நான்தான் ஔரங்கசீப்… (விவாதங்கள்)

நான்தான் ஔரங்கசீப்… பிரபலமான இந்தி நாளிதழ்களில் வந்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.

பாலா.

20.8.2021.

வரும்.  நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரும்போது வடநாட்டில் பேசப்படும்.  அப்போது இந்தியில் மொழிபெயர்க்கப்படலாம்.  பார்ப்போம்.  முப்பது அத்தியாயங்களை முடித்து விட்டேன். 

***

வணக்கம் சாரு,

பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தாம் அறிந்த யாவற்றையும் ஒரே நூலில் சொல்லிவிடக் கூடாது என்கிற பிரக்ஞையிருக்கும். ஓளரங்கசீப் தொடரை இன்றுதான் படிக்கத் துவங்கினேன். ஒன்பது அத்தியாயங்களையும் வாசித்த முடித்த கையோடு இதை எழுதுகிறேன். தகவல்களைக் கொட்டியிருக்கிறீர்கள். 

இந்நாவல் இந்திய நிலத்தில் வாழும் அனைவருக்குமான‌து. உனது நாட்டின் வரலாற்றை ஆழமாகக் கற்கத் துவங்கு எனப் பொட்டில் அடித்து நூலேந்த வைக்கக்கூடியது. 

சரித்திர‌ நாயகன் நிகழ்க்காலத்தில் அகோரி மீடியம் மூலம் பேசுவதாய்க் களம் அமைத்து சுவாரஸ்யமாகவும் சமகால அரசியல் கிண்டல் நிறைந்ததாகவும் கதை நகர்த்திச் செல்வதெல்லாம் அபாரம். 

கித்தி ஸித்தானி ஃபிர்தௌஸ் மக்கானி, ஆலம்கீர், ஷாஹன்ஷா என முனகிக் கொண்டே இருக்கிறது மனம்.

அசோகர் நாயக பிம்பம் உடைக்கப்படும் இடங்களில் எப்போது அசோகா படிக்கக் கிடைக்கும் என்ற ஆவலும் தொற்றிக் கொள்கிறது.

ஔரங்கசீப்-ஐ உத்தமர்‌ எனச் சொல்லும் சொற்ப இசுலாமிய நண்பர்களும் ஏன் உத்தமர் எனத் தகுந்த ஆதாரங்களோடு பேசியதில்லை.‌ இந்நாவல் அக்குறையைக் களைந்து வருகிறது. நான்தான் ஓளரங்கசீப்-இன் முழு வடிவத்தையும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

இமான்.

20.8.2021.

அன்புள்ள இமான்,

நன்றி. 

தகவல்கள் நூறு பக்கம் இருந்தால் அதில் பத்து பக்கமே நாவலில் வருகிறது.  அதாவது பத்து சதம். தகவல்களைக் கொட்டினால் வாசகர்களுக்கு சலிப்பு வந்து விடும்.  இதுவரையிலான என் எழுத்து இயக்கத்தில் நான் வாசகர்களை உத்தேசித்து எழுதியதே இல்லை.  ஆனால் ஔரங்கசீப் வாசகர்களுக்கான நாவல்.  வாசகர்களையும் நான் என் பயணத்தோடு சேர்ந்து கொள்ள அழைக்கிறேன்.  நாவல் எழுதி முடிக்கப்பட்ட பிறகு அத்தியாயம் அத்தியாயமாக உங்களுக்கு வரவில்லை.  எழுதி எழுதிக் கொடுக்க அது உங்களால் வாசிக்கப்படுகிறது.  அந்த வகையில் இது ஒரு பயணம்தான்.  தகவல்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டாலும் தகவல்கள் அதிகமாகத் தெரிவதற்குக் காரணம், நமக்கு சரித்திரமே சரியாகக்  கற்பிக்கப்படவில்லை என்பதுதான். 

ஔரங்கசீப் உத்தமர் என்று சொல்லும் உத்தேசம் எனக்கு இல்லவே இல்லை.  அவருக்கே அப்படிப்பட்ட உத்தேசம் இல்லை.  இல்லாவிட்டால் தன் கடிதங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களில் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் இந்த அடிமை, இந்தக் கீழ்மகன், இந்தக் கடைமகன், இந்தப் பாவி என்றே எழுதிக் கொள்கிறாரே?  ஏன்?  இறுதித் தருணத்தில் இறைவனின் நியாயத் தீர்ப்புக் கூடத்தில் தனக்கு தண்டனை வழங்கப்படும் என்றே அவர் எழுதுகிறார்.  அவருடைய கடிதங்கள் அனைத்துமே மகன்களுக்கு எழுதப்பட்டாலும் இறைவனுக்கு எழுதப்படும் மன்னிப்புக் கடிதங்கள் போன்றே தெரிகின்றன.  தவறை உணர்ந்த ஒரு ஆன்மாவின் கண்ணீர்க் கடிதங்கள்.  ஆனால் அதே சமயம் ஔரங்கசீப் மிக வலுவாக நமக்குச் சொல்லும் கருத்து, நான் வில்லன் அல்ல என்பதுதான். 

பாவி என்று ஒத்துக் கொள்கிறீர்கள்.  வில்லன் அல்ல என்றும் சொல்கிறீர்கள்.  முரணாக இருக்கிறதே என்றால், போரிடாமல் ஒருவன் அரசனாக இருக்க முடியாது என்பார்.  நான் ஃபக்கீராக இருந்திருக்க வேண்டியவன், அரசனானதுதான் தவறு என்பது அவர் வாதம்.  ஒரு மிகக் குழப்பமான மனநிலை அது.  உத்தமன் என்றெல்லாம் வரையறுத்து விட முடியாது.  ஆனால் ஔரங்கசீப்பை வில்லன் என்று எழுதியது இந்திய சரித்திர ஆசிரியர்களும், அதற்கு முந்தைய ஆங்கிலேயர்களும் செய்த சரித்திர மோசடி.  இந்திய அரசுக்கும் அக்பர்தான் தேவையாக இருந்தார்.   ஔரங்கசீப் என்ற ஒரு அரசர் இருந்திராவிட்டால், ஔரங்கசீப் ஆசைப்பட்டது போல் அவர் ஃபக்கீராக ஆகியிருந்தால் இந்தியாவில் இஸ்லாம் இல்லாமல் போயிருக்கும்.  ஏனென்றால், அக்பர் இஸ்லாமை இந்து மதத்தோடு இணைக்கப் பார்த்தார்.  ஏக இறைக் கொள்கையையும் பன்முக இறை வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்து நம்பிக்கையையும் இணைத்தார். 

நான் இங்கே எது சரி, எது தப்பு என்று சொல்லும் நிலையில் இல்லை.  அக்பர் செய்தது சரியா, ஔரங்கசீப்பின் செயல்பாடுகள் சரியா என்று சொல்ல எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.  ஆனால் ஒரு மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகளை மாற்ற அக்பருக்கு உரிமை இல்லை.  அதேபோல், ஔரங்கசீப்பை சரித்திரத்தில் வில்லன் என்று கட்டமைப்பதில் மிகப் பெரிய பொய்மைகள் இருப்பதைக் கண்டேன்.  அதை மட்டுமே நாவலில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

ஆனால் இதையெல்லாம் விட, ஔரங்கசீப்பின் தனிமைதான் என் நாவலின் மையச் சரடு.  இப்போதுதானே முப்பது வந்திருக்கிறது?  இன்னும் எழுபது அத்தியாயம் இருக்கிறது, பார்ப்போம்…

சாரு