பாலகுமாரனும் நானும்…

பாலாவுடனான என்னுடைய நட்பு பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. அதிகம் என்ன, எதுவுமே எழுதியதில்லை. அவரை ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்றே இலக்கியவாதிகளும் அறிவார்கள். அதில் தவறும் இல்லை. பாலகுமாரன் எழுதுவது ஏன் இலக்கியம் இல்லை என்று ஜெயமோகன் ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதை நீங்கள் வாசிக்க வேண்டும்.

ஆனால் பாலா எனக்கு எழுத்தைத் தாண்டிய ஒரு நண்பர். அவரைப் போன்ற பாசாங்கு இல்லாத, வெளிப்படையான மனிதரை நான் பார்த்தது அரிது. அன்பின் மொத்த வடிவம் பாலா. அதுவும் தவிர அவர் ஒரு சித்தர். யோகி ராம்சூரத்குமார் மூலமாக அவருக்கு அது கைவரப் பெற்றது. அதை நான் மிக நெருக்கமான முறையில் அறிவேன். அவர் பற்றி நான் சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டது. அது கீழே:

பாலகுமாரனுடனான என் நட்பு இலக்கியரீதியானது அல்ல.  காரணம், அவருடைய ஒரு நூலையும் நான் படித்தது இல்லை.  படித்துப் பார்த்தபோதும் அதில் எனக்கு ஈடுபாடு ஏற்படவில்லை.  அவரும் என்னைப் படித்திருக்கிறாயா என்று கேட்டது இல்லை.  ஆரம்பத்திலிருந்து சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

1977-இல் நான் கீழ்ப்பாக்கமும் புரசைவாக்கமும் சந்திக்கும் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஷாந்தி மேன்ஷனில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது (டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள சிறைத்துறைத் தலைவர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை) பாலாவை அவருடைய லாயிட்ஸ் ரோடு வீட்டில் சந்தித்திருக்கிறேன்.  அப்போது நான் ஜெயகாந்தனின் தீவிர விசிறி.  அவரைப் போலவே ஹேர்ஸ்டைல் வைத்திருப்பேன்.  பாலா கணையாழியில் எழுதியிருந்த சில கவிதைகளைப் படித்து ஈர்க்கப்பட்டு போய் சந்தித்தேன்.  அதில் ஒரு கவிதை இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

உனக்கென்ன கோவில் குளம்

ஆயிரமாயிரம்

எனக்கோ

வலப்பக்கக் கடல் மணலை

இடப்பக்கம் இறைத்து இறைத்து

நகக்கணுக்கள் வலிக்கின்றன

அடியே

நாளையேனும்

மறக்காமல்

வா

அதற்குப் பிறகு நான் சென்னையிலேயே தங்கியிருந்தால் சுப்ரமணிய ராஜு, ஸிந்துஜா மாதிரி அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் சிவசங்கரி மாதிரி, ஸ்டெல்லா ப்ரூஸ் மாதிரி ஆகியிருப்பேன்.  ஆனால் தில்லிக்கு ஓடி விட்டேன்.  அதற்கப்புறம் தீவிர இலக்கியம்தான்.  Popular fiction பக்கம் திரும்பவே 30 ஆண்டு ஆகி விட்டது.  தீவிர இலக்கியம் என்பது காபாலிகர் கூட்டம் மாதிரி.  அதில் பல பிரிவுகள் உண்டு.  சுந்தர ராமசாமி ஒரு கூட்டத்தின் தலைவர்.  இன்னொரு கூட்டம் பின்நவீனத்துவ கூட்டம்.  அதில்  ‘தலை’ என்று யாரும் கிடையாது, எல்லோருமே தலைவர்கள்தான்.  நான் அந்தக் கூட்டத்தில் ஒரு குட்டித் ’தலை’யாக விளங்கினேன்.  

எல்லாம் முடிந்து 2000-இல் மைலாப்பூர்வாசியாக மாறின போது பொதுஜனத்தின் வாசிப்புப் பழக்கமே முற்றாக மாறியிருந்தது.  தீவிர இலக்கியப் பத்திரிகையின் அட்டையில் ரஜினிகாந்த்!  வெகுஜனப் பத்திரிகையின் அட்டையில் அடியேன்! அதற்கப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.  அப்போது பாலாவை தினந்தோறும் ஸ்கூட்டரில் என் வீட்டுக்குப் பக்கத்தில் பார்ப்பேன்.  என் வீட்டுக்கு அருகில்தான் அவருடைய சகோதரி வீடு இருந்தது.  நானும் அவரைக் கண்டு கொள்ள மாட்டேன்.  அவருக்கும் என்னைத் தெரியாது.  ஆனால் ஒருநாள் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டார்.  காரணம், அவர் என் நாவல்களையும் கட்டுரைத் தொகுதிகள் சிலவற்றையும் படித்திருந்தார்.  அவர் வீடும் என் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான் என்பதால் வீட்டுக்கு அழைத்தார்.  முகவரி அட்டையும் கொடுத்தார்.  நான் என் வழக்கப்படி போகவில்லை. திமிர் என்று நினைத்து விடாதீர்கள்.  ஒரு முன்கதையைச் சொல்லி விடுகிறேன். 

சுஜாதா தன்னுடைய கணையாழியின் கடைசிப் பக்கங்களில் என் நாவல்களை “மலம்” என்று திட்டியிருந்தார்.  நான் ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை.  அது அவருடைய கருத்து, அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  ஆனால் எனக்கு சுஜாதாவின் எழுத்து ரொம்பவும் இஷ்டம்.  அதில் 95 சதம் இலக்கியம் அல்ல என்றாலும் ஒரு சுவாரசியமான, புத்திசாலித்தனமான வெகுஜன எழுத்து அவருடையது.  (அவருடைய கனவுத் தொழிற்சாலை நாவல், நகரம் போன்ற சிறுகதைகள் அப்பழுக்கற்ற இலக்கியத்தில் சேரும்).  அவர் தன்னுடைய இறுதி மூச்சு வரை எழுதினார்.  நானும் அவருடைய எழுத்தில் ஒன்று விடாமல் படித்தேன்.  ஆனால் அவர் என் எழுத்தை மலம் என்று திட்டியவர்.  எப்போதுமே நான் அப்படித்தான்.  உங்களைப் பற்றிய என் அபிப்பிராயம் என்னைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தால் மாறி விடாது.  இதற்கு என்ன அர்த்தம் என்றால், நான் உங்களுடைய பொம்மலாட்ட பொம்மையும் அல்ல, நீங்கள் என் சூத்ரதாரியும் அல்ல. 

ஆனால்  சுஜாதாவைப் போல் பாலகுமாரனின் எழுத்துக்குள் என்னால் செல்ல முடியவில்லை.  பாலாவின் எழுத்தில் இருந்த ஏதோ ஒரு பழமையின் தாக்கம் என்னை அதற்குள் அனுமதிக்கவில்லை.  சுஜாதாவும் பாலகுமாரனும் இரு வேறு துருவங்களாக இருந்தார்கள்.  நான் சுஜாதாவின் பக்கம் இருந்தேன்.  ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை நெருங்க மாட்டேன்.  தினமுமே அவரை நான் மாலையில் மெரீனா கடற்கரையில் பார்ப்பேன்.  வாக்கிங் முடிந்து நான் கதீட்ரல் ரோட்டில் காப்பி குடிக்கப் போனால் அங்கேயும் வடை பஜ்ஜியோடு காப்பி குடித்துக் கொண்டிருப்பார்.  இந்த வடை பஜ்ஜி வீட்டுக்குத் தெரியாது என்று பத்திரிகையில் எழுதியிருந்தார்.  ஒருநாளும் நான் அவரோடு பேச முற்பட்டதில்லை.  

ஆனால் பாலாவின் கதை அப்படி அல்ல.  அவர் பேசின முதல் வார்த்தையிலேயே ஒரு வாத்சல்யம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது.  “உன் நாவல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் சாரு.”  அட்டகாசமாகச் சிரித்தபடி மந்தைவெளி நார்ட்டன் ரோடு ஓரத்தில் நின்று சொன்னதை என்னால் மறக்க முடியாது.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு பழமைவாதி என்று நினைத்துக் கொண்டிருந்த மனிதர் என் நாவல் பிடிக்கும் என்கிறார்.  ஆனால் நவீனவாதி என்று நினைத்த மனிதர் என் எழுத்தை மலம் என்று திட்டுகிறார்.  அதை விடுங்கள், பாலா என்னை அந்நியோன்னியமாக ”நீ” போட்டுப் பேசியதே என்னைக் கவர்ந்து விட்டது.  அதன் பிறகு ரோட்டில் என்னைப் பார்க்கும் போதும், நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சியின் போதும் (நடப்பதாக பேர் பண்ணுவார், அவ்வளவுதான்!) அரை மணி நேரத்துக்குக் குறையாமல் பேசி விடுவோம்.  என் நாவல்கள் பிடிக்கும் என்று அவர் ஒன்றும் சும்மா சொல்லவில்லை.  உள்ளே புகுந்து புறப்பட்டுப் பேசுவார்.  ”ஒத்தனுக்குக் கூட இந்தத் துணிச்சல் கிடையாது சாரு, என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.  நீ தனிதான். ஆமாம், நான் உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டேனே, ஏன் வரவேயில்லை… வா… வா… உனக்குப் பிடிக்கும்…”

அப்படியும் போகவில்லை.  அப்போது ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும்.  வீட்டு வாசலிலிருந்து சாரு சாரு என்ற பாலாவின் கணீர் குரல்.  போய்ப் பார்த்தால் இரண்டு பெரிய மூட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறார்.  ”உனக்கு என் நாவல்கள் பிடிக்காது.  நீ படிக்க மாட்டாய்.  ஆனால் எப்படியாவது உடையார் படித்து விடு.  என் உழைப்பை மிகுதியாக எடுத்துக் கொண்ட நாவல்.  சரி, இப்போது உள்ளே வந்து தொந்தரவு பண்ண மாட்டேன்.  நீ வீட்டுக்கு வா” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். மூட்டை முழுவதும் உடையார் தொகுதிகள்.  மறுநாள் அவர் வீட்டுக்குப் போய் விட்டேன்.  அவர் பணிவு என்னை உலுக்கி விட்டது.  அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன்.  அவர் செய்யும் சித்து விளையாட்டுகளைப் பார்த்திருக்கிறேன்.  பல குடும்பங்களுக்குத் தன் சித்த யோகத்தினால் நல் வழி காட்டியிருக்கிறார்.  யோகி ராம் சூரத்குமார் தன் சித்து சக்தியில் கொஞ்சத்தை இவரிடம் கொடுத்திருக்கிறார் என்பது கண்கூடாகவே தெரிந்தது. 

ஒருநாள் ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, அன்று நான் கிளம்பி விடுவேன் என்றார் பாலா.  அந்தத் தேதிக்கு அஒரு ஆண்டுதான் இருந்தது.  ”என்ன பாலா இது அநியாயம்,  இன்னும் 25 ஆண்டுகள் இருந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும்” என்றேன் குரலை உயர்த்தி.  ”கூடு உளுத்து விட்டது சாரு.  ஆகாரத்தில் கவனமில்லாமல் இருந்து விட்டேன்.  கிளம்புகிறேன்.  இந்தக் கூட்டினால் அவ்வளவுதான் முடியும்.  நீ ரொம்பப் பெரிய இடத்துக்குப் போவாய்.  உனக்கு எப்போதுமே என் ஆசீர்வாதம் உண்டு” என்றார்.  கண் கலங்க அவரிடமிருந்து சற்றே பின்னால் நகர்ந்தேன்.  அவர் புரிந்து கொண்டு விட்டார்.  நான் யாரையும் வணங்குவது என்றால், சாஷ்டாங்கமாக நெற்றி தரையைத் தொட என் சரீரம் முழுக்க தரையில் கிடந்துதான் வணங்குவேன்.  வெறுமனே இடுப்பை வளைத்துக் காலைத் தொடும் ஜிம்னாஸ்டிக்ஸ் எனக்குப் பிடிக்காது.  நான் அதற்காகத்தான் நகர்கிறேன் என்று உடனே புரிந்து கொண்டு, என்னைக் கட்டிப் பிடித்து, சீச்சீ, சாரு நீ எனக்கு சமம், நீ எனக்கு சமம், உன் எழுத்து எங்கேயோ நிற்கிறது, நீ என் காலில் விழவே கூடாது என்றார். 

அவர் சொன்னாற்போலவே ஒரு ஆண்டு சென்று அந்த மாதம் வந்ததும் பயந்தபடியே இருந்தேன்.  அவரை அடிக்கடி போய்ப் பார்த்தேன். சொன்னபடியே அதே தேதியில் கிளம்பி விட்டார்.  இந்த விஷயம் தெரிந்த ஒரு நண்பர் எனக்கும் நண்பர்.  ஜெகன் என்று நண்பர்களால் அழைக்கப்படும்  ஜெகந்நாத் நடராஜ்.  எழுத்தாளர்.  பாலாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.  பாலா பற்றி அவரால் ஒரு புத்தகமே எழுத முடியும். 

நான் சந்தித்த ஒரு அற்புதமான மனிதன் பாலா.  பாசாங்கே இல்லாதவர்.  அவருடைய அன்பின் தனித்துவம் என்னவென்றால், நீ அதைக் கொடுத்தால் நான் இதைக் கொடுப்பேன் என்பது அல்ல.  நிபந்தனை அற்ற அன்பு என்று சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் பாலா தன் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வாரி வாரி வழங்கினார். 

***

இப்போது நிபந்தனையோடு கூடிய நட்பு பற்றிச் சொல்லப் போகிறேன்.  நான் என்ன பாலாவா, நிபந்தனை அற்ற அன்பை வழங்குவதற்கு?  இனிமேல் எந்த சினிமாவுக்கும் ப்ரீ வியூ பார்த்து அதன் பிரமோஷனுக்காக எதுவும் எழுதியோ பேசியோ உதவி செய்யக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.  கற்றது தமிழ் வந்த போது அந்தப் படம் பற்றி எட்டு பக்கம் கட்டுரை எழுதி வெளியிட்டேன்.  பிறகு தரமணி படத்தை பலரும் விமர்சித்தபோது நான் ஒற்றை ஆளாக நின்று அதற்காக எழுதினேன்.  பிறகு பேரன்பு வந்த போது விடியோவில் பேசி, அது அந்தப் படத்தின் விளம்பரத்திலும் வெளி வந்தது.  இதெல்லாம் நட்புக்காகச் செய்தது.  சமீபத்தில் ராமிடம் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள், நாலு காப்பி விற்கும் என்றால் அப்படிச் செய்வது நன்றாக இருக்காது என்று மறுத்து விட்டார்.  வேண்டுமானால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு விடுகிறேன் என்றார்.  எப்படி?