அந்தக் காலத்து சினிமாவைப் பார்த்தால் தெரியும், அதில் வரும் அத்தனை கதாபாத்திரமும் பிராமண பாஷைதான் பேசும். மீன்காரர் கூட பிராமண பாஷைதான். இப்போது பார்த்தால் சிரிப்பாக இருக்கும். அப்படித்தான் இப்போதைய பல ஜாங்கிரி கதைகளில் வரும் எல்லா பாத்திரங்களும் ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி, புத்தர் மாதிரி பேசுகிறார்கள். சினிமா தியேட்டரில் ப்ளாக் டிக்கட் விற்பவன் கூட ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி பேசினால் எப்படி இருக்கும்? இதெல்லாம்தான் நவீன சிறுகதைகள்! ஒரு தப்பு இல்லை. எல்லாம் கனகச்சிதமாக உள்ளது. ஆனால் கடற்கரையில் சுண்டல் விற்கும் பொடியன் ஓஷோ மாதிரி பேசுகிறான்.
இப்படிப்பட்ட பொற்காலத்தில் இன்று காலை ஒரு சிறுகதை படித்தேன். அறை எண் 30. இரண்டு நாட்களுக்கு முன்பு என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் “நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் சாரு, அனுப்பி வைக்கட்டுமா?” என்று கேட்டார். இது என்னடா இது கலி இந்த அளவு முத்திப் போச்சு என்று நினைத்துக் கொண்டு அனுப்பி வையுங்கள் என்றேன். அனுப்பினார். அந்த நிமிடத்தோடு அதை மறந்தும் போனேன். இன்று காலை நினைவூட்டினார்.
உடனே படித்தேன். நன்றாக இருக்காது. ஆனால் அதற்காகத் திட்டக் கூடாது. குழந்தைகள் பொம்மை செய்து காண்பித்தால் அதைத் திட்டுபவன் மூடன் என்றெல்லாம் நினைத்தபடி படிக்க ஆரம்பித்தேன். ஆ, என்ன இது அதிர்ச்சி! ஒரு முதிர்ந்த எழுத்தாளன் எழுதியது போல் இருந்தது. படித்து முடித்த பிறகு தோன்றிய கருத்து: கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. என்னால் வாழ்நாளில் மறக்கவே இயலாத ஒரு கதை. அசத்தி விட்டார். ஒரு இலக்கணப் பிழை இல்லை. கடைசியில் இருந்த ஒரே ஒரு வார்த்தையை மட்டும் எடுத்து அதற்கு முந்தின வாக்கியத்தில் போடுங்கள் என்றேன். அவ்வளவுதான். நேசமித்ரன் வெளியிடும் வலசை இதழில் வருவதாக அறிந்தேன். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டியதுதான்.
இதுபோல் ஸ்ரீராம் இன்னும் ஐம்பது கதைகள் எழுதலாம். அந்த அளவுக்கு அவரிடம் கதைகள் உள்ளன. என் பள்ளியிலிருந்து இன்னொரு கை. ஸ்ரீராமுக்கு என் வாழ்த்துகளும் ஆசீர்வாதமும்…