மாயமான் வேட்டை: எதிர்வினைகள்/ பதிவுகள்

சாரு சமீபமாக எழுதும் குறுங்கதைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவரின் புனைவுக்கும் அ-புனைவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதுதான் விமர்சிக்கப்படும் புள்ளி. எனக்கு அது விமர்சனமாக தெரியவில்லை. தன்னையே புனைவாக்குவது என்பது சுயபலிக்கு சமமாகும். தன்னை புனைதல் வழியாக தனக்கான வழியை வகுத்துக்கொள்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.

நம்புவீர்களோ இல்லையோ… நேற்று சாருவின் ராஸலீலா நினைவுக்கு வந்தது. அதோடு தன் பயண அனுபவங்களை கதைகளில் சேர்த்துவிடுவேன் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. தென்னமெரிக்க பயணங்களை சாரு நாவலாக எழுதினால் எப்படியிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இன்று ‘மாயமான்’ சிறுகதை வெளியாகிவிட்டது. தமிழ் இலக்கிய உலகில் இதுமாதிரி பல அமானுஷ்ய விஷயங்கள் தினம்தினம் நடந்தேறுகிறது. மிகவும் அந்தரமாக நாம் நினைப்பதை அப்படியே எழுதிவிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அதில் சாரு மிகவும் முக்கியமானவர்.

சாருவின் படைப்புகளில் ஒரு வாசகன் பங்கேற்பாளனாகிவிடுகிறான். ‘மாயமான் வேட்டை’ கதையில் இந்த மேஜிக் நிகழ்வதை பார்க்க முடியும். சாரு தென்னமெரிக்கா சென்றார் என்பது நாமனைவரும் அறிவோம். ஆனால் அங்கு என்ன நிகழ்ந்தது? இதுதான் கதை. தன்னை புனைவதன் வழி ஓர் அயல்நிலத்தின் வாழ்க்கையை அழகாகச் சொல்லிக் கொண்டே போகிறார். கதையில் எவ்வளவு கொண்டாட்டங்கள் வருகின்றன! என்னை கவர்ந்தது பிஸ்கோ சோர். அதேபோல ஒக்தோவியோ பாஸ் இந்தியர்களின் உணவு முறை குறித்து சொல்லி அதன் பன்முகத் தன்மையை விளக்கிய இடம் அற்புதமாக இருந்தது. ‘மனங்கொத்தி பறவை’ தொகுப்பில் சாரு மெக்ஸிகர்களின் உணவு குறித்து எழுதியிருப்பது ஞாபகம் இருக்கிறதா? சல்ஸாவை எனக்கு எழுத்தின் வழி அறிமுகப்படுத்தியது சாரு தான். இப்படியே கதை வளர்ந்துகொண்டே செல்கிறது. அடிநாதமாக கத்ரீனின் கதையும் வளர்ந்துகொண்டே வருகிறது. இதையெல்லாம் புனைவென்று ஏற்க வேண்டுமா? என்று வாசகன் கேட்கும் போது இவ்வளவு நேரம் புனைவென்று சொல்லப்பட்ட விவரங்களில் ஒரு கர்மச் சக்கரம் சுழல்வது புலப்பட ஆரம்பித்து கதை முடிகிறது. சமீபத்தில் மிலோராத் பாவிச் எழுதிய The Tale That Killed Emily Knorr கதை நினைவுக்கு வந்தது.

எப்படி கர்மா வினை புரிகிறதென்றால், மீரா இந்தியாவிலிருந்து தென்னமெரிக்கா சென்று கத்ரீனாவாக வாழ்கிறாள். அவளுடைய பணிப்பெண் ஆலியாவும் உடன் வருகிறாள்… இதற்குமேல் நீங்களே படித்து கதையில் கர்மச் சக்கரம் எங்கு சுழல்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.

வளன் அரசு

***

மாயமான் வேட்டை படித்தேன். ரொம்ப ஆழமான, அதே சமயம் சுவாரசியமான, ஜாலியான கதை. இந்த ஒன்பது சிறுகதைகளில் இது எனக்கு மிகவும் பிடித்த கதை. இந்திரா பார்த்தசாரதியைப் படிக்கும்போதெல்லாம் தோன்றும், அவர்தான் prototype அல்லது ஆதி உயிர், அவரிலிருந்துதான் சாரு வந்திருக்கிறார் என்று. குறிப்பாக தந்திர பூமி (கஸ்தூரி ஐயங்கார்), சுதந்திர பூமி, குருதிப்புனல் (வெளிப்படையான, காட்டாமான திமுக எதிர்ப்பு).

சாருவின் இந்தக் கதையில் உதயாவுக்கும் மீராவுக்குமான உரையாடலைப் படித்தபொழுது அப்படியே தந்திர பூமியின் கஸ்தூரி பேசுவது போலவே இருந்தது. சாரு இத்தனைக்கும் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களை முழுவதும் படித்ததில்லை என எழுதியிருக்கிறார். அதே சமயம் ஔரங்கசீப் உள்ளிட்ட நாடகங்களை சிலாகித்து எழுதியிருக்கிறார். பழுப்பு நிறப் பக்கங்களில் கூட இ.பா.வின் நாடகங்களைப் பற்றித்தான் எழுதப் போவதாக நேர்பேச்சில் சொல்லியிருந்தார். அதற்குள் அந்தத் தொடரை முடித்துக்கொண்டார். அவரின் சிந்தனாமுறையை இவர் எப்படி பெற்றார் என சாருவிடம் கேட்க வேண்டும். (இருவரும் தில்லியில் இருந்ததால் இருக்குமோ!)

மாயமான் வேட்டை என்ற தலைப்பும் இ.பா.வின் ஒரு நாவலில் இருந்து எடுத்ததாக சாரு சொன்னார். மீரா கதாபாத்திரம் உண்மையா கற்பனையா போன்ற கேள்விகளுக்கு ஏற்றார் போலவும் தலைப்பு பொருத்தமாக உள்ளது என்றேன்.

அப்புறம் இந்த மீரா யார், அலெஹாந்த்ரா யார் என்றெல்லாம் நண்பர்கள் கேட்டனர். அதற்கான பதிலை சாரு வல்லினம் டிசம்பர் 14, 2012 இதழில் சொல்லியிருக்கிறார். (தொகுத்த பின் புத்தகமாக அனுப்புகிறேன், சாரு).

உங்கள் எழுத்துகளில் எது உண்மை எது பொய் என கணிக்க சிரமமாக உள்ளதே?

என் எழுத்துக்கள் காலத்தையும் திணையையும் கடந்தவை. இதில் எது நிஜம் எது பொய் என்றெல்லாம் ஒரு நூறு வருடங்கள் கழித்து உங்கள் பேரனோ, பேரனுக்குப் பேரனோ படிக்கும்போது அவனுக்கு என்ன தெரியும். ஒரு பிரதி அவ்வளவுதான். It doesn’t matter, இல்லையா? இப்பொழுதுதான் எது நிஜம் எது கற்பனை என்று யோசிப்பார்கள். நூறு வருடம் கழித்து அது கிடையாது.

கடைசியாக,

ஆறு வருடங்களுக்கு முன் சாரு என்னுடைய மெட்ராஸ் வீட்டுக்கு வந்திருந்தார். படுக்கையறையில் இருந்த ஒற்றைக் கட்டிலைப் பார்த்துவிட்டு, “இந்தக் கட்டில்ல எப்படிங்க தூங்குறீங்க? நானெல்லாம் இதுல படுத்தா, தூக்கத்தில கீழ விழுந்துருவேன்,” என்றார் சிரித்துக்கொண்டே.

ஸ்ரீராம் சோமசுந்தரம்

***

சாரு..

மாயமான் வேட்டை படித்தேன். செமயாக இருந்தது. ஏனோ மனம் கனத்துப் போனது. ஏனென்று சொல்லத் தெரியவில்லை….

அற்புதம். காத்ரின் பற்றின விஷயங்கள் பிரமிப்பாக இருந்தது…

நீங்கள் அங்கேயெல்லாம் போய் விட்டுத் திரும்ப எப்படித்தான் இந்தியா வந்தீர்களோ……

நான் மட்டும் ஒரு கோடீஸ்வரனாக இருந்திருந்தால் உங்களுக்கு சீலேயில் ஒரு அரண்மனை கட்டிக் கொடுத்திருப்பேன்…

மூர்த்தி.

***

கதை நன்றாக இருக்கிறது சாரு.  ஆனாலும் ஏதோ ஒன்று சரியாக வரவில்லை – குறிப்பாக முடிவில் – எனத் தோன்றுகிறது.  But this is one of your best stories…

Abilash Chandran

***

Hi Charu

This story gave me a surreal experience. I know part of the story already, thanks to your previous interactions.

But the extraordinary blend of fact and fiction (the known fact that you’re an auteur in this area) elevated your writing … And gave that surreal experience.

Ramesh

***

Oh my god, what a story.  It was typical charu.

Nirmal

***

Dear Charu,

thank you for the story, it is lovely – such a mystic transcendence experience to read. I wish I could pack my bag tomorrow and travel to see La Moneda palace and stroll the streets of Chile. 

After reading this story, you have decided my next trip. Hope Corona would allow us soon.

Tharvesh, Oslo

***

அன்புள்ள சாரு…

மாயமான் வேட்டை சிறுகதை உங்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் அற்புதம்.
மாயமான் என்ற படிமம், துள்ளல் நடை, கதையின் ஆரம்பம் என  சிகரம் தொட்டு முத்தாயப்பான கடைசி வரிகள் என சிறுகதை உலகின் அரசர் யார் என்பதை அடிக்கோடு இட்டுக் காட்டிவிடுகிறீர்கள்
உலகம் என்பது மாயை  என்பர் ஞானியர்.  ஆனால் அதற்காக வாளாவிருக்க மாட்டார்கள். மாயை எனத் தெரிந்து கொண்டே விளையாட்டாக அதில் உழல்வார்கள். அதுபோன்ற ஒரு நிலைதான் எழுத்தாளனுக்கும்.  தான் வேட்டையாடுவது பொய்மான் எனத் தெரிந்தே அதில் ஈடுபட்டு தன்னை அழித்துக் கொள்கிறான்.   வாழ்க்கை எனும் வேள்வியில் தன்னையே சமர்ப்பிக்கிறான்.
ஞானியும் எழுத்தாளனும் இப்படி ஒரு வேள்வி செய்து முட்டாள்தனமான இவ்வுலகை சற்றே உயர்த்துகிறார்கள்

பொய்மான் வேட்டை கதை நாயகன் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்துவதில்லை.  வாழ்க்கை தன்னை நடத்திச்செல்ல அனுமதிக்கிறான். அவன் சந்திக்கும் நபர்கள்,  அவனுக்கு நேரும் அனுபவங்கள் என அனைத்தும் தற்செயல் நிகழ்வுகளே.  ஆனால் அந்தத் தற்செயல்கள்தான் எத்தனை அழகானவை…
பயண நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிடும் ஒருவனுக்கு இத்தனை அழகான அனுபவங்கள் கிடைத்திரா.

முழுக்க முழுக்க பொறுப்பற்ற விழிப்புணர்வற்ற ஒருவனுக்கும் இது  சாத்தியமல்லை. அனைத்தும் தெரிந்து கொண்டு, ஆனால் வாழ்வைக் கட்டுப்படுத்த நினைக்காமல், வாழ்க்கையை அதன்போக்கில் விட்டுவிட்டு தன்னையே வேடிக்கும் பார்க்கும் நாயகனைப் படிக்கையில் தஸ்தயேவ்ஸ்கியின் சூதாடி  நம் மனதில் வந்து போகிறான்.

ஞானம் என்பது திறமை வாய்ந்த கனவான்களுக்கானதல்ல.  ஏமாறத் தயாராக இருக்கும் சூதாடிக்களுக்கும் இழக்கத் தயாராக இருக்கும் குடிகாரர்களுக்கும் உரியது என்பார் ஓஷோ. அந்த வகையில்  நிஜ மானை வேட்டையாடும் வித்தைக்காரனைவிட,   பொய்மான் வேட்டையாடும், வாழ்க்கையுடன் விளையாடும் சூர்யா மனதை வென்று விட்டான்…

கடைசி வரி கதையை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள சாரு,

அடர்த்தியான மொழி மற்றும் தேய் வழக்கு குறித்த கேள்வி, உங்களை நோக்கி, அதுவும் காயத்ரியிடம் இருந்து வந்திருந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. படைப்புக்கான மொழியா? அல்லது மொழிக்கான படைப்பா? என்ற கேள்விக்கு படைப்புக்கான மொழி என்பதே சரியான பதிலாக இருக்க முடியும். அக்கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றாலும் எனது அவதானிப்புகளைச் சொல்லிவிட முனைகிறேன்.
மொழியின் அடர்த்தி, படிமங்கள், உருவகங்கள், மெய்மைத் தேடல், வாசகன் பங்கேற்பு, தேய் வழக்குகள் இல்லாதிருத்தல் என பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பது ஒரு வித மேட்டிமை மனப்பான்மை இல்லையா. இதில் உள்ள பல வார்த்தைகள் ஜெயமோகன் பள்ளியினால் முன்னெடுக்கப்படுபவை. மேற்சொன்ன வரையறைகளுக்கு உட்பட்டதே எனக்குப் பிடித்த  இலக்கியம் என ஒருவர் கூறினாரென்றால் அது தவறல்ல. அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் இந்த வரையரைக்குள் வராத படைப்புகளைச் சிறுமைப்படுத்துவது நியாயமான செயல் அல்ல. இப்படைப்புகள் மட்டுமல்ல, இவற்றைப் படிக்கும் வாசகர்களை எள்ளி நகையாடுவதும் இணையத்தில் நடப்பதை அறிந்திருப்பீர்கள்.  (எளிமையான படைப்புகள் எல்லாமும் இலக்கியம் அல்ல என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அடர்த்தியான, படிமங்கள் நிறைந்த, மொழியே இலக்கிய படைப்பிற்கான முதல் தகுதி என்பதையே நான் மறுக்கிறேன்)
தேய் வழக்கு: சங்க இலக்கியங்களை முழுமையாய்ப் பயின்ற ஒருவருக்கு நம் நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும் பங்கு தேய்வழக்காகத்தானே தெரியும். ஒரு படைப்பு முழுவதும் தேய்வழக்குகளாலும், மீள மீளச் சொல்லப்பட்ட உருவகங்களாலும் நிரம்பி வழிவது என்பது வேறு. படைப்பின் தேவை கருதி அவற்றை உபயோகிப்பது என்பது வேறு. இது கூடத்தெரியாமலா நீங்கள் இவ்வளவு எழுதியிருக்க முடியும். 


 நாம் எப்பொழுது நம் மொழியின் போதாமைகளை உணர்கிறோம்? நம் உத்தேசித்த வடிவமும், கருத்தும் நம் படைப்பில் கைகூடாத பொழுதில் மட்டுமே. ஒரு சிறந்த எழுத்தாளன், அவனது புலமையால்  சிக்கலான கருத்துக்களையும் எளிமையாகப் புரியும்படி எழுதினால், அது எளிமையாகப் புரியும்படி இருப்பதனாலேயே சாதாரண படைப்பாகிவிடுமா?
கீழே வருவது ஐன்ஸ்டீனின் கூற்று:If you can not explain something in a simple way, then it means that you do not fully understand it.

— 
With Regards

Dr. Raja, N. S.

Associate Professor, Genetic Engineering DepartmentSRM University