ராஜேஷ் குமார்

என்னுடைய மலையாள நண்பர்கள் யாரோடும் இப்போது எனக்குத் தொடர்பு இல்லை. மாத்யமம் பத்திரிகையில் கண்ணன் இருந்தார்.  விஜயகுமார் குனிசேரி ஒரு அற்புதமான மனிதர்.  கவிஞர்.  கோவையில் வசித்தார்.  மாத்ருபூமி பத்திரிகையில் பணி புரிந்தார்.  நான் எப்போது கோவை சென்றாலும் என் குடி நண்பர் அவர்தான்.  அவருடைய மகன் என் வாசகர்.  விஜயகுமாருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும் என்பதால் என் எழுத்தும் நன்கு பரிச்சயம்.  அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் மகன் மாணவர்.  பிறகு ஒருமுறை அவர் வேலைக்கு எல்லாம் போன பிறகு என்னைத் தொடர்பு கொண்டார்.  விஜயகுமார் வீட்டுக்கு நான் செல்லும்போது அவர் மகன் சொன்ன ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது.  அவர் பெயரை மறந்து போனதால் சற்று நேரம் முன்னர் இணையத்தில் விஜயகுமார் குனிசேரியின் பெயரைப் போட்டுத் தேடினால் அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆனது தெரிய வந்தது.  அடக் கடவுளே.  அறுபது வயது கூட நிரம்பவில்லை.  நிரம்பக் குடிப்பார்.  ஆனால் அதிகம் குடித்தால் மரணம் சீக்கிரம் வருமா என்ன?  எனக்குத் தெரிந்து சில மொடாக்குடியர்கள் எழுபதுக்கு மேல் படு ஆரோக்கியமாக இருந்ததை, இருப்பதைப் பார்க்கிறேன்.  ப்யூகோவ்ஸ்கி ஒரு உதாரணம்.  விஜயகுமாரின் ஒரு குணம், வார்த்தைகளில் சிலேடை செய்வது.  மலையாளத்தையும் தமிழையும் கலந்து கட்டி அடிப்பார்.  இப்போது அவர் மகனின் பெயர் மறந்து போனதுதான் என் பிரச்சினை.  அவர் சொன்னார், அவர் தமிழ் கற்றுக் கொண்டது ராஜேஷ்குமார் கதைகளைப் படித்துத்தானாம்.  ஆ, ராஜேஷ்குமாருக்கு அப்படி ஒரு சமூகச் செயல்பாடு இருக்கிறதா? 

ஐரோப்பியத் தமிழர்களின் பிள்ளைகள் பலர் தமிழ் சினிமா பார்த்து தமிழில் பூந்து விளையாடுவது போல.  ஒரு பையன் பூந்து வெளாடுங்க சாரு என்றார்.  என்னப்பா இது, இங்கேயே பிறந்து (பெர்லின்) வளர்ந்த உங்களுக்கு எப்படி இது போன்ற பிரயோகமெல்லாம் தெரியும் என்றேன்.  தமிழ் சினிமா என்றார்.  எதற்குமே பயனில்லை என்று நான் நினைத்திருந்த தமிழ் சினிமா பற்றி அப்போது எனக்குள் ஒரு நல்லெண்ணம் உருவானது.  அந்தப் பையனின் நான் புதுமைப்பித்தனைக் கொடுத்து தமிழ் கற்றுக் கொள் என்றால் ஓடி விடுவான். 

ஆனால் எனக்கு ராஜேஷ் குமாரைப் படிக்க என்றும் வாய்த்ததில்லை.  நான் இளைஞனாக இருந்தபோது ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார் என்ற இரண்டு துப்பறியும் கதை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.  துரதிர்ஷ்டவசமாக ராஜேந்திர குமார் இள வயதில் இறந்து விட்டார்.  ராஜேஷ் குமார் பல தலைமுறைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்.  நான் ஏன் அவரை என் அறுபத்தெட்டு வயது வரை படிக்கவில்லை என்றால், ஏழெட்டு வயதிலிருந்தே நான் வித்தியாசமானவன் என்று நானே நம்ப ஆரம்பித்து விட்டேன்.  அதனால் அந்த வயதிலேயே சுஜாதா, ஜெயகாந்தன் என்று போய் விட்டேன்.  பதினைந்து வயதில் எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி ஷேக்ஸ்பியரைப் படித்தேன்.  உதவியது சார்ல்ஸ் லேம்ப், மேரி லேம்ப்.  அதனால் ஜனரஞ்சக எழுத்து என்றால் எப்படி இருக்கும், அது என்ன என்பதே தெரியாமல் போய் விட்டது.  பிறகு நானே ஒரு எழுத்தாளனுக்கு அதெல்லாம் தெரியாமல் இருக்கக் கூடாது என்று, ஒரு ஹெரால்ட் ராபின்ஸ் (Carpetbaggers), இர்விங் வாலஸ் (நான்கு நாவல்கள்: The Man, The Word, The Prize, Seven Minitues) என்று படித்து அதன் பிறகு இது போதும் என்று விட்டு விட்டேன்.  நாலைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரே ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் படித்தேன்.  எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வதற்காகப் படித்தவை.  ஆனாலும் தமிழில் ஜனரஞ்சக எழுத்து எப்படி இருக்கிறது என்று தெரியாது.  அவ்வப்போது இந்திரா சௌந்தரராஜனைப் படிப்பேன்.  ஆனால் குனிசேரி மகன் சொன்ன ராஜேஷ் குமாரைப் படித்ததில்லை. 

இப்போது bynge.in இல் அவர் சக்கைபோடு போடுவதால் – அதாவது ஆறு லட்சம் பேர் படித்திருக்கிறார்கள் – அது என்ன என்று எட்டிப் பார்த்தேன்.  பரவாயில்லை, ஆள் அதகளப்படுத்துகிறார்.  ஆச்சரியம் என்னவென்றால் எப்படி ஒருத்தர் அம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அதகளப்படுத்திக் கொண்டே இருக்க முடியும் என்பதுதான்.  அதனால் பிஞ்ஜ் செயலில் அவர் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  நாள் பூராவும் மூளையைக் கசக்கிக் கொண்டு எழுதுவதாலும் படிப்பதாலும் எனக்கு அவ்வப்போது – மாதம் ஒருமுறை – விஜய் படம் பார்ப்பது பிடிக்கும்.  கில்லி, துப்பாக்கி எல்லாம் நான் ரசித்துப் பார்த்த படங்கள்.  ராஜேஷ் குமாரின் நாவல் கில்லி மாதிரி இருக்கிறது.  மனிதர் வாராவாரம் எப்படித்தான் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறாரோ?  ஜனரஞ்சக எழுத்து இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.