கர்மா

நான் எழுதிக் கொண்டிருக்கும் “அல்வாவினால் அடைந்த நிர்வாணம்” என்ற நெடுங்கதையைப் பதிவேற்றம் செய்ய சற்றுத் தயங்குகிறேன். எவ்வளவுதான் கற்பனையாக எழுதினாலும் இப்போது இருப்பவர்களின் சாயை தெரிவதால் நீதிமன்றத்துக்கு இழுத்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது? அதற்காகவெல்லாம் பயப்படவும் முடியாதுதான். கதைசொல்லி மட்டும் நிர்வாணமாக வந்தால் பரவாயில்லை. இன்னொரு ஆளும் நிர்வாணமாக வருகிறார். பெண் அல்ல, ஆண். உடனே Gay கதை என்று நினைத்து விடாதீர்கள். நேரம் காலமெல்லாம் வேறு வேறு. செக்ஸ் கதையும் அல்ல. உளவியல்ரீதியான கதை. ஆடையில்லாமல் சாலையில் திரியும் ஒருவர் ஒன்று, துறவியாக இருக்க வேண்டும், அல்லது, பைத்தியமாக இருக்க வேண்டும். வேறு சாத்தியம் இல்லை. கதையில் அம்மாதிரியான நிலைகளே அலசப்படுகின்றன. நாளை பதிவேற்றம் செய்ய முயல்கிறேன்.

ஏன் பலரும் ஆட்டோஃபிக்‌ஷன் எழுத முன்வருவதில்லை என்றால், இதுதான் காரணம். உங்களை மட்டும் பலி கொடுப்பது என்றால் எல்லோரும் கொடுத்து விடுவார்கள். சில மாஃபியா படங்களில் பார்த்திருக்கலாம். சிறையில் இருப்பான் ஒருவன். அவனிடமிருந்து எதிர் கோஷ்டிக்கு ஒரு தகவல் தெரிய வேண்டும். கேட்பார்கள். இவனால் கொடுக்க முடியாது. கொன்று விடுவோம் என்பார்கள். கொல்லுங்கள் என்று சாக முன்வருவான். ”சேச்சே, நீ கொசு. உன் உயிர் யாருக்கு வேண்டும்? உனக்கு ஒரு சகோதரியும் அவளுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறதுதானே? உன் அம்மாவும் அவர்களோடு இருக்கிறார் இல்லையா?” அடுத்த நிமிடமே அவன் உண்மையைக் கக்கி விடுவான். இதேதான் ஆட்டோஃபிக்‌ஷன் விவகாரத்திலும். ஒரே வித்தியாசம். இதில் கதைசொல்லி, தன்னோடு சேர்த்து தன் குடும்பத்தாரையும் பலி கொடுத்தாக வேண்டும். அதனால்தான் யாரும் ஆட்டோஃபிக்‌ஷன் எழுதுவதில்லை. குடும்பத்தார் மட்டும் இல்லை. அபிலாஷ் சொன்னார், மாயமான் கதை பற்றி, செம ஃபாண்டஸி என்று. ரசித்தேன். அபிலாஷ் என்னை விட வெகுளி. கதை ஆங்கிலத்தில் வந்து மூன்று பேருக்கும் கிடைத்திருந்தால் ரொபர்த்தோ ரசித்திருப்பான். நிஜப் பெயர். ஆண் என்பதால் ரசிக்கலாம். மற்ற இருவரும் என்னை ஜென்ம விரோதியாக வைத்திருப்பார்கள். எதற்கு என்றால், நான் என்ன உன் கதைக்கு சோதனை எலியா என்ற கேள்விதான். இதே கேள்வியைக் கேட்டுத்தான் ஒரு கேனடியப் பெண் நட்பையே முறித்துக் கொண்டாள். தேகத்தின் இரண்டாவது நாயகி அவள். என்னைப் பற்றி ஒரு வார்த்தை எழுதினால் விஷ்க் என்றாள். ஒரு வார்த்தையா, நாவலே எழுதி விட்டேன். காலி. ஏதோ ஆட்டோஃபிக்‌ஷன் என்றால் விளையாட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் என் கதி என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். அவர்கள் எனக்கு எத்தனை சாபம் விடுவார்கள் என்று தெரியுமா? இப்படித்தான் நான் நாற்பது ஆண்டுகளாக சாபம் வாங்கித் திரிகிறேன். அதுவும் பெண்களிடமிருந்து. என்ன செய்வது? ஜெயமோகன் எழுதியது போல, புதுமைப்பித்தனின் பாத்திரம் சொல்கிறதே, உலகமே என்னைக் காறித் துப்பியது, அதனால்தான் எனக்கு க்ஷயரோகம் வந்தது என்று. அது அப்படியே என்னைப் பற்றியே சொல்வது போல் இருக்கிறது. நான் எந்த சோதிடனைப் பார்த்தாலும் உங்களுக்கு எக்கச்சக்கமான சாபம் இருக்கிறது என்கிறார்கள். எழுதுவதுதான் சாபம். நான் மதியம் மூன்றரை மணி வரை பட்டினி கிடந்து சாகிறேன் என்று எழுதினால் அது அவந்திகா பற்றி எழுதுவதாக ஆகி விடுகிறது அல்லவா? அவந்திகா படிக்க மாட்டாள். படித்தாலும் சபிக்க மாட்டாள். ஆனால் மற்றவர்கள்? எக்கச்சக்கமாக சாபம் வாங்கியிருக்கிறேன். தசாவதாரம் படத்துக்கு என் காட்டமான விமர்சனத்தைப் படித்து கமல் அக்கட்டுரையை வெளியிட்ட ஆசிரியரிடம் என்னை எப்படி சபித்திருக்கிறார் தெரியுமா? பயங்கரம். இப்படி ஆயிரம் சாபங்கள்.

அந்த சாபத்தையெல்லாம் உரமாக ஏற்றுத்தான் என் ஆட்டோஃபிக்‌ஷன் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பது இறையருளும் என் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே. அதுதான் எனக்கு தைரியம்.

கதை நாளை வரும். அல்வாவினால் அடைந்த நிர்வாணம். அதுவரை குமுதத்தில் வந்த என் கட்டுரை ஒன்று கீழே. சந்தா/நன்கொடை நினைவூட்டுகிறேன்.

***

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு.  ஒருத்தர் அந்த நம்பிக்கை இல்லாதவர்.  அல்லது, ஆயிரத்தில் ஒருத்தர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  இதில் ரெண்டும் கெட்டானாகப் பலர் உண்டு.  கடவுள் உண்டா இல்லையா என்று தெரியாது.  தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. இவர்களை agnostic என்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் எல்லாம் இந்த ரகம்தான் என்று நினைக்கிறேன்.  இன்னொரு விஷயமும் நீங்கள் கவனித்திருக்கலாம்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததை விட இன்று வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  என் நண்பர் ராகவன் 40 ஆண்டுகளுக்கு முன் (அப்போது அவர் 20 வயது இளைஞர்) அவருடைய ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்குப் போகும்போது பட்டரும் ராகவனும் பெருமாளும்தான் இருப்பார்களாம்.  ராகவனைக் கண்டதும் பட்டர் வேறு எங்கோ போய் விடுவார். காரணம், ராகவனிடம் அப்போது ஒரு பைசா கிடையாது.  அதனால் ஒரு நாளும் தட்சிணைத் தட்டில் தட்சிணை போட்டதில்லை.  பட்டரும் என்ன பண்ணுவார் பாவம்.  நீர் நேரடியாகவே பெருமாளை சேவித்துக் கொள்ளும் என்று போய் விடுவார்.  இப்போது அந்தப் பெருமாள் கோவிலின் உள்ளேயே நுழைய முடியவில்லையாம்.  அத்தனை கூட்டம்.  இது மக்கள் தொகைப் பெருக்கத்தால் மட்டும் ஏற்பட்டு விடவில்லை.  மக்களின் ஆசை அதிகரித்து விட்டது.  பேராசை ஒன்றுமில்லை.  உழைக்காமலேயே பணக்காரனாகி விட வேண்டும்!  அதற்குத்தான் அத்தனை கூட்டம். 

ஆனால் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்து விட்டன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  இதற்கு அர்த்தம் என்ன?  ”யாரையும் ஏமாற்றாதே.  வாங்கின கடனைக் கொடுத்து விடு.  இல்லாவிட்டால் அதைப் போல் பத்து மடங்குப் பணத்தை நீ இழக்க வேண்டியிருக்கும். ஒரு மூட்டை அரிசியில் ஒரு படி கல்லையும் சேர்த்து எடையைக் கூட்டாதே.  அது பாவம்.  அதன் விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்.”  இப்படியெல்லாம் யாரிடமாவது சொல்லிப் பாருங்கள்.  போய்யா லூசு, பிழைக்கத் தெரியாதவன் என்பார்கள்.  இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்தில் இதன் விளைவை அனுபவிக்க வேண்டி வரும் என்று சொன்னால், கடவுளை நம்புபவர்களே அதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

என்ன  ஆதாரம் என்று கேட்கிறார்கள்.  செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் போகிறது, ஒவ்வொரு கிரகத்தைப் பற்றியும் விஞ்ஞானம் விளக்குகிறது.  எப்படிக் குழந்தை உருவாகிறது, பிறக்கிறது எல்லாவற்றுக்கும் விஞ்ஞானத்தில் பதில் உண்டு.   அந்த விஞ்ஞானத்தின்படி மறு ஜென்மம் என்பதெல்லாம் மடத்தனம்.  இந்த உடம்பில் உயிர் இருக்கிறது.  உடம்பு அதனால் முடிந்த அளவு செயல்பட்ட பிறகு தன் செயலை முடித்துக் கொள்ளும்போது மரணம் நேர்கிறது.  மூளை சிந்திப்பதை நிறுத்துகிறது.  அவ்வளவுதான்.  அதற்கு மேல் எதுவும் இல்லை.  ஆம், எதுவுமே இல்லை.  இதுதான் விஞ்ஞானம். 

ஆனால் பல மதங்கள் இதை மறுக்கின்றன.  விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களைக் கொடுக்க முடியாவிட்டாலும் அவை உயிர்களின் பிறப்பு, இறப்பு, இறப்புக்குப் பிறகான வாழ்க்கை போன்ற விஷயங்களைப் பற்றி வேறு விதமாகச் சொல்லுகின்றன. உலகில் உள்ள நீதிநூல்களும்,அக்காலத்திய இலக்கியங்களும் கூட இதையே வழிமொழிகின்றன.  ஆனாலும் விஞ்ஞானம் என்ற விஷயத்தை இன்றைய காலகட்டத்தின் புதிய மதமாக ஏற்றுக் கொண்டு விட்ட நவீன மனிதன் அதற்கெல்லாம் சோதனைச்சாலைகளில் பரீட்சிக்கப்பட்ட ஆதாரங்களைக் கேட்கிறான்.  மதமோ ஆன்மீகமோ அது பற்றிக் கவலைப்படுவதில்லை. நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ என்பது அதன் போக்கு.

இந்தப் பின்னணியில் ஒரு எழுத்தாளனின் நிலை என்னவாக இருக்கும்?  உலகம் பூராவும் எழுத்தாளர்கள் புத்திஜீவிகளாகவே இருக்கிறார்கள்.  புத்திஜீவி என்றால் விஞ்ஞானத்தைத் தன் புதிய நம்பிக்கையாக ஏற்றவன்.  ஆனால் நான் அப்படி அல்ல.  ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்தவன்தான்.  பிறகு அதற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தபோது என் மனசாட்சியை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

கடவுளை நம்புபவர்கள் கூட கர்மாவை நம்புவதில்லை. ஏனென்றால், கர்மாவை நம்பினால் மறுபிறவியை நம்ப வேண்டும்.  பாவ புண்ணியத்தை நம்ப வேண்டும். ஆன்மாவுக்கு அழிவு இல்லை.  அது அணிந்திருக்கும் சட்டைதான் உடம்பு.  சட்டை பழசாகிக் கிழிந்ததும் வேறு சட்டை போட்டுக் கொள்வதைப் போல ஆன்மா வேறொரு உடம்பை எடுத்துக் கொள்கிறது.  அதே சமயம், ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடியே மறுபிறவி அமைகிறது.  அசோகரின் மகன் மஹிந்தா, மகள் சங்கமித்ரா பற்றி சரித்திரம் சொல்லும்.  ஆனால் அதிகம் வெளியே தெரியாத குணாளன் ஒரு ஞானி.  அரச பதவியைத் துறந்தவன்.  ஒரு சதி செய்து அவன் கண்களைப் பறித்து விட்டாள் அவனுடைய சிற்றன்னை த்ரிஷா.  கண்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவனால் அது முடிந்திருக்கும்.  அரசர் ஆணையில் ஏதோ சதி நடந்திருக்கிறது என்று அந்த உத்தரவைக் கொண்டு வந்த சேவகர்களும் ஊர் மக்களுமே சொல்லுகிறார்கள்.  ஆனாலும் ஒரு ஞானியான குணாளன் ”அரசரின் ஆணையை நிறைவேற்றுங்கள், இது என்னுடைய கர்மவினை, இதை நான் இந்தப் பிறவியில் தவிர்த்து விட்டால் இன்னும் பல பிறவிகளுக்கு  இதைத் தூக்கிக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்” என்று சொல்லித் தன் கண்களைக் குருடாக்குவதற்குச் சம்மதிக்கிறான்.  பிறகு, தன் மனைவியை அழைத்துக் கொண்டு (வட) இந்தியா முழுவதும் தெருக்களில் பாடிப் பிச்சையெடுத்துத் திரிகிறான்.

காரணம், அவன் இளவரசனாக இருக்கும்போதே ஒரு பௌத்த ஞானியைச் சந்தித்தான்.  அந்த ஞானி “என்றாவது ஒருநாள் உன் கண்களை நீ இழக்க வேண்டியிருக்கும்.  அப்போது துக்கம் கொள்ளாதே.  உன் கண்களை இழப்பதற்கு நீயேதான் காரணம். முந்தின பிறவியில் வேட்டையின்போது ஒரு மானின் கண்களைப் பறித்து விட்டாய், அந்தக் கர்மாதான் இது.  அதை நீ அனுபவித்தே ஆக வேண்டும்” என்கிறார்.  இத்தனை விவரமும் சரித்திரமும் தெரியாத என் அம்மா அந்தக் காலத்தில் நான் நாயைக் கல்லால் அடித்தால் ”தம்பி, நாயை அடிக்காதே… அது போல் பத்து மடங்கு அடி உனக்கு சேர்த்துக் கிடைக்கும்” என்பார்கள். 

சமீபத்தில் கொரோனாவினால் இறந்து போன கொரிய இயக்குனர் கிம் கி டுக்கின் Spring, Summer, Fall, Winter… and Spring என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?  இன்று நமக்கெல்லாம் அமெரிக்கா ஒரு கனவு உலகமாகத் தென்படுகிறது.  பல படித்த இந்தியர்கள் தங்கள் மரபையும் பாரம்பரியத்தையும் கை கழுவி விட்டு அமெரிக்க டாலரை நம்பி அங்கே ஓடுகிறார்கள்.  ஆனால் எந்தக் காலத்திலும் இந்தியா வேறு, மேற்குலகம் வேறு என்பதை கொரோனா நிரூபித்து விட்டது.  கொரோனாவை விடுங்கள், இன்றைக்கும் இத்தனை தூரம் பணத்தையே பெரிதாக நினைக்கும் பெரும்பான்மை மக்களிடையே அந்தப் பணத்தைத் துச்சமாக நினைத்து, அறம் தர்மம் போன்றவற்றையே பெரிதாக நினைக்கும் மக்கள் கூட்டம் கிழக்கு நாடுகளில்தான் உள்ளன. 

கிம் கி டுக்கின் மேற்கண்ட படத்தைப் பார்த்தால் கிழக்குக்கும் மேற்குக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.  அதில் வரும் சிறுவன் தவளையையும் பாம்பையும் பிடித்து பெரிய கல்லைக் கட்டி விட்டு விடுவான்.  அவை படாத பாடு பட்டு, சித்ரவதைப் பட்டு சாகும்.   இதை அவனுடைய குரு பார்த்து விட்டு அவன் இளைஞனாக ஆன பிறகு, அவன் முதுகில் ஒரு பெரிய பாறாங்கல்லைக் கட்டி விட்டு இந்தக் கல்லைச் சுமந்தபடியே மலை மீது ஏறி தியானம் செய்து விட்டு இறங்கி வா என்று சொல்வார்.  அவனும் அதைச் செய்வான். 

மிலரப்பா என்று ஜப்பானில் ஒரு பௌத்தத் துறவி இருந்தார்.  ஒரு சுவாரசியமான வெப் சீரீஸுக்கு உரிய திருப்பங்களைக் கொண்டது அவர் கதை.  அவருடைய குருநாதர் மார்ப்பா தமிழ்நாட்டுக்கு வந்து இங்கே உள்ள சித்தர்களிடம் தாந்த்ரீகத்தைக் கற்றுக் கொண்டு ஜப்பான் சென்றார்.  இன்றைக்கும் சித்தர் மார்ப்பா என்றுதான் அவரை ஜப்பானில் அழைக்கிறார்கள்.  அவருடைய வரலாற்றை மிலரப்பா எழுதியிருக்கிறார்.  மிலரப்பா சிறுவனாக இருந்தபோது தந்தை இறந்து விடுகிறார்.  தந்தையின் ஏராளமான நகைகளையும் நிலத்தையும் தந்தையின் தம்பி தன் அண்ணியிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறார்.  மிலரப்பா இளைஞனான பிறகு அந்தச் சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்க மறுத்து விடுகிறார் அந்த மனிதர்.  மிலரப்பாவின் அம்மா தன் மகனை அழைத்து அவர்களை நீ பழி வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள்.  மிலரப்பா ஒரு குருவிடம் சென்று சில தாந்த்ரிக் முறைகளைக் கற்றுக் கொண்டு தன் சித்தப்பனின் குடும்பத்தில் 30 பேருக்கும் மேல் வெறும் மந்திர உச்சாடனத்தின் மூலம் கொன்று விடுகிறார்.  அதன் பிறகு இந்த லௌகீக வாழ்க்கை பிடிக்காமல் போய் முறையான யோகத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்.  அந்த குரு மிலரப்பாவிடம் ”நீ ஞானவழியில் செல்வதற்கு முன், பாறைகளால் ஆன ஒரு சிறிய குடிலைக் கட்டி முடி” என்று பணிக்கிறார்.  குடில் முடிந்ததும் வந்து பார்த்து, நான் உன்னைத் தனியாக அல்லவா கட்டச் சொன்னேன்?  நீ உதவியாளைக் கொண்டு ஏன் கட்டினாய்?  இதை இடித்து விட்டு மீண்டும் கட்டு” என்று உத்தரவிட்டார்.  இதேபோல் வெவ்வேறு காரணங்களால் மூன்று முறை அப்படி பாறைகளால் ஆன குடிலைக் கட்டச் செய்து இடிக்கச் செய்தார்.  துன்பம் தாங்காமல் ஒரு கட்டத்தில் குருவிடமிருந்து ஓடி விட்டார் மிலரப்பா… 

மீதி நாளை…

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***