தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதுகள் பற்றி ஜெயமோகன்

இந்த அறிவிப்புகளுக்குக் காரணமாக அமைந்த
இரண்டு கடிதங்களை (முதல்வருக்கு நான் குமுதத்தில் எழுதியவை) என் தளத்தில் வெளியிட்டிருந்ததை ஜெயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் அவருக்கு ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கும். முதல் கடிதம் குமுதத்தில் வந்த உடனேயே – அதாவது மே 25-ஆம் தேதியே தமிழக முதல்வர் தலைமைச் செயலாளரிடம் இந்தக் கடிதம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துவிட்டதாகத் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு ஐஏஎஸ் மூலமாக எனக்குத் தெரியவந்தது. இதை நான் குறிப்பிடலாமா என்று அவரிடம் கேட்டபோது இதில் என்ன ரகசியம் இருக்கிறது, தாராளமாகக் குறிப்பிடலாம் என்றார். அடுத்த வாரம் கடிதத்தின் அடுத்த பகுதி வந்தது. அது வந்த அடுத்த நாள் கருணாநிதியின் பிறந்த நாள். இலக்கிய விருதுகள், கனவு இல்லம் ஆகிய இரண்டு அறிவிப்புகளும் வந்தன.

ஒரே வாரத்தில் அறிவிப்பு. நடவடிக்கை. இதே காரியத்தை கருணாநிதி செய்யாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவரிடம் யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அவர் எல்லோருடைய பேச்சையும் மிக கவனமாகக் கேட்பார். ஆனால் முடிவுகளை அவர்தான் எடுப்பார். நவீன இலக்கியவாதிகளை அவர் படித்தாலும் அவர்கள் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. நவீன இலக்கியவாதிகள் திராவிட இயக்க எழுத்தாளர்களை நவீன இலக்கியவாதிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தனிப்பட்ட கோபம்.

ஸ்டாலின் இந்த இலக்கிய அரசியலுக்கு வெளியே இருப்பதால் இலக்கியவாதிகளுக்கு இந்தக் காரியம் நடந்துள்ளது. ஸ்டாலினின் இன்னொரு நல்ல குணம், அவர் தேர்ந்தெடுத்து இருக்கும் குழு. அதை விட முக்கியம், அவர்களின் ஆலோசனைகளை அவர் கேட்கிறார், நடவடிக்கை எடுக்கிறார் என்பது. முக்கியமாக என் கடிதம், இறையன்பு ஐஏஎஸ், உதயசந்திரன் ஐஏஎஸ், தங்கம் தென்னரசு போன்றவர்களின் ஆலோசனைகள்தாம் இதற்குக் காரணமே ஒழிய கட்சியைச் சார்ந்த இலக்கியவாதிகள் காரணம் அல்ல. அப்படியிருந்தால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கும்.

எனவே ஜெயமோகன் சொல்வது போல்,
”சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது” என்ற நிலை இப்போதும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இப்போதைய ஆட்சியாளர்கள் குழு அப்போதைய குழுவுக்கு நேர் மாறானது.

”ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி” என்ற ஜெயமோகனின் கணிப்பு இப்போது பொய்க்கும் என்பதே என் அனுமானம். இதுவரையிலான வரலாறு அப்படி இருந்த போதிலும்.

ஜெயமோகனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: அவர் தளத்தில் வெளிவரும் என் புகைப்படம் ரொம்பவும் மொக்கையாக உள்ளது. இந்தப் புகைப்படத்தையேதான் எப்போதும் வெளியிடுகிறார். பிரபு காளிதாஸ் என்னை ஓரளவு வசீகரமாகவே பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். மதுரை அருணாசலமும் கூட. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் புகைப்படத்தையே போடுவதில் ஏதும் உள்குத்து இல்லை என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.