இதுதான் வித்தியாசம்… அராத்து

அராத்து முகநூலில் எழுதியது:

மக்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ அடிப்படையிலேயே ஆதி காலம் தொட்டு எழுத்தாளர்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். புலவர்களின் வறுமையில் இருந்து தொடங்குகிறது இந்த இழிவான வரலாறு. என்னை ஏண்டா நாகரீகமா ஆக்க முயற்சி பண்ற ? என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தடுப்பூசி போட வந்த மருத்துவக்குழுவை வட இந்திய கிராமம் ஒன்றில் உருட்டுக்கட்டையால் அடித்துத் துரத்தியதுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். இது எங்கே வந்து நிற்கிறது என்றால் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களில் யாரும் முழு நேர எழுத்தாளர்கள் இல்லை என்ற அளவில் ( வேறு வேலை கிடைக்காத சிலர் வேறு வழி இல்லாமல் முழு நேர எழுத்தாளாராக இருக்கலாம்) எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தால் சிக்கி சீரழிந்து சின்னபின்னமாக வேண்டி வரும் என்பதை உணர்ந்து வாழ்வுக்கு வேறு வேலை பார்த்துக்கொண்டு பகுதி நேரமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு தொன்மையான செம்மொழி என பீற்றிக்கொள்ளும் அதே நேரத்தில் முழு நேர எழுத்தாளர்களே இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடு ? லௌகீகமாக பேசிக்கொண்டு இருப்பதன் மூலமும் , அடுக்கு மொழி மேடைப்பேச்சு , வறட்டுக் காமடி பட்டிமன்ற பேச்சு மூலமே தமிழ் வளர்ந்து விடும் என்று நம்புகின்ற அறிவிலிகள் நிறைந்த நாடு இது. சமூகம் இப்படி தரங்கெட்டு கிடந்தாலும் அரசும் அப்படி இருக்க முடியுமா ? இதுவரை அப்படித்தான் இருந்து வந்தது. இந்தப்பின்னணியில் தான் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இது ஒரு தொடக்கம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். சாஹித்ய அகாடமி , ஞான பீடம் போன்றவைகள் எல்லாம் சும்மா டுபாக்கூர் என்று சொல்லத்தக்க வகையில் இங்கே தமிழநாட்டுக்கும் , ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விருதுகள் அளித்து நிமிர்ந்து நிற்க வேண்டும். அதற்கான வலு இங்கே தமிழிலும் தமிழ்நாட்டிலும் மட்டுமே உள்ளது. நவீன இலக்கியம் சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பணிகள் நிறைய கிடக்கின்றன. பல்லாண்டுகாலமாக எந்த அரசும் செய்யாத பணிகளை முதல்வர் ஸ்டாலின் தன் தோளில் ஏற்றி ஒவ்வொன்றாக செய்து முடிப்பார் என்று நம்புகிறேன். இதில் முக்கியமான விஷயம், முதல்வர் பலர் சொல்வதையும் காது கொடுத்து கேட்கிறார். அவர் கவனத்திற்கு வரும் அளவுக்கு ஒரு சிஸ்டம் போட்டு வைத்து இருக்கிறார் என்பதுதான். ரெம்டிசிவர் பிரச்சனையின் போது மக்களும் , வல்லுனர்களும் பேசியது அவர் கவனத்துக்குச் சென்று இதே போல உடனடி நடவடிக்கை எடுத்தார் என்பது கவனத்துக்கு உரியது. மக்கள் குரலை செவிமடுக்கும் அரசு என்பது சமீப காலங்களில் இல்லை. இந்த அரசின் இந்தத் தன்மை மிக முக்கியமானது. கோரிக்கைகளையும் கருத்துக்களையும் சொன்னால் அரசு செவிமடுக்கிறது என்பது மிகவும் நம்பிக்கை அளிக்கும் விஷயம். ஜனநாயகத்தின் அடிப்படையே அதுதானே. அரசு எவ்வளவோ செய்கிறது. எவ்வளவோ செலவழிக்கிறது. மூன்று எழுத்தாளர்களுக்கு 5 லட்சம் மற்றும் விருது பெற்றவர்களுக்கு வீடு என்பது அரசு செய்யும் செலவினங்களில் மிகச் சொற்பம். இந்த இடத்தை வந்து அடைவதற்குள் எத்தனையோ எழுத்தாளர்கள் அசிங்கப்பட்டு , அவமானப்பட்டு உடல் ரீதியாக மரணிப்பதற்கு முன் பல முறை செத்திருக்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களின் கதைகளையும் திரும்பிப் பார்தால் ஒவ்வொன்றும் ஒவ்வோரு துலாபாரம். கலைஞர் ஆட்சியிலும் எழுத்தாளர்களுக்கு செய்திருக்கிறார்தான். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் , அவரைச் சுற்றி இருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலைஞரிடம் கேட்டு தங்களுக்கு செய்து கொண்டார்கள். இப்போது சாரு நிவேதிதா குமதம் கடிதம் மூலம் ஒட்டு மொத்த எழுத்தாளர்களுக்கும், எழுத்துலகிற்கும் , தமிழ் நவீன இலக்கியத்திற்கும் கோரிக்கை வைக்கிறார். அதை முதல்வர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து அறிவிக்கிறார். அதற்கு அவரின் கீழ் பணி புரியும் அதிகாரிகள் உறுதுணையாக இருக்கிறார்கள். அதைப்போன்ற அதிகாரிகளை ஸ்டாலின் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். இந்த விஷயத்திலும் பல தரப்பில் இருந்து எதிர் குரல்களும் , விமர்சனங்களும் , கிண்டல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. நாய் வண்டி கடந்து செல்லும் போது ஒலிக்கும் சத்தம் போல நாராசமாகக் கேட்கிறது. அதனால் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நாய் வண்டி கடக்கையில் இனம் புரியாத பரிதாப உணர்ச்சி அடி வயிற்றில் இருந்து கிளம்பி வயிற்றை கலக்கும். அதே போல இப்போதும் தோன்றுகிறது.