அவதூறுகளும் ஆன்மீகப் பயிற்சியும்…

அன்புள்ள சாரு,

உங்களை அவதூறு செய்திருப்பவர் பெரிய இலக்கியவாதியோ பெரிய எழுத்தாளரோ கிடையாது. ஒரு இணைய இதழ் நடத்துகிறார். அதில் பெரும்பாலும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிறரால் செய்யப்பட்டு அதில் வருகிறது.  இவர் எப்பொழுதும் தனது பேஸ்புக்கில் மற்றவர்களை சாடி மட்டுமே கிண்டலாக எழுதுவது வழக்கம்.

எப்பொழுதும் அவர் பார்ப்பனன் பார்ப்பனன் என்று எழுதிக் கொண்டே இருப்பதால் ஒருமுறை நான் கேள்வி கேட்டேன். (நான் பார்ப்பனன் கிடையாது).

அதற்கு பதில் தராமல் நான் கமெண்ட் எழுத முடியாதபடி செய்து விட்டார். நான் அந்த நபரைப் பார்க்கவே வேண்டாம் என்று முற்றிலுமாக பிளாக் செய்து விட்டேன். இந்த மாதிரி ஆட்களிடமா நீங்கள் உங்களுடைய வேலையை விட்டுவிட்டு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் ?

சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்,

தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்தவுடன் மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்.  என் குடும்பத்துப் பெண்களை இழுத்து வசை கடிதங்கள் வந்திருக்கும்.  என்னையும் தாறுமாறாகத் திட்டியிருக்கும்.  அதையெல்லாம் நான் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகவே எடுத்துக் கொள்வேன்.  கோபமே வராது.  ஆழ்ந்த அமைதி.  அவர்கள் தங்கள் கோபத்தை இந்த வசைகளில் தீர்த்துக் கொள்கிறார்கள்.  இதைப் படித்து எனக்குக் கோபம் வந்தால் நான் கீழ்மனிதன்.  இது பயிற்சி.  மௌனம் காப்பதற்கான பயிற்சி.  தியானத்தை விட உயர்ந்தது. 

ஆனால் ஒரு இணையப் பத்திரிகையின் ஆசிரியர் வசை எழுதினால் அதை மேலே சொன்னது போல் எடுத்துக் கொள்ள முடியுமா?  அவர் கோபத்தில் எழுதவில்லை.  வன்மத்தில் எழுதியுள்ளார்.  அதனால் சற்று சஞ்சலமடைந்தேன்.  காரணம் என்னவென்றால், நான் மதிக்கும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இந்த இணைய இதழில்தான் எழுதுகிறார்கள்!!! என் வாழ்வில் என் அளவுக்கு வெகுளியான ஒருவரை நான் சந்தித்தது இல்லை.  அபிலாஷைப் பார்த்துப் பழகிய பிறகு என்னை விடவும் ஒரு வெகுளி இருக்கிறார் என்று தெரிந்தது.  என் மீது வன்மத்துடன் சொற்களைக் கொட்டிய நபரின் பெயரை நேற்று இரவு வரை எனக்குத் தெரியாது.  அவருடைய பத்திரிகையின் பெயர் தெரியும்.  அவருடைய வன்ம வார்த்தைகளை அபிலாஷ் எடுத்துப் போட்டு பதில் எழுதியிருந்ததால் மட்டுமே அவர் பெயரைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  முகநூலில் தேடியபோது கிடைக்கவில்லை.  Obviously, நான் அவரை ஏற்கனவே ப்ளாக் பண்ணியிருக்கிறேன் என்று புரிந்தது.  ஆக, அபிலாஷ் அந்த வசைப் பதிவைத் தனது பக்கத்தில் எடுத்துப் போட்டு பதில் எழுதியிருக்காவிட்டால் எனக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்தே இருக்காது.  அதனால்தான் அபிலாஷ் என்னை விட வெகுளி என்றேன். 

அந்த இணையப் பத்திரிகை ஆசிரியர் ஒரு மூத்த எழுத்தாளர் மீது காறி உமிழ்கிறேன் என்று எழுதுகிறார்.  திருடன் என்கிறார்.  சக எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்கள்.  ஓரிருவர் மென்மையாக ”இது தவறு” என்கிறார்கள்.

தமிழ்ச் சூழல் எழுத்தாளர்களுக்கு எதிரான சூழல் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.   

சாரு