மாயமான் வேட்டை : செந்தூரம் ஜெகதீஷ் (முகநூலில்)

பல ஆண்டுகளாக சாரு நிவேதிதா வை அறிவேன்.ஆனால் உடன்படாமல் விலகி இருப்பேன்.வசீகரமானது அவருடைய தோற்றம். விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிவார்.அதை விட வசீகரமானது அவர் எழுத்து. மலையாளத்தில் தகரா போன்ற பரதனின் பிரமாதமான கலைப் படைப்பில் பிட்டு போட்டு பகல்காட்சியில் ஓட்டுவார்கள்.அது ஷகிலாக்களுக்கும் சிலுக்குகளுக்கும் முந்தைய காலம். அது போலத்தான் சாரு நிவேதிதா வின் எழுத்து என்று ஒரு கலவரமான மனநிலை இருக்கும். உயிர்மை கூட்டத்தில் ஒருமுறை உடல் பருத்த ஒரு மிக அழகான பெண்ணுடன் சிரித்துப் பேசிய சாரு நிவேதிதா வைப் பார்த்து தலை தெறிக்க ஓடி வந்தது ம் உண்டு. எழுத்தாளன் என்றால் புதுமைப்பித்தன் பாரதி போல இருப்பார்கள் என்று எண்ணிய காலம் அது.நீங்கள் அணிந்திருக்கும் டெர்லின் சட்டை எங்கள் அடிவயிற்றில் இருந்து திருடியது தானே என்ற புதுமைப்பித்தனின் குரலை வைத்து பஞ்சமும் பசியும் துவைக்காத ஜீன்சும் வேட்டியும் அணிந்து பெண் வாடையை காணாத ஆண்களைத்தான் எழுத்தாளர் என்று ஏற்றுக் கொண்ட காலம் அது.ஒரு முறை எல்.எல் ஏ.அரங்கில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் பார்வையாளராக வந்த சாரு இது ஆண்கள் மட்டுமே உள்ள Gay கூட்டமாக இருக்கு என்று பேசி வெளியேறி விட்டார். ஆனால் எங்கே சந்திக்க நேர்ந்தாலும் கனிவுடன் பேசி மனம் கவர்ந்து விடுவார். ஓஷோ படித்த பிறகு ஆடைகள் ஆபரணங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் எல்லாம் ஒரு வேடம் என்று புரிந்தது. சாரு நிவேதிதா வின் ஆடம்பர தோற்றத்துக்கு உள்ளே கட்டுப்படுத்த கூடாத அன்புக்கும் காமத்துக்கும் ஏங்கும் ஒரு இதயம் இருப்பதைப் புரிந்துக் கொண்டேன்.இலக்கியம் மீதான அவரது தீவிரமான காதல் நான் ரசித்த டெல்லி 6 மாதிரியான அவரது திரைப்பட ரசனை போன்றவை பிடித்திருந்தது. கர்நாடக முரசு என்று இதழ் ஒன்று வெளியிட்ட காலம் தொட்டு எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்,ஸீரோ டிகிரி,ராசலீலா, எக்ஸைல், கோணல் பக்கங்கள்,பழுப்பு நிறப் பக்கங்கள்,லத்தீன் அமெரிக்க சினிமா வரையிலான அவர் புத்தகங்களைப் படித்து விட்டேன். ஆனால் சாரு நிவேதிதா வின் சிறுகதைகள் படித்ததாக நினைவில்லை.இந்தப் புத்தகக் காட்சியில் அம்ருதா அரங்கில் கிடைத்த சாரு நிவேதிதாவின் முத்துக்கள் பத்து தொகுப்பை வாங்கி வந்தேன்.அதை படிப்பதற்குள் அவருடைய இணையதளத்தில் வெளியான மாயமான் வேட்டை என்ற சிறுகதையை வாசித்தேன்.அவரது வெளிநாட்டு பயணக் கட்டுரையைப் போல கதை தொடங்கியது.சாந்தியாகோவில் எட்டு நாட்கள் தனியாக இருக்கும் சூழலில் காதரீனா என்ற ஒரு நாடகத்தை கதை சொல்லியான தமிழ் எழுத்தாளன் சூர்யா பார்க்கிறான். காதரீனாவின் இந்தியப் பெயர் மீரா. மெக்சிகோவின் காவல் தெய்வமாக மாறிப்போனது பற்றிய சுவாரஸ்யமான பின்னணியுடன் நாடகத்தை இயக்கிய மீராவுடன் நட்பு காமம் போன்ற களியாட்டம் முடித்து மீராவின் தோழியை நிர்வாண கிளப்பில் இருந்து மீட்டு மதராஸ் அழைத்து வந்து அவள் கோவாவில் இருப்பதாக மீராவிடம் சொல்லி இங்கே அந்த வெளிநாட்டு ப் பெண்ணுடனும் உடல் உறவை வைப்பது வரை கதை சொல்லி முடிக்கிறான் சூர்யா. இது நவீன மாயமான் வேட்டை.இப்படி சுருக்கமாக கதை சொல்லி விட்டதால் ப்பூ இவ்வளவுதானா என்றும் இது ஒரு பாலியல் அத்துமீறல் கதைதானே என்றும் நிராகரித்து விட முடியாது. சாரு நிவேதிதா என்ற இலக்கியவாதியும் இதற்குள் இருக்கிறார்.மான் வேட்டையுடன் ஒரு மயில் நடனத்தை யும் மனித மனச் சலனங்களையும் போகத்துக்கென்றே வாழும் மனத்தின் பச்சையான இச்சையையும் இக்கதை வெளிப்படுத்துகிறது.மனிதனின் ஒவ்வொரு செயலும் செக்ஸ் சார்ந்த ஒன்று தான் என்று சிக்மண்ட் பிராய்டை மெய்ப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.(ஓ எதுகை மோனை பயன்யடுத்துவதற்கு மன்னிக்கவும்)