தற்காலச்* சிறுகதைகள்: அராத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு சில சிறுகதைகளைப் படித்தேன். அம்மா பாசம் , தாத்தா வின் தனிமை , பாட்டியின் காவியத் துயரம் , ஏழ்மை ,உழைப்பு , விவசாயத்தின் மேன்மை , ஆடு மாடுகளின் பாசம் என ஒரே ஒப்பாரி.மூக்குச்சளியால் சிறுகதையின் பக்கங்கள் நனைந்து எடை தாங்காமல் மடிந்து தொங்குகின்றன. கதை சொல்லல் முறையிலாவது ஏதேனும் புது முயற்சி செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் நஹி !

எந்த பரீட்சார்த்தமான முயற்சியும் இல்லாமல் , பேதி போவது போல ஒரே சீராக கொட்டுகிறது. வட்டார வழக்கு என எளிய மக்கள் பயன்படுத்தும் ஓரிரு வார்த்தைப் பிரயோகங்கள். அவ்வளவுதான் செவ்வியல் சிறுகதை தயார். இந்த பஜனையையே இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் தமிழில் செய்துகொண்டிருக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனாலும் இதைப் போன்ற சிறுகதைகளுக்குத்தான் இங்கே மவுசு. அரைகுறை ஆர்வக் கோளாறுகள் முடல் ஜாம்பவான்கள் வரை இதையே பாராட்டுவார்கள். பாராட்டுவார்கள் என்றால் சும்மா இல்லை , நெக்குருகிப் பாராட்டுவார்கள். தன் கையைத்தானே கடித்துக்கொண்டு ரத்தம் ஊற்றுவார்கள். சாரு முன்பே சொன்னதுதான்.யதார்த்தவாத சிறுகதைகளில் பல லெஜண்டுகள் எப்போதோ எவரெஸ்ட் ஏறி கொடி நாட்டி விட்டார்கள். திரும்பத்திரும்ப அதே பாதையில் போய் கொடி ஏற்றினாலுமே ஒன்றும் இல்லை. ஆனால் அதே பாதையில் தவழ்ந்து போய் ரத்தமும் சதையும் தேய்ந்து சீழ் ஊற்றிக்கொண்டு இருந்தால் பார்க்கவே பரிதாபமாக இருக்காதா ?

புதுமைப்பித்தன் சிறுகதைகளில் இருந்த பாய்ச்சலும் மொழியின் மின்சாரமும் எப்பேர்பட்ட முன்னகர்வு ? இன்னும் அவர் காலகட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்குப்பின்னான காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். சிறுகதை வடிவத்தில் சாரு நிவேதிதா ரகளை செய்தே 25 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன் பக்கத்தில் கூட இன்னும் வரவில்லை என்றால் எப்படி ?தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தைப் பொறுத்தவரை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு வருடம் நகர்வார்கள் போலிருக்கிறது. அவசரப்படாதீர்கள், அதுவும் பின்னோக்கி என்பதுதான் நுட்பமாக கவனிக்க வேண்டியது 

உள்ளடக்கத்திலும் , கதை சொல்லல் முறையிலும் , நவீன வாழ்வின் உள்ளங்களையும் ,அவர்களின் பிரச்சனைகளையும் ஓரளவு நவீனமாகச் சொல்பவராக வளனைப் பார்க்கிறேன். அவரிடம் முக்கியமாக இந்த மூக்குச் சிந்தல் பிரச்சனை இல்லை. வடிவத்தில் இன்னும் வளன் இன்னும் பெரிதாக முயற்சிக்கவில்லை.ஆனாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களன் நிச்சயம் புதிதாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். கதையை முடிக்கும்போது ஒரு சின்ன தடுமாற்றம் வந்து விடுகிறது. ஃபினிஷிங்கில் வளன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

வளனிடம் இருக்கும் முக்கியமான பிரச்சனை, பிழைகள். சாரு என்னைத் திட்டுவார். வளன் எனக்கு கடும் சவால் விடுபவராக இந்த விஷயத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.வளனின் முயற்சி ஆரம்பகட்டத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அவர் மொழியிலும் ,கதை சொல்லும் முறையிலும் , கதை ஆக்கத்திலும் இன்னும் நன்கு தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கதையை முடிப்பதிலும். வளன் போன்று சில நூறு நவீன சிந்தனை உள்ள நவீன படைப்பாளிகள் தமிழ் சிறுகதைகளுக்குத் தேவை. ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மிடையே அதிகம் இருப்பவர்கள், ஸ்லோ மோஷனில் பின்னோக்கிப் போகின்றவர்கள் தான்.

குழந்தைக்கு சூத்து கழுவுவது ஒரு அன்பு பாசம் மற்றும் ஹைஜீனிக் சம்மந்தப்பட்டது. அதை விட வயதான பெரியவர்களுக்கு சூத்து கழுவி விடுவது பேரன்பு என்று சொல்லலாம்.அதற்காக தமிழ் சிறுகதைகளில் தொடர்ந்து சூத்து கழுவி விட்டுக்
விட்டுக்கொண்டே இருந்தால் எப்படி ?

-அராத்து

***

அராத்து எழுதிய மேற்கண்ட குறிப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் நானும் எழுதியதாகக் கொள்ளவும். ஒரே ஒரு வித்தியாசம், நான் எழுதியிருந்தால் இதில் உள்ள ஏழெட்டு ஒற்றுப் பிழைகள் இருந்திருக்காது. தலைப்பிலும் கூட ச் நான் தான் சேர்த்தேன். கீழே உள்ள டெக்ஸ்டிலும் ஒற்றுப் பிழை திருத்த எனக்கு நேரம் இல்லை. அதனால் தலைப்போடு நிறுத்திக் கொண்டேன்.

சாரு