நான்தான் ஔரங்கசீப்… நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் தன் வாழ்வின் ரூஹ் என்று இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். அவை, அக்லாக் மற்றும் ஆதாப்.
இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் முதல் முதலாக ஔரங்கசீப்பின் கடிதங்களில் கண்டேன். பல இடங்களில் தொடர்ந்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் ஔரங்கசீப். மட்டுமல்ல. ஒரு பெர்ஷியனின் அடையாளமே இந்த அக்லாக்தான் என்கிறார். ரூஹ் என்றால், ஆத்மா, உயிர் மூச்சு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்வின் அர்த்தம். ஃபார்ஸி மொழியில் அக்லாக் என்றால் நீதி எனப் பொருள். ஃபார்ஸி வேறு, அரபி வேறு, உர்தூ வேறு. எனவே மூன்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவே கூடாது. மேலும், நான் இரண்டு ஃபார்ஸி அறிஞர்களைக் கலந்து கொண்டே இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் மீறியும் தவறு நேரலாம். சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஞாபகம் கொள்ளுங்கள். மொகலாயப் பேரரசர்களில் ஔரங்கசீப் வரை வந்தவர்கள் ஃபார்ஸி மொழியில் வல்லுனர்கள். இந்தி நன்றாகப் பேசக் கூடியவர்கள் என்றாலும் அவர்கள் ஃபார்ஸியையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டார்கள்.
நண்பர் முபாரக் அலி கருத்துப் பெட்டியில் அக்லாக் என்பது நல்லொழுக்கம் எனவும், ஆதாப் என்பது நல்ல பழக்க வழக்கம் என்பது சரியான பொருள் என்று எழுதியிருந்ததால் இந்த விளக்கத்தை எழுதினேன். அரபி, உர்தூ ஆகிய மொழிகளில் அப்படி இருக்கலாம். ஆனால் நான்தான் ஔரங்கசீப்… புழங்கி வரும் தமிழ் அல்லாத வார்த்தைகள் பலவும் ஃபார்ஸி மொழி வார்த்தைகள். அவற்றின் பொருளை நான் ஃபார்ஸி மொழி அறிஞர்களிடம் கேட்டு ஆலோசித்த பிறகும், பல ஃபார்ஸி நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் வாசித்த பிறகே பயன்படுத்துகிறேன்.
இடையில் ஷா உமரியிடம் அல்லது அவர் நண்பர் நியமத் நத்வியிடமும் அரபி கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அந்த பாக்கியத்தை அனுபவம் கொள்ள எனக்கு நேரம் இல்லை என்பதை அவர்களிடம் சொல்வதற்குக் கூட இன்று முழுவதும் நேரம் இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு ஔரங்கசீப்பின் அத்தியாயங்களை அனுப்ப வேண்டும். உடனடியாக. ஆங்கிலத்துக்கு ஏற்றாற்போல சில பல மாற்றங்கள் செய்ய வேண்டும் இல்லையா? அப்படியே தமிழில் எழுதியதைத் தூக்கி அனுப்ப முடியாது. காலையிலிருந்து இதில் உட்கார்ந்திருக்கிறேன். அரபி ஏன் கற்க நினைத்தேன் என்றால், குறில் நெடில் வரும் இடங்களில் எல்லாம் எது குறில் எது நெடில் என்று தெரியாமல் போகிறது. ஃப்ரெஞ்சில் நெடில் வரும் இடங்களில் ஒரு சிறிய கோடு போடுவார்கள். அதற்கு macron என்று பெயர். அது ஆங்கிலத்தில் இல்லாததால் ஆங்கிலத்தில் படிக்கும்போது குறில் நெடிலாகவும் நெடில் குறிலாகவும் மனதில் தங்குகிறது. ஹுமாயூன் கூட யூனா யுன்னா என்று சந்தேகம். ஆங்கில மொழிபெயர்ப்பில் macronஐப் பயன்படுத்தச் சொல்லி எல்லா பெயர்களுக்கும் நானே மேக்ரோன் போட்டு அனுப்பி விடுகிறேன்.
பொதுவாக அரபிக்கும் இஸ்லாமுக்கும் உள்ள உறவு எல்லோரும் அறிந்ததே. அரபியும் உலக நாடுகள் பலவற்றில் பரவியிருக்கிறது. ஆனால் ஃபார்ஸி மொழி அறிந்தவர்கள் மிகவும் சொற்பமாக இருக்கிறார்கள். ஈரானில் மட்டுமே அது அலுவலக மொழியாக இருக்கிறது. தஜீகிஸ்தானில் அது சிறுபான்மை மொழி.
Akhlaq-i Muhsini என்பது ஒரு ஃபார்ஸி நீதி நூல். ஹுஸேன் அலி கஷீஃபி 1495இல் எழுதிய இந்த நூலில் நன்றி நவிலல் என்ற அத்தியாயம் என்னை மிகவும் ஈர்த்தது. சிறார்களும் இளைஞர்களும் படிக்க வேண்டிய இந்தச் சிறிய நூல் நன்றி நவிலல் என்பதை நம் உடலின் எந்தப் பகுதியைக் கொண்டும் செய்யலாம் – மனதால், கண்களினால், நாவினால், கரங்களால் – என்கிறது.
கண்களால் எப்படி நன்றி தெரிவிப்பது?
மேன்மையான படைப்புகளையும், உன்னதங்களையும் உயர்ந்தோரையும் கண்டு வியந்து நோக்குதல், உதவியற்றவர்களையும் ஒடுக்கப்பட்டோரையும் கண்டு கருணை கொள்ளுதல்.
மரத்துக்கு மரம் இஸ்லாம் என்றால் அன்பு என்று எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பல இந்து நண்பர்கள் அதைப் பார்த்து விட்டு, தாலிபான்களை அதோடு பொருத்தி என்னிடம் கேள்வி கேட்பதுண்டு. அவர்களை நான் அக்லாக்-இ முஹ்ஸினி என்ற நீதி நூலையே படித்துப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வது வழக்கம். அந்த நூலின் மூலமாகவும் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உதவியற்றவர்களையும் ஒடுக்கப்பட்டோரையும் கண்டு கருணை கொள்ளுதலே நீதி. அதன் மற்றொரு பெயரே இஸ்லாம்.
ஔரங்கசீப் நாவலுக்காக நான் வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில் Akhlaq-i Muhsini என்ற சிறிய நீதி நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாக விளங்குகிறது.