நான் கிறித்தவம் பற்றி அடிக்கடி வெறுப்போடு எழுதுவதாக சில நண்பர்கள் கடிதம் எழுதுவதுண்டு. நான் மதமாற்றக் கிறித்தவத்துக்கு மட்டுமே எதிர். எந்த மதத்திலிருந்தும் எந்த மதத்துக்கும் மாறுவது எனக்கு உடன்பாடானதல்ல. அது கூட என் தனிப்பட்ட கருத்துதான். மதமாற்றம் என்பது சொந்த விருப்பத்தில் அமையாமல் தூண்டுதலின் காரணமாக அமைந்து விடுகிறது என்பதே காரணம்.
மற்றபடி நான் யேசு கிறிஸ்துவின் அடிப்படைகளுக்கும் கிறித்தவத்தின் ஆன்மீகத்துக்கும் எப்போதுமே விசுவாசியாக இருப்பவன். மேலே உள்ள இணைப்புகளில் மூன்றாவதாக உள்ளதை முழுமையாகக் கேளுங்கள். கடவுள் உங்களோடு பேசுவார். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கே முதலில் செல்வது சர்ச்சுகளுக்குத்தான். தொழுகைக்காக அல்ல. அங்கே கேட்கக் கிடைக்கும் தெய்வீக இசைக்காக. அதையெல்லாம் ரொம்பப் பேர் கேட்பதில்லை என்பதால் நானும் ஒருசில கிழவர்களும்தான் அமர்ந்திருப்போம். சாந்த்தியாகோவில் பத்து நாள் தனியாக இருந்தபோது என் விடுதிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பழைய சர்ச்சுக்கு தினமும் காலையில் போய் விடுவேன். அம்மாதிரி இசை இங்கே இந்தியா தேவாலயங்களில் கிடைப்பதில்லை. ஒருசில ஆங்கிலோ இந்திய சர்ச்சுகளில் மட்டுமே கேட்கலாம்.
இதெல்லாம் இப்போது ஏன் ஞாபகம் வந்தது என்றால், என் நண்பர் ஒருவர் – இளைஞர் – ஒரு சினிமா பாடகர் பாடிய ஒரு பக்திப் பாடலை அனுப்பியிருந்தார். அதில் நண்பர் ரொம்பவே தோய்ந்து போய் பரவசமாகி இருந்தார் என்பதை அவர் வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது எனக்கு ஒரு வணிக எழுத்து சார்ந்த கதை ஒன்றைப் படிக்கும் வாசகன் ஒருவன் அது குறித்துப் புளகாங்கிதம் அடைந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. எனக்கு இளம் வயதிலிருந்தே எல்லார் ஈஸ்வரி போன்றவர்களின் அம்மன் பாடல்கள் எரிச்சலூட்டக் கூடியவை. ஏனென்றால், நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே ரவி ஷங்கர் கேட்டு வளர்ந்தவன். நண்பர் அனுப்பிய பாடல் லேட்டஸ்ட். தரத்தில் அதுவும் எல்லார் ஈஸ்வரிதான்.
நண்பர் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது. அவரது உணர்வுகளைப் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. அவர் கேட்பது அல்ல இசை என்பதே என் வாதம். நேற்று என் தளத்தில் கொடுத்திருந்த அல்லாஹு அக்பர் என்ற பாடல் எப்படி இருந்தது? அதுதான் இசை. இத்தனையும் கூட அவர் என் நண்பர் என்பதாலும் அதை விட முக்கியமாக அவர் இளைஞர் என்பதாலும்தான் எழுதினேன்.