ராத்வா அஷூரின் க்ரானடா

ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் எகிப்தைச் சேர்ந்த ராத்வா அஷூரின் க்ரானடா என்ற புகழ்பெற்ற நாவலின் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தேன். மொழிபெயர்ப்பு வெளிவந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம். சரியாக நினைவில்லை. அரபி இலக்கியத்தில் நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நண்பர்கள் அறிந்திருக்கலாம். நான் மொழிபெயர்த்த க்ரானடா நாவலின் பகுதியையும் ராத்வா அஷூர் பற்றி நான் எழுதியிருந்த குறிப்பையும் இங்கே மீண்டும் தருகிறேன். இது பற்றி ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை முடிந்தால் இன்று எழுதுவேன். அதற்கு முன்பு இதைப் படித்து விடுங்கள்.

ராத்வா அஷூர்

இடதுசாரி எழுத்தாளரான ராத்வா அஷூர் கெய்ரோவில் 1946-இல் பிறந்தார்.  அதே ஆண்டில்தான் அந்நகரின் புகழ்பெற்ற அப்பாஸ் பாலத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் நடந்தது.  ஒரு பக்கம் நைல் நதி – எதிர்ப் பக்கம் துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தினம் பல நூறு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

சிறு வயதிலிருந்தே கலக மனோபாவம் கொண்டிருந்த ராத்வா அஷூர் தன் 14-ஆம் வயதில் ஃப்ரெஞ்சுப் பள்ளியிலிருந்து விலகி அரசாங்கத்தின் அரபிப் பள்ளியில் சேர்ந்தார்.  வெளிநாட்டுக் கல்விமுறையை எதிர்த்தாரே தவிர மூன்று ஐரோப்பிய மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார் ராத்வா. 

1967-இல் கல்லூரிப் படிப்பை முடித்த அஷூர் 1970-இல் Mourid Barghouthi என்ற பாலஸ்தீனிய கவிஞரை மணந்தார்.  மிகப் பெரும் கல்வியாளராகவும், புகழ் பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய ராத்வா, எகிப்திய அரசை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீனிய விடுதலையை முன்னிட்டு எகிப்தில் பர்கோத்தி ஈடுபட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காக 1977-ஆம் ஆண்டு அவர் எகிப்திய அரசினால் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  அப்போது ராத்வா அஷூர் – பர்கோத்தி தம்பதியினரின் ஒரே மகன் சிறு குழந்தையாக இருந்தான். 

பின்னர் பர்கோத்தியும் ராத்வா அஷூரும் ஒன்று சேர்வதற்கு 17 ஆண்டுகள் ஆயின.  அதுவரை அவர்கள் அரசுக் கெடுபிடிகளால் வெவ்வேறு நாடுகளிலேயே வாழ நேர்ந்தது. 

தன்னுடைய நாவல் ‘க்ரனடா’ பற்றி ராத்வா அஷூர் சொல்கிறார்:

“குழந்தையாக இருக்கும் போது அல்ஜீரியா மற்றும் பாலஸ்தீனிய விடுதலைக்காக நான் பிரார்த்தனை செய்வதுண்டு.  1967-ஆம் ஆண்டு எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது.  அப்படி ஒரு பயத்தை அதுவரை நான் உணர்ந்ததில்லை.  ஒருவருக்கு ஏற்படக் கூடிய மோசத்திலும் மோசமான ஒரு துயரம் அது.  ஆகாயவெளியில் ஒரு பலூனுக்குள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அந்த பலூன் வெடித்து விட்டால் உங்கள் கதி என்ன ஆகும்?  பூமியிலும் இருக்க மாட்டீர்கள்; ஆகாயத்திலும் இருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பயம்தான் 1967-இல் எனக்கு ஏற்பட்டது… அப்போதுதான் நான் ‘க்ரனடா’வை எழுதினேன்.  அந்த நாவலின் மூலமாகவே நான் அந்தப் பயத்திலிருந்து வெளியே வர முடிந்தது.  கிட்டத்தட்ட மரணத்துக்கும் எழுத்துக்குமான போராட்டமாக இருந்தது அது.”

2014-இல் அவர் மரணம் அடையும் வரை கெய்ரோவில் Ain Shams பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்த ராத்வா அஷூரின் மற்ற சில முக்கியமான நூல்கள்: Gibran and Blake: A Comparative Study (1978), The Novel in West Africa (1980), I Saw the Palm Trees (1989), The Reports of Mrs. R (2011).  இவரது முக்கியமான பயண நூல்: The Journey: An Egyptian Student’s Days in America (2018).    

ஒவ்வொரு சமகாலத்திய அரபி நாவலைப் படிக்கும்போதும் ‘இப்படி ஒரு நாவலை வாழ்நாளில் படித்ததில்லை’ என்ற எண்ணமே எனக்கு மேலிடுகிறது. சமீபத்தில் ராத்வா அஷூர் எழுதிய Granada என்ற நாவலைப் படித்த போதும் அவ்வாறே எனக்குத் தோன்றியது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சுமார் 800 ஆண்டுகளாக ஸ்பெய்னில் இஸ்லாமிய வாழ்நெறியையே அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடித்து வந்தனர். அதே சமயத்தில் அங்கு வாழ்ந்த சிறுபான்மையினரான கிறித்தவர்களையும், யூதர்களையும் அவர்கள் தங்களுக்குச் சமமாகவும், சகோதரத்துவத்துடனும் எண்ணிப் பழகி வந்தனர். ஸ்பெய்னின் வரலாறு நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் இவை. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஸ்பெய்ன் முழுமையும் ஸ்பானியர்களின் ஆக்ரமிப்பில் வந்ததும் அந்தப் பன்முகக் கலாச்சார வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. 1492-ஆம் ஆண்டு ஸ்பெய்னின் தெற்கிலுள்ள Granada நகரம் ஸ்பானியர்களின் கீழ் வந்தது. ஸ்பெய்ன் முழுவதுமிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். மீதமிருந்த முஸ்லீம்கள் 1609-ஆம் ஆண்டு ஸ்பெய்னிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லீம்கள் ஸ்பானியர்களால் Morisco என்று கிண்டலாக அழைக்கப்பட்டனர். இதிலுள்ள Moro என்பதன் பொருள்: Moorish. அதாவது, மொராக்கோவிலிருந்து வந்த முஸ்லீம்கள். 16-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், மொரிஸ்கோ என்பது ஸ்பெனிலேயே தங்கி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்ட முஸ்லீம்களைக் குறிக்கும் வார்த்தையாக ஆனது.

15, 16-ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெய்ன் தேசத்து முஸ்லீம்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டதற்கு சில சமூகவியல் காரணங்களும் இருந்தன. மொரிஸ்கோ முஸ்லீம்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும், அதனால் மற்றவர்களை விட வசதி படைத்தவர்களாகவும் இருந்தனர். மேலும், அவர்கள் தங்களுடைய பூர்வீகமான வட ஆஃப்ரிக்கப் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிந்துவிடாமல் பின்பற்றி வந்தனர்.

இந்த மொரிஸ்கோ இன முஸ்லீம் மக்களைப் பற்றி அரபி, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் எஸ்பஞோல் மொழிகளில் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகளை பல ஆண்டுகள் ஆய்வு செய்து ராத்வா அஷூர் எழுதிய நாவல்தான் : க்ரனடா.

இந்த நாவலின் தொடர்ச்சியாக Mariama, Exodus என்ற மேலும் இரண்டு நாவல்களை எழுதினார் ராத்வா அஷூர்.

சலீமா என்ற பெண்ணின் குடும்பம் முழுமையும் ஸ்பானியர்களால் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதே க்ரனடா Trilogy-இன் கதை.

                                      0

க்ரனாடா

சலீமா அங்கே அழைத்து வரப்பட்டு இரண்டு நாட்கள் ஆகின்றன. அந்த நான்கு பேரும் அவளை விசாரணை செய்யும் தோரணையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கையில் காகிதங்களும் மயிலிறகும் இருந்தன.

சுருக்கம் விழுந்த முகத்துடனிருந்த அந்த வயதான நீதிபதி தன் தொண்டையைக் கணைத்தபடி தலையைப் பின்னுக்கு இழுத்தார். பிறகு மீண்டும் ஒருமுறை தொண்டையைக் கணைத்துக் கொண்டு அவர் கூறியதை எழுத்தர் தன் மயிலிறகை மையில் தோய்த்து எழுதத் துவக்கினார்.

“1527-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதியாகிய இன்று, இந்த நீதிமன்றம், சலீமா பின் ஜாஃபர் என்ற பழைய பெயர் கொண்ட க்லோரியா ஆல்வரஸாகிய உன் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களைக் கர்த்தரின் பெயரால் விசாரிக்க முன்வந்துள்ளது. ஆமென்…”

“…தாயத்துகள் மற்றும் மூலிகைப் பொருட்களைக் கொண்டு ஏவல், பில்லி, சூன்யம் செய்வதெல்லாம் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசாங்கப் பாதுகாப்புக்கும் எதிரானது.”

காகிதத்தில் மயிலிறகு ஏற்படுத்திய சப்தத்தை சலீமாவினால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

குழிக்குள் கிடப்பது போல் உள்ளொடுங்கியிருந்த கண்களை இடுக்கியபடி தனது ஆட்காட்டி விரலால் அவளைச் சுட்டிய நீதிபதி பைபிளின் மீது சத்தியப் பிரமாணம் செய்யும்படி ஆணையிட்டார்.

“உன் பெற்றோரின் பெயர் என்ன? உயிரோடு இருக்கிறார்களா? இறந்துவிட்டார்களா?”

“என் தந்தையின் பெயர் ஜாஃபர் இப்ன் அபு ஜாஃபர், புத்தக பைண்டர். கிறித்தவர்கள் க்ரனடாவுக்கு வருவதற்கு முன்பே இறந்து விட்டார். என் தாயார் பெயர் உம் ஹாஸன். ஞானஸ்நானம் செய்த பிறகு மரியா ப்ளாங்கா. உயிரோடு இருக்கிறார்.”

“பில்லி சூன்யம் செய்ததாக நீயோ உன் உறவினர்களோ இதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்களா?”

“இல்லை.”

“நீ திருமணமானவளா?”

“ஆம்.”

“உன் கணவனின் பெயர்?”

“கார்லோஸ் மானுவல். ஞானஸ்நானம் செய்வதற்கு முன்பு ஸாத்.”

“உன் கணவன் எங்கேயிருக்கிறான்?”

நீதிபதியின் அருகில் அமர்ந்திருந்த மூன்று பேரும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டதை கவனித்த சலீமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ தவறான பதிலைச் சொல்லிவிட்டோம் என்று தோன்றியது.

“எப்போது உன் கணவன் வீட்டை விட்டுப் போனான்?”

“பல வருடங்களுக்கு முன்னால்.”

“எத்தனை வருடம்?”

“ஆறு வருடம்.”

“உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பெண் குழந்தை.”

“அவள் பெயர் என்ன? எத்தனை வயது?”

 “அவள் பெயர் எஸ்பரான்ஸா. மூன்று வயது.”

“உன் கணவன் உன்னை விட்டுச் சென்று ஆறு ஆண்டுகள் ஆவதாக இப்போதுதானே சொன்னாய்?”

“இடையில் ஒருமுறை வந்தார். என்னுடன் இருந்து விட்டுப் போய் விட்டார்.”

திரும்பவும் அவர்கள் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். எழுத்தர் சிரித்தபோது அவரது முன்பற்கள் தெரிந்தன.

“நீ பில்லிசூன்யம் வைப்பது உண்டா?”

“இல்லை.”

“அப்படியானால் உன் வீட்டில் கிடைத்த பொருட்களைப் பற்றி என்ன சொல்கிறாய்?”

“அதெல்லாம் என்னிடம் வரும் வியாதிஸ்தர்களை சொஸ்தப்படுத்துவதற்கான மூலிகைப் பொருட்கள்.”

“அதை எப்படிக் கற்றுக்கொண்டாய்?”

“நானாகவே கற்றுக்கொண்டேன்.”

“நீயாகவா அல்லது புத்தகங்கள் மூலமா?”

ஒருக்கணம் நிதானித்த அவள் சொன்னாள். “புத்தகங்கள் கிடைக்க எனக்கு வாய்ப்பில்லை. எனக்குக் காஸ்த்தில் மொழி தெரியாது. அரபிப் புத்தகங்கள் அரசால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.”

“அப்படியானால் உன்னிடம் நாங்கள் பறிமுதல் செய்த புத்தகங்கள் பற்றி என்ன கூறுகிறாய்?”

“அவை என்னுடையதல்ல. என் வீட்டில் எந்தப் புத்தகங்களும் இல்லை. எங்களிடம் எப்போதும் புத்தகங்கள் இருந்ததில்லை.”

“அப்படியானால் நீ பில்லி சூன்யம் செய்வதையும், நீ மருத்துவம் என்று சொல்வதையும் சைத்தானிடமிருந்துதான் கற்றுக்கொண்டாய் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை.”

“பேய் பிசாசுகள்தான் புயலை உண்டாக்குகின்றன, கால்நடைகளை சாகடிக்கின்றன, மனிதர்களிடம் வியாதிகளைப் பரப்பி அவர்களை அழிக்கின்றன என்பதை நீ நம்புகிறாயா?”

“புயல், கால்நடைகள் சாவது, மனிதர்களுக்கு ஏற்படும் வியாதி போன்றதெல்லாம் இயற்கையான காரணங்களால் ஏற்படுகின்றன. அக்காரணங்களைப் பற்றி ஓருவேளை நாம் அறிந்திராமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவை பேய் பிசாசுகளால் உண்டாவதில்லை?”

”மக்கள் ஏன் உன்னை வெறுக்கிறார்கள்? ஏன் உன்னைப் பார்த்து பயப்படுகிறார்கள்? ஏன் உன்னுடைய பார்வையைத் தவிர்க்கிறார்கள்? ஒருமுறை நீ ஒருவரிடம் ‘என்னிடம் அப்படிப் பேசாதே’ என்று சொல்லியிருக்கிறாய். அன்று இரவு பூராவும் அவன் தாங்க முடியாத வலியில் துடித்திருக்கிறான். மற்றொரு முறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைத் தொட்டிருக்கிறாய். இரண்டு தினங்களில் அந்தப் பெண் இறந்து விட்டாள். ஒரு பெண் தன் குழந்தையைக் குணப்படுத்தச் சொல்லியிருக்கிறாள். நீ செய்த சூனியத்தில் அந்தக் குழந்தை ரத்தம் கக்கிச் செத்துவிட்டது.”

“நீங்கள் முதலில் சொன்னது நடந்திருக்கலாம்.  யாராவது என்னிடம் மோசமாகப் பேசியிருந்தால் ‘அப்படிப் பேசாதீர்கள்’ என்று நான் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் யாரிடம் அப்படிச் சொன்னேன் என்று எனக்கு நினைவில்லை. அன்றைய இரவு அவருக்கு வலி ஏற்பட்டது சந்தர்ப்பவசமாகவே நடந்திருக்க வேண்டும்.

இரண்டாவது சம்பவம்: அந்தப் பெண்ணை நான் ஒரு தெருவில் பார்த்தேன். என்னைப் போல் புதிதாக கிறித்தவ மதத்திற்கு மாறிய ஒரு அரபிப் பெண். தன் வயிற்றிலுள்ள குழந்தை ஏன் அசைவேயில்லாமல் இருக்கிறது என்று கேட்டாள். அவள் வயிற்றில் கை வைத்துப் பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டது போல் தெரிந்தது. அந்த இறந்த குழந்தையினால் அவள் வயிறு விஷமாகி இறந்திருக்கிறாள்.

மூன்றாவது சம்பவமும் உண்மைதான். ஒரு காஸ்த்தில் (ஸ்பானிய) பெண் என் வீட்டுக்கு வந்தாள். தன் குழந்தைக்கு சுகமில்லை என்றும், நான் வந்து அவனைப் பார்க்க வேண்டுமென்று அழுது கொண்டே கூறினாள். தெரியாதவர்களின் வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம் என்று என் சகோதரர் கூறினார். நான் பார்த்தபோது சிறுவன் ரத்தமாகக் கக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய நகக்கணுக்களும் உடம்பும் நீலம் பாரித்துக் கிடந்தன. காப்பாற்றக்கூடிய நிலையைத் தாண்டியிருந்த அவன் கிட்டத்தட்ட செத்துக்கொண்டிருந்தான்.”

“நீ பில்லிசூனியம் செய்ததை ஒப்புக் கொள்கிறாயா?”

“பில்லி சூன்யத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று ஏற்கனவே சொன்னேன்.”

“சைத்தான் இருப்பதை நீ நம்பவில்லையா?”

“எனக்குத் தெரியாது.”

“சைத்தானை நீ நம்புகிறாயா இல்லையா? உண்டு அல்லது இல்லை என்று சொல்.”

அவர்கள் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். எழுத்தருக்கு சுவாரசியமான நாடகம் ஒன்றைப் பார்ப்பது போலிருந்ததாகத் தெரிந்தது.

“சைத்தான் என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

அவள் சற்று தணிந்த குரலிலேயே அந்த பதிலைக் கூறினாள். ஆனால் சொன்னவுடனேயே தான் சொன்னது தவறு என்பதை அவள் உணர்ந்தாள். ஏனென்றால் நீதிபதியின் முகத்தில் தான் வெற்றியடைந்து விட்டதைப் போன்ற மந்தகாசப் புன்னகை உண்டானது.

“ஆம், சைத்தான் இருப்பதை நான் நம்புகிறேன்.”

“ஆக, நீ சைத்தானை வணங்குகிறாய்?”

அவள் குழம்பித் தடுமாறினாள்.

“வணங்குவதா? எப்படி?”

“நீ கர்த்தருக்கு பதிலாக சைத்தானையே வணங்குகிறாய்.”

“நிச்சயமாக இல்லை.”

“எப்படிச் சொல்கிறாய்?”

வெற்றிகரமான தோரணையுடன், அவளுடைய குற்றத்தை மிக நிச்சயமாக ருசுப்படுத்தும் தடயத்தைக் காட்டுவதுபோல் ஒரு சிறுகாகிதத்தை எடுத்து நீட்டினார் நீதிபதி. அவருடைய உதவியாளர்கள் மிகவும் திருப்தியடைந்தது போல் தலையை ஆட்டி ஆமோதித்துப் புன்னகைத்தனர்.

“என்ன இது? அருகே வந்து இந்தக் காகிதத்தைப்பார்.”

சலீமா அந்தக் காகிதத்தைக் கூர்ந்து பார்த்தாள். அதில் ஒரு ஆடு அல்லது மானின் படம் வரையப்பட்டிருந்தது. மறுபடியும் பார்த்தபோது அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது.

“எனக்கு அவ்வளவு நன்றாகப் படம் வரையத் தெரியாது.”

“இந்தப் படம் நீ வரைந்ததுதான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?”

“என்னிடம் ஒரு மான் இருந்தது. அது எனக்கு மிகவும் பிரியமான மான். அதைத்தான் நான் வரைய முயற்சி செய்தேன்.”

நீதிபதி சத்தமாகச் சிரித்தார். அவரைத் தொடர்ந்து அவரது இரண்டு உதவியாளர்களும், எழுத்தரும் சிரித்தார்கள்.

“அது ஒரு ஆடு, மான் அல்ல.”

“நீதிபதி அவர்களே, எனக்கு அவ்வளவாகப் படம் வரைய வராது என்று சொன்னேன்.”

“இல்லை. அதுதான் நீ தினந்தோறும் இரவில் சம்போகித்த ஆடு.”

“என்ன, சம்போகித்த ஆடா?”

“ஆமாம், உன்னைக் கெடுத்து உன்னோடு உறவு கொண்ட ஆடு. உன் கணவன் உன்னைவிட்டு விலகக் காரணமாக இருந்த ஆடு. அது ஆட்டு வடிவத்திலிருக்கும் சைத்தான். அந்த சைத்தானின் விருப்பத்திற்கு இணங்கவே நீ வேலை செய்கிறாய்.”

கழுத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, தலையை வெறித்தனமாக ஆட்டியபடி, முகம் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிய, அவளை நோக்கித் தன் ஆட்காட்டி விரலை நீட்டி, தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தினார் நீதிபதி.

இந்த முட்டாள்களின் பைத்தியக்கார விளையாட்டில் நானும் பங்கு பெற்றிருக்கும் இந்தத் தருணம் உண்மையில் நிஜம்தானா அல்லது, கனவா? ஒரு துண்டுச் சீட்டைக் காண்பித்து ஒரு ஆட்டோடு படுத்துக் கொண்டாய் என்கிறான் ஒரு நீதிபதி. அவளைக் கைது செய்தவர்களோ அதைவிட வேடிக்கையாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன் அவளுடைய புத்தகங்களைக் கலைத்துப் போடும்போது அவன் கைகளைப் பிடித்துத் தடுக்க முயன்றாள் அவள். உடனே அவன் தன் கையை ஏதோ பாம்போ தேளோ கடித்து விட்டது போல் பயந்து அலறிக்கொண்டு “என்னைத் தொடாதே!” என்று அலறினான். அவர்கள் அவளைக் கைது செய்து ஒரு முரட்டுக் காளையைக் கட்டுவது போல் கட்டி, ஒரு கூடையில் போட்டுக் கொண்டு வந்தார்கள்! இல்லை, காளை மாட்டை கூடையில் போடுவதில்லை. ஆட்டையோ, கோழியையோ, முயலையோதான் கூடையில் அடைப்பார்கள். அதுபோல் அன்றைய தினம் சலீமா பின் ஜாஃபரை ஒரு கூடையில் போட்டுக்கொண்டு வந்தார்கள்! எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவள் சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பு அழுகையைப்போல் வெளிப்பட்டது. அதற்கு மேல் அவள் சிரிக்கவில்லை.

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பு, முரட்டுத்தனமான முகத்தைக் கொண்ட ஒரு தடித்த பெண் அவளுடைய தலைமயிரை மழித்து மொட்டையடித்தாள். பிறகு அவள் ஆடைகளைக் கழற்றச் செய்து நிர்வாணமாக்கி, அவளுடைய அக்குள், தொடை, ஜனன உறுப்பு, மூக்கு, காது என்று எல்லா இடங்களையும் மழித்தாள். அவள் என் உடம்பில் எதைத் தேடுகிறாள்? எல்லாம் ஒரே அபத்தமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் இருந்தது. இந்த நீதிபதி என் கண்களைத் தோண்ட வருவதுபோல் விரலை நீட்டி ”நீ சம்போகித்த ஆடு” என்கிறான்.

சிறையில் தனியாக அடைந்து கிடத்த போது சலீமா மிகவும் பீதியடைந்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் எதைத்தான் தேடுகிறார்கள் என்று அவளுக்குப் புரியவே இல்லை. பிறகுதான் தெரிந்தது, அவர்கள் தேடியது அவளைத்தான். ஆனால் ஏன்? ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குச் செல்லாதது பற்றித்தான் அவர்கள் விசாரிக்கப் போகிறார்கள் என்று அவள் நினைத்தாள். ஆனால் நீதிபதியோ அது பற்றிப் பிரஸ்தாபிக்கவேயில்லை

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முதலில் அவள் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வளவு அவமானத்துக்கிடையில் அது சாத்தியமா? கடவுளால் படைக்கப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் முன்பக்கமாகத் தானே நடக்கின்றன? ஆனால் அவள் பின்பக்கமாக நடத்தி அழைத்து வரப்பட்டாள். ”திரும்பு” என்று அந்தப் பெண் கத்தியதும் திரும்பினாள். அவள் ஆத்மாவையே ஊடுருவி விடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் நீதிபதியும் அவரது உதவியாளர்களும். அவர்களுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்? பெரும் பீதியடைந்த சலீமாவுக்கு அவர்களின் மண்டையை உடைத்து அவர்களைத் துண்டு துண்டாக வெட்டியெறிய வேண்டும்போல் தோன்றியது. குறைந்த பட்சம் அது அவளது சீற்றத்தை அடக்கக்கூடும். ஆனால் இந்த அவமானம்? இந்த அவமானத்தை எதனால் சரி செய்ய முடியும்? எதனாலும் அல்ல. அவளுக்கு நடந்ததெல்லாம் நடந்ததுதான்… “நீ சம்போகித்த ஆடு!” அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிரிப்பதா? அழுவதா? அல்லது அவர்களின் மண்டையை உடைப்பதை விட்டு விட்டு சுவரில் தன் மண்டையை மோதி உடைத்துக் கொள்வதா…..? ”நீ சம்போகித்த ஆடு!”

அந்த நீதிபதி நன்கு படித்த ஒரு ஞானவான் என்பது விசாரணை முடியும் வரை சலீமாவுக்குத் தோன்றவேயில்லை. நீதியின் தராசை அவர் மிக சரியாகப் பிடித்துக்கொண்டிருந்தார். தன் உதவியாளர்கள் அவளிடம் தேவையில்லாமல் அத்துமீறுவதை அவர் ஒரு சிறிதும் அனுமதித்ததில்லை.

“அந்தக் குழந்தையையும் நாம் கைது செய்தாக வேண்டும். அது சைத்தானின் வித்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. அவளுடைய வாக்குமூலம் அதைச் சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறது. அவள் கணவன் அவளை விட்டுப் பிரிந்து சென்று ஆறு வருடங்கள் ஆகின்றன. குழந்தையோ மூன்று வருடங்களுக்கு முன்னால் பிறந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணுக்கும் ஆட்டின் வடிவத்தை எடுத்திருக்கும் சைத்தானுக்குமிடையே ஏற்பட்ட சம்போகத்தின் காரணமாகப் பிறந்ததே அந்தக் குழந்தை” என்று வாதிட்டார் நீதிபதியின் உதவியாளர்.

புன்னகைத்தார் நீதிபதி.  எப்போதுமே அவர் தனது உதவியாளர்களிடம் பரிவுடனும் கருணையுடனும்தான் நடந்து கொள்வார். ஏனென்றால் அவருக்கு நன்றாகத் தெரியும்: திருச்சபையின் மீது அவர்களுக்கு இருக்கும் அளவு கடந்த நம்பிக்கையே அந்தக் கோபத்தின் காரணம் என்று.

“என் அருமை அலோன்ஸோ, சைத்தான் என்பது ஆவி ரூபத்தில் இருப்பது. அதற்கு உடம்பு கிடையாது. அதனால் ஒரு ஜீவனை உண்டு பண்ண முடியாது.”

“ஆனால் தந்தையே! சைத்தான் இந்தப் பூமியின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு அலைந்து உயிரின் வித்துக்களைத் தேடியெடுத்து புருஷர்களின் வித்துகள் உட்பட தான் விரும்பும் தீய உயிர்களை உருவாக்குகிறதே? மனித விந்துவைச் சேகரித்து அதைப் புருஷர்களின் சரீரத்தில் வைத்துப் பாதுகாக்கும் சைத்தான்கள் பற்றி ஞானி அகஸ்டின் தனது புனித நூலின் மூன்றாம் பாகத்தில் சொல்லுகிறார். மேலும், மிகப்பெரும் அறிஞரான Walafrid Strabo-வும் யாத்ராகமம் ஏழுக்கான வியாக்கியானத்தில் பூமியெங்கும் சுற்றியலையும் சைத்தான்கள் எல்லாவிதமான வித்துக்களையும் சேகரித்து, அவற்றின் மூலம் அசாதாரணமான ஜீவன்களை உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார். அதே வியாக்கியானத்தில் ராட்சஸப் பிறவிகள் என்பவை காமாந்தகரமான சைத்தான்கள் ஸ்த்ரிகளுடன் வெட்கங் கெட்டு சம்போகம் செய்வதால் ஜனிப்பவை என்ற குறிப்பும் இடம்பெறுகிறது.”

மிகெல் அகிலாரின் ஆழ்ந்த வாசிப்பும், நீண்ட கால அனுபவமும் அவரது குரலில் ஒரு சுய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தன. அவருடைய வாதம் மிகுந்த நிதானமாகவும் தெளிவாகவும் அமைந்திருந்தது.

“அருள் தந்தை அந்தோனியோ கூறியதுபோல் சைத்தான் ஒரு ஆவி. குழந்தையை உருவாக்குவதென்பது ஸ்தூல சரிரம் ஒன்றின் குணாம்சம்.  சைத்தான்கள் எவ்வளவு வலிமையுடைவையாக இருந்தாலும், அவைகளின் திறமை எவ்வளவு விசேஷமானதாக இருந்தாலும், அவைகள் பீடித்திருக்கும் சரீரத்தின் மூலமாக அவைகளால் ஒரு ஜீவனை உருவாக்க முடியாது. இந்தப் பூமியில் அவைகளால் வியாதிகளைப் பரப்ப முடியும். புயல்களை உருவாக்க முடியும். புருஷர்களை நபும்ஸகர்களாக மாற்ற முடியும். அவைகள் எங்கே சென்றாலும் தங்களோடு நரகத்தையும் உடன் எடுத்துச் செல்ல முடியும். தங்களை எதிர்க்காத சரீரத்தைப் பிடித்துக் கொள்ள முடியும். மனிதர்களைத் துன்புறுத்தவும் அழிக்கவும் முடியும். சைத்தான்களால் இது எல்லாம் முடியும். ஆனால் ஒரே ஒரு உயிருள்ள ஜீவனைக்கூட மனித சரீரத்தில் அவைகளால் உருவாக்க முடியாது.”

“அப்படியானால் அந்தக் குழந்தை சைத்தானுடையது இல்லை?”

அலோன்ஸோவின் குரல் பரிதாபமாக இருந்தது.

அதற்குள் அருள் தந்தை அகாபிதா பதில் சொன்னார். “இல்லை. அந்தக் குழந்தை சைத்தானுடையது அல்ல. அது வேறொரு மனிதனுடையது. அவனிடமிருந்த விந்து ஒரு சைத்தானால் நேரடியாகவோ அல்லது வேறொரு சைத்தான் மூலமாகவோ கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சைத்தான்கள் பலவிதமானவை. இந்த வழக்கில் அந்தக் குழந்தை சைத்தானின் சக்தியால் உருவாகவில்லை. ஆனால் அதில் சைத்தானின் பங்கு மறைமுகமாக உள்ளது. நமக்கோ, குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணுக்கோ தெரியாத ஒரு மனிதனின் மூலமாக சைத்தான் அந்தக் காரியத்தை நடத்தியுள்ளது.

“அப்படியானால் இந்தப் பெண் எரிக்கப்பட வேண்டாமா?”

அலோன்ஸோவின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

“எரிக்கப்படமாட்டாள்!”

அகாபிதாவின் குரல் உறுதியாக இருந்தது.

ஒரு சிறிய மௌனத்தைத் தொடர்ந்து அகாபிதாவின் வார்த்தைகள் வெளிப்பட்டன. “நான் சிந்தித்துக்கொண்டிருப்பது இந்தக் கேள்வியைப் பற்றியல்ல. பெரும் அறிஞர்களான நமது முன்னோர்களின் எழுத்துக்கள் இது பற்றி மிகத் தெளிவான பதில்களைத் தருகின்றன. ஆனால் என்னுடைய யோசனை என்னவென்றால், இந்தப் பெண் தன்னுடைய குற்றம் எல்லாவற்றையும் முழுமையாகச் சொல்லிவிட்டாளா இல்லையா என்பதை அறிய இவளைச் சித்ரவதைக்கு உட்படுத்தலாமா வேண்டாமா என்பது பற்றித்தான்.”

மிகெல் அகிலார் பதில் கூறினார். “இன்று இந்தப் பெண் மூன்று வாக்குமூலங்களை அளித்திருக்கிறாள். ஒன்று நேரடியானது. அவள்தான் அந்த ஆட்டை வரைந்திருக்கிறாள். இரண்டாவது வாக்கு மூலத்தை முதலில் சொல்லிவிட்டுப் பிறகு மறுத்து விட்டாள். அவள் கணவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவளை விட்டு ஓடிவிட்டான்;அவள் குழந்தையின் வயது மூன்று. மூன்றாவது வாக்குமூலம் தெளிதவாக உள்ளது. சைத்தான் இருப்பது பற்றி அவளுக்கு உறுதியாகத் தெரியாது.”

அலோன்ஸோ கூறினார். “இந்த மூன்றாவது வாக்குமூலம் மட்டுமே அவளைத் தண்டிக்கப் போதுமானது. சைத்தான் இருப்பது பற்றித் தெரியாது என்று கூறுவதன் மூலமாக அவள் கத்தோலிக்க நம்பிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றை மறுக்கிறாள். இருந்தாலும், அவள் தனது குற்றங்களை முழுமையாகக் கூறிவிட்டாளா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அவளைச் சித்ரவதைக்கு உட்படுத்துவதுதான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது.”

அகாபிதாவை நோக்கித் திரும்பி அவர் மேலும் கூறினார். “அருள் தந்தையே, ஒரு விசாரணையின்போது நீங்கள் சொன்னீர்கள். சைத்தான்களின் வலிமையான சக்தி தங்களுடன் இருப்பதால்தான் சூன்யம் செய்பவர்கள் அசாதாரணமான அளவில் அமைதியாகவும், அழாமலும் இருக்கிறார்கள். சித்ரவதையிலிருந்து சைத்தான் தன்னைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு அந்த சக்தியைக் கொடுக்கிறது.”

“உண்மைதான். இன்றும் நான் சொன்னது நிரூபணமாகியிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவள் நம்மைக் கெஞ்சவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சைத்தானுடன் அவளுக்கு மிக நெருக்கமான உறவு இருக்கிறது என்பதற்கு இந்த ஒன்றே சாட்சி. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? சித்ரவதையா? இரண்டாவது விசாரணையா?”

மிகெல் அகிலார் செருமிக்கொண்டே கூறினார். “மற்றொரு விசாரணையே நல்லது. இதே கேள்விகளை நாம் அவளிடம் கேட்போம். அவள் அதே பதில்களைக் கூறுகிறாளா என்று பார்ப்போம். மேலும் புதிய கேள்விகளையும் கேட்போம். அதிலிருந்து அவளுக்கு சித்ரவதை தேவையா இல்லையா என்று முடிவு செய்வோம்.”

இந்த முடிவுடன் அவர்கள் திருப்தியுற்று நீண்டதொரு வேலை நாளின் களைப்பில் இரவு உணவுக்காகக் கலைந்தனர்.

சிறையின் தனிமையில் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றாள் சலீமா. அவளால் உறங்க முடியவில்லை. கண்களைத் திறந்து வைத்துக்கொண்டால்தான் எலிகளை விரட்ட முடியும். தீய கனவுகளின் காரணமாக விழித்து எழுந்து அலறுவதிலிருந்தும் தப்பிக்க முடியும். தன் மீதான குற்றங்கள் ருசுவாகி விட்டதாக அந்தத் தடித்த பெண் வந்து சொன்னாள். நூற்றுக்கணக்கானவர்களை எரித்ததுபோல் தன்னையும் அவர்கள் எரிக்கப் போகிறார்கள். அந்தக் காட்சியை அவள் தன் மனக்கண் முன் கொண்டுவந்தாள். அவள் எரிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு முன்னே அவளைக் கயிறுகளால் பிணைத்துக் கட்டி அந்தச் சதுக்கத்திற்குக் கொண்டு செல்வார்கள். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதைப் போல் அவளும் எரிக்கப்படுவாள். தாத்தா எப்படி இதையெல்லாம் தாங்கிக் கொண்டார்? அந்தப் புத்தகங்கள் அனைத்தின் மீதும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு பக்கமாகப் பரவிய தீ தனது கோர பசியைத் தீர்த்துக் கொண்டதை எப்படி அவர் கண் கொண்டு பார்த்தார்? கடைசியில் சாம்பல்தான் எஞ்சியிருக்கும். வெறும் சாம்பல்… அதில் எழுதப்பட்ட எண்ணற்ற விஷயங்கள்? அந்த எழுத்தெல்லாம் எங்கே சென்றிருக்க கூடும்?”

ஒரு விசாரணையின் போது அவர்கள் அவளை பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டின் மீது நடக்கச் செய்தார்கள். அப்போது நீதிபதி கேட்டார். இறக்கைகளுள்ள ஒரு பிராணியின் மீது அமர்ந்து அவள் இரவில் வெகுதூரம் பயணித்ததுண்டா என்று. முஸ்லீம்களின் தீர்க்கதரிசியான முகம்மதுவைத் தவிர வேறு யாரும் அப்படிச் சென்றதாகத் தான் கேள்விப்பட்டதில்லை என்று அவள் பதில் கூறினாள். அவள் கூறிய பதிலை அவர்கள் விளக்கச் சொன்னார்கள். மெக்காவிலுள்ள ஒரு மசூதியிலிருந்து ஜெருசலேமிலுள்ள மற்றொரு மசூதிக்கு முகம்மதுவை அப்படி இறக்கைகளுள்ள பிராணியொன்று தூக்கிச் சென்றது என்ற விஷயத்தை அவள் அவர்களுக்குச் சொன்னாள். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமென்று அவள் வாஸ்தவமாகவே நம்புகிறாளா என்று கேட்டார் நீதிபதி. அப்போதுதான் அவள் சற்று தன்னை சுதாரித்துக்கொண்டு “நான் ஞானஸ்நானம் பெற்றவள். கிறித்தவளாக மாறியவள்” என்று பதில் கூறினாள்.

இந்தப் புதிய விபரங்கள் வழக்கில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தின. அதாவது, குற்றம் சாட்டப்பட்டவள் சைத்தானுடன் உறவு வைத்திருப்பதோடு மட்டும் நிற்கவில்லை. அவளுடைய மத நம்பிக்கையையே சந்தேகப்படும் அளவுக்கு அவளுடைய குற்றம் நீண்டு சென்றது. ஞானஸ்தானம் பெற்ற பிறகும் அவள் தனது பழைய மத நம்பிக்கையை விடவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் சைத்தானுடன் அவள் கொண்டுள்ள விவகாரங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடும்.

குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். அது நடக்காதபோது நீதிபதி அவளை எச்சரித்தார். “சுலபமாக முடிந்து விடும் என்று எண்ணாதே. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளைச் சுமந்தபடி நீ நடக்க வேண்டியிருக்கும்.”

தான் அதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னாள் அவள்.

இரண்டு கைகளாலும் அந்தக் கம்பியைச் சுமந்து கொண்டு அவள் நடப்பதை அவர்கள் பார்த்தார்கள். எப்படி அவளால் அது முடிகிறது? நினைக்கும்போதே அவர்கள் தேகம் நடுங்கியது. எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக் கொண்டிருந்தார் எழுத்தர்.

இவ்வளவு வலிமையான ஒரு சூன்யக்காரியிடமிருந்து தங்களுக்கு ஏதும் நேர்ந்துவிடாமல் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது பற்றி நீதிபதி தன்னையும் தன் உதவியாளர்களையும் மெச்சிக்கொண்டார். காப்பாற்றிக்கொண்டது எப்படியென்றால், அவர்கள் தங்களது கருப்பு நிற அங்கிகளுக்குள்ளே இயேசு கிறிஸ்து இறுதியாகக் கூறிய ஏழு வார்த்தைகளும் பொறிக்கப்பட்ட சிலுவையை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

“சித்ரவதையைத் தவிர வேறு வழியில்லை!” அருள் தந்தை அகாபிதா அறிவித்தார்.

நடப்பது பெரும் வேதனையாக இருந்தது. அவள் பாதங்கள் தீய்ந்து கருகி வீங்கியிருந்தன. கட்டப்பட்டிருந்த கைகள் ஒன்றோடொன்று உராய்வதை அவள் தவிர்க்க முயற்சித்தாள். காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் கைகள் புண்ணாகியிருந்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த அவள், தன்னைச் சுற்றிலும் பார்க்கவில்லை. அவர்கள் அவளுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகிறார்கள். பீதியில் அவள் வயிறு சுருங்கவில்லை. பயத்திலோ, கோபத்திலோ அவள் கூச்சலிடவில்லை. ஏன்? ஆத்மாவையும், சரீரத்தையும் துன்புறுத்தும் இந்தக் கொடுமையான வேதனையிலிருந்து விடுபடுவதற்கு மரணமே தீர்வென்று கடவுளிடம் அவள் மன்றாடுவதாலா?

தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் கூச்சல் சலீமாவின் தலையில் சம்மட்டி அடிகளாய் விழுந்தன. அக்கூட்டத்தைப் பார்ப்பதை அவள் தவிர்த்தாள். அவர்கள் அவளுடைய கால் விலங்கைக் கழற்றி அவளைக் கழுமரத்தை நோக்கி இட்டுச் சென்றார்கள்.