நான்தான் ஔரங்கசீப்… மதிப்புரைகள் (6)

நான் கடந்த இரு வாரங்களுக்கு முன், கோவிட் நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டேன். என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு நரக வேதனையை அனுபவித்தில்லை என அடித்துச் சொல்வேன். உடலளவிலும் ,மனதளவிலும் இந்தக் கொடிய நோய் கொடுக்கக் கூடிய வலியை வார்த்தைகளில் கடத்த இயலவில்லை.

இந்த நிலையில்தான் நான் bynge appஐ டவுன்லோடு செய்து சாருவின் நான்தான் ஒளரங்கசீப் படிக்க ஆரம்பித்தேன்.

அதன் பின், என் கடும்காய்ச்சலிலும், தலைவலியிலும், இதர பல நோவுகளிடையேயும் என்னுடன் ஒளரங்கசீப் பேச ஆரம்பித்தார்.

ஆம், சத்தியமாக இது சாரு எழுதும் ஒரு தொடர் என்பது மறந்து விட்டது. காத்திப் அவர்களே என ஆலம்கீர் சொல்லும் போது, கார்த்திக் ஆகிய நானே காத்திப்பாக உணர்ந்தேன், இன்னும் உணர்கிறேன்.

இது எங்ஙனம் சாத்தியம், நோயின் கோரப் பிடியில் இருக்கும்போது, பசி தாகத்தை உணரும் சக்தி கூட அற்ற நிலையில், ஒருவரால் இப்பேர்ப்பட்ட ஒரு வாசிப்பனுபவத்தை ஒரு நோயாளிக்கு அளிக்க முடியுமென்றால், அது வெறும் எழுத்தல்ல. தன்னை, தான் படைக்கும் படைப்புக்கே ஒப்புக் கொடுத்து விட்ட ஒருவருக்கே கைவரப்பெறும் ஞானம்.

இந்தத் தொடர், ஒரு ஞான ஊற்று.

தவற விட்டு விடாதீர்கள்.

வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் சாரு! நன்றி!

தக்க கௌரவத்தை அளிக்க மலேசியாவில் காத்திருக்கிறேன்.

கோவிட் ஒழிந்து பயணங்கள் சாத்தியப்பட பிரார்த்திப்போம்.

கார்த்திக், மலேஷியா

டியர் கார்த்திக்,

நோய்த் தொற்றிலிருந்து மீண்டு எழுந்தது மகிழ்ச்சி.  ஔரங்கசீப் நாவல் உங்களுடைய நோய்த் தொற்று காலத்தில் அதன் கொடுமையையும் தனிமையையும் கடக்க உதவியது அறிந்தும் மகிழ்ச்சி.   

உங்களுக்குத் தொற்று வந்ததே தெரியவில்லை.  சமீப காலமாக சீனியுடன் இலக்கியம் தவிர மற்ற விஷயங்கள் பேச நேரம் கிடைப்பதில்லை.  இல்லாவிட்டால் சொல்லியிருப்பார்.  இல்லையென்றாலும், என்னிடம் சொல்லி என்னை ஏன் பயமுறுத்த வேண்டும் என்றும் விட்டிருக்கலாம்.  மலேஷியா, சிங்கப்பூரில் இந்தியா அளவு பாதிப்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் என்னை மலேஷியா அழைப்பதாக சீனி சொன்னார்.  அந்தக் கால கட்டத்தில் நான் தென்னமெரிக்காவும் ஐரோப்பாவும் செல்வதில்தான் நாட்டம் கொண்டிருந்தேன்.  முன்பு நான் அடிக்கடி மலேஷியா வந்த போதெல்லாம் உங்களை எப்படி சந்திக்காமல் போனேனோ தெரியவில்லை.   மலேஷியாவின் போர்னியோ பகுதியில்தான் இன்னும் சுற்றவில்லை.  அங்கே ஒரு அடி அடிக்கலாம்.  பார்ப்போம்.  கொரோனா முடிந்ததும் முதல் பயணம், மெக்ஸிகோ அல்லது ஐரோப்பா.  இன்ஷா அல்லாஹ்.  முடிந்தால் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்.  சீலே ஒரு அற்புதம்.  ஆனால் அங்கே தனியாகக் கிடந்தேன்.   சீனியும் நீங்களும் நானும் போகலாம்.  ஒரே ஒரு நிபந்தனைதான்.  ஊர் சுற்றுவதற்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் வேனில் அமர்ந்து விட வேண்டும்.  எனவே அதிகாலை நான்கு ஐந்து மணிக்குத் தூங்கப் போவதெல்லாம் நடக்காது.  மாலையும் இரவும் சீக்கிரமே வந்து விடுவதாலும் பகல் கொஞ்சமாக இருப்பதாலும் அதிகாலையில் கிளம்புவதே சிலாக்கியம்.  பாவம், சீனிக்கு ரொம்பக் கஷ்டமாகத்தான் இருக்கும்.  எப்படி சமாளிப்பது என்று திட்டமிட வேண்டும்.  மற்ற நண்பர்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்றால் “சொதப்புவது எப்படி?” என்று ஆயிரம் பக்கத்தில் புத்தகம் எழுதும் அளவுக்கு விஷய தானம் செய்கிறார்கள். 

சாரு