பணத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள்?

சமீபத்தில் ஒரு சிங்கப்பூர் அன்பர் போன் செய்தார்.  ஒரு ஸூம் சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேச வேண்டும்.  கால் மணி நேரம் என் பேச்சு.  மீதி நேரம் கேள்விகளுக்கு பதில்.  தேதி ஒத்து வந்ததால் உடனடியாக சரி என்று சொல்லி விட்டேன்.  எனக்கு ரொம்பப் பிடித்தது, வாசகர்களோடு – என்னை வாசிக்காதவர்களோடும் – உரையாடுவது.  அப்படித்தான் முதலில் ரமா சுரேஷின் மாயா இலக்கிய வட்டத்திலும் பிறகு அரூ இதழின் குழுவினருக்காகவும் ஸூம் மூலமாக சந்திப்பில் கலந்து கொண்டேன், பேசினேன்.  மாயா வட்டம் ஒருங்கிணைத்த குறுநாவல் போட்டிக்கும், அரூவின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கும் நடுவராக இருந்தேன்.  இதெல்லாம் எத்தனை நேரம் எடுக்கக் கூடியது என்று யோசித்துப் பாருங்கள்.  அரூவுக்கு ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்தேன்.  என் வாழ்நாளின் மிக முக்கியமான பேட்டியாக அமைந்தது அது.  தனியாகவே ஒரு புத்தகமாக வரக் கூடியது. 

இவர்களெல்லாம் என் குடும்பத்தினர் போன்றவர்கள்.  குடும்பத்தில் பணம் கேட்க முடியுமா? மேலும், இவர்களே தங்கள் கைக்காசையும் நேரத்தையும் செலவழித்து இந்தக் காரியங்களையெல்லாம் செய்கிறார்கள்.  இவர்களிடம் காசு கேட்பது அதர்மம்.   இவர்கள் செய்வதே ஒரு சேவை.  சேவை செய்பவர்களிடம் காசு கேட்கக் கூடாது.  அப்படித்தான் சமீபத்தில் ஒரு வாசகர் அமைப்புக்காக ஒரு மணி நேரம் வாசிப்பு பற்றிப் பேசினேன்.  பணம் பற்றி அவர்களும் பேசவில்லை.  நானும் பேசவில்லை.  ஸாஃப்ட்வேர் துறையைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்கள்.  சமூகத்தில் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.  அதில் நாமும் ஒரு பங்களிப்பைச் செய்யலாம்.  செய்யாமலும் போகலாம்.  பணம் கேட்கக் கூடாது.  இது என் கருத்து. 

ஆனால் என்னோடு பேசிய சிங்கப்பூர் அன்பர் கடைசியில் சன்மானமாக அஞ்சாயிரம் ரூபாய் தருகிறேன் என்றதும் சடாரென்று யாரோ என் மூஞ்சியில் குத்து விட்டது போல் உணர்ந்தேன்.  என்னது, அஞ்சாயிரமா?  இதை ஒரு உதாரணம் மூலம்தான் விளக்க முடியும்.  சிங்கப்பூரில் Geylang என்று ஒரு பகுதி உள்ளது.  அங்கே தெருவில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் ஒரு வேசியின் அரை மணி நேரக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?  50 சிங்கப்பூர் டாலர்.  அதாவது, 3000 ரூ.  இந்த அன்பர் என்னுடைய இரண்டு மணி நேரப் பேச்சுக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார்.  இன்னொரு போனஸும் கொடுத்தார்.  ”முகமூடிகளின் பள்ளத்தாக்கு நூலையும் பத்து பிரதி வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்கிறேன்.  நீங்கள் உங்கள் ப்ளாகில் எழுதியிருந்தீர்கள் அல்லவா?” 

ஆக, ப்ளாக் எல்லாம் தவறாமல் வாசித்து வருபவர்தான்.  ஆனாலும் சுரணை இல்லை.  ”ஏன், என்னையும் அரூ குழு மாதிரி, மாயா வட்டம் மாதிரி உங்கள் குடும்பமாக நினைக்க வேண்டியதுதானே?” என்று அந்த அன்பர் கேட்கலாம்.  முடியாது.  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அன்பர் தொடர்ந்து இது போன்ற பட்டறைகளை நடத்துகிறார்.  தமிழ்நாட்டில் பல இலக்கியப் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் அந்தப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  அதில் சேர்ந்து பயில்பவர்களுக்குக் கட்டணம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.  மேலும், அரூ குழுவினரும், ரமா சுரேஷும் எனக்கு இப்படி அஞ்சாயிரம் தருகிறேன் என்று சொல்லவில்லை.  சொல்லியிருந்தால் இதே கட்டுரையை அவர்களை வைத்து எழுதியிருப்பேன்.  பணத்தைப் பற்றிப் பேசாததால் அவர்கள் என் குடும்பம். 

மேலும், யார் இலக்கியத்தில் களப்பணி செய்கிறார்கள், சேவை செய்கிறார்கள், யார் இலக்கியத்தை வைத்து பிஸினஸ் பண்ணுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.  சினிமாக்காரர் என்னை எழுத அழைத்தால் அவரையும் நான் என் குடும்பமாக நினைத்து ஓசியில் எழுதித் தர முடியுமா என்ன?  நீங்கள் பணத்தைப் பற்றிப் பேசினீர்கள்.  இல்லையா?  அதை நான் இப்போது கவனிக்க வேண்டும்.  இது நடந்து நாலு நாள் இருக்கும்.  முகமூடி வேலை முடியட்டும் என்றுதான் காத்திருந்தேன். 

கேலாங் வேசியிடம் போய் நீங்கள் “வர்றியா, அஞ்சு டாலர் தர்றேன்” என்று சொன்னால் அவள் என்ன செய்வாள்?  எழுதினால் அசிங்கமாக இருக்கும்.  மூஞ்சி கிழிந்து ரத்தம் சொட்டும்.  ஏனென்றால், அவர்கள் அணிந்திருக்கும் குதி உயர்ந்த காலணிகள் அப்படிப்பட்டவை.  அட, என்ன ஒரு பெர்வெர்ஷன், வேசியும் எழுத்தாளனும் ஒன்றா என அந்த அன்பர் வினவலாம்.  ஆஹா, வேசி உதாரணம் பிடிக்கவில்லை என்றால், உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப வேறு ஒன்றைப் போட்டுக் கொள்ளுங்கள்.   பக்ஷமில்லை. 

ஏனய்யா, எழுத்தாளனுக்கு என்ன பிச்சையா போடுகிறீர்?  இயக்குனர் சேரன் எல்லாம் பேசினாராம்.   என்ன ஃபில்ம் காட்டுகிறீரா?  சேரன் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.  நாங்கள் நூறு இருநூறுக்கும் இலவசமாகவும் எழுதிக் கொண்டிருக்கிறோம்.  சினிமாக்காரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதால் இலவசமாகப் பேசுகிறார்கள்.  நான் ஏன் தொலைக்காட்சிகளில் தலை காட்டுவதில்லை தெரியுமா?  இலவசமாக அழைக்கிறார்கள்.  காசு கேட்டால் ஏதோ அவர்களின் பாக்கெட்டில் கை விட்டது போல் அலறுகிறார்கள்.  ஏதோ அவர்கள் என்னை அழைப்பதே எனக்கு அவர்கள் தரும் மாபெரும் கௌரவம் என்பது போல் பேசுகிறார்கள்.  பணம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு மாரடைப்பு வந்து விடும் போல் திகைக்கிறார்கள்.  எந்த எழுத்தாளரும் கேட்க மாட்டார் போலிருக்கிறது.  ஏன் ஐயா, நான் என்ன அரசியல்வாதியா?  மக்களை எப்படியாவது சென்றடைய வேண்டும் என்று நினைப்பதற்கு?  அல்லது, சினிமா ஆளா?  எப்படியாவது மக்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு?  இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னே வரும் ஒரு மனிதனுக்காகவும் நான் எழுதுகிறேன்.  உங்கள் உடம்பின் டி.என்.ஏ.விலிருந்து இனிமேல் வெளிவரப் போகும் உங்கள் வாரிசுக்காகவும் நான் எழுதுகிறேன்.  நான் எதற்கு என்னுடைய பொன்னான நேரத்தை உங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்? 

நான் உடனே அந்த அன்பரிடம், உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி விட்டு, என் கட்டணம் 30000 ரூ. என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  சரி சாரு, வாழ்த்துக்கள், நான் ஒரு தனி ஆள், என்னால் முடியாது என்ற குறுஞ்செய்தியோடு முடித்துக் கொண்டார்.  இப்படிப்பட்ட தனி ஆட்கள் ஏன் இம்மாதிரி வேலைகளில் இறங்குகிறீர்கள்?  இது ஒரு பட்டறை மாதிரிதானே?  இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்து பத்து சிங்கப்பூர் டாலர் வசூலித்தாலே 30,000 ரூ. ஆயிற்றே?  இதெல்லாம் ஏன் தோன்றுவதில்லை என்றால், எழுத்தாளன் என்பவன் கேலாங்க் வேசிகளை விடவும் மட்டமானவன்.  எழுத்தாளன் ஒரு இலவச வேசி.  அதுதான் இம்மாதிரி ஆசாமிகளின் மண்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.  எல்லாம் என் சக எழுத்தாளர்களைச் சொல்ல வேண்டும்.  இந்த அசடுகளுக்கு 5000 ரூ. ஒன்றும் பெரிய காசு இல்லை.  ஆனாலும் எழுத்தாளன் என்றால் கேணப்பயல் என்றே இந்த அசடுகளும் நினைத்துக் கொண்டிருப்பதால் இவர்களும் இம்மாதிரி ஆசாமிகளுக்கு உடன் போகிறார்கள்.  அந்த சிங்கப்பூர் ஆசாமி என்னுடைய இரண்டு நண்பர்களைக் குறிப்பிட்டார் அல்லவா, அவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டேன், திட்டுவதற்காக.  ஆனால் அவர் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. 

அவர் சென்ற மாதம் ஒரு கல்லூரியில் பேசினாராம்.  பேச அழைத்த போதே எவ்வளவு கட்டணம் என்று கேட்டிருக்கிறார்கள்.  இவர் அம்பதாயிரம் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்?  ”ஹிஹி நீங்க குடுக்கிறதைக் குடுங்க.”  நாலாயிரம் வருஷப் பழக்கமுங்க. எப்படி மாற்ற முடியும்?  எழுத்தாளனாகி நான் உனக்கு வழங்குவது கோடி ரூபாயையும் தாண்டிய ஞானம்.  ஆனால் நான் உன்னிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும், இல்லையா?  சரி, எழுத்தாளர் அப்படிச் சொன்னதும் அந்தக் கல்லூரி நிர்வாகம் அவர் கணக்குக்கு அம்பதாயிரம் ரூபாயை அனுப்பியிருக்க வேண்டும்தானே?  கல்லூரிகளில் பண அறுவடைதானே நடக்கிறது?  இலவசமாகவா சொல்லிக் கொடுக்கிறார்கள்?  இவருடைய அக்கவ்ண்ட் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டார்கள்.  அவர் பேச்சினிடையே குறுக்கே புகுந்து, “என்ன, ஆயிரம் ரூபா அனுப்பினார்களா?” என்று கேட்டேன்.

அட நீங்க வேற சாரு.  ஒரு மாசம் ஆச்சு.  இன்னி வரைக்கும் ஒத்த பைசா வர்ல. 

இவர்தான் அந்த சிங்கப்பூர் அன்பரின் அமைப்பில் பயிற்சிப் பட்டறை நடத்தியவர்.  இலவசமாக நடத்தினாரா, அஞ்சாயிரம் வாங்கினாரா என்று கேட்க வேண்டும்.  நான் மாதா மாதம் ஸூம் கூட்டம் நடத்தினேன் அல்லவா?  கட்டணம் இல்லை.  ஆனால் விருப்பப்பட்டவர்கள் எனக்குப் பணம் அனுப்பலாம்.  நூறு அனுப்பியவர்கள் அதிகம்.  ஒன்றிரண்டு பேர் அஞ்சாயிரம்.  ஆக, எப்படியும் 20,000 ரூ. வந்து விடும்.  பிறகு, அந்தப் பேச்சின் லிங்க் கேட்டு எழுதும் வாசகர்கள் அதை விலைக்கு வாங்குவார்கள்.  அது ஒரு அஞ்சாயிரமோ பத்தாயிரமோ வரும்.  ஆக, இருபத்தஞ்சிலிருந்து முப்பதாயிரம் வரை வரும்.  அதைக் கூட என் நாவல் வேலையால் ஒத்தி வைத்திருக்கிறேன்.  இவர் அஞ்சாயிரம் ரூபாய் நொட்டுகிறாராம்.  எப்படி இருக்கிறது கதை?  இது போன்ற ஆசாமிகளால் இலக்கியம் வளராது.  ஏனென்றால், நோக்கம் சரியில்லை.  இதைப் படிக்கும் அவர் எனக்கு ஒரு வசை கடிதம் எழுதலாம்.  நல்ல ஆங்கிலத்தில், நாகரீகமான மொழியில். அது பற்றி எனக்குக் கவலையே இல்லை.  அவரைப் புண்படுத்துவது என் நோக்கம் இல்லை.  கொசுக்களோடு மல்யுத்தம் போடுபவன் மூடன்.  ஆனாலும் இதை ஏன் இத்தனை நீளமாக எழுதுகிறேன் என்றால், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாலாயிரம் ஆண்டுப் பழக்கத்தை நான் மாற்ற முனைகிறேன்.  இனிமேலாவது இந்த அவலங்கள் மாற வேண்டும்.  எஸ்.ரா.வின் பேச்சுக்களை, பேருரைகளை நாம் காசு கொடுத்துத்தான் யுட்யூபில் கேட்க முடியும்.  ஜெயமோகனின் உரைகள் கட்டண உரைகள்தான்.  இதற்கெல்லாம் முதலில் மணி கட்டியது நான் தான்.  அதற்காகவே இதை எழுதுகிறேனே தவிர அந்த சிங்கப்பூர் அன்பரைப் புண்படுத்துவதோ அவர் மனதை மாற்றுவதோ என் நோக்கம் அல்ல.  அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.  சமூகத்துக்கான செய்தி இது.  இனிமேல் மற்றவர்கள் இது போன்ற அவமானகரமான காரியங்களில் ஈடுபடாதீர்கள்.  எழுத்தாளனை அவமானப்படுத்தாதீர்கள். 

உங்களிடம் காசு இல்லை என்றால், பயிற்சிப் பட்டறைகளுக்குக் கட்டணம் வசூலியுங்கள்.  பத்து டாலர் அதிகம் என்றால், அஞ்சு டாலர் வையுங்கள்.  எழுத்தாளனுக்குக் காசு கொடுங்கள்.  அது பற்றி யோசனையாவது கொள்ளுங்கள்.  இந்த அஞ்சாயிரம் கேவலத்தையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.  சிங்கப்பூர் என்ன, தமிழ்நாடு மாதிரி பிச்சைக்கார நாடா? 

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேரளத்து கிராமத்தில் ஒரு  இளைஞன் தன் கவிதை வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தான்.  சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தும் அனுப்பியிருந்தான்.  நன்றாக இருந்ததால் கலந்து கொண்டேன்.  அதற்காக அவன் எனக்கு விமான டிக்கட்டும் அனுப்பியிருந்தான்.  நல்ல உயர்தரமான ஓட்டலில் தங்கல்.  உங்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்றேன் திடீரென்று.  ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை.  பார்த்தால் அது ஒரு ஓலைக் குடிசை.  பத்து அடிக்குப் பதிமூணு அடி.  மிரண்டு போனேன்.  காசு ஏது விமான டிக்கட்டுக்கு என்று கேட்டேன்.  பெண்டாட்டியின் நகை.  அப்படி எதுக்குய்யா நான்?  ”உங்கள் ஊரில் ரஜினியோ கமலோ ஒரு புத்தகத்தை வெளியிடுவது மாதிரிதான் நீங்களோ அருந்ததி ராயோ வெளியிடுவது.  ராயைத் தெரியாது.  உங்களைத் தெரியும்.  அதனால் அழைத்தேன்.”

ஊருக்குத் திரும்பிய கையோடு அந்தக் கவிஞனுக்கு விமான டிக்கட் பணத்தோடு ஆயிரம் ரூபாய் சேர்த்துப் போட்டு அனுப்பி வைத்தேன்.  சிங்கப்பூர் அன்பர் குறிப்பிட்ட அஞ்சாயிரத்தைக் கேட்ட போது இந்தச் சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai