வாசகர் வட்ட சந்திப்பு நடத்தி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சீனியின் புத்தக வெளியீட்டு விழாவில் கூடினால் அது வா.வ. சந்திப்பு. அப்படி இறுதியாக உத்தண்டியில் கூடினோம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகக் கூடவில்லை. கொரோனா போனால் மாமல்லபுரத்தில் சந்திக்கலாம். ஆனால் அதற்கு முன்னதாக சில திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு முதல் அடியாக சீனி என் பேச்சைக் கேட்க வேண்டும். லௌகீகமாக நான் ஒரு பூஜ்யம் என்பதால் சீனியும் சரி, காயத்ரியும் சரி, நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை என்று விரதம். ஆனால் இந்த வா.வ. சந்திப்புக்கு மட்டும் சீனி என் பேச்சைக் கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அது என்னவென்றால், சும்மா சந்திப்புக்கு வந்து சும்மா ஜல்லியடிக்கும் சும்மா நண்பர்களை அழைக்கக் கூடாது. அந்த நண்பர்களும் எனக்குத் தேவைதான். அவர்களை நாம் இங்கே ப்ரூ ரூமிலோ அமேதிஸ்டிலோ சந்தித்துக் கொள்வோம். கேப்பச்சினோ செலவு அவர்கள் கொடுப்பதாக இருந்தால். மற்றபடி வா.வ. சந்திப்புக்கு வருபவர்கள் சற்றே சீரியஸாக இருக்க வேண்டும். அட, அது கூட வேண்டாம். மற்றவர்களை வேலை வாங்கக் கூடாது. என்னுடைய மதமே அதுதான் என்று சொல்லியிருக்கிறேன். அடுத்தவர் உழைப்பில் வாழாதே. அதுதான் என் மதம். நீங்கள் அப்படி இருந்தால் அது உங்கள் விருப்பம். ஆனால் என் சந்திப்பில் நீங்கள் வரலாகாது. வந்தால் இங்கே வெங்காயம் நறுக்க வேண்டும். நறுக்கிப் பழக்கம் இல்லையென்றால், தண்ணீர் மொண்டு கொடுக்க வேண்டும். அதுவும் பழக்கமில்லை என்றால் பஸ்ஸைப் பிடித்து ஓடி விடுங்கள்.
கடைசியாக நடந்த வாசகர் வட்டச் சந்திப்பில் கார்த்திக் ஒரு தண்ணீர் கேனைக் கொண்டு வந்து எல்லோருக்கும் நடுவில் வைத்தார். நாங்கள் பத்து பேர். எனக்கு மட்டும் ஒரு ஜக்கில் தண்ணீர். அதை யாரும் எடுக்கக் கூடாது. ஏனென்றால், எனக்குத் தண்ணீர்தான் காற்று. ஒரு மணி நேரம் பேசியிருப்போம். பிறகு கார்த்திக்கே அந்தக் கேனைத் திறந்து ஜக்கில் தண்ணீர் நிரப்பினார். உடனே மற்ற ஒன்பது பேரில் ஐந்து பேர் ஒருவர் மாற்றி ஒருவராக அந்த ஜக்கில் தண்ணீர் குடித்தனர். நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். ஜக் காலி. அரை மணி நேரம் சென்றது. ஜக்கை கார்த்திக்கே மீண்டும் நிரப்பினார். இப்போதும் ஐந்தாறு பேர் ஜக்கிலிருந்து தண்ணீர் குடித்தனர். என்னுடைய ஒரே கேள்வி என்னவென்றால், உங்களை உங்கள் மனைவிமார் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?
இனி இப்படி நடவாது. கார்த்திக் என்ன உங்கள் எடுபிடியா? அடுத்தவன் உழைப்பில் வாழ உங்களுக்கு வெட்கமாக இல்லை? நான் இம்மாதிரி நண்பர்களைக் குறிப்பிட்டு ஏற்கனவே சீனியிடம் சொல்லி அவர்கள் வர வேண்டாம் என்றேன். அவர்தான் என் பேச்சைக் கேட்பதில்லை என்ற சபதம் ஆயிற்றே? தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். எனவே, இனி அவர்கள் வந்தால் நான் வருவதாக இல்லை என்று முடிவு செய்து விட்டேன். இதற்காக அந்த நண்பர்கள் மீது எனக்குக் கோபம் என்று அவர்கள் நினைக்கக் கூடாது. நாளையே கூட அவர்களை நான் ப்ரூ ரூமில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். காரணம், அங்கே நமக்குப் பணிவிடை செய்ய சம்பளம் போட்டு ஆள் இருக்கிறார்கள். எனவே எனக்கு உங்கள் மீது எந்தக் கோபமும் வருத்தமும் இல்லை. நாம் ஒரே அறைவாசிகளாகத்தான் இருக்க முடியாதே தவிர நண்பர்களாக இருக்கலாம். மேலும், இந்த நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் மரியாதையிலோ செய்யும் உதவியிலோ எந்தக் குறைவும் வைப்பதில்லை.
அடுத்த விஷயம், பணம். சந்திப்பு முடிந்து சந்திப்புக்கான பணத்தை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. எனவே முன்கூட்டியே பணம் கொடுத்து விட்டால்தான் நலம். நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை. ஒன்றிரண்டு பேர்தான். அந்த ஒன்றிரண்டு பேர்தான் அடுத்தவர் உழைப்பில் குளிர் காய்வதும் கூட.
சரி, இன்னொரு சம்பவம் சொல்கிறேன். சுரேஷ் வான்கோழிக் கறியை வறுத்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். பெரிய பீங்கான் தட்டு. தட்டு முழுக்கவும் கறி. சுற்றி வர நான்கைந்து பேர். நான் வா.கோ. கறி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாப்பிடுவேன். இதுவரை வாழ்வில் நான்கைந்து முறைதான் சாப்பிட்டிருக்கிறேன். ரொம்பப் பிடிக்கும். ஆனால் வள்ளலாருக்கு மாறிய பின் ரொம்பக் கம்மி. மீனோடு சரி. அவர் கொண்டு வந்து வைத்ததும் ஒரு துண்டு எடுத்துக் கொண்டேன். பேசி விட்டு அடுத்து துண்டுக்காகப் பார்த்தேன். தட்டு காலி. அடப் பாவிகளா! ஒரு துண்டு கூடவா இல்லாமல் காலி பண்ணுவீர்கள்? அதுவும் உங்கள் குருவுக்காக? சரி, இப்படி வான்கோழிக் கறி என்றதும் முண்டி அடிக்கிறவர்கள் செலவு என்றதும் ஏனப்பா ஓடி ஒளிகிறீர்கள்? சுரேஷ், இனிமேல் நானும் சீனியும் மட்டும் வருகிறோம். வான்கோழிக் கறி போட்டு விடுங்கள். ரெண்டு துண்டாவது சாப்பிட வேண்டும்.
இன்னொரு உயிர் நண்பர். என் தற்கொலைப் படை. இத்தனை ரூபாய் ஆச்சுய்யா, உம் பங்கைக் கொடு என்று கேட்டால், சாரு அண்ட் கோவுக்கு (மொத்தம் பத்து பேர்) சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன், மூவாயிரம் செலவாச்சு. அதுதான் என் ஷேர் என்று சொல்லி விட்டார். அட ஹராமே! இப்போது அந்த உணவே ஹராமாகி விட்டதே? இப்படிக் கணக்குப் பார்ப்பீர் என்றால் நான் எங்கேயாவது கையேந்தி பவனில் புளியோதரை சாப்பிட்டிருப்பேனே ஐயா?
ஆனாலும் அடிக்கடி வா.வ. சந்திப்புகள் நடத்துவதே நல்லது. அப்போதுதான் ராஜா வெங்கடேஷ், கார்த்திக், சிவசலபதி, கஜன், நாகராஜ், சுரேஷ் ராஜமாணிக்கம், திருவேங்கடம் போன்ற அற்புதமான நண்பர்களைச் சந்திக்க முடிகிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோற்றம் தரும் வினித்தின் பேருரை போன்றவற்றை அனுபவம் கொள்ள முடிகிறது. (பெயர் குறிப்பிடாத நண்பர்கள் மன்னிக்க. மறதிதான் காரணம். மெயில் போட்டால் ஒவ்வொரு பெயராகச் சேர்த்து விடுகிறேன். இணைய எழுத்தில் இதுதான் வசதி. அச்சு என்றால் ஒன்றும் பண்ண முடியாது. சீனி, இந்த போஸ்டையே தூக்கி விட வேண்டும் என்றாலும் தூக்கி விடுகிறேன். ஆனால் அதற்குள் மக்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டால் நான் பொறுப்பு அல்ல!) கிருஷ்ணா, உங்களைப் போன்றவர்களும் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
சீனி, அடுத்த சந்திப்பில் நறுக்கி பத்து பேர் போதும். அவர்களிடம் நீங்கள் பணமே கேட்க வேண்டாம். அவர்கள் நம் குடும்பத்தைப் போல. கோவில் விழா போல் அவர்களே செய்து கொடுப்பார்கள். நீங்கள் சும்மா உங்கள் பங்கை மட்டும் கொடுத்தால் போதும். பேர் கேளுங்கள். ரகசியமாகச் சொல்கிறேன் வாட்ஸப்பில்…
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai