அன்புள்ள கோகுல்,
“பிசாசு” படத்தில் வருகிற அந்த “ஹண்ட்ரட் பக்ஸ் இருக்குமா புரோ” பாத்திரத்தை நான் என்றுமே ரசித்ததில்லை. ஏன் தெரியுமா? அது சாருவை குறிப்பதால் அல்ல. நான் ஆரம்பத்தில் இருந்தே அது மிஷ்கின் தன்னிடம் ஓசியில் வாங்கிக் குடித்த அல்லது அவரை நம்பி அவரிடம் நட்பாகப் பழகின சிறுபத்திரிகையாளர்களையும்., இலக்கியவாதிகளையும் ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் நோக்கில் படைத்த ஒரு பகடிப் பாத்திரமாகவே கண்டேன். நீங்கள் இப்போது கமல் vs ரஜினி crossfireஇல் சாருவின் மீது சேற்றை வாரி அடிக்கிறேன் பார் எனும் வேகத்தில் ஒட்டுமொத்த இலக்கியவாதிகள் மீதும் காறி உமிழ்ந்திருக்கிறீர்கள். ஒரு இணைய இலக்கிய ஆசிரியராக நீங்கள் இதைச் செய்யலாமா?
யோசித்துப் பாருங்கள் – ஓசியில் குடிக்கத் திரிபவர்கள், கடன் கேட்கத் திரிபவர்கள் சினிமா உலகினுள்ளே நிறைய உண்டு. அது கூட பரவாயில்லை, பெண்களை செட் அப் பண்ணுவதற்காகவே படம் தயாரிக்க கிளம்பியவர்கள், ஒரு புதிய பெண்ணுக்கு நாயகி வாய்ப்பளித்து விட்டு சதா அவளிடமே மொக்கை போடுகிற கறுப்புக்கண்ணாடி auteurகள், படப்பிடிப்பை கூட மறந்து விட்டு அவளிடமே போனில் சாட் பண்ணுகிற திருமணமாகி குழந்தை பெற்ற sexual pervert இயக்குநர்கள் ஏராளமாக கோடம்பாக்கத்தில் உண்டு. அங்கு சாதி ஒடுக்குமுறை உண்டு. மிஷ்கினோ யாராவது ஒரு இயக்குநரோ அதையெல்லாம் இதுவரை பகடி பண்ணியதுண்டா? தமிழ் சினிமாவில் வரலாற்றில் இதுவரை ஒரு காட்சியாவது அப்படி வந்ததுண்டா? ம்ஹும். ஏனென்றால் அதோடு ஒழித்துக்கட்டி விடுவார்கள். அது மட்டுமல்ல சினிமாக்காரர்கள் தம் துறையில் உள்ளோர் மீது எப்போதும் விசுவாசத்துடன் இருப்பார்கள். ஆனால் மிஷ்கின், கமலைப் போன்றவர்களுக்கு இலக்கியவாதிகள் மீது ஒரே சமயம் ஈர்ப்பும், இளக்காரமும் உண்டு. மிஷ்கின் நேரடியாகப் பகடி செய்வார் என்றால், கமல் தனக்கு ஒரு படி கீழே உட்கார வைத்து ‘அழகு’ பார்ப்பார். நான் வாசிக்க ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்தது எனும் கணக்கில் ஆல்பர்ட் காமுவில் இருந்து ஜெ.மோ வரை வைத்து பேசுவார். ஏனென்றால் கமலுக்கோ மிஷ்கினுக்கோ ஆழமான இலக்கிய வாசிப்போ, இலக்கிய மரபின் மீது பிடிப்போ இல்லை. கூடவே பணமும் புகழும் தருகிற இறுமாப்பும் சேர்ந்து கொள்ளுகிறது. (நான் இதைப் பற்றி விரைவில் பிரசுரமாக இருக்கும் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதி உள்ளதால் இங்கு நிறுத்திக் கொள்கிறேன்.)
சினிமாக்காரன் இலக்கியவாதியை பகடி செய்தால் நாமும் கூட நின்று கைகொட்டி சிரிக்கக் கூடாது. சினிமாக்காரன் தன் துறையில் உள்ள கசடுகளைக் கூடப் பேசாமல் போலியாக இருக்கும் போது நாம் ஏன் நம் ஆட்களை விட்டுக்கொடுக்க வேண்டும்? அடுத்து நம்மை பகடி செய்ய சம்மந்தப்பட்ட சினிமாக்காரருக்கு ஒரு தகுதி வேண்டாமா? நாம் என்ன கொரியன் படத்தை திருடி படம் எடுத்து அதற்கு ஒரு கிரெடிட் கூடத் தராமல் பொறுக்கித்தனமாக இருந்தோமா? ஒழுங்காக படிக்கவோ எழுதவோ பேசவோ ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் வீடு முழுக்க புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்து உலக இலக்கிய வாசகன் என தம்பட்டம் அடிக்கிறோமா? நாம் பிச்சையெடுத்தாலும் ஒரு குறைந்த பட்ச நேர்மை நமக்கு உண்டே?
வருத்தத்துடன்,
ஆர். அபிலாஷ்
சம்பந்தப்பட்ட அவதூறு போஸ்ட் கீழே: