ற நண்பர்களின் பங்களிப்பும் முதுகெலும்பாக அமைந்தது.

இது எல்லாம் இலக்கியம் வளர்ப்பதற்கெல்லாம் இல்லை.  இதுவரை முகம் தெரியாமல் என் எழுத்தைப் படித்து இன்புற்று, என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்திய நண்பர்களை நேரில் சந்திக்கத்தான். அந்த சைலண்டான சக அராத்துக்களைக் காண ஆவலாக உள்ளேன்.  இவர்கள் பெரும் கூட்டம் என்பதை நான் அறிவேன்.  இவர்கள் நான் எழுதுவதையும், என்னையும் மிக நெருக்கமாக உணர்கிறார்கள்.

பலரும் பல ஆயிரங்கள் செலவழித்து பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். நானும் சில வருடங்கள் முன்பு வரை கொண்டாடியிருக்கிறேன்.  புத்தக வெளியிட்டு விழா கொண்டாடுவது அதை விட ஒன்றும் மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

புத்தகம் வாங்குங்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எந்தப் புத்தகம் வாங்குவது, எப்போது வாங்குவது என்பதெல்லாம் அவரவர் உரிமை.  நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இவ்வளவு செலவு செய்து, கஷ்டப்பட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறோம், அவசியம் விழாவிற்கு வாருங்கள்.  ஒரு சின்ன சோம்பல் உங்களை விழாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து வெற்றியடையக் கூடாது.

நான் மதியம் முதலே அரங்கில் இருப்பேன். வாருங்கள் அரட்டை அடிக்கலாம்.

நாள் : ஜனவரி 4 , சனிக்கிழமை ,மாலை 5.30 மணி .
இடம் : சர் பிட்டி தியாகராயா ஹால், ஜி.என்.செட்டி ரோடு , தி.நகர்.ரோகிணி ஹோட்டல் எதிரில்.          

Comments are closed.