பயிற்சிப் பட்டறை கட்டணம்

சிறுகதை பயிற்சிப் பட்டறைக்கு ஆறு அமர்வுகளுக்கு (மொத்தம் பத்து மணி நேரம்) 500 டாலர் என்பது அதிகம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் அப்படி வைத்தேன் என்றால், சி.சு. செல்லப்பா, க.நா.சு., கோபி கிருஷ்ணன், நகுலன், புதுமைப்பித்தன் போன்றவர்களைப் பற்றிய என்னுடைய நான்கு மணி நேர உரைகளின் – கோபி பற்றிய உரை ஏழு மணி நேரம் – காணொலிப் பதிவை என்னிடம் கொஞ்சம் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். அது பற்றித் தொடர்ந்து எழுதினேன். நூறு ரூபாயும் அனுப்பலாம், முன்னூறும் அனுப்பலாம், ஆயிரமும் அனுப்பலாம், உங்கள் விருப்பம் என்று எழுதினேன். என்ன அர்த்தம்? விலையில்லா அந்தப் பொக்கிஷத்தை நூறு ரூபாய் கூட செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் நான்கு மணி நேர உரை. பத்து பேர் அனுப்பினார்கள். ஒருசிலர் நூறு, ஒருசிலர் ஐநூறு. ஒன்றிரண்டு பேர் 5000 ரூ. ஆனால் மொத்தமாகப் பத்து பேர் தான்.

ஆக, நாலு மணி நேர உரையை நூறு ரூபாய் கொடுத்து வாங்க நூறு பேர் இல்லை. ஆனால், அதே காணொலிகளில் ஒன்றை இலவசமாக வெளியிட்டேன். மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பத்து பேர் எங்கே? மூவாயிரம் பேர் எங்கே? அதனால்தான் சிறுகதை பயிற்சிப் பட்டறைக்கு 500 டாலர் கட்டணம் என்றேன். இதுவரை ஆறு ஏழு பேர் வந்துள்ளனர். பத்து பேர் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

அல்லது, ஏதாவது ஒரு அமைப்பாகச் சேர்ந்து இலவசமாக நடத்தலாம். எனக்கு ஒரு அமர்வுக்கு 50000 ரூ. கொடுக்க வேண்டும். என்னுடைய காம்ரேட் சமீபத்தில் நடத்திய சிவராத்திரி ஜாலி விழாவுக்குக் கட்டணம் எவ்வளவு சொல்லுங்கள். ஒரு ராத்திரிக்கு 500 இலிருந்து 50000 ரூ வரை. 50 ஆயிரம் பேர் சேர்ந்தார்களா, ஒரு லட்சமா? பத்து இருபது கோடி சேர்ந்திருக்கும். இலக்கியம் என்பது மட்டும் ஏழைகளுக்கான எள்ளுருண்டையாக இருக்கிறது…

பயிற்சிப் பட்டறையில் சேர விரும்புவோர் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com