எஸ்.ரா.வின் பேட்டி ஒன்றைப் பற்றி பலரும் சிலாகித்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். முகநூலிலும் பார்த்தேன். எல்லோருமே அதில் கொண்டாடும் குறிப்பிட்ட விஷயம், அதில் உள்ள நேர்மறையான எண்ண அதிர்வுகள். உதாரணமாக, எஸ்.ரா.வுக்கு வாசகர் ஒருவரின் போஸ்ட் கார்ட் போகிறது. என்னடா எழுதுறே, உன் கை காலை வாங்குவேன். அந்தக் கார்டில் வாசகரின் விலாசமும் இருப்பதால் அவர் வீட்டுக்கே போகிறார் எஸ்.ரா. அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். அந்த வாசகர் எஸ்.ரா.வுக்குத் தேநீர் போட்டுக் கொடுக்கிறார்.
இதை சிலாகிப்பவர்களிடம் சொல்ல எனக்கு ஒரு வார்த்தை இருக்கிறது. கை காலை வாங்க நினைக்கும் வாசகர்களை எழுத்தாளர்கள் எல்லோருமே எஸ்.ரா. எடுத்துக் கொண்டதைப் போல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது சாத்தியம் இல்லை. லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் தேநீர் கிடைக்கும். நான் போனால் முக தாட்சண்யத்துக்காக வேண்டுமானால் தேநீர் கொடுப்பார்களே தவிர நான் வீட்டுக்குத் திரும்பியதுமே “டேய், உன்னை உதைக்காமல் விட்டதற்காக மிகவும் வருந்துகிறேன், அடுத்த முறை உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கடிதம் வரும். உடனே நான் எதிர்மறை எண்ண அதிர்வுகளைப் பரப்புபவன் என்று சொல்லாதீர்கள். வள்ளலாரை விடவும் சாந்தமான ஒரு எழுத்தாளர் – கிட்டத்தட்ட அவர் ஒரு ஞானி – என்னைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதிலும் நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில். அதிலும் அவரை நான் மிக நெருங்கிய நண்பராக நினைத்துக் கொண்டிருந்தபோது. திருப்பி அடிக்கக் கூட என்னால் முடியவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, அதிர்ச்சி. இரண்டு, அவர் என் கன்னத்தில் அறைந்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடி விட்டார்.
அடித்த காரணம் என்ன தெரியுமா? என்னுடைய சிறுகதைத் தொகுதியான நேநோ என்ற நூலில் புத்தகம் பற்றிய விவரங்களை (காப்பிரைட் பக்கம்) ஃப்ரெஞ்ச் மொழியில் அச்சிட்டிருந்தேன். ஆரம்பத்திலேயே அதை எடுத்து விட்டுத் தமிழில் போடுங்கள் என்று மிகவும் பதற்றமாகச் சொன்னார் கன்னத்தில் அறைந்த நண்பர். நான் சிரித்தபடி அவர் சொன்னதைத் தள்ளி விட்டு விட்டேன். அவருடைய உயிரினும் இனிய தமிழை என்னைப் போன்ற தமிழ்த் துரோகியிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார். வேறு அவருக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. நானும் அவர் அறைந்ததற்காகவே இன்னும் வேகமாக ஃப்ரெஞ்ச் கற்றுப் பார்த்தேன். ஃப்ரெஞ்சிலேயே எழுதி விடலாம் என்று ஒரு பேராசை. என் மூளையில் ஃப்ரெஞ்ச் ஏறவே இல்லை. தமிழ்த் தாய் என்னை பலமாக சபித்து விட்டாள் போலும்.
சரி, நேநோவில் புத்தகம் பற்றிய விவரத்தை ஏன் ஃப்ரெஞ்சில் போட்டேன்? என் புத்தகங்களை வெளியிட எந்தப் பதிப்பகமும் தயாராக இல்லை. நானே காசு கொடுத்தாலும் வெளியிட மறுத்தார்கள். அதனால்தான் நானே என் எழுத்தைப் பதிப்பித்தேன். அந்தக் கடுப்பில்தான் ஃப்ரெஞ்சில் போட்டேன். இன்னொரு காரணம், எனக்கு அரபி தெரிந்திருந்தால் அரபியில் கூடப் போட்டிருப்பேன். எனக்கு எல்லா மொழியும் என் தாய் மொழிதான்.
பொறி கலங்குவது போல் என்பார்கள் இல்லையா? இரண்டு மூன்று நாட்கள் கன்னம் வலித்தது. நண்பர் ரொம்பப் பதற்றத்தில் இருந்திருக்க வேண்டும். அடித்து விட்டு ஓட வேண்டும் அல்லவா? ஏனென்றால், அப்போது நான் வில்லன் நடிகர் பொன்னம்பலம் மாதிரி இருப்பேன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஓவியர் விஸ்வம் அதிர்ச்சியில் வெலவெலத்துப் போய் விட்டார். ஆள் வைத்துக் கூட உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் சொந்தப் பகை எதுவும் இல்லையே? அப்போது நான் நாத்திகன் வேறு. அதனால் இப்போது போல் எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பணம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு ஜாலியாக இருக்க முடியாது. பிறகு எப்போதும்போல் அதையும் மறந்து போனேன்.
அந்த எழுத்தாளர் யார் என்கிறீர்களா? வேண்டாம். ரொம்ப நல்லவர். வாழும் வள்ளலார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. மலையாளம் கற்றுக் கொண்டு மலையாளத்திலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். சந்தித்து இருபது ஆண்டுகள் இருக்கலாம். இப்போது சந்தித்தாலும் என்னால் மிக வாஞ்சையாகப் பேசிக் கொண்டிருக்க முடியும். அவராலும் முடியும் என்றே நினைக்கிறேன்.
இத்தனையும் என் இளவல் நரேஷுக்காக எழுதினேன். எல்லாவற்றையும் கண்டு உணர்ச்சிவசப் பட வேண்டியதுதான். அதுதான் கலைஞனின் உள்ளம். ஆனால் எஸ்.ரா.வுக்கு நடந்ததெல்லாம் எஸ்.ரா.வுக்கு மட்டுமேதான் நடக்கும். ஏன் தெரியுமா? புதுமைப்பித்தனை எல்லோரும் காறித் துப்பினார்கள். (ஜெயமோகனின் இரு நோயாளிகள் கதையில் புதுமைப்பித்தன் கூற்று) என்னைக் காறித் துப்பியதோடு நிறுத்தவில்லை. அடித்தார்கள். ஒருமுறை இரண்டு முறை அல்ல, பல முறை. மதுரையில் என்னுடைய நாடகத்தை அரங்கேற்றியபோது என்னை அடித்தார்கள். அப்போதும் கடுமையான அடிதான். மேலும் பலமான அடிகள் விழுவதைத் தடுத்து என்னைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்த நண்பர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.
இரண்டு முறை என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. ஒருவர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர். என்னை அன்று காப்பாற்றியவர் மனுஷ்ய புத்திரன். என்னைக் கொல்ல முயன்ற நண்பர் சென்ற ஆண்டு முகநூலிலேயே “உன்னை சென்ற முறை கொல்லாமல் விட்டு விட்டேன். மனுஷ் தடுத்து விட்டார். அடுத்த முறை அப்படி விட மாட்டேன்” என்று வெளிப்படையாக எழுதினார். வழக்குத் தொடுக்கலாம் என்று நினைத்தேன். இவர்களுக்காக என்னால் நீதிமன்றத்துக்கு அலைய இயலாது என்பதால் இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன்.
இன்னொரு கொலை முயற்சி. கொலை முயற்சி நடக்கும் என்று யூகித்து கார்ல் மார்க்ஸையும் பிரபு காளிதாஸையும் என் பாதுகாப்புக்காக அழைத்துப் போயிருந்தேன். இருவருமே கட்டுமஸ்தாக இருப்பார்கள். அப்போது நான் குடிக்காமல் இருந்த காலம். கார்ல் மார்க்ஸ் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்த போது என்னைத் தாக்க வந்து விட்டார் நண்பர். நல்லவேளை, பிரபு காளிதாஸ் காப்பாற்றினார். பிரபு இருந்திராவிட்டால் ஒரு அடியில் செத்திருப்பேன்.
ஏன் என்னைத் தாக்குகிறார்கள்? கொல்ல நினைக்கிறார்கள்? என் மீது பகையா? ஆக, அவர்களின் இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கைகளின் மீது நான் கை வைக்கிறேன். அந்த நம்பிக்கைகளின் அடிப்படைகளைத் தகர்க்கிறேன். என் நாடகத்துக்காக அடித்தவர்கள் “You are insulting the Theatre” என்று கத்திக் கொண்டே அடித்தார்கள். ஆக, அவர்களின் 2000 ஆண்டு நம்பிக்கையின் அடிப்படைகளைத் தகர்ப்பவனை சிறையில் தள்ளாமல், கொல்லாமல், தினந்தோறும் வசை கடிதங்களும், மிரட்டல் கடிதங்களும் எழுதுவதோடு விட்டு விடுகிறார்களே என்று எனக்கு மகிழ்ச்சிதான். அவ்வப்போது கிடைக்கும் அடிகளையும் அறைகளையும் போனஸாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கும் சாக்ரடீஸுக்கும் என்ன கிடைத்தது? அடிப்படைகளைத் தகர்ப்பவர்களுக்கு எப்போதும் மரணமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
எனவே என்னை வாசிப்பவர்களை நான் மயிலிறகால் வருடுவது இல்லை. நேர்மறையான எண்ண அலைகளை நான் உருவாக்குவது இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் குரல் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அது சமூகமாக இருந்தாலும் சரி. தத்துவமாக இருந்தாலும் சரி.