நாளை மாலை ஆறரை மணிக்கு வாசகர் வட்ட சந்திப்பு உள்ளது. இது நினைவூட்டல். கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஐடி நம்பர், பாஸ்கோட் அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் எழுதவும். கலந்து கொள்ள விரும்பிய பல நண்பர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. ஒரே காரணம், அவர்களுடைய முதல் கடிதமே அதுவாகத்தான் இருக்கிறது. உங்களோடு எந்தப் பழக்கமும் இல்லாமல் எப்படி சந்திப்பில் இணைத்துக் கொள்வது? அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ஃபோன். எடுத்தேன். வாசகர். முதல் போன். போன் நம்பரை எங்கோ வாங்கியிருப்பார். நாம் என்ன ரஜினிகாந்தா? டாக்டர். ”எந்த ஊர் சார்?” என்றேன். பத்து நிமிடம் பதில் சொன்னார். எந்த ஊர் என்றதற்கு அத்தனை நீண்ட பதில். விருத்தாச்சலத்திலிருந்து எத்தனை கி.மீ., வரும் வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள், மாயவரத்திலிருந்து எத்தனை கி.மீ., வரும் வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள், கும்பகோணத்திலிருந்து எத்தனை கி.மீ., வரும் வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள்… இப்படி ஒரு நூறு ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட நண்பர்களிடம் மாட்டிக் கொண்டால் என் நிலை என்ன ஆவது? அதனால் புதிய வாசகர்கள் இரண்டு பேரை மட்டுமே இணைத்துக் கொண்டேன்.
ஏனென்றால், இருவருமே என் கேள்விக்குத் திருப்திகரமான பதிலைத் தந்தார்கள். ஒருவரிடம், உங்களை எனக்குத் தெரியாதே, எப்படி இணைப்பது என்று கேட்டேன். பதில்: என் வயது 19. விவேகானந்தா கல்லூரியில் ஃபிலாஸஃபி படிக்கிறேன். உங்கள் எழுத்தின் நீண்ட கால (!!!) வாசகன். நீங்கள் பேசுவதைக் கேட்க வேண்டும்.
உடனே சேர்த்து விட்டேன். இன்னொருவர். என்ன செய்கிறீர்கள்? குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன்.
ஆஹா, உடனே சேர்த்து விட்டேன். எவ்வளவு தெளிவான, குழப்பம் இல்லாத, சுற்றி வளைக்காத, நேரடியான பதில் பாருங்கள். இன்னொருத்தர் ஊர் என்ன என்று கேட்டால் பத்து நிமிடம் விளக்கம். எல்லாவற்றையும் விட பயங்கரம், நீங்கள் யார் என்று தெரியாதே என்று ஒருத்தரிடம் கேட்ட போது, “முன்பு உங்களைத் திட்டி கடிதம் எழுதியிருக்கிறேன்” என்று சொன்னதுதான்.
நாளை சந்திப்போம்.
charu.nivedita.india@gmail.com