மாயமோகினி: கவிதைத் தொகுப்பு

நான் எழுதும் கவிதைகள் சராசரியானவை என்று ஒரு கருத்து நிலவுகிறது என்பது எனக்குத் தெரியும்.  என் புனைகதைகள் பற்றி அப்படி யாருமே சொல்ல முடியாது.  பிடிக்கவில்லை என்பார்கள்.  போர்னோ என்பார்கள். இன்னும் சிலர் என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக் கண்டு அது நான் தான் என மருட்சி கொண்டு இவனைத் தூக்கில் போட வேண்டும் அப்படி இப்படி என்று பலவிதமான தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.  இப்படிப் பலவிதமாகத் திட்டுவார்களே ஒழிய சராசரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் கவிதை அப்படி அல்ல.  அது ஒரு மாதிரியான ஏரியா.  ஒருநாள் ஒரு கவிஞர் என்னிடம் “உங்கள் கவிதை ரசனை மொண்ணையானது, உங்களுக்குக் கவிதைக்கான sensibilityயே இல்லை” என்றார்.  எனக்குமே அப்படிப்பட்ட சந்தேகம் உண்டு என்பதால் அவ்வளவு ஆச்சரியப்படவில்லை.  இருந்தாலும் அவர் அந்த முடிவுக்கு ஏன் வந்தார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?  கேட்டேன்.  ”பின்னே என்ன, மனுஷ்ய புத்திரனைப் போய் ஆஹா ஓஹோ என்கிறீர்கள், உங்களுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?” அடடா, இதுதான் விஷயமா என்று விட்டு விட்டேன். ஆனால் விதியின் விளையாட்டைப் பாருங்கள், அவர் அப்படிச் சொன்ன மறுநாளே, கமல்ஹாசன் எழுதுவது போன்ற ஒரு கவிதை அந்தக் கவிஞர் பெயரில் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.  அப்புறம் பார்த்தால் அதே பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நூற்றாண்டுக்கே அடையாளமாகத் திகழும் கவிஞன் வைரமுத்து என்று அதே கவிஞர் எழுதியிருந்தார்.  அட அடா… மனுஷ்ய புத்திரனைப் பாராட்டியதால் எனக்குக் கவிதை உணர்வே இல்லை என்று சொன்ன வாய், வைரமுத்து பற்றி அப்படி எழுதுகிறது!

இதெல்லாம் ரொம்ப நாள் பிரச்சினையாக ஓடிக் கொண்டிருக்கிறது.  பாரதியைக் கிறுக்குப் பயல் என்றே பல ஆட்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  தமிழின் மிக முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தனை சராசரி என்றும், போலிக் கவிஞர் என்றும் வாழ்நாள் பூராவும் சொல்லிக் கொண்டிருந்தார் வெங்கட் சாமிநாதன். தேன்மொழியின் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் இந்தப் பெண் சங்க காலக் கவிஞர்களின் தொடர்ச்சியாக வந்தவர் என்றே எனக்குத் தோன்றும்.  ஆச்சரியம் என்னவென்றால், இந்திரனும் அதே மாதிரி எழுதியிருந்தார்.  ஆக, இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு அப்படி ஒரே மாதிரித் தோன்றியிருக்கிறது.  ஆனால் அங்கேயும் பிரச்சினையில் மாட்டினேன்.  இன்னொரு கவிஞர் என்னிடம் வந்து, உங்களுக்குக் கவிதை சென்ஸிபிலிட்டியே கிடையாது என்று தொடங்கினார்.  ஆதாரம்?  தேன்மொழியையெல்லாம் கவிஞர் என்கிறீர்களே, அது போதாதா?  இவர் அவர் அல்ல.  வேறு ஆள்.  ஆனால் ஒவ்வொருத்தருக்கும் தெரிந்திருக்கிறது, எனக்குக் கவிதை உணர்வு இல்லை என்று.  அதற்கான உறுதியான ஆதாரமும் வைத்திருக்கிறார்கள். 

இப்படி ஆள் ஆளுக்கு இவன் கவிஞன் இல்லை, அவன் கவிஞன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் நான் ஒரு வேலை செய்தால் தமிழின் ஆக முக்கியமான கவியாக மாறி விடலாம்.  கவிதை எழுதி இல்லை.  எழுதிய இந்தக் கவிதைகளே போதும்.  இது வேறொரு விஷயம்.  ரெண்டே நிமிடம்தான் ஆகும்.  அதைச் செய்தால் நான் தான் தமிழின் மகத்தான கவி. தூக்குப் போட்டுக் கொண்டு சாக வேண்டும்.  காரணமே சொல்லக் கூடாது.  ஒரு மிஸ்ட்ரியாக வைத்து விட வேண்டும்.  கொண்டாடித் தள்ளி விடுவார்கள். வேண்டுமானால் பெரிய மனது பண்ணி ஒரு ஜென் கவிதை எழுதி வைத்து விட்டுப் போகலாம். 

சிறகில்லாப் பறவை

ஆகாயம் நோக்கிச்

செல்கிறது

இப்போதே செய்து விட மனசு பரபரக்கிறது எனக்கு.  ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்றால், சக கவிஞர்களும் சக எழுத்தாளர்களும் எனக்குக் கொடுக்கப் போகும் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பார்க்க முடியாதே?  பார்க்க முடியாத அங்கீகாரத்துக்காக உயிரைக் கொடுக்க முடியுமா?  போய்யா…

ஏனென்றால், தற்கொலை செய்து கொண்டதால் தமிழ்நாட்டில் ஒரு கவிஞன் மகாகவி ஆகி விட்டான்.  ஆத்மாநாம் என்று பெயர்.  நல்ல கவிஞன் தான்.  ஆனால் தற்கொலை என்ற புரட்சிகரமான செயலைச் செய்ததால் அவன் கவிதை வேறு லெவலுக்குப் போய் விட்டது. 

மற்றபடி எல்லா கவிகளைப் பற்றியுமே கவிஞரா இல்லையா என்ற புகார் இருந்துகொண்டேதான் இருக்கிறது.  இருவரைத் தவிர.  தேவதேவன், தேவதச்சன்.  அந்த இருவர் பற்றியும் யாருமே வாய் திறக்க முடியாது.  அப்படியாப் பட்ட பெயர்.  எனக்குமே அந்த ரெண்டு பேர் என்றால் சர்வநாடியும் அடங்கி விடும்.  அந்த அளவுக்கு அந்த இரண்டு பேரின் கவிதைகள் பிடிக்கும்.  ஆனால் சர்ச்சைகளே அற்ற உலக அங்கீகாரம் அவர்கள் இருவருக்கும் ஏன் கிடைத்தது என்றால், அவர்கள் இருவரும் சர்ச்சைகளிலேயே மாட்டிக் கொள்வதில்லை.  நாற்பது ஐம்பது ஆண்டுகளாக கவிதை மட்டுமேதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி நல்லவர்களாக இருந்தால் நம் மக்களுக்குப் பிடிக்கும். 

இது இந்தியாவில் மட்டும் இல்லை. சீலேவிலும் நெரூதா பற்றி ஏகப்பட்ட புகார்கள் உண்டு.  தாகூரைக் காப்பி அடித்தவர் அது இது என்று.  நிகனார் பார்ராவைப் பிடித்தவர்களுக்கு நெரூதா கவிஞரே இல்லை.  நெரூதா பிரியர்களுக்கு பார்ரா மூன்றாம் தரம். 

ஆனால் என் கவிதை பற்றி என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், அது என்னுடைய மனப்பிறழ்வின் வெளிப்பாடு என்பதுதான்.  அதை நீ டயரியில் அல்லவா எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் என்னைக் கேட்கலாம்.  கலைஞர்களின் டயரி அவர்களின் புத்தகங்கள்தான்.  ப்யூகோவ்ஸ்கி மாற்றி மாற்றி என்ன எழுதினார்? இன்று காலையில் கூட ஒரு நெருங்கிய நண்பர் என் கவிதைகள் ரொம்பவும் சாதாரணம், அவற்றை வெளியிடாதீர்கள் என அக்கறை ததும்பச் சொன்னார்.  உடனடியாக எனக்குத் தோன்றியது என்னவென்றால், அவருக்குப் பிடித்தமான கவிதையை நான் எப்படி எழுத முடியும் என்பதுதான்.  ஒருவர் தேன்மொழியை கவிஞரே இல்லை என்கிறார்.  இன்னொருத்தர் மனுஷ்ய புத்திரன் கவிஞர் இல்லை என்கிறார்.  சீலேயில் பலர் நெரூதா கவிஞரே இல்லை என்கிறார்கள்.  இப்படி கவிதை உலகம் ஒரு பைத்தியக்காரக் கூட்டமாக இருக்கிறது.  இந்தப் பைத்தியக்காரக் கூட்டத்தில் நானும் ஒரு பைத்தியமாக இருந்து விட்டுப் போகிறேனே?

இன்னொன்றும் ஞாபகம் வருகிறது.  இப்படி என் நண்பர் கூட்டமே என் கவிதைகளை சராசரி சராசரி எனக் கூவுவதால் இரண்டு நீண்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து இரண்டு முக்கியமான ஆங்கில எழுத்தாளர்களுக்கு அனுப்பினேன்.  உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள்.  ஒருவர் கவிஞர், நாவலாசிரியர்.  பொதுவாக எதையுமே பாராட்டாத cynic.  இன்னொருவர் பிரிட்டிஷ்காரர்.  பத்திரிகாசிரியர்.  கலை விமர்சகர்.  இருவருமே கவிதைகள் பிரமாதமாக இருப்பதாகச் சொன்னார்கள்.  இப்படியெல்லாம் செய்து என்னை தைரியப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  என்ன கொடுமையான சூழல்!

இந்தத் தருணத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  மாயமோகினி என்ற இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை உருவி எடுத்து அதன் கீழே ராமபத்ரன் என்றோ காத்தமுத்து என்றோ போட்டால், நானே கூட அதைக் கவிதை என்று சொல்ல மாட்டேன்.  சமயங்களில் அதை எழுதியவனின் பெயரால் அந்த வார்த்தைகள் அர்த்த முக்கியத்துவம் பெறுகின்றன.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  எத்தனையோ பேர் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனபோது தங்கள் நாக்கை அறுத்துக் கொண்டார்கள்.  தீக்குளித்தார்கள்.  ஃப்ரான்ஸில் காதல் வெறியில் ஒரு ஓவியன் தன் காதை அறுத்துக் கொண்டான்.  தமிழ்நாட்டில் நடந்ததும் ஃப்ரான்ஸில் நடந்ததும் ரெண்டுமே செயல் அளவில் ஒன்றுதான்.  அப்படியானால் இங்கே நாக்கை அறுத்துக் கொண்டவர்களெல்லாம் வான்கோவா?  வித்தியாசம் இருக்கிறதுதானே?  அதனால் இந்தத் தொகுப்பில் உள்ள வார்த்தைகள் என் உதிரத்தின் வழியே வந்திருப்பதால் அர்த்த முக்கியத்துவம் பெறுகின்றன என நான் நம்புகிறேன்.

இல்லாமலும் இருக்கலாம். 

மாயமோகினி தொகுப்பு 300 பக்கம் வந்திருக்கிறது.  முன்னுரைக்காக மனுஷ்ய புத்திரனிடம் கொடுத்திருக்கிறேன்.  நட்புக்காகவெல்லாம் அவர் பாராட்டக் கூடியவர் அல்ல என்பதை நான் அவருடனான 25 ஆண்டுக் கால நட்பில் அறிவேன்.  அவர் இந்தத் தொகுதிக்கு முன்னுரை எழுத ஒப்புக் கொண்டதே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்…