நாவல் bynge.in செயலியில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளிவந்தது. அடுத்த அத்தியாயம் இன்று காலை ஏழு மணிக்கு வரும். முதல் அத்தியாயம் வந்ததும் இரண்டாவது வருவதற்குள்
எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளப் பெரும் ஆவலாக இருந்தேன். நள்ளிரவுக்குள் – அதாவது வெளிவந்து ஐந்து மணி நேரத்தில்
884 பேர் வாசித்திருக்கிறார்கள். இப்போது மணி
காலை ஆறு ஆகிறது. அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத்
தொட்டிருக்கிறது. இது சந்தோஷத்துக்குரியதா
வருத்தத்துக்குரியதா என்று தெரியவில்லை. மூவாயிரம்
பேர் படிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் ஆயிரமே
பெரிய விஷயம்தான் என்றும் தோன்றுகிறது.
முதல் அத்தியாயத்தில் வரும் 79 என்ற எண்ணை 89 என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும். ஔரங்கசீப் 89 ஆண்டுகள் வாழ்ந்தவர். வாஷிங்டனில் வசிக்கும் நண்பர் வினோத் “’ஔரங்செப்’ என்று சொல்வதுதானே சரியான உச்சரிப்பு? நீங்கள் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆயிற்றே?” என்று கேட்டிருக்கிறார். மெஹிகோ என்றுதான் எழுத வேண்டும். யாருக்கும் புரியாது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவரை வழங்கி வந்த ஔரங்கசீப் என்றே எழுதலாம் என்று முடிவெடுத்தேன். ஔரங்செப் என்பதுதான் சரியான உச்சரிப்பு. நாவல் புத்தகமாக வரும்போது இது பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.
ஸாக்ரமண்ட்டோவில் வசிக்கும் நண்பர் அஸ்வினி “உங்கள் தலைப்புகளெல்லாம் வழக்கமாக வசீகரமாக இருக்கும். ஆனால் நான்தான் ஔரங்கசீப் என்ற தலைப்பு தட்டையாக இருக்கிறதே?” என்று கேட்டிருக்கிறார். உண்மைதான். ஆங்கிலத் தலைப்பு வசீகரமாக இருக்கும். The Emperor’s Conversations: Memoirs of Aurangzeb. இந்த அளவுக்குத் தமிழில் வரவில்லை. வசீகரமாக வைத்தால் தலைப்பில் ஔரங்கசீப் போய் விடும். எனக்கோ தலைப்பிலேயே ஔரங்கசீப் இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தலைப்பிலேயே நின்று விட்டேன்.
வாழ்த்திய, பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து படியுங்கள். போகப் போக இன்னும் சுவாரசியம் கூடும்.
ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம்.