இன்னொரு கடிதம்

அன்புள்ள நண்பர் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு,

தங்களை என் நண்பர் என்று கருதுவதால்தான் கீழ்க்கண்ட தங்களின் முகநூல் குறிப்புக்குப் பதில் எழுதுகிறேன்.  பாஜக ஆட்கள் என்றால் புறம் தள்ளி விட்டுப் போயிருப்பேன்.  இப்போது தங்கள் முகநூல் குறிப்பு:

எழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கையை இப்போதுதான் படித்துமுடித்தேன். சிறப்பு. சிறப்பு. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி பல.

உண்மையில் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள்தான்.

தனிப்பட்ட முறையில் கலைஞருக்கு சில எழுத்தாளர்களை கூடுதலாகப் பிடித்திருக்கலாம். ஆனால் கலைஞரை கொஞ்சம்கூட பிடிக்காத எழுத்தாளர்களின் வாழ்நாள் வேலையே, இறுதிவரை திமுக இலக்கியவாதிகளை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை கைவிடாததுதான். திராவிடம் ஒரு பாழ்நிலம் என்கிற வெ.சா.வின் ஆயிரத்தெட்டுப் பிரதிகளாக உருவானவர்கள்தான் இங்கே பலரும். (பலரும் என்றுதான் சொல்கிறேன். எல்லோரும் என்று அல்ல).

எப்போதுமே பிரான்சையும் கேரளாவையும் காட்டிக்காட்டி தமிழ்நாட்டை விமர்சிப்பது மட்டுமே இவர்களில் பலரின் வேலையாக இருந்தது. அந்தந்த நாடுகளில் இருந்த எழுத்தாளர்கள் அந்தந்த நாடுகளில் நடந்த சமூக சீர்திருத்த, அரசியல் இயக்கங்களுக்கு எப்படி ஆதரவாக நின்றார்கள் என்பது பற்றி வாயைத் திறக்கமாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இதில் அரசாங்கங்கள் தங்களைத் ‘திருத்திக்கொள்வது’ இருக்கட்டும். எழுத்தாளர்கள் தங்களை ‘திருத்திக்கொள்வதும்’ முக்கியமானது.

அப்புறம், முதல்வர் அவர்களே, ஞானபீடம், சாகித்ய அகாதெமி சான்றிதழ்களைக் காட்டினால் சட்டென்று சாவியை எடுத்துக் கையில் கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் அந்த விருதுகளை எப்படி வாங்கினார்கள் என்பதையும் சற்று ஆராய்ச்சி செய்து அதன் பிறகு முடிவெடுங்கள். எதற்காக விருதுபெறுகிறார்கள் என்பதும் அவசியம். இல்லையென்றால் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிராக எழுதி, ஆனால் உன்னத எலக்கிய தரத்தின் காரணமாக பரிசு வாங்கி, உங்களிடமிருந்து கனவு இல்லத்தை ஆட்டையைப் போட்டுவிடப்போகிறார்கள், சாக்கிரதை.

மற்றபடி, மதுரை நூலகம் அறிவிப்பு மகிழ்ச்சியூட்டுகிறது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் இதுபோன்ற மாநூலகங்கள் வேண்டும். நூலகங்கள்தான் நமது பாசறைகள். இதைப் பற்றி தனியே எழுதவேண்டும்.

***

”திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள்தான்” என்று நீங்கள் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.  முந்தைய காலத்தில் – திமுக ஆட்சியில் – சினிமா எழுத்தாளர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டது.  வைரமுத்துதான் கவிஞர்.  கமல்தான் எழுத்தாளர்.  அசோகமித்திரன் பெயர் கூட இங்கே யாருக்கும் தெரியாது.  காரணம், துரதிர்ஷ்டவசமாக அவர் பிராமணர்.  சரி, அ-பிராமணர் நிலை மட்டும் என்ன வாழ்ந்தது?  தில்லியில் மிக வலுவான காங்கிரஸ் ஆட்சி இருந்த போதும், அதில் திமுகவினர் மந்திரிகளாக இருந்தபோதும் தமிழ் இலக்கியத்துக்கு என்று எதுவுமே செய்யப்படவில்லை.  ஞானபீடப் பரிசுகளாக வங்காளிகளும் மலையாளிகளும் அள்ளிக் கொண்டு போனார்கள்.  திமுக மந்திரிகள்தான் தில்லியில் அங்கே மிக வலுவான நிலையில் இருந்தார்கள்.  தமிழுக்குக் கிடைத்தது ரெண்டுமே அ-இலக்கியவாதிகளுக்கு.  ஒன்று, அகிலன்.  இரண்டாவது, ஜனரஞ்சகமாக எழுதிய ஜெயகாந்தனுக்கு.  வேறு யாருக்குமே ஞானபீடம் கிடைக்கவில்லை.  ஏனென்றால், நாம் அது பற்றி எதுவுமே பேசவில்லை.  நாம் என்றால் திமுக.  அதிமுக பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?  இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள்.  எனவே அது பற்றி நாம் பேசுவதிலேயே அர்த்தமில்லை.

திமுக தலைவருக்கு இலக்கியத்தில் பரிச்சயம் உள்ள, பதிப்பகக்காரரான இளையபாரதி நண்பர்.  வண்ணதாசன் நண்பர்.  கலாப்ரியா நண்பர்.  திமுக தலைவருக்குத் தெரியாத இலக்கியவாதியே இல்லை.  அவருடைய மேஜையில் எல்லா சமகாலத்து இலக்கியவாதிகளின் புத்தகங்களும் இருந்ததாக சமஸ் எழுதியிருந்தார்.  உயிர்மையில் நான் திரு கருணாநிதியின் கடிதத்தைப் படித்திருக்கிறேன். 

அவர் காலத்தில்தான் இங்கே சில எழுத்தாளர்கள் அங்கீகாரம் அற்று பட்டினி கிடந்து செத்தார்கள்.  கோபி கிருஷ்ணன் அவர்களில் ஒருவர்.  அவர் பிராமணர் அல்ல.  தமிழின் மிக முக்கியமான படைப்பாளி.  அங்கீகாரம் என்றால் என்ன?  இதில் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் நீங்கள் ”பலரைச்” சாடுகிறீர்கள்.  ”எப்போதுமே பிரான்சையும் கேரளாவையும் காட்டிக்காட்டி தமிழ்நாட்டை விமர்சிப்பது மட்டுமே இவர்களில் பலரின் வேலையாக இருந்தது.”  பலர் அல்ல செந்தில்நாதன்.  ஒரே ஒரு ஆள்தான்.  அது நான்தான்.  எனக்கு என்ன ஃப்ரான்ஸும் கேரளமும் மாமா மச்சான் வாழும் நாடுகளா?  ஃப்ரான்ஸை விட்டு விடுவோம்.  அது பெரிய கதை.  தொலைதூரத்தில் வேறு இருக்கிறது.  நம் பக்கத்து ஊர் கேரளத்தை எடுத்துக் கொள்வோம்.  அங்கே எழுத்தாளர்களை சமூகம் கௌரவித்தது.  எப்படி?  உங்களைப் போல் ஒருத்தர் கேட்கிறார்.  ”எழுத்தாளர்களையெல்லாம் யானை மேல் உட்கார்த்தி வைத்து ஊர்கோலம் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” 

எப்படி கௌரவித்தது என்றால், எழுத்தாளர்கள் அங்கே பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக இருக்கிறார்கள்.  சிறப்புப் பேராசிரியர்களாகவும், வருகைதரு பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள்.  நான் இதுவரை கேரளத்தில் சுமார் இருநூறு கல்விக்கூடங்களில் உரையாற்றியிருக்கிறேன்.  கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்று தினங்கள் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு வகுப்பு எடுத்து இருக்கிறேன்.  திருவனந்தபுரம் திரைப்படக் கல்லூரியில் ஒரு முழுநாள் உலக சினிமா பற்றி வகுப்பு எடுத்திருக்கிறேன்.  பள்ளிகளில் உயர் வகுப்புகளில் இலக்கியம் பற்றி உரையாற்றி இருக்கிறேன்.  கேரளத்தில் நான் செல்லாத, உரையாற்றாத கல்லூரியே கிடையாது.  இரிஞ்ஞாலக்குடா என்ற ஊருக்கு மட்டும் மூன்று முறை சென்று அங்கே உள்ள பள்ளிகளில் உரையாற்றியிருக்கிறேன்.  இங்கே இதுவரை மூன்று முறை அழைக்கப்பட்டிருப்பேன்.  ஒருமுறை சென்னைப் பல்கலைக்கழகம்.  ஃப்ரெஞ்ச் துறையில்.  துணைவேந்தர் என்னிடம் “உங்களை டீவியில் பார்த்திருக்கிறேன்” என்று சொல்லி பல்லைக் காண்பிக்கிறார்.  தமிழ்த் துறைத் தலைவரும் கூட.  எம்ஜியார் பற்றி ஆய்வு செய்து துணைவேந்தர் ஆன எம்ஜியார் ரசிகர்.  கட்சிப் பாகுபாடு இல்லாமல் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே இதுதான் நிலை. 

இதை single stroke இல் மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  ஸ்டாலின் அவர் தந்தையைப் போல் இலக்கியவாதியா?  இல்லை.  ஆனால் நல்ல ஒரு ஆலோசனைக் குழுவைத் தன்னைச் சுற்றி வைத்திருக்கிறார்.  அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார்.  உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியவில்லை.  முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் இரண்டு எழுத்தாளர் திட்டங்களும் நான் குமுதத்தில் இரண்டு வாரங்களாக முதல்வருக்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டது.  ஒரே திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேரளத்தையும் ஃப்ரான்ஸையும் பின்னுக்குத் தள்ளுகிறார்.  நீங்களோ ஏதோ எழுபதுகளில் எழுதிக் கொண்டிருந்த வெங்கட் சாமிநாதன் என்கிறீர்கள்.  வெங்கட் சாமிநாதனை நினைவு வைத்திருக்கும் ஒரே ஆத்மா நீங்கள்தான் செந்தில்நாதன்.  வெ.சா.வின் ஆவி நிச்சயம் மகிழ்ச்சி அடையும். 

மேலும், நண்பர் செந்தில்நாதன் அவர்களே, நான் நீண்ட காலமாக தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களுக்கு எதிரானது என்று எழுதிக் கொண்டே இருக்கிறேன்.  தமிழ்ச் சமூகம் என்றால் சராசரி மனிதர்கள் அல்ல.  அவர்களுக்கு எழுத்தாளர் என்றால் சினிமாவுக்கு எழுதுவர்களை மட்டுமே தெரியும்.  சமூகம் என்பது உங்களைப் போன்ற புத்திஜீவிகளை.  உங்கள் வாசகம் இது:

அப்புறம், முதல்வர் அவர்களே, ஞானபீடம், சாகித்ய அகாதெமி சான்றிதழ்களைக் காட்டினால் சட்டென்று சாவியை எடுத்துக் கையில் கொடுத்துவிடாதீர்கள்.

என்ன ஒரு நல்ல எண்ணம்.  கோபி கிருஷ்ணன் இறந்த போது அவரது சடலத்தை எடுக்கக் கூட நண்பர்களிடமிருந்து காசு வசூலித்தார்கள்.  அவரது மனைவிக்கு சுஜாதா விகடனில் எழுதி பணம் வசூலித்துக் கொடுத்தார்.  அதே விகடனுக்கு நான் கோபி கிருஷ்ணனின் கதையை எடுத்துக் கொண்டு சென்றேன். எனக்கு மாதம் ஐநூறு கிடைத்தால் இன்னும் பத்து ஆண்டு வாழ்வேன் என்றார் கோபி.  அதற்காகச் சென்றேன்.  கோபி கிருஷ்ணனைத் தெரியாது.  உங்கள் கதை இருந்தால் கொடுங்கள் என்றார்கள்.  கடைசியில் இந்தியா டுடேவில் வாஸந்திதான் கதையை ஏற்றுக் கொண்டார்.  1500 ரூ. சன்மானம்.  தமிழ் சினிமாவில் வருவது போல அவர் செத்த பிறகு வந்தது மணியார்டர். 

இப்படி ஒன்று அல்ல, இரண்டு அல்ல.  ஒரு நூறு கதைகள்.  தி.ஜ.ரங்கநாதனின் குடும்பமே பட்டினி கிடந்தது.  ரங்கநாதனின் மனைவி வீடுகளில் பாத்திரம் தேய்த்துப் பிழைத்தார். 

ஞானபீடப் பரிசு தமிழுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதுதான் என் கடிதங்களின் ஆதார சுருதி.  அதற்கான காரணங்களைத்தான் நான் ஆய்வு செய்திருக்கிறேன்.  முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்.  ஞானபீடப் பரிசு வாங்கிய ரெண்டு பேரும் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்ற விஷயம் கூடவா உங்களுக்குத் தெரியாது?  அப்புறம் சாகித்ய அகாதமி விருது.  அதை வாங்கியவர்களும் இடதுசாரிச் சிந்தனை உள்ளவர்களும் திராவிட இயக்கங்களின் – குறிப்பாக திமுகவுக்குச் சார்பாக இருக்கும் வண்ணதாசனும், திமுக உறுப்பினரான இமையமும்தான்.  இவர்களிடமா முதல்வர் ஸ்டாலின் சாவியைக் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்?  என்ன, சி.ஐ.டி. வைத்து விசாரிக்க வேண்டுமா?  அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளர் கர்னாடகாவில் இறந்திருந்தால் அது மாநிலத்தின் துயரமாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.  கொடிக் கம்பங்கள் அரை உயரத்தில் பறந்திருக்கும்.  அப்போது அதிமுக ஆட்சி என்று சொல்லாதீர்கள்.  உங்கள் தலைவர் ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தது என்பதே என் ஆதங்கம், கவலை எல்லாம். 

”ஆனால் கலைஞரை கொஞ்சம்கூட பிடிக்காத எழுத்தாளர்களின் வாழ்நாள் வேலையே, இறுதிவரை திமுக இலக்கியவாதிகளை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை கைவிடாததுதான். திராவிடம் ஒரு பாழ்நிலம் என்கிற வெ.சா.வின் ஆயிரத்தெட்டுப் பிரதிகளாக உருவானவர்கள்தான் இங்கே பலரும்.”

இதெல்லாம் ஆதாரமே இல்லாதவை.  கற்பனைக் குற்றச்சாட்டுகள்.  இங்கே உள்ள எழுத்தாளர்களில் 99 சதவிகிதம் திமுக சார்பு உள்ளவர்கள்.  மிகப் பெரிய பட்டியலை என்னால் தர முடியும்.  மனுஷ்ய புத்திரனிலிருந்து இன்றைய அபிலாஷ் சந்திரன் வரை.  திராவிடம் பாழ்நிலம் என்று சொன்ன காலத்தில் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள்.  அல்லது பிறந்திருக்க மாட்டீர்கள்.  அது 1950கள், 1960கள்.  அதுவும் வெங்கட் சாமிநாதன் என்ற ஒருத்தர்தான்.  மற்றவர்கள் அரசியல் சார்பே இல்லாதவர்கள். 

தமிழ்நாட்டில் எத்தனை ஸ்டாலின்கள் வந்து நல்லது செய்தாலும் நாங்கள் இலக்கியத்துக்கு எதிராகத்தான் இருப்போம் என்று ஒட்டு மொத்த சமூகமும் சொன்னால் என்னதான் செய்ய முடியும்?  உங்கள் கடிதத்தில் இலக்கியத்தின் மீதான வன்மம் எப்படி குரூரமாக வெளிப்படுகிறது பாருங்கள்.  உங்களை நான் இத்தனை பெரிய இலக்கிய விரோதியாகக் கற்பனையே செய்து பார்த்ததில்லை.

”ஆனால் உன்னத எலக்கிய தரத்தின் காரணமாக பரிசு வாங்கி, உங்களிடமிருந்து (ஸ்டாலினிடமிருந்து) கனவு இல்லத்தை ஆட்டையைப் போட்டுவிடப்போகிறார்கள், சாக்கிரதை.”

அட அடா, என்ன ஒரு கரிசனம்.  எழுத்தாளர்கள் இதுவரை தங்கள் மனைவியின் தாலிக் கயிற்றை விற்றுத்தான் சிறுபத்திரிகைகளை நடத்தினார்கள்.  சி.சு. செல்லப்பா எழுத்து பத்திரிகை நடத்தியது தன் பிதுரார்ஜித சொத்தை விற்று.  என் வாழ்நாள் பூராவும் என் மனைவியின் நகைகளை ஒவ்வொன்றாக விற்றுத்தான் என் புத்தகங்களை வெளியிட்டேன்.  உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் வெளியிடும் வரை.  பல எழுத்தாளர்கள் தங்கள் சம்பளப் பணத்தில்தான் சிறு பத்திரிகைகளை – இலக்கியப் பத்திரிகைகளை நடத்தினார்கள்.  அஃ பரந்தாமன், கவனம், கசடதபற (இதை நடத்தியவர்களில் ஒருவரான சா. கந்தசாமி திமுக தலைவரின் நெருங்கிய நண்பர்) என்று பல பத்திரிகைகள்தான் சமகாலத் தமிழ் இலக்கியம் இன்றைய நிலையில் இருப்பதற்குக் காரணம். 

படிகள் என்று ஒரு பத்திரிகை.  அதன் ஆசிரியர்கள் அனைவருமே திமுகவுக்குப் பெரிதும் சார்பானவர்கள்தான்.  வெங்கட் சாமிநாதனுக்கு எதிரானவர்கள்.  நிறப்பிரிகை பத்திரிகை இடதுசாரிகளால் ஆனது.

நீங்கள் என்ன சொன்னாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் வரலாற்றில் பொறிக்கப்படும்.  அதில் எனக்குச் சந்தேகம் இல்லை.  இதற்காகத் தமிழக முதல்வருக்கு என் நன்றியும் பாராட்டுகளும்.