முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி அராத்து…

எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்ல வேண்டியிருக்கிறது, முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி.  அது ஒரு நவீன காவியம்.  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நீங்களும் நானும் ஒன்றேபோல்தான் கருதுவோம்.  நான் கிழக்கு என்றால் ஜெ. மேற்கு என்பார்.  நான் மரியோ பர்கஸ் யோசா ஆகா ஓகோ என்றால் ஜெ. அவர் ஒரு வேஸ்ட் என்பார்.  நான் கிளாஸிக் என்றும் சிலாகிக்கும் படத்தை அவர் தண்டம் என்பார்.  வேண்டுமென்று செய்வதில்லை.  என் கருத்து என்ன என்று தெரியாமலேயே அவர் சொல்வார்.  நானும் அப்படியே.  இரண்டு இரண்டு துருவங்கள்.  ஆனால் முகமூடிகளின் பள்ளத்தாக்கு அவருக்குப் பிடிக்கும்.  பந்தயம் கட்டுகிறேன்.  ஏனென்றால், ஒரு விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே கருத்தை வலியுறுத்தியிருக்கிறோம்.  பிரபாகரன் பற்றி.  புலிகள் பற்றி.  பிரபாகரன் உயிரோடு இருந்தபோது.  அப்படி ஒரு அதிசயம் இந்த முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலிலும் நடக்கும். 

அது மட்டும் அல்ல.  சில விஷயங்களை எல்லோருக்கும் பிடித்துப் போகும்.  உதாரணமாக, என் அனுபவத்தில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் நன்றாக இல்லை என்று சொன்ன ஒருத்தரைக் கூட நான் இன்னும் சந்தித்தது இல்லை.  அப்படி ஒரு அதிசயம் இந்த முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் நடக்கும்.

தருணின் பலம் அவரது ஆங்கிலம்.  அந்த அளவுக்கு ஆங்கிலம் எழுத – நாவலில் எழுத உலக அளவில் ஆள் இல்லை.  கவிதையில் எழுத நூறு பேர் உள்ளனர்.  நாவலில் எழுத யாரும் இல்லை.  முன்பு இருந்தார்கள், பிரிட்டனில்.  இப்போது இல்லை.  கவிதை கொஞ்சும்.  ஆனால் கவிதை தெரியாது.  உள்ளோடி இருக்கும்.  தத்துவார்த்தமாக இருக்கும்.  இருப்பதே தெரியாமல் இருக்கும்.

நான் தருணிடம் சொன்னேன், யோவ், உம்முடைய ஒரிஜினலை விட தமிழ் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கும் ஐயா.  அந்த அளவுக்கு நானும் தாமரைச் செல்வியும் காயத்ரியும் சேர்ந்து தமிழின் உச்சபட்ச சாத்தியங்களைப் பிடித்திருக்கிறோம் என்றேன்.  பல இடங்களை வாய் விட்டுப் படித்தேன்.  ஆங்கிலத்தை விடவும் நன்றாக இருந்தது.  அராத்துவிடமும் நண்பர்களிடமும் இந்த மொழிபெயர்ப்புக்கு ஆறு மாதம் செலவானதாகத்தான் சொன்னேன்.  அது இரண்டாவது படிவத்துக்கு.  மூன்று, நான்கு, ஐந்து என்று ஐந்து நிலைகளில் கொண்டு வந்து விட்டது.  எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு ஆண்டு ஆகி விட்டது.  நேற்றுதான் கடைசி கடைசியாக கடைசி அத்தியாயத்தில் சிலவற்றை நானும் காயத்ரியும் சரி பண்ணினோம். 

அராத்துவின் கீழ்க்கண்ட பதிவில் தாமரைச் செல்வி, காயத்ரி இருவர் பற்றியும் இல்லை.  தவறாக எண்ண வேண்டாம். 

தருண் தேஜ்பாலின் உடல் மொழி, பேச்சு, உரையாடல், நடை உடை பாவனை பற்றியெல்லாம் அராத்து எழுதியிருக்கிறார்.  நான் மிஷல் ஃபூக்கோவின் மாணவன் என்பதால் ஃபூக்கோவின் புகைப்படம் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்.  செம மொட்டை.  தத்துவவாதி என்றால் சாக்ரடீஸ் மாதிரி தாடி அல்லவா வைத்திருக்க வேண்டும், இந்த ஆளைப் பார், மொட்டை அடித்திருக்கிறார் என்று நினைப்பேன்.  கடைசியில் ஃப்ரான்ஸுக்குப் போய்ப் பார்த்தால் 90 சதவிகித ஆண்கள் மொட்டை அடித்திருக்கிறார்கள்.  அதிலும் ஸோர்போன் பல்கலைக்கழகம் பக்கம் எட்டிப் பார்த்தால் கண்ணில் தெரிகிற பேராசிரியர்கள் எல்லோருமே ஃபூக்கோ மாதிரியே இருந்தார்கள்.  அச்சு அசல்.  முடிதிருத்தும் நிலையங்களிலும் எல்லோரும் எல்லோருக்கும் மும்முரமாக மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  அடப் பாவிகளா!

தமிழ்நாட்டில் ஒரு உலகப் புகழ் பெற்ற தத்துவவாதி இருக்கிறார் என்று கற்பனை செய்து கொள்வோம்.  அவர் மீசை வைத்திருப்பார். அது ஒரு தமிழ் மீசை என்று நமக்குத்தான் தெரியும்.  உலகத்தாருக்கு அந்த மீசை தத்துவ மீசையாகத் தெரியும் இல்லையா, அப்படித்தான் தருணின் ஜாலியான பேச்சும், சுறுசுறுப்பான இயக்கமும்.  எல்லா பஞ்சாபிகளுமே தருண் மாதிரிதான் இருப்பார்கள்.  சத்தமான குரல்.  சிரிக்கச் சிரிக்கப் பேச்சு.  சுறுசுறுப்பு.  ஜாலி.  கடும் உழைப்பு.  கடும் குடி.  கடும் சாப்பாடு.  எது பற்றியும் கவலைப்படாத போக்கு.  எல்லாம் அதீதம்தான்.

சென்ற ஆண்டு ஒருநாள் ஆட்டோவில் வந்து இறங்கினேன்.  ஆட்டோக்காரர் பணம் வாங்கிக் கொள்ளாமல் பைபிளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  என்னிடமே ஐந்து பைபிள் இருக்கிறது என்று சொல்லிப் பணம் கொடுத்தேன் இல்லையா, அதேபோல் கையில் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நூலை எடுத்துக் கொண்டு போய் சாலை முக்குகளில் நின்று கூவ வேண்டும் போல் இருக்கிறது, அப்படிப்பட்ட நாவல் அது என்பதை நீங்களும் படிக்கும்போது உணர்வீர்கள்.

பின்வருவது அராத்துவின் பதிவு:

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

தருண் தேஜ்பாலை சாரு நிவேதிதாவின் எக்ஸைல் வெளியீட்டு விழாவின் போது சந்தித்தது. அது சிறிய சந்திப்புதான். அதிகபட்சம் 5 நிமிடங்கள் பேசியிருப்போம். அதன் பிறகு ஓப்பன் பண்ணா நாவல் வெளியீட்டு விழாவின் போது கோவாவில் சந்தித்தேன்.

ஜாலியாக ஒரு லுங்கி கட்டிக்கொண்டு , தோழியுடன் விழாவுக்கு வந்தார். வந்ததில் இருந்து 45 நிமிடங்கள் இருந்திருப்பார். முதல் நிமிடம் முதல் 45 வது நிமிடம் வரை அவ்வளவு எனர்ஜி. சினிமாவில் ரஜினியைச் சொல்வார்களே , அதை விட அதிக எனர்ஜி. எனக்கு அப்போது ஜாக்கிசான் உதாரணம் தான் தோன்றியது.

ஒரு இலக்கிய எழுத்தாளன் , நடை உடை பாவனை பேச்சி என அனைத்திலும் ஜாக்கிசான் போல இருக்க முடியுமா ? சிரித்துக்கொண்டும் , குதூகலித்துக்கொண்டும் , ஜோக் அடித்துக்கொண்டும் , அங்கிருந்த 25 பேர்களுடனும் கனக்டிவிட்டியில் இருந்தார்.

அவரிடம் முக்கியமாக இன்னொரு விஷயத்தை கவனித்தேன். மேடையில் ரத்தினச் சுருக்கமாக பேசினார். அதை கடைபிடிப்பது கடினம்.ஆனாலும் முயல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

விழா மேடையில் அவர் பஞ்சாபி லுங்கி கட்டும் ஸ்டைலை சொன்னதும், எனக்குள் இருந்த தமிழன் ஆர்வம் பொத்துக்கொண்டு வந்ததால் ,

“நாக்க வேட்டியை இப்டி மடிச்சும் கட்டுவோம் ” என்று செய்து காட்டினேன்.

அவர் பதிலுக்கு “நாங்களும் இப்டி கட்டுவோம்” என ஜட்டி தெரிய தூக்கிக் கட்டிக் காட்டினார்.

இன்னொன்று , நாங்கள் எங்கள் வேட்டியைக் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்லி ஏசி அறையைக் காட்டினோம்.

அவர் , அதெல்லாம் எதுக்கு என்று விழா நடக்கும் இடத்திலேயே அவுத்துப்போட்டு மாற்றிக்கொண்டார்.

இதெல்லாம் இயல்பான விஷயம் தான். எல்லோருமே இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் சின்ன குஞ்சு குளுவான் எல்லாம் சீன் போட்டுக்கொண்டு இருக்கும் போது , உலகளவில் பிரபலமான , அதுவும் பெஸ்ட் செல்லார்ஸ் லிஸ்டில் இருக்கும் புத்தகங்களுக்கு சொந்தக்காரரான தருண் இப்படி இயல்பாக ஜாலியாக இருப்பதையே எடுத்துச் சொல்லி மகிழ வேண்டியிருக்கிறது.

அவர் எழுதிய வேலி ஆஃப் மாஸ்க் புத்தகத்தைப் பற்றி சாரு எப்போதோ விதந்தோந்தி சொல்லி விட்டார் என்னிடம். ஆனால் ஆங்கிலப் புதினங்கள் படித்து பழக்கம் இல்லாததால் (அந்த தமிழன்பம் புதினங்களில் ஆங்கிலத்தில் நம்பிள்கு கிடைப்பதில்லை – மைண்ட் பிளாக் ) படிக்காமல் இருந்தேன். சாரு புண்ணியத்தில் ஓரிரு அத்தியாங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்தேன்.

எப்படி சொல்வது ?

மொழி நடையில் இது உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு தேர்ந்த சிற்பி சிற்பம் செதுக்கியதைப் போல , கவனமாக வரையப்பட்ட ஓவியம் போல , ஒரு புத்தம் புது இசை அதிகாலையில் ஒலிப்பது போல ,

தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இல்லாத கச்சிதமான கவிதை போல ,

பல வருடங்கள் மனதில் திட்டமிட்டு நடக்கும் நீண்ட புணர்ச்சி போல இருக்கிறது.

மொழியில் எனக்கு சாருதான் தெரிகிறார். கண்டெண்ட் தருணுடையது .அது உலகத்தரம் மற்றும் உலகிலேயே இதுதான் முதல் என்று சாரு சொல்லிவிட்டார். அந்த அற்புதமான உள்ளடக்கத்தை எடுத்துக்கொண்டு சாரு தனக்குக் கைவரப்பெற்ற அபாரமான கலைத்திறனை முழுவதும் பிரயோகித்து இருக்கிறார்.

வழக்கமான சாருவின் எழுத்தில் ஒரு கட்டற்றத் தன்மை இருக்கும். எழுத்து இஷ்டத்திற்கு ஓடும். அது ஒரு தனி அனுபவம். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் சாரு படு கான்ஷியஸ் ஆக , சொற்களை லாவகமாக பொறுக்கி எடுத்துக் கோர்த்திருக்கிறார். கொஞ்சம் படித்ததிலேயே இது ஒரு கவித்துவ உரைநடை என்பது தெரிந்து விட்டது. நவீனத் தமிழில் இந்த நூல் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

தமிழையும் இலக்கியத்தையும் நேசிப்பவர்கள் அனைவரையும் இந்த நூலை வாங்கிப் படிக்க பரிந்துரைக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம்தான் பிளாக் பஸ்டராக இருக்கப்போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூலை முன்பதிவில் வாங்க லிங்க்: