வணக்கம் சாரு,
நான் பெங்களூரில் இருந்து இலட்சுமி நரசிம்மன் எழுதுகிறேன். நான் உங்களுடைய ஒரு இளம் வாசகன். எனக்கு ஒரு ஐயம். எனக்கு நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைத் தொகுப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. எத்தகைய கவிதைத் தொகுப்பு என்றால், நான் மனதளவில் சோர்ந்து போய், இருக்கும்போது எனக்கு நம்பிக்கை அளித்து, உற்சாகம் ஊட்டி, இன்னும் வீரியமாக என் பணிகளைத் தொடர வைக்க வேண்டும் மற்றும் என் தனிமைக்கு மருந்து அளிக்கும் வண்ணம் அக்கவிதைகள் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு கவிதைத் தொகுப்பினைச் சொல்கிறீர்களா? அது பழகு தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
நான் கூகிலில் தேடினேன். ஆனால், எனக்கு எந்த கவிதைத் தொகுப்பு நூல் படிக்க வேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை. உங்கள் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலினை இப்போதுதான் zero degree பதிப்பகத்தில் இருந்து ஆர்டர் செய்தேன். உங்களைப் போன்ற ரசனையுள்ள மூத்த எழுத்தாளர் ஒரு நூலைப் பரிந்துரைத்தால், அது இன்னும் நம்பத் தகுந்ததாகவும், இலக்கியத்தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என நம்புகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
இலட்சுமி நரசிம்மன். து.
25 ஜூலை 2021.
அன்புள்ள லட்சுமி நரசிம்மன்,
பொதுவாக இப்படிப்பட்ட கடிதங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிக் கேள்வி கேட்டு பதில் சொல்வதில் நியாயம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது எல்லாமே கூகிளில் கிடைக்கிறது. ”சரி, அதில் எது எனக்கு உகந்தது என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை” என்று சொல்வதாக இருந்தால் அதற்குமே நீங்கள் எதையெதையெல்லாம் தேடினீர்கள் என்று ஒரு பட்டியல் கொடுக்க வேண்டும். செல்லமாகத் தன் குழந்தையை வளர்க்கும் தாய்மார்களைப் பார்க்கும்போது நான் நினைப்பதுண்டு, போகிற போக்கைப் பார்த்தால் இந்தத் தாய்மார்கள் தம் மகன்களுக்குக் காண்டம் கூட வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள் போலிருக்கிறதே என்று. இப்படி ’ஊட்டி வளர்க்கப்படும்’ குழந்தைகளின் பிற்காலம் மகிழ்ச்சிகரமாக இருப்பதில்லை என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி உங்கள் கடிதத்துக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. நேரம் இல்லை. கிடைக்கின்ற பொழுதெல்லாம் ஔரங்கசீப்பில் போய் விடுகிறது. ஆனால் என்ன பதில் எழுத வேண்டும் என்று மனதில் யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்தன. குறிப்பாக நான் எழுத விரும்பியது, ஒரே வார்த்தையில் கூட எழுதி விடலாம், உங்கள் கேள்விக்கு மிகப் பொருத்தமான பதில், காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்பு. இதைத்தான் மூன்று தினங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் நேற்று ஞானக்கூத்தன் நினைவு நாள். என்ன ஒரு சந்தர்ப்பவசம் என்று தோன்றியது.
ஞானக்கூத்தனை நவீன இலக்கியவாதிகள் அறிவார்கள் என்றாலும் அவருடைய ஒரு கவிதையைக் கூடப் படிக்காமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது. வாசகர்களைச் சொல்லவில்லை. எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இன்று ’கவிப் பேரரசு’ இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் ஞானக்கூத்தன். பாரதிக்குப் பிறகு நவீன தமிழ்க் கவிதையின் அடையாளமாகக் கருதப்பட வேண்டியவர்கள் தர்மு சிவராமுவும் ஞானக்கூத்தனும். சிவராமுவாவது கவியின் கவி. ஆனால் ஞானக்கூத்தன் தமிழனின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை எழுதியவர். இருந்தும் அவர் ஒரு பிராமணர் என்பதாலும், திராவிட இயக்கத்தையும், திராவிடக் கட்சிகளையும் பகடி செய்தவர் என்பதாலும் தமிழ் இனத்தால் உதாசீனப்படுத்தப்பட்டவர். கலைஞர்களை உதாசீனப்படுத்தும் சமூகம் ஒருபோதும் உருப்பட்டதில்லை. அதுதான் தமிழ்ச் சமூகத்துக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
ஞானக்கூத்தன் என் ஆசான்களில் ஒருவர். அசோகமித்திரனைப் போல் அல்லாது என்னை ஆரம்பத்திலிருந்து ஊக்குவித்தவர். நான் முனியாண்டி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த போது கூட முனியாண்டி யார் என்று தெரியாமலேயே முனியாண்டியின் கதைகள் புதுவிதமான கதைகூறல், கவனிக்க வேண்டிய குரல் என்று பேசினார். பெரும்பாலான மற்ற எழுத்தாளர்களைப் போல் இல்லாமல் பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்கவர். மரபுக் கவிதை இலக்கணம் தெரிந்தவர். சம்ஸ்கிருத அறிஞர். அவர் கவிதைகள் வாய் விட்டுப் படிக்கத் தகுந்தவை. அவர் கவிதைகளின் லயம் யாரையும் எளிதில் வசீகரிக்கக் கூடியது. ஞானக்கூத்தனின் புதல்வரும் ஒரு எழுத்தாளர்தான்.
ஞானக்கூத்தனை முதலில் படித்து முடியுங்கள். பிறகு ஒவ்வொரு கவிஞராக அறிமுகம் செய்கிறேன்.
மிக முக்கியமான ஞானக்கூத்தன் கவிதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:
காலவழுவமைதி
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
“தலைவரார்களேங்…
தொண்ணூறாம் வாட்டத்தில்
பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள்
வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச
இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…
அம்மாவின் பொய்கள்
பெண்ணுடன் சினேகம்
கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால்
சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும்
கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள்
முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள்
முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு
செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல்
போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை
விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
யோசனை
உனக்கென்ன தோன்றுது
கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்
கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா
எனக்கென்ன தோன்றுது
வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு
***
பரிசில் வாழ்க்கை
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்
பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்
ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.
அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…
காணிக்கை கொண்டு வாருங்கடி… கு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி…
சென்மம் எடுத்தது தீருதடி… இந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி
***
நாயகம்
மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
***
இரட்டை நிஜங்கள்
குலத்துக்கு தெய்வம் வேறாய்க்
கொள்கிற தமிழர் தங்கள்
வழி காட்டித் தலைவரென்று
பற்பல பேரைச் சொன்னார்
என்றாலும் மனசுக்குள்ளே
இன்னொருவர் இருப்பாரென்று
ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும்
தலைவர்கள் யார் யாரென்று
இருந்தவர் இரண்டு பேர்கள்
அவர்களின் அடையாளங்கள்
நடப்பவர் பார்க்க மாட்டார்
பார்ப்பவர் நடக்க மாட்டார்
***
யோஜனை
அம்மிக்கல் குழவிக்கல்
செதுக்கித் தள்ளும்
ஒரு சிற்பக் கூடத்தில்
மைல்கல் ஒன்று
வான் பார்த்துக் காட்டிற்று
நாற்பதென்று.
***
தணல்
தெரியுமா மாமி இந்தப்
பிராமணன் கதையை? வெட்கக்
கேடுதான் சொன்னால் போங்கள்
இத்தனை வருஷமாக
இருக்கலை அநியாயங்கள்
மனசொரு சமயம் வேகும்.
அமைதியாய் இருந்தேன் தானே
ஒருவழி வருவாரென்று
ராகுவின் பார்வை பட்டால்
பீஷ்மனும் தாசி கேட்பான்.
ஜாதகம் பார்த்தேன் நாலு
மந்திரம் செய்தேன் ஆனால்
யாதொரு பலனும் இல்லை.
தலைக்குமேல் போவதற்குள்
தடுக்கலை யென்றால் மானம்
என்னதும் சேர்ந்து போகும்.
காதிலே விழுந்ததெல்லாம்
புரளியாம். எனக்கு மட்டும்
நிஜமெனத் தெரியும் மாமி.
‘நேற்றுநான் உங்களோடு
நின்றதை வைதார் மாமி
ஊர்க்கதை பேசினேனாம்’.
‘நாலைந்து மாசமாச்சு
வெளியிலே தலையைக்காட்டி’
நரைதிரை வயதிற்பிள்ளை
யாள்வது அவமானம்தான்.
என்னவோ மாமி தெய்வம்
நினைப்பதே நடக்குமென்றும்.’
***
கீழ்வெண்மணி
மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின
புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்
இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க
***
நாய்
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
***
விட்டுப் போன நரி
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
மேற்படிக்
குரலைக் கேட்டார்
மாதொரு
பாகர். குற்றம்
ஏற்பட
வியந்தார். தேவி
ஏளனம்
செய்தாள் சற்று
“வாதவூரடிகட்காக
நரிகளைத் தேர்ந்த போது
நீதியோ என்னை மட்டும்
விலக்கிய செய்கை சாமீ!”
திருவருட்
திட்டம் பொய்த்த
தற்கொரு
ஊளைச் சான்றாம்
நரி எதிர்
உதித்துக் கீற்று
நிலாத் திகழ்
ஈசர் சொன்னார்:
நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா
***
மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
***
தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்
ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்
***
உயர்திரு பாரதியார்
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்
சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்
மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு
அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு
***
வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு
‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்
மன்னார்சாமி
ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்
ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்
ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்
குறைவில்லை
இது கபாலம்
மார்புக்கூடு…
போணிசெய்த பெருங்கைகள்…
கைகால் மூட்டு
பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்…
சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்
புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’
மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க
ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி
அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு
***
சைக்கிள் கமலம்
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்
***
விடுமுறை தரும் பூதம்
ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்
உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உறை அனுப்பும்
‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்
இந்தப் பேச்சை அது கேட்டால்
***
தமிழ்
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்
***
மேசை நடராசர்
மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல. கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கறுத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி; மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்
ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்.
எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.
***
அன்று வேறு கிழமை
நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று
பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அதுநகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அதுவிலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுங்கி
நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர்மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்
பவழமல்லி
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்
பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி
கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?
***
நம்பிக்கை
பசித்த வயிறுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல்.ஒன்று அரசு
ஒன்று வேம்பு
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது