சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல்

ஜெயமோகனின் வாசகர்கள் என்றுதான் இதற்கு நான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்தத் தலைப்பு பலவித ஹேஷ்யங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். செய்வதற்கு எனக்குப் பல வேலைகள் உள்ளன. இரவு பகலாகக் கண் விழித்து ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சீனியை அழைத்தேன். மிரண்டு போனார். இதுதாங்க, ராப்பகலா எழுதுறதுங்கிறது என்றேன். பழைய ராணுவ ஒழுங்கு எதுவும் இல்லை. நாவல் எழுதும்போது நேர ஒழுங்கு உட்பட எந்த ஒழுங்கையும் கடைப்பிடிப்பதில்லை. அப்படி ஒரு சூழலிலும் இதை நான் அதிகாலை ஐந்து மணிக்குத் தட்டச்சு செய்வதன் காரணம், சமகால இலக்கியச் சூழல் பற்றி அக்கறை கொள்பவன் என்பதனால்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் ஜெயமோகன் பற்றி ஒரு கருத்து சொன்னார்.  அதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது நான் அந்த நண்பரிடம் என்னென்ன சொன்னேனோ அதைத்தான் அபிலாஷும் எழுதியிருக்கிறார்.  அதே வார்த்தைகள் என்பதுதான் என் ஆச்சரியம். கருத்து மட்டும் அல்ல; அதே வார்த்தைகள். இதற்கு அந்த நண்பர்தான் சாட்சி. இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், என் நண்பரிடம், “நீங்கள் இப்படி ஒரு கருத்தை என்னிடம் சொல்வதை விட அபிலாஷிடம் சொல்லி விவாதிக்க வேண்டும்” என்றேன். சொல்லி இரண்டு நாட்களில் அபிலாஷிடமிருந்து இப்படி ஒரு பதிவு. அபிலாஷ் ஒரு புனைவிலக்கியப் படைப்பாளி என்றாலும் ஒரு விமர்சகரும் கூட. மேலைத் தத்துவப் போக்கைப் பயின்றவர். அதில் வகுப்பு எடுப்பவர். எப்போதாவது திடீரென்று கிரிக்கெட் ஆட்டத்தின் போது ஃபுட் பாலை ஆடி விடுவார் என்றாலும் அதெல்லாமும் சேர்ந்ததுதானே வாழ்க்கை? (தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் தருவதாகச் சொன்ன போது, “எழுத்தாளர்கள் அதை ஏழை பாழைகளுக்குக் கொடுத்து விட வேண்டும்” என்று எழுதி என்னைத் ’தற்கொலைக்குத் தூண்டிய கதை’யை எங்கே போய் சொல்ல? ஆனால் அந்த அதிரடிகளும் சேர்ந்தவர்தான் அபிலாஷ்!)

ஜெயமோகன் மீது, அவர் எழுத்தின் மீது, அவரது அபிப்பிராயங்களின் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு. இன்றைக்கும் அவர் ஏதாவது சொன்னால் அவரைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன். அவரது கொற்றவை படித்து மிகவும் பொறாமை கொண்டேன். இப்படி ஒரு நாவலை நம்மால் எழுத முடியுமா என வியந்தேன். ஆனால் ஜெயமோகனின் எழுத்து மூலம் உருவாகி இருக்கும் cult குறித்து – இதற்கு ஜெ. காரணம் அல்ல – நான் பெரிதும் கவலை கொள்கிறேன். காரணம், தமிழில் சிறு பத்திரிகைகள் உருவாக்கிய சுரணை உணர்வு – literary and cultural sensibility – இந்தக் கல்ட்டிடம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் என்னிடம் வந்து ஜெயமோகனின் வாசகர் ஒருவர் அப்துல் கலாம் பற்றி இரண்டு மணி நேரம் ஏதோ அவரை (அப்துல் கலாமை) அமார்த்யா சென் ரேஞ்ஜுக்கு நினைத்துக் கொண்டு விவாதித்து எனக்குக் கடும் நெஞ்சு வலியை உண்டாக்கி இருப்பாரா?

அரூ அறிவியல் கதைகள் பற்றிய முன்னுரையில், ஜெயமோகனை வாடா போடா என்று அழைக்கக் கூடிய அளவுக்கு நெருங்கிய நண்பரான யுவன் சந்திரசேகர் இந்தப் பிரச்சினையை லேசாகத் தொட்டிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன். இதற்கும் ஜெயமோகனுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் நுண்ணுணர்வுகளை, அரசியலை, கருத்து இயக்கத்தை அறியாத ஒரு பெரும் குழு ஜெயமோகன் எழுத்தை மட்டுமே வாசித்து உருவாகி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆச்சரியகரமாக அருண்மொழி நங்கை அந்தக் குழுவில் இல்லை. அவர் எழுத்தில் அந்த அடையாளம் ஒருசிறிதும் இல்லை. ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.

இது பற்றி இனி விவாதிக்க மாட்டேன். சூழல் பற்றி இத்தனை கவலைப்படுவதே எனக்கு அதிக பட்சம். வேலை எக்கச்சக்கமாகக் கிடக்கிறது. ஐந்து நாவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் மூன்று நாவல்களுக்கு ஐநூறு ஐநூறு பக்கக் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன்.

இந்த என் பதிவுக்காக நண்பர்கள் என்னைத் திட்டினால், மன வருத்தம் கொண்டால் அது பற்றி நான் பொருட்படுத்த மாட்டேன். அபிலாஷ் எழுதியிருக்கும் இதே வார்த்தைகளைத்தான் என் நண்பரிடம் இரண்டு தினங்களுக்கு முன்பு சொன்னேன் என்ற ஆச்சரியத்தை மட்டுமே உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இனி அபிலாஷ்:

ஜெயமோகபுரத்து இளவரசருடன் ஒரு உரையாடல்:

Cult-ஐச் சேர்ந்த ஒரு அன்பரின் கேள்வி: (அபிலாஷை நோக்கி) நீங்கள் ஏன் எப்போதும் விஷ்ணுபுரம் ஆட்களையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. 2017ல் நீங்கள் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் அரங்கு உங்களை காயப்படுத்தி இருக்கிறது என நினைக்கிறேன். மூன்றரை ஆண்டுகளாக திரும்பத் திரும்ப அதைப்பற்றியே நினைத்துப் பார்க்கும் அளவு காயப்பட்டிருக்கிறீர்கள். அது அப்படி அல்ல ‘விபு இலக்கிய வட்டம் ரொம்ப மோசம்’ என்று நீங்கள் எழுதும் கட்டுரைகள் வழியாக உங்களையே நம்ப வைத்துக் கொள்கிறீர்கள்!

ஆர். அபிலாஷ்: அதொன்றுமில்லை – விஷ்ணுபுரம் அமைப்பு ஒரு ஆபத்தான மென் வலதுசாரி இலக்கிய அமைப்பு. கூடவே அதில் எழுதுபவர்களின் கோட்பாட்டுப் புரிதல் பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த அமைப்பு தமிழ் இலக்கிய நுண்ணுணர்வை அழிக்கிறது என நம்புகிறேன். அதனாலே அதை எதிர்க்கிறேன். நீங்கள் உங்கள் அரசியலை மாற்றினால், கோட்பாட்டுப் புரிதலை வளர்த்தால் நான் பாராட்டுவேன். ஆனால் அப்படி செய்வீர்கள் எனும் நம்பிக்கை எல்லாம் இல்லை. அடுத்து, ஏன் உங்கள் ‘விழாவுக்கு’ வந்த பின் உங்கள் அமைப்பைப் பற்றி எழுதுகிறேன் என்றால் அந்த நாட்களில்தான் முதன்முதலாக விஷ்ணுபுரம் எப்படியான கல்ட் அமைப்பு, அதில் பயிலும் வாசகர்கள் எந்தளவுக்கு சிறுபத்திரிகை மரபில் இருந்து விலகி ஒரு indoctrinated குழுவாக, சுயசிந்தனை இருந்தும் அதை வெளிப்படையாகப் பேசும் துணிச்சலற்றவர்களாக இருக்கிறீர்கள் என வருந்தினேன், பரிதாபப்பட்டேன். மற்றபடி என்னைக் காயப்படுத்தும் அளவுக்கு எல்லாம் நீங்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் இல்லை. ஏதாவது புதுசாக இருந்தால் சொல்லுங்கள் – உங்கள் கல்ட் அமைப்பைப் பற்றி இன்னும் ஒரு 10,000 பக்கம் எழுதி விவாதிக்க நான் தயார். முதலில் லிபரல் ஹியூமனிசம் என்றால் என்னவெனத் தெரிந்து கொண்டு ஏன் உங்கள் அமைப்பின் எழுத்தாளர்கள், வாசகர்கள் வாசிப்பில் நூறு வருடம் பின் தங்கின போக்கைப் பின்பற்றுகிறீர்கள் என நியாயப்படுத்துங்கள்? ஒரு எழுத்தாளனை அவனுடைய வாழ்க்கையின் பின்புலத்தில் வைத்து வாசிக்கிற கத்துக்குட்டித்தனமான முறை காலாவதியாகி ஒரு நூறாண்டுக்கு மேல் ஆகி விட்டது தெரியுமா? நான் இந்த கேள்வியை பலமுறை உங்கள் அமைப்பின் பால் வைத்து விட்டேன். யாரும் பதில் சொல்லுவதாகத் தெரியவில்லை. உங்களுக்கு என் கேள்வியே புரியவில்லை என நினைக்கிறேன். உங்கள் விழாவில் வந்து அங்கு வாசகர்கள் புத்தகங்களை விமர்சிக்கும் முறையைக் கண்டதும் ஏதோ ஐந்தாம் வகுப்பு மாணவர்களை நினைவுபடுத்தினார்கள். ரொம்ப பரிதாபமாக இருந்தது. இவ்வளவு தவறாக இலக்கியத்தை வாசிக்கத் தூண்டும் ஜெ.மோ ஒருவித இலக்கிய சனாதனவாதத்தை முன்னெடுக்கிறார் – அதாவது வாசிப்புக்கு அதன் எழுத்தாளனின் பின்னணியை, வரலாற்றை பிரதானமாக்குவதன் வழி ஒரு மனிதனின் பின்னணியை அவனது சாராம்சமான அடையாளமாக்கும் அரசியல். இதுவும் உங்களைப் போன்றோருக்குப் புரியாது. முதல் கேள்விக்கு பதில் அளித்து விட்டு இந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கு வாங்க. இல்லை உங்கள் ஆசானைப் போல எந்த கேள்விக்கும் அப்பாற்பட்டவன் நான், பொச்சரிப்பால் பேசுகிறார்கள் எதிரிகள் என நினைத்தால் you can continue to live on your fool’s paradise.

அபிலாஷின் மேற்கூறிய பதிலைப் படித்து விட்டு கல்ட் அன்பர் மேலும் தான் சொன்னதையே வலியுறுத்தி அபிலாஷை வசை பாடுகிறார்.  அதற்கு அபிலாஷின் பதில் கீழே:

அபிலாஷ்: எதிர்பார்த்த பதிலைத்தான் தந்திருக்கிறீர்கள். உங்களைத் திருத்தவோ உங்களுடன் விவாதித்து ஒரு புரிதலுக்கு வரவோ முடியாது. எதையும் படித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமில்லை. வெற்றுச் சவடால். அதை விடக் கேவலம் ‘எங்கள் ஆசானைப் போல முடியுமா?’ எனும் தப்பித்தல்கள். உங்கள் சொர்க்கத்தில் சுகமாக வீற்றிருங்கள்.