சிங்கப்பூர் குஞ்சு (தொடர்கிறது…)

கைலாச சாமியார் பற்றி தொடர் எழுதி, அவர் என் மீது பல வழக்குகள் போட்டு ஒவ்வொரு வழக்குக்காகவும் பெங்களூருக்கு மாதாமாதம் எட்டு ஆண்டுகள் போய் வந்தேன்.  நாய் அலை பேய் அலை என்பார்களே அதுதான்.  எழுதவும் முடியவில்லை.  எழுதினால் அதற்கு ஒரு வழக்கு பாயும்.  ஒருமுறை பெங்களூர் போலீஸ் என் வீட்டுக்கு அரெஸ்ட் வாரண்டோடு வந்து விட்டார்கள்.  ஒரு வார்த்தை தமிழோ ஒரு வார்த்தை ஆங்கிலமோ தெரியாமல் என் வீட்டையே கண்டு பிடித்து விட்டார்கள் அந்த இரண்டு கன்னட போலீஸ்காரர்களும்.  ஒருத்தர் இன்ஸ்பெக்டர்.  ஒருத்தர் கான்ஸ்டபிள்.  நான் சாரு நிவேதிதா என்பவரின் சித்தப்பா என்று சொன்னேன்.  மேலும், காத்திருங்கள், அவர் வந்து விடுவார் என்றேன்.  தனி வீடுதான் என்றாலும் கொல்லைப் பக்கம் வாசல் கிடையாது. ஒரே வாசல்தான்.  தெரு வாசல்.  சரி, டீ குடித்து விட்டு வருகிறோம் என்று தெரு முனைக்குப் போனார்கள்.  நான் தப்பி விட்டேன்.  உங்களால் இதையெல்லாம் நம்ப முடியாது.  என்னால் அப்போது எழுதவும் முடியவில்லை.  ஏற்கனவே நாலு கேஸ்.  எழுதினால் அஞ்சாவது கேஸ் பாயும். 

டீ குடித்து விட்டு வருவதற்குள் நான் வேறு ஊருக்குக் கிளம்பி விட்டேன்.  பெயில் கிடைக்கும் வரை அங்கே தலைமறைவு வாழ்க்கை.  எல்லாவற்றுக்கும் (நிஜ) கைலாச நாதர் புண்ணியத்தில் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள்.

இப்படியே இன்னொரு முறையும் அரெஸ்ட் வாரண்ட்.  அப்போது அவர்கள் ஒரு டெக்னிகல் தப்பு செய்தார்கள்.  என்னிடமே போன் செய்து அட்ரஸ் கேட்டார்கள்.  தப்பி விட்டேன்.

இப்போது சிங்கப்பூர்.  என்னால் இண்டர்போலுக்கெல்லாம் அப்படி டிமிக்கி கொடுக்க முடியாது.  அதனால் சிங்கப்பூர் குஞ்சு என்றே அந்த நபரைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.  எனக்கு இந்த சட்ட விஷயங்களெல்லாம் வேறு எதுவும் தெரியாது.  சிங்கப்பூர் மலேஷியா சிறையெல்லாம் கொடூர காராக்கிரகம் என்று மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  சிங்கப்பூர் குஞ்சு சிங்கப்பூரிலிருந்து என் மீது கேஸ் போட்டால் நான் என்ன செய்யட்டும் என்று எனக்குத் தெரியாது.  என்னிடம் ஜெயமோகன் அளவுக்குப் பணமோ பலம் வாய்ந்த நட்பு வட்டமோ கிடையாது.  அவரெல்லாம் Legal Wing என்றே தனியாக வைத்திருக்கிறார். 

மேற்குறிப்பிட்ட காரணங்களால் சிங்கப்பூர் குஞ்சை பெயர் குறிப்பிடாமலே விடுகிறேன்.  ஆனால் சிங்கப்பூர் மக்கள் எல்லோருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்.  ஆனால் என்னுடைய கேள்வியெல்லாம், எப்படி நீங்கள் அத்தனை பேரும் அந்த சமூக விரோதியை இத்தனை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதுதான்.  உங்கள் நாட்டுக்கே அவமானம் இல்லையா?  இதற்கிடையில் இந்த சிவானந்தம் வேறு வந்து மூக்கை நுழைத்து நாட்டாமை பண்ணுகிறார். 

வாஸ்தவத்தில் ஜெயமோகனின் வாசகர் குழுமத்தில் பல அரிய வாசகர்கள் உண்டு.  அவர்களில் பலர் தனித்துவம் மிக்க எழுத்தாளர்களும் கூட.  சுனில் கிருஷ்ணன் அவர்களில் ஒருவர்.  இந்தியப் பாரம்பரியம் பற்றி சுனில் கிருஷ்ணன் எழுதியிருப்பதெல்லாம் பொக்கிஷம்.  இன்னொரு சிங்கப்பூர் வாசகர் உண்டு.  ஜெயமோகனின் வாசகர்.  எனக்கும் நண்பர். அவரோடு சிங்கப்பூரில் பேசிக் கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தை என்னால் மறக்கவே இயலாது. அப்படி ஒரு ஞானம்.   இவர்களிடமெல்லாம் என் எழுத்து பற்றி நான் பேசுவதே இல்லை.  ஏனென்றால், இவர்களுக்கெல்லாம் என் அ-புதினம் பிடிக்கும்; புதினம் பிடிக்காது என்று தெரியும்.  என் குடும்ப நண்பர் தியோடர் பாஸ்கரனுக்கே என் புதினங்களில் ஈடுபாடு கிடையாது.  ஆனால் ஜெயமோகனின் தீவிர வாசகர் அவர். 

ராமகிருஷ்ணன் என்று ஒரு போலீஸ் அதிகாரி. டெபுடி கமிஷனர். என்னுடைய மிக நெருங்கிய நண்பர்.  என்னுடைய எல்லா நூல்களையும் வாசித்தவர்.  ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களோடும் புனைவுகளோடும் மட்டுமே நூற்றுக்கு நூறு உடன்படுவார்.  நீங்களெல்லாம் ஜெயமோகனோடு அல்லவா நண்பராக இருக்க வேண்டும் என்று கேட்பேன்.  ஒரு எழுத்தாளரையே சமாளிக்க முடியவில்லை, ஜெயமோகனுமா?  வேண்டாம் வேண்டாம் என்பார் சிரித்தபடி. 

ஆனால் ஜெயமோகன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரில் (இலக்கியக்) கட்டப் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருக்கும் பேர்வழிகளும் இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருத்தர்தான் இந்த சிவானந்தம்.  ஏன் இவர் சிங்கப்பூர் குஞ்சுவுக்கு வக்காலத்து வாங்கி எழுதினார் என்றால், இவரும் அந்தக் குஞ்சு மாதிரிதான்.  குஞ்சு அளவுக்குத் தீவிரம் அல்ல.  ஆனாலும் ஒரே ஜாதிதான்.  சிவானந்தத்தைக் கூட ஏன் பேர் சொல்லி எழுதுகிறேன் என்றால், ஏதோ ஜெயமோகனின் நிழல் இவர் மீது பட்டிருக்கிறது என்பதால்தான்.  மற்றபடி ஜெயமோகன் எழுத்தின் ஒரு அட்சரம் கூட இவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  ஒரு சவால் விடுகிறேன்.  உமக்கு ஜெயமோகனின் அறம் கதை புரிந்ததா?  அந்தக் கதையில் வரும் முதலாளிதான் நீர் வக்காலத்து வாங்கும் சிங்கப்பூர் குஞ்சு.  அதில் வரும் எழுத்தாளர்தான் அந்தக் குஞ்சுவின் பேச்சை நம்பி அங்கே வந்து போன தமிழ் எழுத்தாளர்களும் அங்கேயே உள்ள மற்ற இளம் எழுத்தாளர்களும். 

என்ன பிரச்சினை என்றால், ஜெயமோகனின் வாசகராகச் சொல்லிக் கொள்ளும் சிலர் ஜெ.வைப் படித்திருப்பதால் தங்களையே ஜெயமோகனாக பாவித்துக் கொள்கிறார்கள் என்பதுதான்.  அட மட்டிப் பதர்களே, ஜெ. படித்தது ஒரு தீவிர வாசகன் பத்து ஜென்மம் எடுத்துப் படிக்கக் கூடியது.  ஜெ. எழுதியது இருபது ஜென்மத்தில் எழுதக் கூடியது.  எனவே நீங்கள் என்னதான் ஜெயமோகனோடு ஒரே தட்டில் சாப்பிட்டால் அவர் எழுத்தின் நிழலைக் கூட ஸ்பரிசம் செய்ய முடியாது.  சொல்லிக் கொள்ளலாம் ஜம்பமாக.  அவரும் உங்கள் போட்டோவோடு உங்கள் கட்டுரைகளை வெளியிடுவார்.  அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் இந்த சிவானந்தத்தைப் பார்க்கிறேன்.  இனிமேல் இது பற்றி எழுத ஒன்றுமில்லை. 

ஆனால் அந்த சிங்கப்பூர் குஞ்சு ஒரு சமூக விரோதி.  எனக்கு இன்று காலையில் ஒரு கடிதம் வந்தது.  அந்தக் கடிதம்:

அன்புள்ள சாரு,

“பணத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள்?” படித்தேன்.  நீங்கள் எழுதி இருப்பதில் இருந்து அது —————- (சிங்கப்பூர் குஞ்சுவின் பெயர்) என்று புரிந்துகொள்கிறேன். இது சரி என்றால் நீங்கள் சொல்வது சரிதான். அவர் இலக்கியத்தை பிசினஸ் போல் கையாளுபவர். அது அவருக்குத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள ஒரு வஸ்து. உங்கள் அவதானிப்பும் சரி, அவருக்கு  இலக்கியம் சார்ந்து எந்த நுண்ணுணர்வும் சுத்தமாக இல்லை. ஆனால் பிசினஸ்மேன், எனவே இதைவைத்து அரசு அமைப்புகளிடம் பணம் பெறுவது, புத்தகம் போட பணம் பெறுவது என்று செய்து கொண்டிருக்கிறார்.  எனவே இலக்கியம் இவரை அணுகாது, என்றும் அந்த நுண்ணுணர்வை இவரால் பெற இயலாது.

அரூவிடமும் மாயா இலக்கியவடடத்திடமும் எதிர்பார்க்காத ஒன்று இவரிடம் எதிர்பார்த்தேன் என்றீர்கள், அது மிகவும் பிடித்திருந்தது, ஏனெனில் அவர்கள் தனி மனிதர்களாக நுண்ணுணர்வோடு செயல்படுபவர்கள். ஆனால் இவர் __________ (அமைப்பின் பெயர்) என்று ஒரு அமைப்பு வைத்து, அதன் மூலம் அரசு தமிழுக்காக ஒதுக்கும் பணத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்த அரசிடமிருந்து பணம் பெறுபவர், இவர் தனிமனிதர் அல்ல. ஆனால் இப்படி நிகழ்ச்சிகளை ஜூம்மில் நடத்துவதன் மூலம் தன்னை பிரபலமாக்கி  எதிர்கால பயன்களை கணக்கிட்டு நடப்பவர்.

இவரது உள்நோக்கத்தை ஆரம்பத்திலேயே கணித்து விலகிச் சென்ற, கடுமையாகப் பேசி எதிர்கொண்ட தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்த இலக்கியவாதிகள் பல பேர். உங்கள் கூர்மையான  உள்ளுணர்வு இவரை உங்களுக்கு அடையாளம் காட்டியது என்றே எடுத்துக்கொள்கிறேன்.

அன்புடன் 

K. கவின் 

இந்தக் கடிதத்திற்கு என் பதில்:

dear kavin

உங்கள் யூகம் சரியே.  இன்னொன்று.  உங்கள் கடிதத்தை வெளியிட நினைக்கிறேன், சிங்கப்பூர் குஞ்சுவின் பெயர் குறிப்பிடாமல்.  உங்கள் பெயரும் வேண்டாம் என்றால் பெயர் வெளியிட விரும்பாத நண்பர் என்று குறிப்பிட்டு விடலாம்.  லக்ஷ்மி சரவணகுமார் கூட கேட்டிருக்கிறார், இதற்குப் போய் ஏன் இத்தனை நேரம் செலவு செய்கிறீர்கள் என்று.  இனிமேல் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்றுதான்.  துணிச்சல் இல்லாத, அல்லது ரொம்பவும் நாகரீகமான எழுத்தாளர்கள் பலர் இது போன்ற ஆசாமிகளுக்குத் துணை போய் விடுகிறார்கள்.  அதையும் தடுக்க வேண்டும்.  அதனால்தான்.

உங்கள் கடிதம் பார்த்து…

சாரு

***

இதற்கு கவினின் பதில்:

அன்புள்ள சாரு,

//துணிச்சல் இல்லாத, அல்லது ரொம்பவும் நாகரீகமான எழுத்தாளர்கள் பலர் இது போன்ற ஆசாமிகளுக்குத் துணை போய் விடுகிறார்கள். //

இது மிகவும் உண்மை, சாரு. மிகச் சரியாக சொல்கிறீர்கள். இலக்கியவாதிகளுக்கு தாம் “வாய்ப்பு கொடுப்பதாக” இவர் எண்ணம். எனவே அவர்கள் தமக்குக் கட்டுப்பட்டவர்கள்.  தான் போடும் நிபந்தனைகளுக்கு இலக்கியவாதிகள் ஒத்துப் போக வேண்டும் என்று அவர்களைக் கட்டுப்படுத்துவார்.

முன்பு சிங்கப்பூருக்கு அரசு அமைப்புகள் நிதி பெற்று (தமிழ் இங்கு அதிகாரத்துவ மொழி என்பதால் மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்குக் குறைவில்லாமல் தமிழுக்கும் ஒதுக்கப்படும்)   பயிற்சிப் பட்டறை நடத்தியபோது தமிழகத்தில் இருந்து இங்கு  வரும் இலக்கியவாதிகள் இவர் கூட்டத்தில் கலந்துகொண்டபின் உடனே திரும்பிப் போய்விட வேண்டும்.  வேறு எந்த கூடடத்திலும் கலந்து கொள்ளக்கூடாது,  வேறு அமைப்புகள் சார்ந்த நண்பர்களை சந்திக்கக் கூடாது என்பது இவர் போடும் நிபந்தனை. இவர் சொன்னதை ஏற்று அப்படியே வந்து இவர் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு, வேறு இலக்கியச்  சந்திப்புகள் எல்லாவற்றையும் மறுத்து, அதை எங்களிடம் சொல்லிப் புலம்பி  திரும்பிச் சென்றவர்கள் உண்டு. (இதற்க்கு எடுத்துக்காட்டு ———). “எழுத்தாளர்கள் என்ன உங்களுக்கு கிள்ளுக்கீரையா? உங்களுடைய சொத்தா, உங்கள் கூடடத்தில் கலந்து கொள்ளுவதற்கு நீங்கள் பொறுப்பு, ஆனால் வேறு எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ள கூடாது என்று ஒரு கலைஞனை எப்படி நீங்கள் கட்டுப்படுத்தலாம்” என்று வெகுண்டெழுந்து இவரை மோதி மிதித்துவிட்டு, இவர் சொன்னதற்குக் கட்டுப்படாமல் எதிர்ப்பதமாக நடந்து செய்து காட்டியவர்கள் உண்டு. (இதற்கு எடுத்துக்காட்டு ————–).   

ஆனாலும் உங்களைப் போன்று வெளிப்படையாக இதைப் பேசுபவர்கள் மிகச் சிலர்தான். துணிச்சல் இல்லாத, அல்லது ரொம்பவும் நாகரீகமான எழுத்தாளர்கள் பலர், இது இவருக்கு வசதியாகப் போய்விடுகிறது. ஒருவேளை இந்தக் கடிதத்தை நீங்கள் வெளியிடுவீர்கள் என்றால் இதன் மூலம் அந்தப் பெயர் இல்லாத அன்பருக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான், இலக்கியம் உங்களது வியாபாரத்துக்கான ஒரு கடைச் சரக்கு அல்ல, அன்பரே, அதை உணருங்கள். இலக்கியத்தை ஒரு வியாபாரமாகக் கருதி நீங்கள் நீண்ட நாட்கள் அதில் இருக்க முடியாது. ஏனெனில் உங்களைத் தவிர அதில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் நுண்ணுணர்வு கொண்டவர்கள். அவர்கள் உங்களை அறிவார்கள்.   இலக்கியவாதிகள் உங்கள் சேவைக்காகக் காத்திருப்பவர்கள் அல்ல, அவர்கள் உங்களுக்காக இல்லை, நீங்கள்தான் அவர்களுக்காக இருக்கிறீர்கள். மயிரே போச்சுன்னு, பொண்டாட்டி, பிள்ளைகளின் சுகங்களைக் கூட மதியாமல், நகை, சொத்துக்களை விற்று, புத்தகங்களை கோணிப்பையில் தூக்கிச் சென்று இலக்கியம் வளர்த்தவர்கள் நம் மரபில் ஆயிரம் உண்டு. அவர்களிடம் போய் நீங்கள் செய்யும் பேரம் எவ்வளவு இழிவானது என்பதை உணருங்கள். சாரு மிகத் தெளிவாக இதில் இரண்டு பாயிண்ட்கள் சொல்கிறார், அதை உணர முடிகிறதா என்று பாருங்கள்.

1.  அரூவிடமும் மாயா இலக்கியவட்டத்திடமும் அவர் எதுவும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் உங்களிடம் எதிர்பார்த்தார், அது ஏன் என்று உணர முயலுங்கள் 

2.  பணத்தின் அளவு அல்ல இங்கு பிரச்சினை, உங்களுடைய தோணி… அது உங்கள் அகத்தின் வெளிப்பாடு,  அகோரிகளுக்கு தம் முன்னால் நிற்பவன் யார் என்று தெரிவது போல, அது சாருவுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது, அதுதான் அவரது இந்த மாதிரி எதிர்வினைக்கான காரணம்.

இலக்கியம் ஒரு ஆன்மிகம், அது உங்களுக்கு அருளட்டும், அன்பரே.

நன்றி, சாரு

அன்புடன் 

K. கவின் 

கவின் சொல்லியிருப்பது மிகவும் சரி.  சிங்கப்பூர் குஞ்சுவின் அமைப்புக்கு அவராகவே கேட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த யாராவது ஒரு இளம் எழுத்தாளர் ஒரு கதை கொடுத்து விட்டால் போதும்.  அதற்கு மேல் அந்த எழுத்தாளர் வேறு எந்த அமைப்புக்கும் கதை கொடுக்கக் கூடாது, வேறு எந்த அமைப்பின் கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது.  இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள்.  ஒரு நக்கினியூண்டு ஊரில் இந்தப் பேர்வழி பண்ணியிருக்கும் அக்கிரமங்களைப் பார்த்தீர்களா?  அதே வேலையை என்னிடம் காட்டினால் நடக்குமா சொங்கி?  நீ பேசாமல் கேலாங் போய் ஒரு ஏஜென்ஸி வைத்து நடத்தேன்… உன்னுடைய குணாதிசயங்கள் அத்தனையும் அதற்குத்தான் சரியாக இருக்கும்போல் தெரிகிறது.