நான்தான் ஔரங்கசீப்…லஃபீஸ் ஷஹீதின் குறிப்பு

பின்வரும் பதிவு முகநூலில் என் நண்பர் லஃபீஸ் ஷஹீத் எழுதியிருப்பது. நான்தான் ஔரங்கசீப்… இந்த மாதம் முப்பதாம் தேதியிலிருந்து bynge.in இல் தொடர்ந்து வெளிவரும். அதற்கு ஒரு தொடக்க அறிமுகமாக லஃபீஸ் ஷஹீதின் இந்தக் குறிப்பு பயன்படலாம்.

சூபி ஞானி ஷர்மத் ஷஹீத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முகலாயர் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் திகம்பரமாக திரிந்தவர். இவர் அவுரங்ஸீப் ஆலம்கீர் மற்றும் தாராஷிகோ இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் தாராஷிகோ பக்கம் இருந்ததால் அவுரங்ஸீப் இனால் தூக்கில் ஏற்றப்பட்டார். இவர் பற்றி ஆங்காங்கே சிதறலாக மெளலானா ஸெய்யித் அபுல்ஹஸன் அலி நத்வியின் Savivors of Islamic Sprit, ஸ்டேன்லி லேன் பூல் எழுதிய அவுரங்ஸீப் மற்றும் குஷ்வந்த் சிங் சிறுகதையான Aurangasib Alamkeer – The Emperor of Hindustan போன்றவற்றில் வாசித்து இருக்கிறேன். ஆனாலும் முழுமையான ஒரு ஆக்கத்தை ஷர்மத் ஷஹீத் பற்றி வாசிக்க கிடைக்கவில்லை. இது குறித்து அறிந்தவர்கள் உதவினால் நலம். குறிப்பு – இந்தியாவை முஸ்லிம்கள் எண்ணூறு வருடங்கள் ஆண்டார்கள் என்பது போன்ற ஒற்றை வாக்கியங்கள் மூலம் நாம் வரலாற்றை கடந்து செல்ல முடியாது. பல் பண்பாடுகளின் ஊடாட்ட வெளியான முஸ்லிம் இந்திய அரச வரலாறு அதன் உள்ளுறையாக அதீதமான வன்முறையையும் அதிகாரப் போட்டியையும் கொண்டிருக்கிறது. இது முஸ்லிம் இந்தியாவின் Palimpsest வரலாறு. இந்த அரண்மனைகளின் அந்தப் புரங்கள் என்பவை இன்னும் கொடுமையானவை. இந்தியாவை ஆண்ட ஆப்கானிய, துருக்கிய, முகலாய மன்னர்கள் கட்டற்ற இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டதும் இல்லாமல் தம்முடைய சொந்த சகோதரிகளை கூட திருமணம் முடிக்க விடாமல் தடுத்து வைத்திருந்தனர். ஏனெனில் தமது சகோதரிகளை மணப்பவர்கள் தமது அரண்மனை மயிலாசனத்தை கவர்ந்து கொள்வார்கள் என்ற பயத்தின் காரணமாக. காதலின் சின்னமான தாஜ் மஹாலை எடுத்துக் கொள்ளுங்கள். மும்தாஜ் தனது முப்பது சொச்சம் வயதுகளில் இறக்கும் பொழுது அவளுக்கு பதினைந்து பிள்ளைகள். மும்தாஜின் உடல் இதனை தாங்கி இருக்குமா? ஷாஜகானிடம் இருந்தது குறைந்த பட்ச காதல் கூட அல்ல அது காமம். காமம் இல்லாத காதல் இல்லை தான். ஆனால் தனது துணையின் நலனை கவனத்தில் கொள்ளாத உடல் வேட்கையை என்னவென்று நாம் அழைப்பது? தாஜ்மஹால் காதலின் சின்னமல்ல. ஷாஜகான் எனப்படும் இன்பம் துய்க்கும் இயந்திரத்தின் கொடூரத்தை உலகுக்கு பறைசாற்றும் சின்னம். இது குறித்து மனோஜ் “மஹல்” என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதி இருக்கிறார். புனைவின் நிழல் என்ற தொகுப்பில் அதனை வாசிக்கலாம்.

அவுரங்ஸீப் ஆலம்கீர் குறித்தும் நாம் இதே போன்ற மாற்றுப் பார்வைகளை முன் வைக்கலாம். இந்தியாவில் இஸ்லாத்தை பரப்பியது, அவரது ஒப்பற்ற எளிமை என்பன போற்றத் தக்கன. ஆனால் நவீனத்துவம் உருவாகி வந்த சந்தர்ப்பத்தில் அதன் தர்க்கத்தை அவுரங்ஸீப் ஆலம்கீர் புரிந்து கொள்ளவில்லை. வெறுமனே ஆயுத ரீதியாக அதனை வெற்றி கொள்ள முடியும் என்று நினைத்தார். ஆனால் நவீனத்துவம் பேரலையாக எழுந்து இந்தியாவையே காலனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்தது. விளைவாக அவுரங்ஸீப் ஆலம்கீருக்கு பிறகு முஸ்லிம் இந்தியா சிதறுண்டது. அவுரங்ஸீப்பின் எளிமைக்கு உதாரணமாக அவர் கையினால் குர்ஆனை எழுதி அதன் மூலம் ஜீவிதத்தை கொண்டு சென்றதை கூறுகிறார்கள். நல்லது, ஆனால் அவுரங்ஸீப் ஆலம்கீரின் காலப்பகுதியில் அச்சு இயந்திரம் மூலம் பைபிளும், ஏனைய நவீனத்துவ அரசியல், கலாச்சார பிரதிகளும் அச்சில் கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலம். இந்த நிலையில் அவுரங்ஸீப் கையினால் குர்ஆனை எழுதிக் கொண்டிருந்தது அவரது எளிமையான ஆளுமையை காட்டலாம். ஆனால் அதனால் முஸ்லிம்களுக்கு என்ன பிரயோசனம் இருந்திருக்க முடியும்? காலனியத்தின் ஊடாக உருப் பெற்று வந்த கீழைத்தைய இயக்கமே இஸ்லாமிய சிந்தனை பனுவல்களை நூலகங்களில் இருந்து தேடி எடுத்து பதிப்பில் கொண்டு வந்தது என்பது தான் வரலாறு. ஒரியண்டலிச அறிவியக்கத்துடன் அவுரங்ஸீப்பின் செயல்பாடுகளை நாம் ஒப்பு நோக்க வேண்டும். திப்பு சுல்தான் போன்ற காலனி எதிர்ப்பாளர்களான சிறந்த ஆட்சியாளர்களை கூட விமர்சன ரீதியாக அணுகுவது பற்றி பேசியுள்ளார், இமாம் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்). வரலாற்றை நாம் இன்னும் ஆழ்ந்துணர்ந்து கற்க வேண்டும்.