வளன் அரசு என் எழுத்தில் வளர்ந்தவன். என்னை அப்பா என அழைப்பவர்களில் முதன்மையானவன். அவனுடைய பள்ளிப் பருவத்திலிருந்து அவனை நான் அறிவேன். இப்போது ஒரு நல்ல படைப்பாளியாக வளர்ந்து வருகிறான். பின்வரும் சிறுகதை என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. எந்த இலக்கியப் பாசாங்குகளும் இல்லாத கதை. மறக்கவே முடியாத கதை. இதில் வரும் ரெனியையும் மறக்க முடியாது. ஜெரோமையும் மறக்க முடியாது. ஜெரோம் சைத்தானின் குறியீடு எனவும் ரெனீ உன்னதங்களின் குறியீடு எனவும் புரிந்து கொள்கிறேன்.
ஆனால் வழக்கம் போல் எக்கச்சக்கமான ஒற்றுப் பிழைகள். வரக் கூடாத இடங்களில் ஒற்று இருக்கிறது. வர வேண்டிய இடங்களில் ஒற்றே இல்லை. இப்போதைய இளைஞர்களிடம் ஏன் இந்தப் பிரச்சினை எழுகிறது என்றே உண்மையில் எனக்குப் புரியவில்லை. இதையெல்லாம் எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லையே? தி.ஜா., லா.ச.ரா., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், ஆதவன் போன்றவர்களின் எழுத்தில் ஒரு இடத்தில் கூட ஒற்றுப் பிழை இருக்காதே? இப்போதைய இளைஞர்களின் ஏன் இத்தனை ஒற்றுப் பிழை மலிந்து கிடக்கிறது? இந்த பிரச்சினை, எனக்கு புரியவில்லை, சொல்லி கொடுத்ததில்லையே என்று எழுதுகிறார்கள். இந்த மூன்று இடங்களிலும் முறையே ப், ப், க் என்ற ஒற்றெழுத்துகள் வர வேண்டும் என்று ஏன் இவர்களுக்குப் புரியவில்லை. (இங்கே இவர்கள் ப் போட மாட்டார்கள்!) இது வளனின் பிரச்சினை மட்டும் இல்லை. அராத்துவும் இப்படித்தான் எழுதுகிறார். எல்லாவற்றையும் விடக் கொடுமை, சொர்கம். இரண்டு இடத்திலுமே சொர்கம். சொர்கம். அதாவது, வாழ்கை மாதிரி. தமிழ் செத்து விடும் ஐயா, செத்து விடும்.
ஆனாலும் வளன் கோபித்துக் கொள்ள மாட்டான் என்றே பொதுவில் எழுதுகிறேன். ரெனி எப்படி ஒரு மறக்க முடியாத கதை என்பதைப் பொதுவெளியில் சொல்கிறேனோ அதேபோல் இந்த எழுத்துப் பிழைப் பிரச்சினையையும் பொதுவில்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இப்படி எழுதுவதால்.
மற்றபடி, என் பள்ளியில் மேலும் ஒரு காத்திரமான எழுத்தாளன் உருவாகியிருக்கிறான். அவன் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறான். அது பற்றி அவன் சொல்லும் போதெல்லாம் தமிழில் ஒரு முக்கியமான நாவல் உருவாகிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
வளனுக்கு ஒரு முக்கியமான அறிவுரை. ஒற்றுப் பிழை, எழுத்துப் பிழை இருக்கிறது என்று யாராவது புலவர்களிடம் கொடுத்துத் திருத்தச் சொல்லாதே. கொன்று விடுவார்கள். அப்படித்தான் சமீபத்தில் என் கட்டுரை ஒன்றை ஒரு பிழை திருத்துபவர் கடித்துக் கடித்துக் குதறி இருந்தார். கட்டுரையையே திரும்ப எழுத வேண்டி வந்தது. நீயே கற்றுக் கொண்டு பிழையின்றி எழுதப் பழகு. பிழையின்றி எழுதுவது எப்படி என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நான் பிழையின்றி எழுதுகிறேன். அவ்வளவுதான் தெரியும். ஆனால் நீ ஒரு அருமையான படைப்பாளியாக உருவாகி விட்டாய், வாழ்த்துகள் வளன்…