எனக்கு ஜாதி மதம் இனம் தேசம் என்று எந்த அடையாளமும் இல்லை என்பதை நீங்கள் நம்பினால்தான் மேற்கொண்டு நான் எழுதுவதில் உங்களுக்கு ஈடுபாடு செல்லும். என் தாய்மொழி தமிழ் என்றாலும் இந்த உலகிலேயே அரபியைப் போல் ஒரு அழகான மொழி இல்லை என்பது என் கருத்து. தமிழின் சிறப்பு அதன் புராதனத் தன்மையும், சங்கமும், அகத்தியமும், தொல்காப்பியமும், எல்லாமும். அதே சிறப்புகள் சம்ஸ்கிருதத்துக்கும் உண்டு. ஆனால் கூடுதலாக தமிழ் இன்றும் மக்களின் மொழியாகவும் இருக்கிறது. சம்ஸ்கிருதத்துக்கு ஆதியிலிருந்தே அரசின் ஆதரவு தேவையாய் இருந்தது.
உலகில் எத்தனையோ ஊர்கள் பழம் பெருமையுடன் விளங்குகின்றன. ஜெருசலேம் அப்படிப்பட்டது. பாக்தாத் அப்படிப்பட்டது. இஸ்தாம்பூல் பற்றி 30000 பக்கம் எழுதலாம். பாமுக் எழுதியது ஒரு விள்ளல். அப்படிப்பட்ட ஒரு ஊர் தஞ்சாவூர். ஆனால் இதை அறிந்தவர்கள் அஞ்சு பத்து பேர் இருப்பார்கள். வெறுமனே ஊர்ப் பெருமை பேசுபவர்களின் கட்சியில் என்னைச் சேர்த்தால் இதில் உள்ள mysteryயை நீங்கள் இழந்து விடுவீர்கள். தஞ்சாவூரின் ஊர்ப் பெருமை பேசுபவர் விருதுநகரில் பிறந்திருந்தால் அவர் விருதுநகர்ப் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வது அந்தக் கணக்கில் வரவே வராது. தஞ்சாவூர் மண்ணில் இசை இருக்கிறது. அந்தக் காற்றில் இசை இருக்கிறது. தஞ்சாவூரில் ஆறு மொழிகளும் ஆறு கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மராட்டி, தெலுங்கு, ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், உர்தூ, தமிழ். இது இந்திய நகரங்களில் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. இதையெல்லாம் விரிவாக ஆய்ந்து தஞ்சை ப்ரகாஷ் எழுதிய ஆவணங்கள் இப்போது எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியிருக்கிறார்.
அருண்மொழி நங்கை தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர் என்று இன்றுதான் தெரிந்தது. அது அவர் எழுத்தில் தெரிகிறது. ஜெயமோகனின் நண்பராக இருப்பது ஒரு பாக்கியம். ஒரு அறிஞனின் நட்பு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அந்த அறிஞனின், கலைஞனின் பாதிப்பு நம் ஆளுமையை உருவாக்குவதில் இடம் கொடுக்காமல் இருப்பது சிரம சாத்தியமான விஷயம். ஜெயமோகன் பள்ளியிலிருந்து எழுத வந்தவர்கள் நூறு பேர். இதில் சுமார் ஐந்து பேர்தான் கொஞ்சமும் ஜெயமோகனின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக எழுதுபவர்கள். அருண்மொழியின் சாதனை என்று இதைத்தான் முதன்மையாகச் சொல்லுவேன். அருண்மொழியின் மூலமாக தஞ்சாவூர் தன் எண்ணிறந்த கதைகளில் ஒன்றைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.
வாழ்த்துகள் அருண்மொழி…