முதல்வருக்கு இரு கடிதங்கள்

பின்வரும் இரண்டு கடிதங்களும் முதல்வர் திரு. ஸ்டாலினுக்கு எழுதி குமுதத்தில் வெளிவந்தவை. நீண்ட கடிதம் என்பதால் இரண்டாகப் பிரிக்க நேர்ந்தது.

அன்புக்கும்  மதிப்புக்கும் உரிய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம். தங்களை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.  சற்றே தாமதம் ஆனாலும் அது நடந்து விட்டது.  வாழ்த்துகள்.  அதே சமயம் ஒரு சவாலான சூழ்நிலையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள்.  அந்த சவாலை எதிர்கொள்ள அதிகாரிகள் முழுமூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்த நிலை மாறி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.  இது போக, உங்கள் தலைமையில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.  அது நிறைவேறுவதற்குத் தகுதியான குழுவை எடுத்த எடுப்பில் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். பாராட்டுகள்.

இப்போது இந்தக் கடிதத்தை எழுதும் காரணத்துக்கு வருகிறேன்.  இந்த இக்கட்டான நிலையில் இது ஒரு முக்கியப் பிரச்னையாகத் தெரியாது என்றாலும் நீண்ட காலமாகவே இது ஒரு கலாசார சிக்கலாகவே இருந்து வருகிறது.  பெரிய கதை.  சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.  ஞானபீட விருதுதான் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது.  இந்திய மொழிகளில் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு ஆண்டு தோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது.  இதை இதுவரை 8 கன்னட எழுத்தாளர்களும், 10 இந்தி எழுத்தாளர்களும், 6 வங்காள எழுத்தாளர்களும் பெற்று உள்ளனர்.  இந்த விருது ஆரம்பிக்கப்பட்ட 1965-இலேயே முதல் விருது மலையாளத்துக்குத்தான் போனது.  இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் இந்திக்கு அல்ல.  அடுத்த ஆண்டு விருது வங்காளத்துக்குப் போனது.  தமிழ் பற்றி நான் சொல்லவில்லை.  காரணம், நாம் தமிழுக்காக உயிரைக் கொடுக்கிறோம்.  வெறும் பேச்சு அல்ல.  இந்தி எதிர்ப்புப் போராட்டம் உங்களுக்கு மறந்திருக்காது.  துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்,  தீக்குளித்து இறந்தவர் என்று அந்தப் போராட்டத்தில் தாய்மொழி தமிழுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் நாம். ஆனால் நம்முடைய மொழியின் பெருமையை மாற்றாரிடம் சொல்ல மறந்து போனோம்.  விளைவு?  இரண்டே பேருக்குத்தான் ஞானபீட விருது இதுவரை தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த இரண்டு பேரில் ஒருவர் இலக்கியத்துக்கு சம்பந்தம் இல்லாதவர் என்பது இலக்கியவாதிகளின் கருத்து.  ஆக, உண்மையில் கிடைத்தது ஒன்றுதான்.

இந்தக் கடிதத்தின் நோக்கம் தமிழுக்கு ஞானபீட விருது வாங்கித் தருவதற்கு முதல்வர் உதவ வேண்டும் என்பது அல்ல.  தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்காதது என்பது இங்கே உள்ள மிக ஆழமான ஒரு பிரச்னையின் ஒரு சிறிய பிசிறுதான்.  காரணம், இந்தப் பிரச்னை சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.  ஆகவே 2000 ஆண்டுப் பிரச்னை ஒன்றை உங்கள் முன் நான் கொண்டு வருகிறேன்.  இதை ஒரே ஆண்டில் தீர்த்து விடுவதும் கூட சாத்தியமான ஒன்றுதான்.    

இந்தியாவிலேயே தமிழகத்துக்கு மட்டும்தான் தமிழ்நாடு என்ற பெயர் உள்ளது.  தனித் தமிழ்நாடு கேட்டு, அது பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்ட போது பெயரிலாவது நாடு இருக்கட்டும் என்று கேட்டு வாங்கிய உரிமை.  இந்த சாதனை சாதாரணமானது அல்ல.  தமிழ் அடையாளம் என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல.  அசோக சக்ரவர்த்தியின் நிறைவேறாத கனவு எது என்றால், தமிழகத்தை வென்று அவருடைய பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்துக் கொள்வதுதான்.  ஆனால் அவர் கனவு நனவாகவில்லை.  அடுத்து, ஔரங்கசீப்.  ஹிந்துஸ்தான் என்ற மிகப் பரந்த நிலத்தை ஆண்டவர்.  அவர் அளவுக்கு வேறு எவருமே அத்தனை பெரிய நிலப்பரப்பை ஆண்டதில்லை.  ஆஃப்கானிஸ்தான் உட்பட ஔரங்கசீப்பின் ஹிந்துஸ்தானில் இருந்தது.   அவருடைய வாழ்நாள் கனவும் தமிழகத்தைத் தன் ஆட்சிக்குள் அடக்குவதுதான்.  முடியவில்லை. 

இப்படி ஒரு தனித்த அடையாளத்தைத் தமிழ்நாடு எப்படி சில ஆயிரம் ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது?  ஒரு நாட்டின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை ஒரு தொடர் ஓட்டமாக நூற்றாண்டு நூற்றாண்டுகளாகக் காப்பாற்றிக் கொண்டு வருவது எது என்று பார்த்தால் அதன் மொழி.  உலகின் மிகத் தொன்மையான நான்கைந்து மொழிகளில் தமிழும் ஒன்று.  அதில் சில மொழிகள் இப்போது புழக்கத்தில் இல்லை.  தமிழும், ஹீப்ருவும், சீனமும் மட்டுமே இப்போதும் உள்ளவை.  இத்தனை பெருமைக்குரிய ஒரு மொழி இத்தனை ஆண்டுகளாக உயிர்த்திருப்பது எதனால்?  திருவள்ளுவரும், தொல்காப்பியரும், மற்ற சங்கப் புலவர்களும்தான் காரணம்.  அவர்களுக்குப் பிறகும் அப்படியே தேங்கி விடாமல் அந்த இலக்கிய வளம் பக்தி இலக்கியம் மூலமாகவும் பிறகு பாரதி, அதற்குப் பிறகு உரைநடை, நவீன கவிதை என்று இன்று வரை வந்து நிற்கிறோம். 

ஆனாலும் நாம் மார்க்கெட்டிங்கில் பூஜ்யமாக இருப்பதால் இலக்கியத்துக்கான நோபல் விருது வங்காளத்துக்குப் போய் விட்டது.  வாங்கியவர் தாகூர்.  தாகூர் காலத்திலேயே தாகூருக்கு இணையாக எழுதிக் கொண்டிருந்த பாரதி ஏன் நோபல் வாங்கவில்லை?  நம் முன்னோர் பாரதியை மதிக்கவில்லை.  மதித்திருந்தால் கிடைத்திருக்கும்.  தமிழருக்கு ஒரு பண்பு உண்டு.  இறந்த பிறகுதான் சிலை வைப்பார்கள்.  மாலை போடுவார்கள்.  காந்தி ராஜாஜியிடம் சற்று விரக்தியுடனே சொல்லியிருக்கிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.  பாரதி உங்கள் மொழியின் சொத்து, அவரைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார் காந்தி.  காந்தி சொல்லியும் நம் முன்னோர் கேட்கவில்லை.  பாரதியும் பட்டினி கிடந்தே செத்தார்.  காந்தி ஏன் அப்படிச் சொன்னார்?  காந்திக்கு என்ன தமிழ் தெரியுமா?  தனக்கு எதிரே தன்னை விட வயதில் குறைந்த ஒருவர் தன் கட்டிலில் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு “மிஸ்டர் காந்தி, உங்கள் சுதந்திரப் போராட்டத்தை ஆசீர்வதிக்கிறேன்” என்று சொன்னால் அவர் ஒரு மகாகவியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை காந்தி புரிந்து கொண்டு விட்டார்.  பாரதியின் கண்களிலிருந்த ஒளிதான் காந்திக்குக் கிடைத்த செய்தி.  தாகூரை குருதேவ் என்று அழைத்தவர் அல்லவா மகாத்மா? 

என் எழுத்து தமிழ்நாட்டை விட கேரளத்தில் பிரபலம்.  கடந்த 15 ஆண்டுகளாக என் படைப்புகள் மலையாளத்தில் வந்து கொண்டுள்ளன.  தமிழில் வெளிவருவதற்கு முன்பே மலையாள மொழிபெயர்ப்பில் வெளிவந்து விடும்.  ராஸ லீலா என்ற என் நாவல் மலையாளத்தில் தொடராக 2 ஆண்டுகள் வந்த பிறகுதான் என் தாய்மொழியாகிய தமிழில் வெளிவந்தது.  மம்முட்டியுடன் ஒருநாள் ஒரு இலக்கிய விழாவில் பேசிக் கொண்டிருந்தேன்.  அப்போது அவருடைய உடல் மொழி, ஒரு ஆசிரியரிடம் ஒரு மாணவன் பேசுவது போல் இருந்தது.  பெருமைக்காகச் சொல்லவில்லை.  இங்கே சினிமா நடிகர்களின் முன்னே வளைந்து வளைந்து பேசி என் முதுகே வளைந்து கிடக்கிறது.  இங்கே நான் வளைக்காவிட்டால் கூட இருப்பவர்களே ஒரு தட்டு தட்டி வளைத்து விடுவார்கள்.  இங்கே நிலைமை அப்படி.  ஒரு சமயம் வைக்கம் முகமது பஷீருக்கு ஒரு அரசு விருது கொடுப்பதற்காக அவருடைய கிராமத்துக்குப் போய் அப்போதைய கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் பஷீர் வீட்டின் முன்னே க்யூவில் நின்றார் என்று படித்திருக்கிறேன்.  அதெல்லாம் ரொம்ப அதிக பட்சம்.  இங்கே எழுத்தாளர்கள் உங்கள் காலத்திலாவது பட்டினி கிடந்து சாகக் கூடாது என்பதுதான் என் குறைந்த பட்ச விண்ணப்பம். 

என்ன இது, ஞானபீடம் அது இது என்று சொல்லி விட்டு கடைசியில் சோற்றுப் பிரச்னைக்கு வந்து விட்டேன்?  ஆமாம்.  எத்தனையோ எழுத்தாளர்கள் இங்கே உண்ண உணவின்றி, எந்த அடையாளமும் இன்றி செத்துக் கொண்டிருக்கிறார்கள்.  என் நண்பர்களிடம் சொல்வேன், என்னை எழுத்தாளன் என்று அறிமுகம் செய்யாதீர்கள் என்று.  ஏனென்றால், எழுத்தாளன் என்று சொன்ன உடனே, “எந்தப் படத்துக்கு எழுதுகிறீர்கள்?” என்றுதான் கேட்கிறார்கள்.  சரி, புலம்பலை நிறுத்தி விட்டு “இதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம்?” என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.  சில ஆண்டுகளுக்கு முன் அரசு சார்ந்த ஒரு பல்கலைக்கழகத்தில் என்னைப் பேச அழைத்தார்கள்.  அது கூட ஆங்கிலத் துறையில்தான்.  தமிழ்த் துறையில் அல்ல.  என்னை வரவேற்ற துணைவேந்தர் ”உங்களை நான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்” என்று அத்தனை பல்லும் தெரியச் சொன்னார்.  பிறகு நான் அவரைப் பற்றி விசாரித்த போது எம்ஜியார் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று அரசியல் செல்வாக்கில் துணைவேந்தர் ஆனவர் என்று தெரிந்தது.  தமிழ்த் துறைப் பேராசிரியரான அவருக்கு என் பெயர் தெரியவில்லை.  என் முகத்தைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்.  இப்படி இருந்தால் தமிழ் எழுத்தாளன் எந்த நூற்றாண்டில் ஞானபீடம் வாங்குவது, எந்த நூற்றாண்டில் நோபல் பரிசு பெறுவது?

கேரளத்தில் நான் பேசாத கல்லூரிகளே இல்லை.  ஆனால் தமிழகத்தில் இதுவரை இரண்டு மூன்று கல்லூரிகளில்தான் பேசியிருப்பேன். காரணம், மேலே சொன்னதுதான்.  இங்கே கல்வித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு எழுத்தாளர்களையே தெரியவில்லை.  இதிலிருந்துதான் நீங்கள் தொடங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.  கேரளத்தில் துணைவேந்தர்கள் பலர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.  ஒரு துணைவேந்தர் தன்னுடைய சொந்த நூலகத்திலிருந்து நான் எழுதிய புத்தகத்தை எடுத்து என்னிடம் கையெழுத்து வாங்கினார்.  “ஒங்கள டீவில பாத்துருக்கேன், ஹிஹி” என்பதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம்!  துணைவேந்தர் நியமனம் மட்டுமல்ல.  வருகை தரு பேராசிரியராகவும் எழுத்தாளர்களை நியமிக்கலாம்.  சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துக்கு இங்கே தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர்கள் போய் ஆறு மாதம் தங்கி பாடம் நடத்தி விட்டு வருகிறார்கள்.  பெரும் பணம் கிடைக்கிறது.  இங்கேயோ ஒரு மாலை போட்டு அனுப்பி விடுகிறார்கள்.  ”வருகைதரு பேராசிரியரா?  அப்படியென்றால் என்ன?” என்ற நிலைதான் இங்கே.  பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கூட கி.ராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளனர். 

உலகத்தில் எந்த மொழியிலும் எழுத்தாளன் பட்டினி கிடந்து சாவதில்லை.  ஆனால் தமிழில் நடக்கிறது.  அதே சமயம், அங்கேயும் அதிக பட்சம் 1000 பிரதிகள்தான் விற்கின்றன.  இங்கேயும் 1000 தான்.  அப்படியிருக்கும்போது அங்கே உள்ள எழுத்தாளர்கள் மட்டும் ஏன் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் காப்பாற்றுகின்றன.  இங்கே அது நடக்கவில்லை.  நீங்கள் நினைத்தால் நடக்கும்.  ஆனால் அரசியல் தலையீடு இல்லாமல் செய்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறும். இல்லாவிட்டால் மறுபடியும் “டீவில பாத்துருக்கேன், ஹீஹீ” தான்.  

இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.  கடிதத்தின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

அன்புடன்,

சாரு நிவேதிதா

***

அன்புக்கும்  மதிப்புக்கும் உரிய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்.  நீங்கள் கிரேக்க நாட்டுக்குச் சென்றிருப்பீர்கள்.  2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் யவணர்கள் வணிகம் செய்ததை வரலாற்றில் படித்திருக்கிறோம்.  உலக வரைபடத்தில் கிரீஸ் சின்னஞ்சிறிய நாடு.  ஆனாலும் உலக அளவில் இப்போதும் பேசப்படுவதற்குக் காரணம், 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க நாடக ஆசிரியர்களும், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்ற மேதைகளும்தான்.  இப்போதும் ஃப்ரான்ஸ் தேசத்தின் டவுன் பஸ்களில் நம்முடைய வள்ளுவரின் குறள்களை நான் ஃப்ரெஞ்ச் மொழியில் பார்த்தேன்.  ஆக, ஒரு இனம் உலகம் பூராவும் கலாச்சார ரீதியாகப் பரவலாகத் தெரிய வேண்டுமானால் அந்த மொழியின் இலக்கியச் செல்வம் உலகத்துக்குத் தெரிய வேண்டும்.  தெரியப்படுத்துவது நம்முடைய கடமை.  சென்னையில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன்.  ஆங்கிலத் துறைதான்.   அப்படியே தமிழ்த் துறையையும் எட்டிப் பார்க்கலாம் என்று போனால் அவர்களுக்கு என் பெயரே தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த கடைசி தமிழ் எழுத்தாளர் சுப்ரமணிய பாரதி.  ஆனால் ஆங்கிலத் துறை, ஃப்ரெஞ்சுத் துறைப் பேராசிரியர்களுக்குத் தமிழ் எழுத்தாளனைத் தெரிந்திருக்கிறது.

ஆகவே, உடனடியாகச் செய்ய வேண்டியது, பல்கலைக்கழக மொழித் துறையில் சீர்திருத்தம்.  அதற்கு முதல் கட்டமாக, சமகாலத் தமிழ் இலக்கியத்தை அங்கே சேர்க்க வேண்டும்.  இலக்கியவாதிகளை வருகைதரு பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.  எழுத்தாளர் பிஹெடி பட்டம் பெறாதவராக இருக்கலாம்.  ஆனால் அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகமும் ஒரு பிஹெச்டி ஆய்வுக்குச் சமம்.  எனக்குத் தெரிந்த அமெரிக்க எழுத்தாளர்கள் அனைவருமே குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் ஒரு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்திருக்கிறார்கள்.  அதுதான் அவர்களின் வருமானமாகவே இருக்கிறது.  கதை எழுதி சம்பாதிப்பது வெறும் புத்தகங்கள் வாங்கவே போதுமானதாக இல்லை.  உங்களிடம் சொல்வார்கள், “இல்லை சார், ஏற்கனவே புதுமைப்பித்தன் கதையை சமகால இலக்கியத்தில் சேர்த்திருக்கிறோம்” என்று.  உண்மைதான்.  ஆனால் அதனால் எல்லாம் எந்தப் பயனும் இல்லை.  சமகால இலக்கியம் என்ற ஒரு தனித்துறையே இருக்க வேண்டும்.  உதாரணமாக, பௌதிகம், ரசாயனம், கணிதம், வரலாறு, பொருளாதாரம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் என்று இருப்பதைப் போல, சமகாலத் தமிழ் இலக்கியம் என்ற தனிப்பிரிவே இருக்க வேண்டும். 

அடுத்து, எழுத்தாளர்களின் வாழ்விடம்.  அசோகமித்திரன்  85 வயது வரை வாழ்ந்தவர்.  நாம் சரியாக அவரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருந்தால் நிச்சயம் நோபல் பரிசு வாங்கியிருப்பார்.  அவர் தன் மகன் வீட்டில் இருந்தார்.  அவர் அறையில் ஒரு புத்தகம் இல்லை. எங்கே என்று கேட்டபோது எல்லாவற்றையும் அவ்வப்போது நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.  என்னதான் மகன் என்றாலும் அது இன்னொருவர் வீடு இல்லையா?  பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாள் பூராவும் சேர்த்த புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.   காரணம், அவர்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர்கள்.  எழுத்தாளருக்குப் பிறகு அவர் மனைவி அந்த நூலகத்தை எப்படிப் பராமரிக்க முடியும்?  உதாரணமாக, என் நூலகத்தில் மிகப் பழைய நூல்களெல்லாம் உள்ளன.  சோழர் காலத்து நாணயத்தின் இப்போதைய மதிப்பு என்ன?  அம்மாதிரி புத்தகங்கள்.  சில நூல்கள் 100 ஆண்டுகளுக்கு முன் அச்சிட்டவை.  ஆப்ரஹாம் பண்டிதர் எழுதி 1917-ஆம் ஆண்டு அவரே பதிப்பித்த கர்னாம்ருத சாகரம் என்ற 1346 பக்க புத்தகம் அதில் ஒன்று.  இப்படி 20,000 புத்தகங்கள் என்னிடம் உள்ளன.  என் காலத்துக்குப் பிறகு இவை எங்கே போகும்?  க.நா.சுப்ரமணியம் எந்த வேலைக்கும் போகாமல் எழுத்தும் படிப்புமே தவமாக 76 வயது வாழ்ந்தவர்.   வாழ்நாள் முழுதும் அவர் சேர்த்த புத்தகங்கள் நாலு லாரி கொள்ளும்.  50 கள்ளிப் பெட்டிகள்.  எல்லாவற்றையும் அவர் குடும்பத்தார் யாருக்கோ கொடுத்து விட்டார்கள்.  வீட்டில் இடம் இல்லை.  அவ்வளவுதான்.  எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் போய் விட்டது.  அதனால், அரசாங்கமே எழுத்தாளர்கள் வசிக்க குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுத்தால் அதை விட வேறு ஆதரவு இல்லை.  எந்த இடம் என்பதும் முக்கியம்.  செங்கல்பட்டில் கட்டிக் கொடுத்தால் போக மாட்டார்கள்.  முன்பு பத்திரிகையாளர்களுக்கு அப்படிக் கொடுக்கப்பட்ட போது ராயப்பேட்டையில் அண்ணாசாலைக்குப் பின்னால் இருந்தது அந்தக் குடியிருப்பு.  பின்னர், திருவான்மியூரில்.  ஆனால் எழுத்தாளர் என்ற ஒரு இனமே தமிழில் கண்டுகொள்ளப்படாததால் அவர்கள் இதில் வரவில்லை. இதை ஒரு அவசரத் தேவையாகக் கருதி ஆவன செய்ய வேண்டும். 

ஹைதராபாத், போபால் போன்ற நகரங்களில் எழுத்தாளர்கள் தங்கிப் படிப்பதற்கும் எழுதுவதற்குமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் வந்து தங்கிச் செல்கிறார்கள்.  தில்லியில் இந்தியா இண்டர்நேஷனல் செண்டர் என்று ஒரு அமைப்பு உள்ளது.  ஏழு நட்சத்திர விடுதி போல் இருக்கும்.  அறை வாடகை 2000 ரூ.  தில்லியின் மையத்தில் உள்ளது.  ஒரு பிரம்மாண்டமான நூலகம், உணவு விடுதி, சினிமா அரங்கம் எல்லாம் உண்டு.  எழுத்தாளர்கள் மட்டுமே அதில் உறுப்பினராகச் சேர முடியும்.  அதற்கும் காத்திருப்போர் பட்டியல் உள்ளது.  ஏற்கனவே உள்ள உறுப்பினர் பரிந்துரை செய்ய வேண்டும்.  அதில் 1000 உறுப்பினர் இருக்கிறார்கள் என்றால் 600 வங்காளிகள், 300 மலையாளிகள், மீதி 100 பேர் இந்தியாவின் பிற மாநிலங்கள்.  தமிழில் ஒருவர் கூட இல்லை.  நோபல் பரிசுத் தொகை 80 லட்சம் ரூபாய்.  ஆனால் நோபலை விட அதிகத் தொகை உள்ள இலக்கியப் பரிசுகளும் உண்டு.  அதில் ஒன்று, டப்ளின் இம்பாக் விருது.  விருதுத் தொகை ஒரு கோடி ரூபாய்.  டப்ளின் அயர்லாந்தின் தலைநகர்.  டப்ளின் நகரின் முனிசிபாலிட்டிதான் இத்தனை பெரிய விருதைக் கொடுக்கிறது.  உலகின் மிகச் சிறந்த நாவலுக்கு இந்த விருது.  ஒரே பரிசு.  ஒரு கோடி ரூபாய்.  ஒரே நாவல்.  அந்த நாவல் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதப்பட்டிருக்கலாம்.  ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  இன்னொரு தகுதி, அந்த நாவல் எழுதப்பட்ட நாட்டில் உள்ள நூலகங்களில் ஒன்று அந்த நாவலை டப்ளின் நூலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  அமெரிக்காவில் 30 நூலகங்கள் பரிந்துரைக்கலாம்.  இந்தியாவில் ஒரே ஒரு நூலகம்தான் பரிந்துரைக்க முடியும்.  அது இந்தியா இண்டர்நேஷனல் செண்டர். 

நான் என்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை டப்ளினுக்கு அனுப்ப முயற்சி செய்தேன்.   அனுப்பினால் போதும்.  வேறு ஒன்றும் வேண்டாம்.  முடியாது என்றார்கள்.  ஏனென்றால், நான் இண்டியா இண்டர்நேஷனல் செண்டரில் உறுப்பினர் இல்லை.  சரி, உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன். முடியாது என்றார்கள்.  ஏனென்றால், என்னைப் பரிந்துரைக்க அங்கே தமிழ் உறுப்பினர் யாரும் இல்லை.  100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். டப்ளின் இம்பாக் மாதிரி இன்னொரு ஐரோப்பிய விருதான Jan Michalski விருதுக்கு என் நாவல் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.  என் நாவல் ஸீரோ டிகிரி அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் Modern Asian Classic வரிசையில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அமெரிக்க மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.  ஆனால் இண்டியா இண்டர்நேஷனல் செண்டரில் உறுப்பினராக முடியாது.  ஒரே காரணம், அங்கே என்னைப் பரிந்துரை செய்ய ஒரு தமிழர் கூட இல்லை. 

நிச்சயமாகச் சொல்கிறேன், இந்தியாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் கிடைத்தால் அதுவும் தாகூரைப் போலவே ஒரு வங்காளிக்குத்தான் போகும்.  இல்லாவிட்டால் மலையாளிக்கு.  ஏனென்றால், இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் தலைவரே ஒரு வங்காளி.  ஆனால் அந்த செண்டரை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும்.  அந்த மையத்தில் எந்த அரசியல் தலைவரின் புகைப்படமும் இல்லை.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பவர் அல்லவா எழுத்தாளர், அவர்கள் வசிக்கும் மையத்துக்கு ஏன் அரசியல் தலைவர் படம்?  மொத்தமாக மத்திய அரசின் பணத்தில் நடக்கும் அந்த மையத்தில் பிரதம மந்திரியின் படம் கூட இல்லை.  ஏன், மகாத்மா படம் கூட இல்லை.  எதற்காகச் சொல்கிறேன் என்றால், அரசியல் தலையீடே இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  ஆனால் முழுக்க முழுக்க அந்த மையம் வங்காளிகளின் கையில் உள்ளது.  அவர்கள் யார் புத்தகத்தை டப்ளினுக்கு அனுப்புவார்கள்?  அதிகாரத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவரே அதில் உறுப்பினராக முடியவில்லை என்று அறிந்தேன்.  காரணம், அவர் புத்தகம் எதுவும் எழுதவில்லை.  சில பெரும் தலைகள் புத்தகம் எழுதியும் காத்திருப்போர் பட்டியலிலேயே உள்ளனர்.  பரிந்துரை செய்ய ஆள் இல்லை. 

அதெல்லாம் போகட்டும், அதில் உறுப்பினரானால் தில்லியின் மையமான பகுதியில் 2000 ரூபாய் வாடகையில் ஏழு நட்சத்திர விடுதியில் தங்கலாமே? அவ்வளவு வசதி இல்லாவிட்டாலும் எளிமையாகத் தங்குவதற்கு – ஒரு நாளைக்கு 500 ரூபாய் வசூலிக்கலாம் – ஒரு எழுத்தாளர் விடுதி சென்னையில் கட்ட வேண்டும்.  அதற்கு நீங்கள்தான் மனம் வைக்க வேண்டும்.  வீட்டில் உள்ள நச்சரிப்பு தாங்க முடியாமல் எழுத்தாளர்கள் எழுதுவதற்காகப் படும் பாடு சொல்லி மாளாது.  மேலும், எழுத்தாளனுக்குப் பணமும் வராது என்பதால் வீட்டில் எந்த அளவு மரியாதை கிடைக்கும் என்பதையும் தாங்களே யோசித்துக் கொள்ளலாம்.  (என்னைப் போல் ஒருசில விதிவிலக்குகள் உண்டு என்றாலும், பொதுவான நிலை இதுதான்!)

அடுத்து, எழுத்தாளர் இறந்த பிறகு அவர் எழுத்தை அரசுடமை ஆக்கிக் கொண்டு கொடுக்கப்படும் சன்மானத் தொகை உயர்த்தப்பட வேண்டும்.  அதிலும் நிறைய ஏற்றத்தாழ்வு இருக்கிறது.  சிலருக்கு 2 லட்சம்.  சிலருக்கு 20 லட்சம்.  இப்படி இல்லாமல் எல்லோருக்குமே ஒரு கோடி கொடுக்க வேண்டும்.  ஏனென்றால், ஒரு எழுத்தாளனின் வாழ்நாள் படைப்புகளை அரசு பொதுமக்களின் உடமையாக்கும் போது தாராளமாக ஒரு கோடி கொடுக்கலாம். 

கடைசியாக, உங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  அந்த கலைமாமணி என்ற விருதை நிறுத்தி விடுங்கள் சார்.  அல்லது, அதில் எழுத்தாளர்களை தயவுசெய்து சேர்க்காதீர்கள்.  பரோட்டா சூரியையும் 90 வயது இந்திரா பார்த்தசாரதியையும் சேர்த்து இருவருக்கும் கலைமாமணி கொடுத்தால் அது இந்திரா பார்த்தசாரதி என்ற மூத்த எழுத்தாளரை அவமதிப்பதாகாதா?  அதனால்தான் முந்தைய அரசு அந்த விருதைக் கொடுத்த போது அவர் மறுத்து விட்டார்.  காரணம், அவர் நோபல் பரிசு பெற வேண்டியவர்.   ஒன்று செய்யலாம். அரசே எழுத்தாளர்களுக்குத் தனியாக விருது கொடுக்கலாம்.  ஆனால் கொஞ்சமும் அரசியல், சினிமா தலையீடு இருக்கலாகாது.  ஏனென்றால், சினிமாவுக்கென தனி விருதுகள் உள்ளன.  அதேபோல் இலக்கியத்துக்கு விருதுகள் தொடங்கலாமே?  கவிதை, நாவல், குறுநாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, அ-புனைவு (கட்டுரை), வாழ்நாள் சாதனையாளர் (இந்திரா பார்த்தசாரதி) என்று அதில் பல பிரிவுகள் வைக்கலாம்.  இதற்கெல்லாம் வெறும் சான்றிதழ் கொடுக்காமல் நல்ல கனமான தொகையாகத் தரலாம்.  (எழுத்தாளன் ஒரு சான்றிதழ் காகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!) நோபல் பரிசு பிரபலமானதுக்குக் காரணம், அதன் தொகைதான்.  இந்தியாவிலும் ஞானபீடப் பரிசு முதலில் இருப்பதற்குக் காரணம், அதன் தொகைதான்.  அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொடுக்கின்ற தொகை மரியாதைக்குரியதாக இருந்தால் நல்லது.   

இப்படியெல்லாம் செய்தால், இந்தியா மட்டுமல்ல, உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும்.  ஏனென்றால், தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை உலகம் எழுத்தாளர்களுக்குத் தருகிறது.  எனவே, கலாச்சாரத்தில் வங்காளத்தையும் கேரளத்தையும் பின்னுக்குத் தள்ளி தமிழகம் இந்திய அளவில் முன்னணியில் நிற்க இந்தச் செயல்பாடுகள் நிச்சயம் வழி வகுக்கும். 

அன்புடன்,

சாரு நிவேதிதா

இரண்டு கடிதங்களும் குமுதத்தில் வெளிவந்து பரவலான கவனம் பெற்றவை. குமுதத்துக்கு நன்றி.