ஒன்றரைக் கதவு

வாசிப்பது ஒரு தெரப்பி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.  அதேபோல் எழுதுவதுமே தெரப்பிதான் என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன்.  சுமார் இருபத்தைந்து நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல்.  மன உளைச்சல் என்றால் என்ன?  படுத்தால் தூக்கம் வராமல் எண்ணங்கள் புரட்டிப் போடுகிறதா?  அதுதான் மன உளைச்சல்.  இதோ பாருங்கள், நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டிய ஆள் மூணு மணிக்கே எழுந்து விட்டேன்.  இதுதான்.  ஆனால் இன்று இரவிலிருந்து நல்ல தூக்கம் வரும்.   இதை எழுதி விட்டேன் அல்லவா?  மற்றவர்களாக இருந்தால் எழுத மாட்டார்கள்.  ஏனென்றால், இதை எழுதுவதன் மூலம் எனக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் நட்டம் ஆகலாம்.  அது ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு பெரிய தொகை?  எனக்குப் பணத்தை விட தூக்கம்தான் முக்கியம். 

சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.  பூனைகளுக்கும், நாய்களுக்கும், காகங்களுக்கும் உணவு கொடுக்க மாதம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ஆகிறது.  நம்ப மாட்டீர்கள்.  கதை விடவில்லை.  நிஜம்தான்.  என்னென்ன, எப்படி எப்படி என்ற விவரம் வேண்டுமா?  சொன்னால் நம்புங்கள்.  விவரமெல்லாம் எழுதினால் சலிப்பூட்டும்.  ஒருநாள் கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “ங்கோத்தா டேய், நீயெல்லாம் என்னடா அப்பன் மயிரு?  இப்படிப் போட்டு உசிரை வாங்குறே?  மாசம் முப்பத்தைந்தாயிரத்தை நான் எப்பிர்ரா ஒத்தனா மேனேஜ் பண்றது” என்று சொல்லி அதற்கு மேல் பல கெட்ட வார்த்தைகளால் அவரை அர்ச்சனை செய்தேன்.  மறுநாள் வெளிநாட்டிலிருந்து ஒருவர் “சார், பூனை சாப்பாடு எவ்ளோ ஆகிறது?  நான் பணம் அனுப்புறேன்” என்றார்.  முப்பத்தைந்தாயிரம் என்று சொல்வது ரொம்ப அராஜகம் என்று தோன்றி, “பதினைந்தாயிரம்” என்றேன்.  சரி என்று சொல்லி அனுப்பினார்.  ஒரு ஆறு மாதமாக அனுப்பிக் கொண்டிருந்தார்.  ஆனால் வெஸ்டர்ன் யூனியன் மூலம்தான் அனுப்புவார்.

பணம் அனுப்புபவரிடம் போய் அப்படி அனுப்புங்கள், இப்படி அனுப்புங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நியாயம் அல்ல என்று தோன்றியதால் சொல்லவில்லை.  ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பதினைந்தாயிரத்தில் ஒரு பைசா கூட பூனைக்காக நிற்பதில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனென்றால், வெஸ்டர்ன் யூனியனில் கேஷாகத்தான் கொடுக்கிறார்கள்.  அதை வாங்கிக் கொண்டு வைத்தால் கர்ணனின் வாரிசான அவந்திகா அதைக் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து வாங்கி தர்மம் செய்து விடுகிறாள்.  வாட்ச்மேன் பெண்ணுக்குக் கல்யாணம் என்று அஞ்சாயிரம் போயிற்று.   அது ஒரு உதாரணம்.

பலவித தர்மங்கள் உள்ளன.  கோடையில் மாம்பழம் சாப்பிடுவது எனக்கு இஷ்டம்.  எனக்காகத்தான் கீழே போய் மாம்பழம் வாங்குவாள் அவந்திகா.  ஐநூறு ரூபாய் எடுத்துக் கொண்டு போனால் ஐநூறில் மிச்சம் கொண்டு வர மாட்டாள்.  இந்தப் பழம் ஐநூறா என்று கேட்டால், உள்ளே வா சொல்கிறேன் என்று சொல்லி ரகசியமான குரலில் சொன்னாள்.  “நான் வாங்குவதை எல்லோரும் பார்க்கிறார்கள் சாரு.  அதனால் அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்தேன்” என்றாள்.  இரண்டு வாட்ச்மேன், இரண்டு துப்புரவு செய்யும் பெண்கள், இன்னும் இது போன்ற தொழிலாளர் வர்க்கத்தினர்.  இதேபோல் காய்கறி, இன்ன பிற.  இப்படியாக பதினைந்தாயிரமும் தர்ம காரியங்களுக்குச் சென்று கொண்டிருந்தது. 

அதனால் மன உளைச்சல் அடைந்த நான் பணம் அனுப்பிக் கொண்டிருந்த நண்பருக்கு வங்கி மூலம் அனுப்ப முடியாதா என்று கேட்டேன்.  அவரும் ஒருநாள் அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு – அவர் அந்த நாட்டில் பெரிய அதிகாரியாக இருப்பவர் – வங்கி சென்று வங்கியிலிருந்து எனக்கு போன் பண்ணினார்.  என்னுடைய வங்கி ப்ளாக் செய்திருக்கிறதாம்.  அந்த வங்கி அதிகாரியே என்னோடு பேசினார்.  ஆங்கிலத்தில்தான் பேசினார்.  ஆனால் எனக்கு விவரம் புரியவில்லை.  அவரிடம் விவாதம் செய்து கொண்டிருக்க எனக்கு இஷ்டம் இல்லை. ஏனென்றால், என் வங்கியில் அப்படியெல்லாம் எந்த ப்ளாக்கும் செய்யவில்லை. மேலும், அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவும் இல்லை. எல்லாம் வங்கி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள். ஆனால் ஒன்று மட்டும் மிக நிச்சயம். என் வங்கியில் ஒரு ப்ளாக்கும் செய்யவில்லை. என் நண்பரிடம் சொன்னேன். அவரோ அவர் நாட்டு வங்கி அதிகாரியையே நம்பினார். சரி எதற்குப் பிரச்சினை என்று நீங்கள் வெஸ்டர்ன் யூனியனிலேயே அனுப்புங்க சார் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனாலும் பதினைந்தாயிரமும் தர்மத்துக்குப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் முத்துசாமியிடம் பேசினேன்.  ”நீங்கள்தான் லாக்டவுனிலும் அலைபவர்.  உங்கள் பெயருக்கு அனுப்பச் சொல்கிறேன்.  நீங்கள் வாங்கி எனக்கு ஜீபேயில் மாற்றி விடுகிறீர்களா?” 

“ஏன் இத்தனை கஷ்டம்?  அவரை பேபாலில் அனுப்பச் சொல்லுங்கள், ரொம்ப சுலபம்” என்று முத்துசாமி எனக்கு வழிகளை விளக்கினார். 

“வேண்டாம் முத்துசாமி.  வேலைக்கு ஆகாது.  ஏற்கனவே அவர் வங்கிக்குப் போய் அலைந்திருக்கிறார்.  ஆகவில்லை.  பணம் அனுப்புபவரை அதற்கு மேல் டார்ச்சர் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை.  உங்களால் வெஸ்டர்ன் யூனியனில் வாங்கி எனக்கு…”

முடிப்பதற்குள்ளேயே குறுக்கிட்டார் முத்துசாமி.  “சே, இது சப்பை மேட்டர் சாரு, அனுப்பச் சொல்லுங்கள்.”

இரண்டு மாதம் ஒழுங்காகப் போயிற்று.  மூன்றாவது மாதம் – மே – முத்துசாமியால் வெஸ்டர்ன் யூனியன் போக முடியவில்லை.  அவர் ஏரியாவில் வெஸ்டர்ன் யூனியனில் ஏதோ பிரச்சினை.  முத்தூட் மூலம் வாங்கி அனுப்பலாம்.  முத்துசாமிக்கு நேரம் இல்லை.  அவருக்கு மே மாதம் செம அலைச்சல்.  குடும்ப வேலைகள்.  வெளிநாட்டு நண்பர் எனக்கு அவ்வப்போது போன் பண்ணி விசாரிப்பார்.  பணம் கிடைத்து விட்டது என்று பொய் சொல்ல எனக்கு மனம் வராது.  கிடைக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும் என்றால் அது எவ்வளவு அவமானம்?  இப்போது அவருக்கு மன உளைச்சல் பிடித்துக் கொண்டது.  சாருவுக்கு ஏன் பணம் இன்னும் கிடைக்கவில்லை?  பின்னர் தினமும் போன் பண்ண ஆரம்பித்தார்.  காலையில் ஆறரைக்கு.  இரவெல்லாம் அவருக்கு இதனால் உறக்கம் வந்திருக்காது என்று தோன்றியது.  பிறகு எனக்குமே அந்த வியாதி தொற்றிக் கொண்டது.  எனக்கும் உறக்கம் வரவில்லை.  பணம் இல்லை பிரச்சினை.  அவருக்கு ஏன் மனக்கஷ்டம் கொடுத்து விட்டோம் என்ற கவலையும், இப்படியெல்லாம் அபத்தமான பிரச்சினைகளெல்லாம் இரண்டு பேருக்கு ஏன் வர வேண்டும் என்ற கவலையும்.

ஒரு கட்டத்தில் முத்துசாமிக்கும் ரொம்பப் பிரச்சினையாகப் போய் விட்டது.  இதோ பாருங்கள் சாரு, என்னிடம் ஒரு வேலையைக் கொடுத்து விட்டால் அதை நீங்கள் மறந்து விட வேண்டும்.  அந்த அளவுக்கு நான் அதைச் செய்து முடித்தே தீருவேன் என்பது நம்பிக்கை.  45 நாட்கள் இருக்கின்றன பணம் எடுப்பதற்கு.  பணம் எங்கேயும் போய் விடாது.

ஆனால் அதெல்லாம் எனக்குப் பணம் அனுப்புபவருக்குப் புரியாதே?  மேலும், 45 நாட்களுக்குப் பணத் தேவை இல்லாதவருக்கு ஏன் பணம் அனுப்ப வேண்டும் என்ற ரீதியில் யோசித்தால்?

சரி முத்துசாமி.  இந்த முறை வாங்கி அனுப்பி விடுங்கள், அடுத்த முறையிலிருந்து கந்தசாமியிடம் சொல்லி விடுகிறேன் என்றேன்.

ஐயோ, அவர் ரொம்ப நல்லவர்.  பிறகு இந்த விஷயத்தினால் உங்களுக்கு அவருக்கும் மனஸ்தாபம் ஆகி விடப் போகிறது என்றார் முத்துசாமி. 

இதில் என்ன மனஸ்தாபம் ஆவதற்கு?  அவரும் அலைந்து கொண்டிருப்பவர்தானே?

அது இல்லை சாரு.  அவரை போனில் தொடர்பு கொள்வது கஷ்டம் இல்லையா?  என்ன நடக்கும் தெரியுமா?  அவரே உங்களுக்குப் பதினைந்தாயிரத்தை அனுப்பி விட்டு பிறகு எப்போதாவது வெஸ்டர்ன் யூனியனில் எடுப்பார்.  அப்படித்தான் நடக்கும்.  நானே எடுத்துத் தருகிறேன் என்றார். 

இல்லை முத்துசாமி, கந்தசாமியிடமே சொல்லி விடுகிறேன் என்றேன்.

பொதுவாக முத்துசாமி எடுத்த வேலையை சீரும் சிறப்புமாகச் செய்து முடிப்பதில் வல்லவரெனப் பெயர் எடுத்தவர். இந்த விஷயம் சொதப்பி விட்டதற்குக் காரணம் நான்தான். ஒரு நாடோடியைப் போல் அலைந்து கொண்டிருப்பவரிடம் இப்படிப்பட்ட உதவியைக் கேட்டிருக்கக் கூடாது. என்னுடைய விசேஷம் என்னவென்றால், இன்ன இன்ன உதவிக்கு இன்ன இன்ன நண்பர் என்று வைத்திருக்கிறேன். இதுதான் எப்படியோ தப்பி விட்டது.

பிறகு ஒருநாள் கந்தசாமியை அழைத்து, இன்ன மாதிரி விஷயம் என்று விளக்கினேன்.  இதெல்லாம் சப்பை மேட்டர் சாரு, செய்து விடலாம் என்றார்.

பிறகு அவரிடம் அவர் தந்தை பெயர், ஆதார் நம்பர் ஆகிய விவரங்களைக் கேட்டு வாட்ஸப் செய்தேன்.  36 மணி நேரம் அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை, செய்தியையும் அவர் படித்ததற்கான ப்ளூ அடையாளம் வரவில்லை.  அதனால் மூன்றாம் நாள் காலையில் அவரை போனில் அழைத்தேன்.  எடுக்கவில்லை.  ஏதாவது ஃபீல்ட் வேலையில் இருப்பார். மதியம் அழைத்தார்.  விவரம் சொன்னேன்.  “இங்கே சிக்னல் இல்லை சாரு, இதோ அனுப்புகிறேன்” என்றார்.  அனுப்பினார்.  அடுத்த மாதத்திலிருந்து கந்தசாமியின் பெயரைக் கொடுத்து விட வேண்டியதுதான். 

ஆனால் அடுத்த மாதம் வந்து இதோ பன்னிரண்டு தேதி ஆகி விட்டது.  வெளிநாட்டு நண்பரிடமிருந்து பணம் வரவில்லை.  போனும் வரவில்லை.  முத்துசாமியும் இப்போது குடும்பத்தோடு மாஹே போயிருக்கிறார்.  ஏற்கனவே அவர் சிக்கல் சென்றிருந்த போது அங்கே உள்ள முத்தூட் அலுவலகம் போய் விசாரித்திருக்கிறார்.  அவ்வளவு சின்ன ஊரில் முத்தூட்டில் அந்த வசதி இல்லை, நாகப்பட்டினத்தில் உள்ளது என்றார்களாம்.  தகவல் பரிமாற்றத்தில் முத்துசாமி பக்கா. 

மாஹேவுக்குக் குடும்பத்தோடு சென்றிருப்பவரிடம் இது பற்றிப் பேச எனக்கு மனம் ஒப்பவில்லை.  நாளை சென்னை வருகிறார்.  அவரை நேரில் சந்தித்து அவரையும் அழைத்துக் கொண்டு போய் வெஸ்டர்ன் யூனியனில் காரியத்தை முடிக்க வேண்டும்.  நேரில் சந்திக்க வீட்டில் அனுமதி வாங்க வேண்டும்.  ஒன்றரை ஆண்டாக வெளியிலேயே போகவில்லை.  என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  வாங்கின பிறகுதான் வெளிநாட்டு நண்பருக்கு வாங்கி விட்டேன் என்று சொல்ல வேண்டும்.  தொடர்ந்து அனுப்புவாரா என்று தெரியவில்லை.  அனுப்பாவிட்டால் ஒரு நல்லது நடக்கும்.  எனக்கு இதுவரை ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவு திறக்காவிட்டாலும் ஒன்றரை கதவாவது திறந்து விடுகிறது.  அந்த நம்பிக்கைக் குறிப்போடு இந்தக் கதையை இந்த அதிகாலை வேளையில் முடிக்கிறேன்.  Have a good day folks!  

4.10 a.m.

***

ஒன்றரைக் கதவுக்கான வங்கி விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai