பெரிய விஷயமும் சின்ன விஷயமும்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு இதுவரை 250 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  நல்ல விஷயம்.  எல்லோருக்கும் நன்றி.  ஆனாலும் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலுக்கு 600க்கு மேல் முன்பதிவு செய்தார்கள்.  அதோடு ஒப்பிட்டால் இது கம்மிதான்.  மேலும், அது கட்டுரைத் தொகுதி.  இது நாவல்.  இருந்தாலும் 250 பேர் மாதக் கடைசியில் முன்பதிவு செய்தது பெரிய விஷயம்தான்.  சின்ன விஷயம் எது என்றால், லத்தீன் அமெரிக்க சினிமா நூலுக்கு 15 பேர் முன்பதிவு செய்திருப்பது.  அந்த நூல் பற்றி எத்தனையோ எழுதி விட்டேன்.  ஒரு அத்தியாயத்தையே எடுத்தும் வெளியிட்டேன்.  விலையும் மலிவுதான்.  எல்லாவற்றையும் விட முக்கியமாக, 1985க்குப் பிறகு அந்த நூல் இப்போதுதான் முதல் முறையாக அச்சில் வருகிறது.  இருந்தாலும் 15 பேர் முன்பதிவு.  என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட அதை முன்பதிவு செய்ய முன்வரவில்லை.  மட்டுமல்லாமல், முகமூடிகளின் பள்ளத்தாக்கை முன்பதிவு செய்யும் போது கூடவே ஒரு 180 ரூபாயை லத்தீன் அமெரிக்க சினிமாவுக்கும் சேர்த்து அனுப்பத் தோன்றவில்லையே என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  இன்னமும் மக்களுக்கு 180 ரூபாய் என்பது பெரிய காசாகத்தான் இருக்கிறது, தெரிகிறது.  

நான் ஏன் லத்தீன் அமெரிக்க சினிமா புத்தகத்துக்குப் ப்ரமோஷன் செய்யவில்லை என்றால், அந்த முக்கியமான நூலுக்கு ப்ரமோஷனே தேவையில்லை என்று நினைத்தேன்.  அந்த நூலை வேறு யாருமே எழுத இயலாது.  சந்தர்ப்பவசமாக எண்பதுகளில் அந்தப் படங்களை நான் பார்க்க நேர்ந்தது.  மேலும், அதில் உள்ள விவரங்கள் எதுவுமே கூகிளிலோ இணையத்திலோ கிடைக்காது.  முக்கியமான ஆய்வு நூல்களையும் granma போன்ற சஞ்சிகைகளையும் படித்துப் பெற்ற விவரங்கள் அவை.  லத்தீன் அமெரிக்க சினிமா ஒரு ஆய்வு நூலும் அல்ல.  சுவாரசியமான நூல்தான்.  மேலும், அது சினிமா பற்றிய நூல் மட்டும் அல்ல.  மொத்தமாக தென்னமெரிக்க கண்டம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடிய நூல்.  இதற்கு மேல் லத்தீன் அமெரிக்க சினிமா நூல் பற்றி எதுவும் எழுத மாட்டேன்.  வேறு வேலைகள் நிறைய உள்ளன.

என் நெருக்கமான நண்பர் ஒருவர் கேட்டார், இப்படி பிறரையே ப்ரமோட் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே, உங்கள் புத்தகத்துக்கு இதில் நூறில் ஒரு மடங்கு கூட செய்யவில்லையே என்று.  ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பது முதுமொழி.  என்னை என் அப்பனும் என் நண்பர்களாகிய நீங்களும் வளர்க்கிறீர்கள்.  மேலும், நான் அறுதியிட்டுக் கூறுகிறேன், நான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நூலுக்கு செய்யும் ப்ரமோஷன் கம்மி என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது, அந்த நாவலின் கடைசி நூறு பக்கங்களை வாசிக்கும்போது நீங்களே உணர்வீர்கள்.  இல்லாவிட்டால், எதையுமே exaggerate செய்யாத, விஷயங்களை மிகவும் objectiveஆகப் பார்க்கக் கூடிய ஆஷிஷ் நந்தி “இப்படி ஒரு நாவல் அநேகமாக எழுதப்பட்டதில்லை” என்று சொல்வாரா?  Unparalleled என்பது அவர் வார்த்தை.  பாருங்கள், லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி எழுதப் புகுந்து முகமூடிகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 

நான் தீவிரமாக நம்புகிறேன்.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு நூலை நம் கல்லூரி மாணவர்கள் படித்தால் இந்திய சமூகம் இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும்.  அதில் எனக்குச் சந்தேகமே இல்லை.  இப்போது நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.  நாவலைப் படித்த பிறகு நீங்களும் இதேபோல் உணர்ந்தால் அந்த நாவலை ஒரே ஒரு மாணவனுக்காவது பரிசாகக் கொடுங்கள்.   இலக்கியமே தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை, 15 வயதுக்கு மேற்பட்ட உங்கள் குழந்தைகளைப் படிக்கச் சொல்லுங்கள்.

லத்தீன் அமெரிக்க சினிமா – இதுவரை பேசப்படாத ஒரு கண்டத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது.