ஓர் உருவகக் கதை


”தேன், பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை ஹல்வா மூன்றும் இருக்கிறது.  எதைச் சாப்பிட?” என்று என்னிடம் கேட்டான் ஒருத்தன்.  நடந்து பல வருடங்கள் ஓடி விட்டன.  ஒவ்வொன்றாகச் சாப்பிடு என்றேன்.  ஒன்றே ஒன்றுதான் சாப்பிட முடியும், எதைச் சாப்பிட என்றான்.  உனக்கு எது பிரியமானதோ அதைச் சாப்பிடு என்றேன்.  அது எனக்குத் தெரியாதா, அனுபவசாலி என்பதால்தானே உங்கள் கருத்தைக் கேட்கிறேன் என்றான்.  அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுமேப்பா, சரி, மூன்றாவதையே சாப்பிடு என்றேன்.

சாப்பிட்டவன் செத்து விட்டான்.

அவனுடைய கடைசி அழைப்பு என்னுடையது என்பதால் போலீஸ் வந்தது.  நடந்ததைச் சொன்னேன்.  ஆனால் அவர்களோ அவன் சயனைட் சாப்பிட்டிருப்பதாகச் சொன்னார்கள்.  தயவுசெய்து அவன் கடைசியாக சாப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.  மூன்று கிண்ணங்களில் மூன்று பொருட்கள் இருந்தன.  ஒன்று, சயனைட் என்றார்கள்.  ஒன்று, அரளி விதைச் சாறு, ஒன்று, ஊமத்தை என்று பரிசோதனையில் தெரிந்தது.  இதைத்தான் அந்த முண்டம் தேன், பஞ்சாமிர்தம், இருட்டுக் கடை ஹல்வா என்று சொல்லியிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் இதைப் போலவே ஒவ்வொருவராக என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  தேனா, பஞ்சாமிர்தமா, இருட்டுக் கடை ஹல்வாவா?  நான் முழித்துக் கொண்டேன்.  விளக்கினேன்.  டேய், லூசுப் பயலுகளா, அது தேனும் இல்லை, பஞ்சாமிர்தமும் இல்லை,  விஷம்டா என்றேன்.  பதிலுக்கு அவர்கள் என்னைத் திட்டி விட்டு மூன்றில் எதையோ ஒன்றைத் தின்று செத்தார்கள்.  ஒவ்வொரு முறையும் போலீஸ் வரும்.  கடைசி அழைப்பு உங்களுக்கு என்பார்கள்.  ஒரு கட்டத்தில் அவர்களுக்கும் பழகி விட்டது.  எனக்கும் பழகி விட்டது.

இப்போதெல்லாம் அப்படி அழைப்பு வரும்போது ஒரு சடங்கைப் போல் டேய் லூசு, அது விஷம்டா என்று நான் சொல்வதும், நீங்கதான் லூசு என்று அவன் என்னைப் பார்த்துச் சொல்லி விட்டு விஷத்தைக் குடித்துச் சாவதும் வழக்கமாகி விட்டது. 

சடங்கும் ஒரு கட்டத்தில் அலுத்து விடும் இல்லையா?  நேற்று ஒருத்தன் தேனும் பஞ்சாமிர்தமும் இருட்டுக் கடை ஹல்வாவும் இருக்கிறது, எதைச் சாப்பிட என்றான். 

ஹல்வாதான் என் சாய்ஸ் என்றேன்.  சயனைட்தான் வலியில்லாமல் உயிர் போகும்.  பாவம். 

கதை முடிந்து விட்டது என்றுதானே நினைக்கிறீர்கள்?  இல்லை.  என் நண்பனுக்கு ஃபோன் போட்டு இந்தக் கதையைச் சொன்னேன்.  முதல் முதலாகத் தனக்கும் இப்படி ஒரு அழைப்பு வந்தது என்றும், அவன் மேலே குறிப்பிட்ட மூன்று விஷங்களின் கொடூரத்தைப் பற்றி விளக்கிச் சொன்னதாகவும் சொன்னான்.  அட லூசுப் பயலே என்று நினைத்துக் கொண்டேன்.