எஃபத்தா : சிறுகதை : வளன்

“இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமானவரிடம் ‘எஃபத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது.” (மாற்கு 7: 34-35)

கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு டார்ச்செஸ்டர் பகுதியை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது. இங்கு வாழும் யாவருக்கும் இது தெரியும். நகரின் கிழக்குப் பகுதி நல்ல டார்ச்செஸ்டர் எனவும், மேற்குப் பகுதி தீய டார்ச்செஸ்டர் எனவும் அறியப்படுகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்றால் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை வைத்து. அப்போது கிழக்கு டார்ச்செஸ்டர் குற்றங்கள் நிகழாத புனித பூமியா என்றால் அதுவும் இல்லை. மேற்கோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் குற்றச் செயல்கள் கொஞ்சம் குறைவு. இதை எப்படி உங்களுக்குச் சொல்வது? சென்ற வாரம் மேற்குப் பகுதியில் வீடற்ற ஒரு மனிதன் கடுங்குளிரில் வேகமாக ஒரு கடையினுள் சென்று அங்கிருந்த ரொட்டிப் பாக்கெட்டுகளை அவசர அவசரமாகப் பிரித்துத் தின்றுகொண்டிருந்திருக்கிறான். கடைக்காரர் எதுவும் சொல்லவில்லை. எதார்த்தமாக அவனைக் கடந்து வேறெங்கோ செல்ல முயல்கையில் அந்தப் பசித்த மனிதன் கடைக்காரரை கத்தியால் தோள்பட்டையில் குத்திவிட்டான். உயிருக்கொன்றும் ஆபத்தில்லை. இதுதான் மேற்கு டார்ச்செஸ்டர். இதற்கு ஒத்த ஒரு சம்பவம் கிழக்குப் பகுதியில் நடந்தது. பசித்த வீடற்ற தம்பதியர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றினுள் மெக்டானல்ட் பர்கர் பொட்டலங்களை பார்க்கிறார்கள். உடனடியாக அருகில் கிடைத்த கற்களை கொண்டு காரின் கண்ணாடிகளை உடைத்து பர்கர் பொட்டலங்களை எடுக்க முயல்கிறார்கள். அதற்குள் காரின் அலாரம் ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. பதற்றத்தில் எதையும் எடுக்காமல் அவர்கள் ஓடிவிடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் காரினுள் இருந்தது வெற்றுப் பொட்டலங்கள். அதில் எந்த உணவுமில்லை. காருக்கு மட்டும் சேதாரம் வேறுயாருக்கும் காயங்கள் இல்லை.

நான் கிழக்குப் பகுதியில் வசிக்கிறேன். அதனாலே மேற்கு என்னை எப்போதும் வசீகரித்துக் கொண்டேயிருக்கும். ஓய்வு நேரத்தில் பொறுமையாக நடந்து மேற்கிலிருக்கும் கார்டமென் சதுக்கத்தில் அமைதியாக அமர்ந்து அங்கு நடக்கும் வேடிக்கைகளை பார்த்துக்கொண்டிருப்பேன். போதையின் உச்சத்தில் ஹாலுசினேஷன் ஏற்பட்டு தடுமாறி ஏதேதோ செய்துகொண்டிருக்கும் ஆசாமிகள் என் விருப்பத் தேர்வு. ஒருமுறை ஒரு ஆளுக்கு வாயில் முடியோ ஏதோ சிக்கிக்கொண்ட உணர்வென்று நினைக்கிறேன். நாக்கை கைகளால் உருவி உருவி தோற்றுப் போன அவன், மாடு சுவரை நக்குவது போல நாக்கை அங்கிருந்த காங்க்ரீட் கட்டையில் தேய்க்க ஆரம்பித்தான். இப்படி எத்தனையோ மனிதர்களால் நிரம்பியது கார்டமென் சதுக்கம். என்றாவது மனசாட்சி உறுத்தும் வேளையில் அங்குள்ள வீடற்றவர்களுக்கு சான்விச் அல்லது வாழைப்பழங்கள் வாங்கிக்கொடுப்பேன்.

அந்த கார்டமென் சதுக்கத்தில் நெடுநாள்களாக ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். பகல் பொழுதெல்லாம் தலையைப் பிடித்தப்படி வெகு நேரம் சதுக்கத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். என்றாவது கார்களில் செல்பவர்கள் சிக்னலில் நிற்கும் போது டாலர்கள் கேட்டுக்கொண்டிருப்பார். இரவில் அழுக்கடைந்த தன் பெரிய போர்வையை போர்த்திக்கொண்டு இருக்கையின் கீழ் படுத்துக்கொள்வார். குளிர் காலத்தில் அதே இருக்கை எல்லா புறமும் அட்டைகள் பாலித்தீன் கவர்களால் அடைக்கப்பட்டுவிடும். சிறிய குகை போன்ற அதன் அமைப்பில் தங்கிக்கொள்வார். அவர் பெயர் சீஸர். சில முறை சான்விச் வாங்க மறுத்து வெறும் தண்ணீர் பாட்டில்கள் கேட்பார். சில முறை டாய்லட் டிஷி உருளைகள் கேட்டிருக்கிறார். இப்படியான சந்தர்ப்பங்கள் வழியாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது.

சாம்பல் பூத்த அந்தியில் சீஸரை நான் வழக்கமான சதுக்கத்தின் மையத்தில் சந்தித்தேன். என்னவோ அன்று அவர் கொஞ்சம் உற்சாகமாக இருந்தார். என்னைக் கண்டவுடன் சாப்பாடு கிடைக்குமா என்று வினவினார். என்னிடம் எதுவுமில்லை. எனவே சற்று அவருடன் அமர்ந்து உரையாடத் தொடங்கினேன்.

“இன்று கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறீர்களே?”

“அதற்காகத் தானே பிறந்தோம். உற்சாகமாக இருப்பதில் தவறொன்றும் இல்லையே!”

கிடைக்கும் சந்தப்பங்களில் தங்களை இப்படி எதாவது சொல்லி உயர்த்திக்கொள்வது இவர்களைப் போன்றவர்களின் இயல்புதான். பதிலுக்கு நான் எதுவும் சொல்லாததால் அவராகவே காரணத்தை சொல்லத் தொடங்கினார்.

“இன்று நான் பல நாள்களுக்குப் பிறகு குளித்தேன். அதுவும் வெந்நீரில். அதுதான் என் சந்தோஷத்துக்குக் காரணமோ என்னவோ?”

அப்போதுதான் கவனித்தேன், வழக்கத்தைவிட சற்று தெளிவாக இருந்தார் சீஸர். இவர் இந்த இடத்துக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. யாருக்கும் எந்தத் தொந்தரவும் இதுவரை செய்ததில்லை. விடலைகளுக்கு இடையில் நடக்கும் சில சண்டைகளுக்கு பஞ்சாயத்து செய்து விலக்கி வைப்பார் என்று வேறு சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘சீஸர்’ என்பது, ஆள் பார்க்க கொஞ்சம் கம்பீரமாக இருப்பதால் வந்த காரணப் பெயராக இருக்கலாம். உண்மையான பெயர் தெரியவில்லை. மூப்பின் காரணமாக முன்பு போல் பஞ்சாயத்தெல்லாம் செய்வதில்லை. யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் சதுக்கத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார். சில நேரங்களில் அணில்களுக்கும் குருவிகளுக்கும் தனக்குக் கிடைக்கும் பாப்கார்னையோ மற்ற உணவுகளையோ தந்து அவைகளுடன் உரையாடிக்கொண்டிருப்பார். கேப் வெர்டிலிருந்து (Cape Verde) வந்த முதல் தலைமுறையை சேர்ந்தவராக இருக்கலாம் என்பது என் கணிப்பு.

பல நாள்களுக்குப் பிறகு குளித்தேன் என்று சொன்னதால் என்னையும் மீறி வந்த குறுஞ்சிரிப்பை சீஸர் பார்த்துவிட்டார்.

“நீங்கள் எல்லாம் தினமும் குளிப்பவர்கள். எங்களைப் போன்றவர்களைக் கண்டால் இப்படித்தான் சிரிப்பீர்கள்!”

“தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என் சிரிப்புக்கு எந்தக் காரணமும் இல்லை. உண்மையில் உங்கள் துயரத்தில் நான் பங்குகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். உங்களுக்காக கடவுளிடம் தினமும் பிராத்தனை செய்கிறேன்.”

சத்தமாக சீஸர் சிரிக்கிறார்.

“ஏன் எங்களுக்காக இவ்வளவு பரிதாப்படுகிறாய் என்று தெரிந்துகொள்ளலாமா?”

“அந்நிய நிலம். அதில் வீடில்லை. உங்களுக்குக் குடும்பம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவ்வப்போது இங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்றிருப்பதை நானே பார்த்திருக்கிறேன். வேறு யாரும் தரும் உடைகள், உணவு இவற்றில் ஜீவிதம் நடத்துவது சிரமம் தானே? அதனால்தான் உங்களுக்காகக் கடவுளிடம் பரிந்து பிராத்தனை செய்வதாகச் சொன்னேன்.”

“உன்னுடைய பிராத்தனைகளை வைத்து நான் என்ன செய்ய முடியும்?” நக்கலாக என்னைப் பார்த்துக் கேட்டார். அவருக்கு நான் எந்த பதிலும் தரவில்லை. கொஞ்சம் இருக்கையில் சாய்ந்து சோம்பல் முறித்துக்கொண்டேன். மதியம் சாப்பிட்ட பீனட் பட்டரும் ஜெல்லியும் தடவிய சான்விச் செரித்ததன் விளைவாக ஒரு பெருத்த ஏப்பம் வந்தது. சீஸருக்கு அது கட்டாயம் கேட்டிருக்கும். நாகரீகமாக அவரிடம் “மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றேன். அதைப் பொருட்படுத்தாத சீஸர், என்னிடம் கிழக்குப்பகுதியில் நடந்த கார் உடைப்புப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வப்போது என் பெருத்த வயிறையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

மேற்கு டார்ச்சஸ்டரின் மீதான என் வசீகரத்துக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு நடைபாதைகள் சுத்தமாக இருக்காது. முதல்நாள் யாரிடமோ குத்து வாங்கி ரத்தம் கட்டி வீங்கிய வயலட் கண்களுடன் சில பெண்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எந்த வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் மனிதர்களையும் வாகனங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் சீஸர் போன்ற நபர்கள். எவ்வளவு முயன்றாலும் இவர்களைப் போல் என்னால் ஒருநாளும் வாழ முடியாது. நான் என் கடமைகளுடன் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளேன். சம்பாதிக்க வேண்டும். சேர்த்த பணத்தில் சொந்த ஊரில் ஒரு வீடு, கார் மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரும்பாவிட்டாலும் ஒரு திருமணம். அவளை இங்கு அழைத்து வந்து ஊர் சுற்றிக் காட்டி சில செல்ஃபிக்கள் எடுத்து ஃபேஸ் புக்கில் பதிய வேண்டும். அதைப்பார்த்த நண்பர்கள் “வாழ்ந்தா இவனைப் போல வாழ வேண்டும்” என்று கமெண்ட் போட வேண்டும். பின்னர் ஒரு குழந்தை. அதுவும் இங்கே பிறக்க வேண்டும். அப்போதுதான் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இருக்காது. மேலும் குழந்தை இங்கு வளர்வதுதான் பாதுகாப்பானது. இங்கு குடியுரிமை பெற்றுவிட்டால் இங்கொரு வீடு, கார், கூடவே ஒரு நாய்க்குட்டி. அதன் பிறகு நிம்மதியாக வாழ்ந்து மரிக்கலாம். இவ்வளவு இருந்தும் மேற்கு டார்ச்சஸ்டரின் மீதான வசீகரத்தை எப்படி நியாயப்படுத்துவது? இங்குள்ளோர் தங்கள் சுதந்திர வாழ்வால் என்னை ஏளனப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாமா? விரும்பியதை உண்ண முடியாவிட்டாலும் கிடைப்பதை உண்ணுகிறார்கள்; கட்டுப்பாடின்றி கண்ட இடங்களில் புகைக்கிறார்கள்; குடிக்கிறார்கள்; பாலினப் பாகுபாடின்றி மறைவுகளில் ஒருவரையொருவர் புணர்ந்துகொள்கிறார்கள்; வழிபாதைகளில் கவலையின்றி நடனமாடுகிறார்கள்; அதிபரையோ ஆளுநரையோ கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்கள்; உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் சண்டையிடுகிறார்கள்; உண்மையில் ‘வாழ்வதற்காக’ இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை யாராலும் கூறிவிட முடியாது. ஒரு மிருகக் காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளைப் பார்ப்பது போல நான் இவர்களைச் சந்திக்க விழைகிறேன் என்று புரிந்தது. கூண்டில் அடைபட்டிருக்கும் புலியோ சிங்கமோ எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து அவைகளை வேடிக்கை பார்க்க முடியும். அவைகளுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டால்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. எனக்கும் மேற்கு டார்ச்செஸ்டர் ஒரு மிருகக்காட்சி சாலை. எனக்கு மட்டுமல்ல கிழக்கு டார்ச்செஸ்டர்வாசிகள் அனைவருக்கும் அப்படித்தான்.

இவ்வளவு சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்த வேளையில் சீஸர் தொடர்ந்து எதையோ பேசிக்கொண்டிருந்ததை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒரு பெருமூச்சுடன்  சீஸருடன் விடைபெற முயல்கையில், அவர் என் கரத்தைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர வைத்தார்.

“நீங்கள் தவறாக சிந்திக்கிறீர்கள்!” என்றார். அவருடைய பார்வையில் கருணை பொங்கி வழிந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் அவராகவே “எங்கள் மீதான உங்கள் பார்வை அடிப்படையில் தவறானது!” என்றார்.

நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். வாய்விட்டு நான் சொல்லாத என் எண்ணங்களை இம்மனிதன் எப்படித் தெரிந்துகொண்டான்!?! உறுதிபடுத்திக்கொள்ள அவரிடமே கேட்டேன். என் கேள்விக்கான பதிலை அவர் சொல்லாமல் தலையைக் குனிந்து அமர்ந்துகொண்டார். இருள் சூழ இன்னும் கொஞ்சம் நேரமிருந்தது. அருகிலிருந்த மரங்களில் குருவிகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. அணில்கள் சில வெடுக் வெடுக்கென வாலாட்டிக்கொண்டு எங்களை நெருங்க எத்தனித்துக்கொண்டிருந்தன. சாலையில் நடந்துகொண்டிருந்த இளம் ஜோடி கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில் மூன்று இளைஞர்கள் ஹிப் ஹாப் இசையை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு நடனமாடிக்கொண்டிருந்தார்கள். சாலையில் சென்ற கார்கள் சத்தமாக ஒலி எழுப்பியவாறு சென்றன. சீஸரின் அமைதி என்னை ஏதோ செய்தது.

இருந்தாலும் நான் சொன்னதில் தவறொன்றும் இல்லை என்று எனக்குள்ளாக ஒரு குரல் ஒலித்தது. “காலம் காலமாக வறுமையில் வாடி இவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்!” உள்ளிருந்து வந்த குரல் மீண்டும் என் வாதத்துக்கு வலு சேர்த்தது. “வாழத் தெரியாதவர்கள்! உண்ணுகிறார்கள், உறங்குகிறார்கள், புணர்கிறார்கள், புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள். இதைத் தாண்டி இவர்கள் செய்துவிடுவதென்ன?” இன்னொருமுறை என் வாதத்துக்கு வலு சேர்ந்தது. ஆனால் நான் அக்குரலை எனக்குள்ளாக அடக்க முயன்றேன். பக்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சீஸர் அத்தனையையும் கவனித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. திடீரென என்னை நிமிர்ந்து பார்த்த சீஸரின் முகம் வாடியிருந்தது.

“நீங்கள் எங்களை அவமானப் படுத்துகிறீர்கள்!”

நான் அவரிடமிருந்து என் சிந்தனைகளை மறைக்க முயன்றாலும் முடியவில்லை. அவரின் வாடிய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போதே எனக்குள்ளாக மீண்டும் வசைகள் பொங்கி எழுந்தன. காரணமின்றி மேற்கு டார்ச்செஸ்டரின் மீது கோபம் வந்தது. ஓர் எளிய வீடற்றவன் முன் நான் ஆடையின்றி நிற்பது போன்ற உணர்வு எழுந்தது. தொடர்ந்து மேற்கு டார்ச்செஸ்டர்வாசிகளை தீர்ப்பிட்டுக்கொண்டே இருந்தேன். அவர்கள் எனக்கு நரகத்திலிருந்து வந்தவர்கள் போல் தோன்றினார்கள். அவர்களின் அரசனாக சீஸர் இருப்பதாகத் தோன்றியது. சீஸருக்கும் எனக்கும் அமைதியான யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்தது. போதும் போதுமென நான் என்னை கட்டுப்படுத்தினாலும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. இப்போது சீஸர் கொஞ்சம் ஆத்திரத்தோடு இருப்பதாகத் தோன்றியது. என்னை அவர் கெட்ட வார்த்தைகளில் திட்டியது சுரீரென இருந்தது.

“இப்போது நிறுத்தப் போகிறாயா இல்லையா?”

சீஸர் எப்படி என் மூளைக்குள் ஊடுருவினார்? இது எப்படி சாத்தியம்?

“நிறுத்து வேசிமகனே!”

அருகிலிருந்த என்னைத் தள்ளி விட்டுத் தாக்குவதற்காக வேகமாக ஓடி வந்தார். நாளை செய்தித்தாள்களில் நான் கொல்லப்பட்ட செய்தி வந்திருக்கும். சீஸரை காவல் அதிகாரிகள் கைது செய்வார்கள்; ஆனால் சிறையில் அடைக்கப்படுவாரா எனத் தெரியவில்லை. மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படலாம். என் எதிர்காலம் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது எனக்குத் தெரிந்தது. என் வாழ்வில் இனிமேல் வரப் போகும் அனைவரும் – என் காதல் மனைவி உட்பட – புகைப்படலமாக எனக்குத் தோன்றினார்கள். எனக்குக் கையசைத்து விடைகொடுத்தார்கள். வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கிருந்த ஒரேயொரு வாய்ப்பை எதிர்பார்த்து தரையில் கிடந்த எனக்கு ஓர் உந்துதல் கிடைத்தது. சீஸர் என்னை நெருங்கியவுடன் அவனை உதைத்துத் தள்ளி வேகமாக எழத் துவங்கினேன். இயலவில்லை. அதனால் என் கைகளை முன்னங்கால்களாக பயன்படுத்தி ஒரு நாயைப் போல அங்கிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினேன். மூச்சு பயங்கரமாக வாங்கியது.

இப்போது சீஸர் எழுந்து என்னைத் துரத்தத் தொடங்கினான். எப்படியும் அவனிடம் சிக்கிவிடக் கூடாது என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. கால்களைக் கொண்டு ஓட என்னால் இயலவில்லை. எழுவதற்கு முயற்சித்தால் தடுமாற்றமாக இருந்தது. எப்படியோ சமாளித்து எழுந்து நின்ற சமயம் என்னை சீஸர் பிடித்துவிட்டான். அவனை உதறித் தள்ளி ஓட எத்தனிக்கையில் என் காதுகளை அவன் பிடித்து இழுத்தான். இரு காதுகளையும் பிய்த்து எடுத்துவிட வேண்டும் என்பது போல பலமாக பக்கவாட்டில் இழுத்தான். காதுகளின் குருத்தெலும்புகள் விரிந்து ஓவென்ற ஓலம் மட்டும் கேட்பதற்கு சற்றுமுன் சீஸர் சத்தமாக உச்சரித்த “எஃபத்தா!” என்ற வார்த்தைக் கேட்டது.

‘எஃபத்தா’ என்ற வார்த்தைக்குப் பிறகு நான் எதையும் கேட்கவில்லை. காதின் குருத்தெலும்புகள் விரிந்ததில் பெரும் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. சரியாக ஓட முடியாதபடி தலையை சுற்றிக்கொண்டு மயக்கம் வந்தது. வாந்தி வருவது போன்ற உணர்வும் சேர்ந்து கொண்டதால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னால் சீஸர் துரத்துகிறானா என்று பார்த்தேன். யாரும் வரவில்லை. நன்றாக இருட்டிவிட்டது. குளிர் உடலை ஊடுருவத் தொடங்கியது. எதுவும் செய்யமுடியாமல் அந்த நடைபாதையிலே விழுந்துவிட்டேன். என் உணர்வுகள் அற்று பெருந்தூக்கத்தின் பிடியில் என்னை ஒப்புக் கொடுத்தேன்.

உணர்வுகள் இல்லாத அந்த நேரத்திலும் காதுகளில் சீஸரின் ‘எஃபத்தா’ என்ற வார்த்தை எதிரொலித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் என் உடலின் அத்தனை துவாரங்களும் திறந்துகொண்டு ‘எஃபத்தா’ எதிரொலித்துக்கொண்டிருந்தது. ஒரு சொல் எழுதப்படும் போது அதில் சப்தங்கள் எதுவுமில்லை, அதைச் சொல்லும் போதோ வாசிக்கும் போதோ அரூபமாகிவிடுகிற எழுத்துகளுக்கு ஒலி வடிவில் மட்டும் எத்தனை சக்திமிக்க அதிர்வுகள்! ஆனால் என் உணர்வற்ற நிலையில் ‘எஃபத்தா’ என்ற சொல்லே ஒவ்வொருமுறையும் துடித்து ஒலித்துக்கொண்டிருந்தது. என் உடலின் திறப்புகளில் இப்போது ஒளி பொங்கி வழிந்தது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். நான் தீர்ப்பிடப்படுவதற்காக பெரும் அரியணை முன் நின்றுகொண்டிருந்தேன். ஆதியிலேயிருந்த வார்த்தை என்னைத் தீர்ப்பிட்டது. நான் புழுவாக மாறி பிரபஞ்சத்தில் அலைவுற்றிருந்தேன். நரகத்தின் வாயில் திறந்துகொண்டு என்னை அழைத்தது. முடிவற்ற தீப்பிழம்புகளுக்கு நான் என்னை கையளிக்க முற்பட்ட போது கதறல்களுடன் நான் மீண்டும் மனிதப் பிண்டமாக ஜனித்தேன். இதுதான் நரகத்தின் மிகப் பெரும் தண்டனை. தவறிழைத்தவர்கள் வற்றாத எண்ணைக் கொப்பரைகளில் வறுத்தெடுக்கப்படுவதைவிட; நெருப்பின் உஷ்ணத்தில் தசைகள் உருகி நோவுறுவதைவிட; மலப்புழுக்களை உணவாக்கி மீண்டும் அவைகளுக்கு உணவாவதைவிட; இருட்டறையின் சித்ரவதைகளைவிட; பிசாசுகளின் கொம்புகளில் துளைக்கப்படுவதைவிட; மீண்டுமாகப் பிறத்தல் கொடிது.

என்னைச் சூழ்ந்திருப்பவர்கள் அனைவரும் என் பிறப்பில் மகிழ்ந்தார்கள். நான் அவர்களை ஆச்சரியமாக நோக்கிக்கொண்டிருந்தேன். இவர்களும் என்னைப் போலவே நரகத்தின் பெரிய தண்டனைக்கு ஆளானவர்கள்தான். அவர்களுக்கு அதைக் குறித்த எந்த உணர்வுமில்லை. முட்டி மோதி எப்படியோ வளர்ந்து பெரியவனான பின் குடும்பப் பொறுப்புகள் தலை மீது ஏறி அமர்ந்துக் கொண்டன. அதைச் சமாளிக்க அமெரிக்கா வந்தால் டாலர் ஒன்றை மட்டுமே குறியாக வைத்துச் செயல்பட வேண்டியிருக்கிறது. பல இரவுகள் தண்ணீரை மட்டும் அருந்திவிட்டு படுக்கச் செல்கிறேன். இங்கே என் செலவுகள் போக வீட்டில் இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டுமே! என் பெற்றோருக்கு நான் அமெரிக்காவில் இருப்பதில் எவ்வளவு பெருமை தெரியுமா? பார்ப்பவர்களிடமெல்லாம் என் படங்களைக் காட்டி மகிழ்கிறார்கள். நான் தொடர்ந்து பிசாசுகளின் ஈட்டிகளால் குத்தப்படுவது யாருக்கும் தெரியவில்லை. வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கி வைத்திருக்கிறேன். அப்பாவுக்கு அப்பார்ட்மென்ட் வாழ்க்கை பிடிக்கவில்லையாம். மலைப்பிரதேசத்தில் ஒரு வீடு கட்டவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இன்னும் எத்தனை இரவுகள் பட்டினி கிடக்க வேண்டும் என்று புரியவில்லை. அதற்கிடையில் பார்ப்பவர்கள் அனைவரும் என்னிடம் டாலர் டாலர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன். யாரென்றே தெரியாத பலரும் என் சேமிப்புகளை சர்வ சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் தாங்க முடியாது என்று தெரிந்த ஒரு மாலைப் பொழுதில் வீட்டுக்கு அருகிலிருந்த மதுபான விடுதியில் அளவுக்கதிகமாக வோட்காவை அருந்திக்கொண்டிருந்தேன். கடையை மூடவேண்டும் என்பதாலும் அளவுக்கதிகமாக குடித்துவிட்டேன் என்பதாலும் அதற்கு மேல் எனக்கான வோட்காவைத் தர மறுத்தார்கள். அவர்கள் முகத்தில் டாலர் கற்றையை விட்டெறிந்து இன்னொரு வோட்காவுக்கு ஆர்டர் கொடுத்த போது என்னை அவர்கள் கடையைவிட்டு தூக்கியெறிந்தார்கள். சீஸர் என்னைக் காலால் உதைத்து நடைபாதையின் ஓரத்தில் கிடத்தினான். காலையில் என்னைக் கடந்து சென்ற பலரும் ஏசிக்கொண்டே நடந்து சென்றார்கள். சிலர் என்மீது காறி உமிழ்ந்தார்கள். நரகத்தின் தண்டனைகள் மிகக் கடுமையானது.

எங்கிருந்தோ மீண்டும் ‘எஃபத்தா’ ஒலிக்க என் நினைவுகள் திரும்பி கண் விழித்தேன். குளிர் என்னை உறைய வைத்திருந்தது. நடுங்கிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தேன். பகல் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. ஒரு காவலர் அருகில் வந்தார். என்னைக் குறித்து விசாரிக்கத் தொடங்கினார். அவர் கேட்ட எந்த கேள்வியும் எனக்குப் புரியவில்லை. அவரிடம் ‘எஃபத்தா’ என்றேன்.

“எக்ஸ்க்யூஸ் மீ?”

“நான் இப்போது எங்கிருக்கிறேன்?”

“காடெமன் சதுக்கம். ஆள் பார்க்க வசதியானவராக இருக்கிறீர்கள். ஏன் இப்படி இங்கே இருக்கிறீர்கள்?”

நான் மீண்டும் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன். சதுக்கத்தின் இருக்கையில் அமர்ந்து சீஸர் அணில்களுக்கும் பறவைகளுக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்.

“நான் வீட்டுக்கு போக வேண்டும்” என்று காவலரிடம் என் முகவரியைச் சொன்னேன். அவரே என்னைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். நான் என்னைக் குறித்து அவரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். என்னுடைய தோற்றத்தைக் கண்டு அவர் என்னிடம், “மேற்கு டார்ச்செஸ்டர் மோசமான பகுதி, அங்கு தனியாகச் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். நான் எதுவும் பேசவில்லை.

அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டேன். அடுத்தடுத்த நாள்கள் தினசரி வேலைகளுடன் சென்று மறைந்தன. என்றேனும் காரில் செல்லும் போது காடெமன் சதுக்கத்தைக் கடக்க நேரிட்டால் தலை தூக்கி சீஸரைத் தேடுவேன். எப்போதும் போல சீஸர் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.