சில தினங்களுக்கு முன் பதிவேற்றம் செய்த இந்தக் கட்டுரையை இன்று பார்க்கும்போது தளத்தில் காணவில்லை. காரணம் புரியவில்லை. எனவே மீண்டும் பதிவிடுகிறேன்.
டியர் சாரு,
உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் ரகசியம் என்ன? 25 வயதில் சொத்தைப் பற்கள் மற்றும் 35 வயது தோற்றத்தில் இருக்கிறேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கு முதல் கடிதம் எழுதுகிறேன்; தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
மூர்த்தி.
மூர்த்தி, உங்கள் பின்னணி பற்றித் தெரியவில்லை. தெரிந்தால் இன்னும் சற்று தெளிவாக எழுதலாம். ஆனாலும் இது எல்லோருக்கும் பயன்படும் என்பதால் எல்லோருக்குமாகவே எழுதுகிறேன். நேற்றே பதில் எழுதியிருப்பேன். ஆனால் தியாகராஜா வேலையில் மூழ்கியிருக்கிறேன். இன்றும் அப்படித்தான். ஆனாலும் இது போன்ற விஷயங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதாக எடுத்துக் கொள்கிறேன்.
உண்மையில் உங்கள் கேள்விக்குப் பதில் எழுதினால் அது நூறு பக்க நூலாகவே பெருகும். அத்தனை விஷயங்கள் உள்ளன. தன் மதத்தின் நியமங்களை மிகத் துல்லியமாகப் பின்பற்றி வாழும் ஒருவரிடம் “உங்கள் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்பதும் மேற்கண்ட உங்களின் கேள்வியும் ஒன்றுதான். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இளமை என்பது வயதில் இல்லை. இதை எல்லா கிழடுகளும் வாய் ஓயாமல் சொல்லி நம்மை சலிக்க வைக்கும். ஆனால் எதை யார் சொல்வது என்ற விவஸ்தை வேண்டும் இல்லையா? இளமையாக இருத்தல் என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுவதைப் போன்றது. முதலில் மனதிலிருந்தே எல்லாம் ஆரம்பிக்கிறது. மனம் இளமையாக இருத்தல் வேண்டும். அதற்கு முதல் தேவை, அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்வதை இந்த க்ஷணமே நிறுத்த வேண்டும். நான் இதுவரை ஒருவருக்கும் புத்திமதி சொன்னதில்லை. ஏன் என்றால், சொன்னால் கேட்க மாட்டார்கள். ஒவ்வொரு விஷயமுமே தனக்கென்று ஒரு குணாம்சத்தைப் பெற்றுக் கொண்டே இந்த உலகில் தோன்றுகிறது. அதன்படி, புத்திமதி என்ற விஷயம் வாங்கி வந்த வரம் அல்லது சாபம் என்னவென்றால், புத்திமதியை ஒருத்தனும் பின்பற்ற மாட்டான் என்பது. அப்படியானால் புத்திமதி இந்த பூமியில் வாழ்வதற்கான நியாயம்தான் என்ன? மேலே சொன்ன வார்த்தையைக் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி மாற்றுவோம். என்னைப் போல் லட்சத்தில் ஒருவர் இருக்கிறார்கள். புத்திமதியைக் கேட்பவர்கள். அதன் காரணமாகவே புத்திமதி என்ற ஒன்று இன்னும் மரித்துப் போகாமல் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் புத்திமதி சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் எத்தனை வயதுக்காரர் ஆனாலும் நீங்கள் ஒரு கிழடு என்றே பொருள். மனதில் இளமையைக் கொண்டிருப்பவர் மட்டுமே புத்திமதி சொல்லும் வேலையில் இறங்க மாட்டார். அதற்காக, உங்களிடம் வந்து ஒருவர் ஆலோசனை கேட்கிறார் என்றால் அதற்கும் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போய் விடக் கூடாது. அது வேறு, இது வேறு.
மனதில் இளமை வேண்டும். அதுவே தேகத்திலும் நின்று விளையாடும். அந்த மன இளமையின் காரணத்தினால்தான் ஒருத்தரின் மின்னஞ்சல் முகவரியைப் பார்த்தே அவர் வயது இருபது என்று என்னால் கண்டு பிடிக்க முடிந்தது. நான் ஒரு பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெயர் ஞாபகம் இல்லை. பாப் ஸாங். அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு பதினாறு வயதுப் பையன் அட, இதெல்லாம் நீங்கள் கேட்பீர்களா என்றான். ஓ, கேட்பேனே என்று சொல்லி, அந்தப் பாடகனின் பெயரையும் சொன்னேன். அதைப் பாடியவனுக்கும் அப்போது பதினாறு வயதுதான். பையன் மிரண்டு விட்டான். அந்தக் கணத்தில் அவன் என்னைத் தன் தோழனாக நினைத்திருப்பான். நினைக்கிறான். ஆனால் தன் வீட்டுப் பெரியவர்களை – என்னை விட இருபது வயது குறைந்தவர்கள் அவர்கள் – அவன் கிழங்கள் என்றே நினைப்பான்.
இன்னொரு சம்பவம். இதையும் எழுதியிருக்கிறேன். என்றாலும் இப்போது எல்லாவற்றையும் தொகுத்துக் கொள்வோம். ஒரு பதினெட்டு வயதுப் பையன். அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் நான். பின்னால் அவனுடைய அம்மா. வயது நாற்பது. அந்தப் பெண்மணியை அவர் பணி புரியும் கல்லூரியில் விட்டு விட்டு நானும் அவனும் பக்கத்தில் உள்ள உணவகத்தில் காலை உணவு அருந்தப் போகலாம் என்பது திட்டம். நான் காலை நடைப் பயிற்சியை முடித்த கையோடு அமர்ந்திருக்கிறேன். கல்லூரி வாசலில் அந்தப் பெண்மணி இறங்கிய அடுத்த க்ஷணம் பையன் ஒரு பாட்டை சத்தமாகப் போட்டான். எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாடல் இப்போது இருப்பதைப் போல் பிரபலம் இல்லை. அப்போதுதான் லேசாக அறிமுகம் ஆகிக் கொண்டிருந்தது. போட்ட அடுத்த க்ஷணம் நான், “சூப்பர் பாட்டுடா, எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. நூற்றுக்கணக்கான தடவை கேட்டிருக்கிறேன்” என்றேன். அவனும் அதை ஆமோதித்து “லூயி ஃபோன்ஸி… செம பாட்டு” என்றான். “ஸ்பானிஷ் பெயர்களை முழுசாக உச்சரிக்க வேண்டும். லூயிஸ் ஃபோன்ஸி. புவெர்த்தோ ரீக்கோக்காரன்…” என்றேன் நான்.
அப்போது என் வயது அறுபது. அறுபது வயதான ஒரு தமிழனால் தெஸ்பாரித்தோ பாடலை ரசித்துக் கேட்க முடிந்தால் அவன் என்றுமே முதுமையடைய மாட்டான் என்பது திண்ணம்.
மேற்குலகின் ஆன்மீக உள்ளீடு அற்ற, வெற்றுப் பொருள்முதல்வாத வாழ்க்கைப் பார்வையை நான் முற்றாக மறுதலித்தாலும் இளமை – முதுமை விஷயத்தில் அவர்களின் அணுகுமுறைதான் என்னுடையதும். எண்பது வயதிலும் அவர்கள் முதுமையடைந்து விட்டதாக உணர்வதில்லை. இங்கே முப்பத்தைந்திலேயே முதுமை தட்டி விடுகிறது. கவனியுங்கள், உடலில் அல்ல, மனதில்.
இந்த அறுபத்தெட்டு வயதில் இது பற்றிய என் அனுபவங்களைச் சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறது என்றே நினைக்கிறேன். என்னுடைய ஹெடோனிஸ மனோபாவம் ஒரு முக்கியக் காரணம். Hedonism – வாழ்க்கையைக் கொண்டாடுதல். நேற்று முகநூலில் நூரான் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஜோதி நூரான், சுல்தானா நூரான் என்ற சூஃபி பாடகர்களின் காணொலி இணைப்பைக் கொடுத்திருந்தேன். அதில் ஜோதியின் உடல் மொழியை கவனித்தால் ஹெடோனிஸம் என்றால் என்ன என்று புரியும். அது ஒரு பரவச நிலை. ஜலந்தரைச் சேர்ந்தவர்கள் அந்த சகோதரிகள். பஞ்சாபியர்களின் தேசிய குணம் ஹெடோனிஸம். மத வித்தியாசமே இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் கவனித்தால் முஸ்லீம், சீக்கியர், இந்து ஆகிய மூன்று மதத்தினருமே எந்த வித்தியாசமும் இல்லாமல் அந்த சூஃபி பரவசத்தில் ஆழ்வதையும் கொண்டாடுவதையும் காணலாம். இந்தியாவிலேயே வயது ஆனாலும் கிழட்டுத்தனம் அண்டாத இனத்தவர் சீக்கியர்தான். அந்த வகையில் குஷ்வந்த் சிங் அந்த இனத்தின் அடையாளமாகத் திகழ்ந்தாரே தவிர அவரது இளமையின் பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. இதில் பஞ்சாப் இந்துக்களையும் ஓரளவுக்கு சேர்த்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் பிஹாரி, பெங்காலி, தமிழ் எல்லாம் சடை பார்ட்டிகள்.
மனம் என்ற விஷயத்தை முடித்து விட்டு தேகத்துக்கு வருவோம். மனம் குதூகலமாக இருக்க வேண்டும். இது சும்மா ஒரு நான்கு வார்த்தைகளால் ஆன வாக்கியம் அல்ல. அது ஒரு வாழ்நிலை. மரணம் எனக்கு முன்னே வந்து நின்று கொண்டிருக்கிறது என்றாலும் ஏதோ ஒரு நீண்ட நாள் காணாத நண்பனைப் போல் வரவேற்க வேண்டும். இது பற்றி எனக்கு இரண்டு சாட்சிகள் உண்டு. எனக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. ஏழு ஆண்டுகள் இருக்கும். காலையில் ஐந்து மணிக்கு நெஞ்சு வலி. கூடவே இடது கையும் தாடையும் வலி பின்னி எடுக்கிறது. படுக்கை நனையும் அளவுக்கு வியர்வை. பதற்றமே இல்லாமல் காயத்ரியின் கணவர் ராமசுப்ரமணியனுக்கு போன் செய்தேன். விஷயம் அவசரம் என்றேன். காரோடு தயாராக இருக்கச் சொன்னேன். கழிப்பறைக்கு வந்து மலஜலம் போனேன். ஏனென்றால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் படுக்கையிலேயே bedpan வைத்துக் கொண்டு மலம் போவது நரகம். அதனால் அதை முடித்தேன். கழிப்பறையில் இருக்கும்போது உள்ளே தாளிட்டுக் கொள்ளவில்லை. ஒருவேளை உள்ளேயே மரணம் சம்பவித்து விட்டால் உடலை அப்புறப்படுத்துவதற்காகக் கதவை உடைக்க வேண்டியிருக்கும். அப்படி பலருக்கு ஆகியிருக்கிறது. முடித்து விட்டு வந்து பேண்ட் சட்டையை மாட்டிக் கொண்டு அவந்திகாவை எழுப்பி – எப்போதும் காலை நடைப் பயிற்சிக்குச் செல்லும்போது அவளை எழுப்ப மாட்டேன் – உடல் செக்கப்புக்காக லேப் போகிறேன், தேடாதே என்று சொல்லி விட்டு வெளியே வந்தேன். ஆறு மணிக்கு ஆட்டோ கிடைக்கவே கிடைக்காது. ஆட்டோவைப் பார்க்கும் வரை நடக்க வேண்டியதுதான். அந்த நிலையில் நடப்பது என்பது தற்கொலைக்குச் சமம். ஆனால் அன்றைய தினம் கடவுள் என் வீட்டு வாசலுக்கு ஆட்டோ அனுப்பினார். அதெல்லாம் அன்று உலக அதிசயம்தான். அனுப்பியிருக்காவிட்டால் ராமையே உடனடியாக வரச் சொல்லியிருப்பேன். என் வீட்டிலிருந்து அவர் வீடு ஒரு கி.மீ. தூரம். அவந்திகாவிடம் விஷயத்தைச் சொன்னால் அவள் கலவரம் ஆகி அந்தப் பதற்றத்தை எனக்கும் கொண்டு வந்து விட நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது.
மருத்துவமனைக்குச் சென்ற போது மரணம் சம்பவித்தால் உடனடியாக என் எழுத்து விஷயமாக – மொழிபெயர்ப்பு விஷயமாக – என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை காயத்ரியிடம் பட்டியலிட்டு விளக்கினேன். எப்போதும் போல் ஜாலியாக சிரித்துக் கொண்டேதான். அப்போதும் வியர்வையில் சட்டை நனைந்தபடியேதான் இருந்தது. நான் எப்படி ஜாலியாக இருந்தேன் என்பதற்கு ராமும் காயத்ரியும்தான் சாட்சி.
ஏனென்றால், அறுபது வயது வரையிலான என் வாழ்க்கையில் இந்த உலகிலேயே சந்தோஷமான மனிதனாகவே நான் எப்போதும் வாழ்ந்து வந்தேன். இப்போது, இந்தக் கொரோனாவினால் என் வீட்டில் ஸ்விக்கி தடை செய்யப்பட்டு, ஒரு ஆண்டுக் காலம் காலை நாலு மணிக்கு எழுந்து பதினொன்றரைக்குக் காலை உணவு சாப்பிடும் கொலைப் பட்டினி நிலையிலும் – ஜாலியாக நான் நகைச்சுவைக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு, அவந்திகாவிடம், ”அம்மு, கொரோனாவை விட நான் பட்டினியால் செத்து விடுவேன் போலிருக்கிறது” என்று சொல்லி, கடையிலிருந்து இட்லி மாவு மட்டும் வாங்கிக் கொள்ள அனுமதி பெற்று, இப்போது இரண்டு மாதங்களாக தினமும் எட்டரைக்கெல்லாம் சாப்பிட்டு விடுகிறேன்.
எல்லா துன்பத்தையும் – துன்பம் என்று எழுதக் கூட கை கூசுகிறது – நான் அனுபவமாகவே எடுத்துக் கொள்வதால் எனக்குத் துன்பம் என்றே எதுவும் தெரியவில்லை. மரணத்தையே விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடிபவனை இந்த வாழ்க்கை என்ன செய்து விட முடியும்? என் மரணம் மட்டும் அல்ல. மற்றவர்களின் மரணமும் அப்படித்தான். ஒரு நண்பர் அவருக்கு உயிருக்கு உயிரான – தந்தையைப் போன்ற – தந்தையை விட மேலான – ஒரு ஆசான் இறந்து போன போது, அதை என்னிடம் சொன்னார். நான் அவருடைய துக்கத்தோடு பங்கு பெறுவேன், ஆறுதல் சொல்வேன் என்பது அவர் எதிர்பார்ப்பு போலும். நான் பதிலுக்கு “ஓ, அப்டியா” என்றேன். குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை. மரணத்துக்கு வருத்தப்பட வேண்டும் என்பதைக் கூட அறியாதவன் நான்.
ஒரே ஒரு வருத்தம்தான். கொரோனா காலத்தில் மரணம் வந்தால் உடல் காணாமல் போய் விடுகிறது. இத்தனைக் காலம் உயிரைத் தாங்கிய அந்த தேகத்துக்கு ஒரு இறுதி விடை கூட சொல்ல முடியவில்லை. ஒரு டான்ஸ் ஆட முடியவில்லை. ஒரு கொட்டு அடிக்க முடியவில்லை. மரணம் என்பது கொண்டாட்டம் இல்லையா? அந்தக் கொண்டாட்டத்துக்கு ஒரு வழியில்லாமல் பண்ணி விட்டதே இந்தக் கொரோனா என்பது மட்டுமே என் கவலை. அதனால் கடந்த பதின்மூன்று மாதங்களாக என் முகத்துக்குப் பூசி வந்த Forest Essentials பசையையும் நிறுத்தி விட்டேன். காசு மிச்சம். ஆனால் அப்படி நிறுத்தியது வேலையைக் காண்பித்து விட்டது. பல தோழிகள் புத்தக விழாவின் போது “என்ன சாரு, முகத்தில் முன்பு இருந்த பளபளப்பு காணும்?” என்று கேட்டே விட்டார்கள்.
மீண்டும் சொல்கிறேன். பளபளப்புக்குக் காரணம், ஃபாரஸ்ட் எஸென்ஷியல்ஸ் இல்லை. அதெல்லாம் ஒரு அடிஷனல் விவகாரம்தான். மூலம், மனம். குறிப்பாக, தியானம்.
இரவு முழுவதும் வாசகர் வட்ட நண்பர்களோடு உரையாடல், அரட்டை, விவாதம், பேச்சு. காலை ஐந்து மணிக்கு உறங்கப் போவேன். எட்டு மணிக்கு எழுந்து குளித்து விட்டு அரை மணி நேரம் தியானம். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், எந்தக் காலத்திலும் தியானத்தை விட்டதில்லை.
இன்னும் இருக்கிறது, நாளை பார்க்கலாம்…