இன்று இரவு ஒன்பது மணிக்கு bynge.in செயலியில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்கசீப்… நாவல் எனக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இதேபோல் நான் ஒரு பத்திரிகைக்காக எழுதிய நாவல் ராஸ லீலா. அது பற்றித் தமிழ் வாசகர்கள் யாருக்கும் தெரியாது. காரணம், ஒரு காகிதத்தில் தமிழில் எழுதி அதை நெட் செண்டரில் கொண்டு போய்க் கொடுத்து தட்டச்சு செய்து, தட்டச்சு செய்யும் பெண்ணோடு அமர்ந்து பிழை திருத்தம் செய்து – என் எழுத்துக்கு அது எத்தனை பெரிய வேதனை என்பதை யூகித்துக் கொள்ளுங்கள் – மலையாள மொழிபெயர்ப்பாளர் ட்டி.டி. ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைப்பேன். அவர் அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து கலா கௌமுதிக்கு அனுப்புவார். அப்படி இரண்டு ஆண்டுகள் வந்த நாவல் ராஸ லீலா. அந்த இரண்டு ஆண்டுகளும் தமிழ் வாசகர்களுக்கு ராஸ லீலா தெரியாது. அதற்குப் பிறகு – கிட்டத்தட்ட பதினாறு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிகையில் எழுதுவது போன்ற சூழலில் – ஒரு புதிய நாவலை ஒரு புதிய செயலியில் வாரம் இரண்டு முறையாக எழுதுகிறேன். ராஸ லீலா ஒரு ஆட்டோஃபிக்ஷன். தெரிந்த கதை. எனக்கு. ஔரங்கசீப் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை. விவரப் பிழைக்குப் பேர் போன நான் இந்தச் சரித்திர நாவலில் ஒரு விவரப் பிழை கூட விடக் கூடாது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு’ எழுதி வருகிறேன். இதையும் மீறிப் பிழை இருந்தால் அது ஒன்று, மூல நூலிலேயே இருக்கும் பிழை. அல்லது, அர்த்தப்படுத்திக் கொள்வதில் ஏற்படும் வித்தியாசமாக இருக்கும். அதாவது, நீங்கள் ஒரு விஷயத்தை அணுகுவதற்கும் நான் அதை அணுகுவதற்குமான வேறுபாடு. உதாரணமாக, ஒருவர் ஔரங்கசீப்பை இந்து விரோதி எனக் கருதலாம். இல்லை என்பது என் முடிவாக இருக்கலாம். இது போன்ற வித்தியாசம். அல்லது, ஔரங்கசீப் தன் கடைசித் தம்பியைக் கொன்றார் என்று நான் எழுதுவேன். ஒரு சரித்திர மாணவன் “இல்லை, சாரு எழுதுவது தவறு. அந்தத் தம்பி பர்மாவிலிருந்து ஹிந்துஸ்தான் வரும் வழியில் மணிப்பூரில் இறந்தார் என்பதே சரித்திரம்” என்று நான் எழுதியதை மறுக்கலாம். ஆனால், பர்மாவுக்கு விரட்டியதே ஔரங்கசீப்தானே என்பது என் கருத்து. அதனால் அந்த மரணம் கொலைதான் என்பது என் முடிவாக இருக்கும். இன்னொரு முக்கிய விஷயம், இது புனைவு. சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் புனைவு. நான் எழுதுவது கதை. ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல. எவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதும் என்னுடைய வேலை அல்ல.
அக்பரின் நாட்குறிப்புகள் என்று ஒரு நாவல் உள்ளது. அக்பருக்கு எழுதப் படிக்கவே தெரியாது. அப்புறம் எப்படி நாட்குறிப்பு எழுத முடியும்? நாவலில் எழுதலாம். அந்த நாவலில் அக்பர் தற்கொலை செய்து கொண்டு விடுகிறார். நிஜத்தில் இல்லை. எனவே என் நாவலிலும் நீங்கள் காண்பது நான் கண்ட ஔரங்கசீப்பை. சரித்திரத்தில் இருந்த ஔரங்கசீப்பை அல்ல. ஆனால் ஔரங்கசீப்பின் கூடவே இருந்த இரண்டு பேர் எழுதியுள்ள ஔரங்கசீப் சரித்திரத்தில் இரண்டு வெவ்வேறு ஔரங்கசீப்புகள் தெரிகின்றனர். இதற்கு என்ன செய்வது? சொல்லப் போனால், நான்கு பேர். இரண்டு பேர் ஃபிரங்கிகள். (ஃபிரங்கிகளின் அர்த்தம் நாவலில் வரும்). இருவர் ஹிந்துஸ்தானிகள். இந்த நான்கு பேரின் சரித்திரத்திலும் தெரிவது நான்கு ஔரங்கசீப்புகள். அதற்குப் பிறகும் ஒரு சில ஔரங்கசீப்புகள் வந்துள்ளனர். தமிழில் நாடகமாக இந்திரா பார்த்தசாரதியும் ஒரு ஔரங்கசீப்பை விட்டார். இப்போது வர இருப்பது என்னுடைய ஔரங்கசீப். ஒரு நாவலாக இது எப்படி வந்துள்ளது என்று சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்.
நாவல் படு சுவாரசியமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லுவேன்.
bynge.in செயலி குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ள நவீன் வல்ஸகுமாருக்கு என் நன்றி. அவரால்தான் ஔரங்கசீப்பை இத்தனை விரைவில் எழுத முடிந்தது. இல்லாவிட்டால் என் வழக்கப்படி வருஷக்கணக்கில் இழுத்துக் கொண்டு போயிருக்கும். நன்றி நவீன்…
இன்று (29 ஜூலை 2021) இரவு 9 மணிக்கு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் அத்தியாயம் bynge.in செயலியில் வெளியாகிறது. நாளை காலை ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. அதை அடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வெளிவரும்.