Sir
I must thank you for invoking interest in controversial historical figures, kings, etc. Much maligned unjustly.
BJP in its website has borrowed from other sites and gives a free reading from its online library books.
Jadunath Sarkar has written extensively on Aurangzeb V’s five volumes. So also on Shivaji, his family, Period, etc
Aurangzeb dealt with Shahaji, Venkoji, Shivaji, His two sons, His grandson also. Unique Amazing.
Shivaji always paid and recognized Aurangzeb as Hindustan Emperor.
Looking forward to more on this from your chapters forthcoming
Thanks
Bala
டியர் பாலா சார்,
ஜாடுநாத் சர்க்கார் அளவுக்கு ஔரங்கசீப் பற்றி வேறு யாரும் எழுதவில்லை. ஐந்து பெரிய தொகுதிகள். அனைத்தையும் படித்து ஆயிரம் பக்கம் வரும் அளவுக்குக் குறிப்புகள் எடுத்தேன். ஆனால் அதில் ஒரு சதம் கூடப் பயன்படுத்தவில்லை. ஔரங்கசீப் பற்றி, மொகலாய சரித்திரம் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அவற்றைப் பயன்படுத்தலாம். அல்லது, வில்லியம் டால்ரிம்பிள் மாதிரி சரித்திர நூல்கள் எழுதினாலும் ஜாடுநாத் பயன்படுவார். நான் எழுதுவது சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்ட புனைகதை என்பதால் ஜாடுநாத்தை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆனால் விவரங்களிலும் கதையிலும் தவறு எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க ஜாடுநாத்தின் ஐந்து தொகுதிகளும் பயன்பட்டன.
இன்னொரு விஷயமும் தெரிந்தது. ஜாடுநாத் சர்க்காரின் ஐந்து தொகுதிகளும்தான் மொகலாய சரித்திரம் பற்றி எழுதப்பட்ட பல சுவாரசியமான புகழ்பெற்ற நூல்களுக்கு ஆதார நூலாக இருந்திருக்கிறது. அப்படி அப்படியே தூக்கியிருக்கிறார்கள். ஆனால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஜாடுநாத்துமே ஃபார்ஸி மொழியில் எழுதப்பட்ட நூல்களிலிருந்துதான் எடுத்திருக்கிறார். எனவே இதில் பெரிதாக காப்புரிமை பற்றிப் பேச முடியாது.
உதாரணமாக, Abraham Eraly எழுதிய The Last Spring : The Lives and Times of the Great Mughals என்ற பிரம்மாண்டமான புத்தகம் மொகலாயர் பற்றி எழுதுபவர் அத்தனை பேருக்கும் உதவக் கூடிய நூல். ஆனால் நான் அதை ஒரு கட்டத்தில் படிப்பதை நிறுத்தி விட்டேன். காரணம், History of the Afghans என்ற மற்றொரு பெரிய புத்தகம். இதை ஜஹாங்கீரின் (1569 – 1627) அரசவை எழுத்தாளரான நியமத் உல்லாஹ் 1609-11 இல் ஃபார்ஸி மொழியில் எழுதினார். நியமத் உல்லாஹ் தன் தகவல்களைத் திரட்டிக் கொண்டது ஹைபத் கானிடமிருந்து. ஹைபத் கான் ஆஃப்கன் தளபதியான கான் ஜஹான் லோதியின் உதவியாளர். இதை ஃபார்ஸியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Bernhard Dorn (1805-81).
ஆப்ரஹாமின் புகழ்பெற்ற நூலைப் படித்துக் கொண்டிருந்த போது ஷேர்ஷா சூரி பற்றி நான் ஏற்கனவே நியமத் உல்லாஹ்வின் ஆஃப்கனியர் வரலாறு நூலில் படித்த ஒரு சம்பவம் இருந்தது. இப்படி பல சம்பவங்களை நியமத் உல்லாஹ்வின் நூலைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார் ஆப்ரஹாம். நான் நியமத் உல்லாஹ்வின் நூலையே படித்திருந்ததால் ஆப்ரஹாமின் நூலை விட்டு விட்டேன்.
ஆக, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஔரங்கசீப் பற்றி நான் ஒன்றும் சரித்திர நூல் எழுதப் போவதில்லை. ஔரங்கசீப் இப்போது ஔரங்கசீப்பாகவே இவ்வுலகுக்கு வந்தால் (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மாதிரி) அவர் என்ன நினைப்பார், தன் கதையை எப்படிச் சொல்லுவார் என்பது மட்டுமே என் நாவலுக்கான கண்ணி. ஆனாலும் மொகலாய சரித்திரம் பற்றி யார் என்ன எழுதினாலும் ஜாடுநாத் சர்க்காரின் நூல்களைப் படிக்காமல் எழுதுவது சாத்தியமே இல்லை. தன் வாழ்நாள் முழுவதையும் மொகலாய சரித்திரத்தைத் தொகுப்பதற்காகவே வாழ்ந்த அறிஞர் ஜாடுநாத் சர்க்கார். ஆனால் ஜாடுநாத்தின் அடிப்படைப் பார்வையோடு நான் வேறுபடுகிறேன். ஜாடுநாத் பிரிட்டிஷ்காரர்களை ஹிந்துஸ்தானுக்கு நாகரீகத்தைக் கொண்டு வந்தவர்களாகப் பார்க்கிறார். நான் அவர்களைக் கொள்ளையர்களாகப் பார்க்கிறேன். எந்த ஒரு நாகரீக வளர்ச்சியும் புதுமையும் முன்னேற்றமும் அந்த மண்ணிலிருந்தே உருவாக வேண்டும் என்று நம்புகிறவன் நான். இந்தியாவின் அரிய செல்வங்களில் 50 சதம் பிரிட்டிஷ் கொள்ளையர்களிடம்தான் இருக்கிறது, இன்னமும். பல கோடிக்கணக்கான யூரொக்கள் பெறுமானமான மொகலாய மினியேச்சர் ஓவியங்கள், கையால் எழுதப்பட்ட நூல்கள் எல்லாமே பிரிட்டிஷாரிடம்தான் இன்னமும் உள்ளன.
தொடர்ந்து பயணிப்போம்…
சாரு