நான்தான் ஔரங்கசீப்… எதிர்வினைகள் (4)

அன்புள்ள சாரு அவர்களுக்கு!

மலேசியா- ஈப்போவில் இருந்து முபாரக் அலி ( கஸீப்அலி) எழுதுகின்றேன்! நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன். நான்தான் அவுரங்கஸீப்… புதினத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இந்தியாவில் அவுரங்கஸீப் மீது இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகரித்து விடுமோ இந்தக் கதை என்ற பயத்திலேயே படிக்கத் துவங்கினேன். அவரங்கஸீப் போன்ற நற்பண்புகள் நிறைந்த ஒருவர் எப்படி ஒரு அகோரியின் உடம்பில் புகுந்து கதை விட முடியும் என்ற ஏளனத்துடன் சில எள்ளலான கருத்துக்களைக் கூட அங்கே பதிவு செய்து வைத்தேன். ஏனெனில் அவரைப் பற்றி இனி யார் எழுதி என்ன ஆகப் போகிறது? சிதைந்த அவரின் இமேஜை இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்குவதில் என்ன கூடியோ, குறைந்தோ போகப் போகின்றது? சாரு அவர் பங்குக்கு கொஞ்சம் இழிவு படுத்தட்டும் என்றே வாசித்துக் கொண்டு போனேன்.

எட்டாம் அத்தியாயத்தில் அசோகர் 18,000 அஜிவிகர்களைப் போட்டுத் தள்ளியதாக ஒரு செய்தி படித்தவுடன், இதுவரை கேள்விப்படாத வார்த்தை, அதற்கென்ன விளக்கம் என்று கூகுள் ஆசானிடம் கேட்டால், நேரே உங்களின் அகப்பக்கத்திற்கு வந்து நிறுத்துகின்றார். அதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் உலகம் முழுவதும் பரந்து விரிந்து சிறகடிக்கும் தமிழ் வலையுகத்தில் அஜிவிகர் என்ற வார்த்தை வேறு எந்தப் பக்கத்திலும் இல்லை. அதற்கான விடை கிடைத்ததும், அவுரங்கஸீப் வாசிப்புக்கான குறிப்புகள், விவாதங்கள், எதிர்வினைகள் என வாசித்து விட்டு கடைசியாக இஸ்லாமிய நண்பர்களுக்குத் தாங்கள் அளித்த விளக்கமான கருத்து என்னைக் கவர்ந்தது. இனி எந்த பயமும் இல்லாமல் அவுரங்கஸீப் பேசுவதைக் கேட்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆம்! நன்றாகவே பேசுகின்றார்.

இந்தியர்களிடம் இருந்த சகிப்புத்தன்மை எப்பொழுதோ காணாமல் போய் விட்டது. தமிழர்களிடம் இருக்கும் மீதி கொஞ்சம் சகிப்புத்தன்மையும் மறைந்து விடுவதற்கு முன் அவுரங்கஸீப் வந்து விட்டார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முழு தமிழகத்தையும் இல்லாவிட்டாலும், ஒரு சில உள்ளங்களில் சற்று ஈரத்தை மிச்சம் வைக்கும் என்று ஆசைப்படுகின்றேன். அதற்கு தங்களின் அவுரங்கஸீப் நிச்சயம் துணையாக இருப்பார்.

வாழ்த்துக்கள்! புதிய கலாச்சார, புதிய ஜனநாயக, வினவுக் கண்ணாடி அணிந்தே எழுத்துக்களை அணுகி வந்ததால் பலரின் படைப்புக்களை வாசிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். சாருவை இப்பொழுதே வாசிக்கின்றேன். அதுவும் என் அன்புக்குரிய ஆசான் அவுரங்கஸீப்பின் வார்த்தைகளால்! தொடரட்டும் தங்களின் பணி! மக்களின் மனதில் சகிப்புத் தன்மை ஓங்கட்டும்!

அன்புடன்,

முபாரக் அலி (Kazeebali)

24.8.2021.