பிஞ்ஜ் செயலி இருந்திராவிட்டால் நான் ராஜேஷ்குமாரைப் படித்திருக்க மாட்டேன். கைபேசியில் ஒரு குறியீட்டை அழுத்தினால் ராஜேஷ்குமாரைப் படித்து விட முடிகிறது என்ற அருகாமைதான் காரணம். இல்லாவிட்டால் கிண்டிலில் கூடத் தேடிப் போய் படித்திருக்க மாட்டேன்தான். இலக்கியத் துறையில் இன்னமும் ஜீவித்திருக்கக் கூடிய ஒருசில தீவிரவாதிகளில் நானும் ஒருவன் என்பதால் கைபேசியில் கிடைத்தாலும் படிக்கக் கூடிய ஆள் இல்லை நான். ஆனாலும் படித்ததற்குக் காரணம், வணிக எழுத்தில் அந்தப் பெயர் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜில் புழங்கி வருவதுதான். இப்போது கூட அவருடைய தொடர்கதை 25 லட்சம் தடவை வாசிக்கப்பட்டிருக்கிறது. 56 அத்தியாயங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் எழுதும் அத்தனை பேரும் பிஞ்ஜில் எழுதுகிறார்கள், அந்த இரண்டு பேரைத் தவிர. ஆனாலும் அராத்துவின் மணி மகுடத்தில் மேலும் ஒரு சிறகாக அவருக்கு மட்டுமே பிஞ்ஜ் குழுவினரால் ’போதும் சார், நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்ற சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அடல்ட் கண்டெண்ட் காரணமாகவா சீனி என்று கேட்டேன். இல்லை, வாசிக்கும் எண்ணிக்கை கம்மியாம் என்றார். செய்தி கிடைத்த அன்று அவர் நண்பர்களுக்கு பியர் பார்ட்டி கொடுத்தார். பின்னே இருக்காதா? தமிழில் எழுதும் அத்தனை பேரையும் வெளியிடும் ஒரு நிறுவனம் தன்னை நிறுத்திக் கொள்ளச் சொல்கிறது என்றால் அது எப்பேர்ப்பட்ட கௌரவம்! சரி, விஷயத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்.
பிஞ்ஜ் செயலியின் காரணமாகத்தான் ராஜேஷ்குமாரைப் படித்தேன். ஒரு த்ரில்லர் என்ற வகையில் எனக்குப் பிடித்திருந்ததை ஏற்கனவே எழுதியிருந்தேன். பாலகுமாரனை இதுவரை படித்ததில்லை என்று எழுதியிருக்கிறேன். ஆனாலும் பாலா என் மதிப்புக்குரிய நண்பர். காரணம், என் எழுத்து பற்றி மிக நல்ல விதமாக பொதுவெளியில் கருத்து தெரிவித்த இரண்டு பேரில் அவரும் ஒருவர். இன்னொருவர், வாலி. மற்றவர்கள் அனைவரும் ரகசியமாக என்னிடம் மட்டுமே சொல்வார்கள். இடையிடையே சில நண்பர்கள் பாலாவின் எழுத்தை என்னிடம் காண்பிக்க அதில் இரண்டொரு பக்கங்களை வாசித்துப் பார்ப்பேன். உடனடியாக மனதில் ஒரு அசூயை உணர்வு உண்டாகும். சைவ உணவுக்காரர்களிடம் மாட்டுக் கறியைக் கொடுத்தால் எப்படி உணர்வார்கள், அது போல. ஏன் இந்த அசூயை என்று பகுத்தறிந்து பார்ப்பேன். மிகவும் எளிய காரணம்தான். அவரது ஒவ்வொரு எழுத்திலும், வாக்கியத்திலும் உள்ள பாசாங்குத்தன்மை. Pretention. அது அவரது பேனாவில் இல்லை. அது அவரது மனதிலிருந்து வரும் உணர்வு. அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார், சாரு, நான் முந்நூறு அக்கினிக் குண்டங்களைப் படைத்திருக்கிறேன் என்று. உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேனே தவிர வெளியில் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஆன்மீக ரீதியாக நான் மதிக்கும் ஒருவரை இலக்கிய ரீதியாக மறுத்துப் பேச எனக்கு மனம் வராது. பேசினால் நட்பு நிலைக்காது. தன் எழுத்தை மதிக்காத ஒருவனோடு அவர் பழகுவார் என்று நான் நம்பவில்லை. அவர் என்னிடம் பலமுறை கேட்டுக் கொண்ட உடையார் நாவலில் கூட ஒன்றிரண்டு அத்தியாயங்களைப் படித்திருக்கிறேன். பாசாங்குதான். இது இலக்கியம் என்ற பாசாங்கு.
இந்தப் பாசாங்கு சுஜாதாவிடம் ஒரு கடுகத்தனை கூடக் கிடையாது. சுஜாதாவும் வணிக எழுத்துதான். இலக்கியம் அல்ல. ஆனாலும் சுஜாதாவின் எழுத்தை இன்று கூட, இந்த க்ஷணம் கூட ஆசை ஆசையாகப் படிப்பேன். எப்படி விஜய் நடித்த கில்லி பிடிக்குமோ அப்படி. ஒரு எழுத்தில் கூட சுஜாதா தான் எழுதுவது இலக்கியம் என்ற கருத்தை முன்வைக்க மாட்டார். அப்பழுக்கற்ற பொழுதுபோக்கு எழுத்து என்றால் தமிழில் சுஜாதாதான். அலுக்கவே அலுக்காது. ஆனால் பாலா ஏதோ நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த கிழவர் மாதிரி அறுக்கிறார். ஒவ்வொரு சொல்லிலும் தெரியும் அவருடைய didactic குரல் என்னைப் போன்ற ஒரு நவீன மனிதனின் குரல்வளையை நசுக்குகிறது. ஓ, நீங்கள் அவருடைய கண்மணித் தாமரையைப் படிக்க வேண்டும், ஆஹா, அது கிளாஸிக் என்பார்கள். அதிலும் இந்தப் பாசாங்குதான் தெரியும் என உண்மையிலேயே நம்புகிறேன். பாலாவுக்கு வேறு மாதிரி எழுதவே வராது. அவருடைய மனசே அப்படிப்பட்டதுதான். போதிப்பதற்கே பிறந்தவர் அவர். ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் இருந்திருக்க வேண்டியவர். தவறுதலாக எழுத்துக்கு வந்து விட்டார்.
கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் அது இன்னொரு பயங்கரம். கதையிலேயே போதனை செய்பவர் கட்டுரை எழுதினால் என்ன நடக்கும்? ஒரு வார்த்தை படிக்க முடியாது. அந்த ஏரியாவில் சுஜாதா ஒரு மன்னன். தமிழ் வெகுஜன பத்தி எழுத்தில் சுஜாதாவை அடித்துக் கொள்ள இன்று வரை ஆள் கிடையாது. இனிமேலும் யாரும் வரப் போவதில்லை. வெகுஜன எழுத்தில் அந்த அளவுக்கு விஷய ஞானம் உள்ளவர்கள் இருக்க மாட்டார்கள்.
இத்தனைக்கும் சுஜாதா என் எழுத்தை மலம் என்று திட்டியவர். இத்தனைக்கும் சுஜாதா பழமலயைக் கூட கவிஞர் கவிஞர் என்று கொண்டாடியவர். பாலகுமாரனோ ”யாரும் எழுதத் துணியாததை சாரு எழுதுகிறார்” என்று எழுதியவர். ஆனாலும் என்னிடம் நன்றி என்ற குணம் அறவே கிடையாது. கொள்கைவாதிகள் அப்படித்தான் இருந்து தொலைய வேண்டியிருக்கிறது.
இது எல்லாம் பிஞ்ஜ் செயலியில் நேற்று பாலாவின் அப்பம் வடை தயிர் சாதம் என்ற தொடரின் ஒரு அத்தியாயத்தைப் படித்தபோது தோன்றியது. இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் போனில் எப்படி அரட்டை அடிக்கிறார்கள், தெரியும்தானே?
பெண்: என்னடா சாப்டியா?
ஆண்: ம்ம்ம்ம்
பெண்: அப்றம்?
ஆண்: ம்?
பெண்: என்னடா, பேசவே மாட்டன்றே?
ஆண்: அதான் கேட்டுட்டு இருக்கேன்ல?
பெண்: ம்…
ஆண்: ம்ம்ம்?
பெண்: என்னடா சாப்டே?
ஆண்: ம்ம்ம்ம்…
பெண்: என்னடா, எல்லாத்துக்கும் ம்ம்ம் போட்றே?
ஆண்: அட இருடி. யோசிக்கிறேன். ம்ம்ம்… ரைஸ்…
பெண்: எரும்மாடு… ரைஸ் சாப்பிடாம வேற என்னா சாப்பிடுவாங்க… வெறும் ரைஸா சாப்பிடுவாங்க?
ஆண்: ஏய், என்னாடி ஒரேயடியா ஓட்றே? யோசிக்க வுட்றீ…
பெண்: சரி சரி, யோசி யோசி…
ஆண்: ம்ம்ம்… என்னா கேட்டே? நீ குறுக்கால குறுக்கால ஓட்றதால யோசிக்கவே முடில…
பெண்: டேய், நீ இன்னிக்கு ரொம்பப் பண்றே… இன்னிக்கு நீ என்னா சாப்டே?
ஆண்: ம்ம்ம்… ரைஸ்…
பெண்: டேய் சுன்னி… என்னாடா இன்னிக்கு ஓவரா பண்றே?
ஆண்: ஏய் என்னாடி, கெட்ட வார்த்தைலாம் பேசறே?
பெண்: டேய், என்னாடா, என்னமோ இன்னிக்குத்தான் என்னய பாத்தா மாதிரி டம்கா வுட்றே?
இப்படி பல தொலைபேசி உரையாடல்கள் பல மணி நேரம் பேசப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். இந்த உரையாடலில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நான் எழுதியதன் காரணமாக ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் சுவாரசியம் எட்டிப் பார்த்து விட்டது. எதார்த்தத்தில் அது கூட இருக்காது. நாலு மணி நேர மொக்கை உத்தரவாதம். இப்படிப்பட்ட மொக்கை உரைநடைதான் அப்பம் வடை தயிர்சாதம். தரை மட்ட அடி மட்டம். இதை விட மட்டமாகத் தமிழில் எழுதவே முடியாது. ஒரு பெண் ஒரு கனவு காண்கிறாள். அதில் ஒருவித ஸாஃப்ட் போர்ன் வாடை அடிக்கிறது. தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் வரும் ஸாஃப்ட் போர்ன் வகை. கனவு முடிந்து இண்டர்நெட் பார்க்கிறாள். பக்கத்துத் தெருப் பையனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கும் செய்தி தெரிகிறது. நள்ளிரவாக இருந்தாலும் அப்பாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குப் போய், கதவைத் தட்டியும் யாரும் எழுந்து கொள்ளாததால், கட்டைச் சுவர் ஏறிக் குதித்து, உள் கதவு தட்டி எழுப்பி செய்தி சொல்கிறாள்.
இது ஒரு அத்தியாயம்.
நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னாலும் நான் இப்படி எழுத மாட்டேன்.
நான் இனி சொல்லப் போவதை நீங்கள் கவனமாக வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் வணிக எழுத்தின் எதிரி அல்ல. யார் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். எல்லோராலும் நகுலனையும் செல்லப்பாவையும் மட்டுமே படிக்க முடியாது. இலக்கியமும் கலையும் எல்லோருக்கும் பொதுவானது அல்ல. இலக்கியம் படிக்க ஓரளவுக்கு முன் தயாரிப்பு வேண்டும். சாமான்யர்களால் இலக்கியம் படிக்க முடியாது. நகுலன் எல்லோருக்கும் புரிய மாட்டார். எனவே பாலகுமாரன்களும், பட்டுக்கோட்டை பிரபாகர்களும் ஒரு சமூகத்துக்குத் தேவைதான்.
ஆனால்,
இந்த ”ஆனால்” தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது. இந்த மொழியில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு தீராத யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பலராலும் வாசிக்கப்படுவதால் வணிக எழுத்துதான் மக்கள் இலக்கியம் என்ற ஒரு கருத்து சமூகத்தில் நிலவுகிறது. அதன் காரணமாகவே இலக்கியத்துக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை. அதனால்தான் பாரதியை ராஜாஜி போன்ற தலைவர்கள் கொண்டாட மறுத்தார்கள். அதைப் புரிந்து கொண்டதால்தான் காந்தி ராஜாஜியைப் பார்த்து புத்திமதி சொல்லும் தோரணையில் “இவர் (பாரதி) உங்கள் மொழியின் சொத்து” என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் பாரதியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை, படித்ததும் இல்லை. வெறும் பார்வையில், வெறும் ஒரு சந்திப்பில் பாரதியின் மேன்மையை காந்தி உணர்ந்து கொண்டார். ஏனென்றால், தாகூர் தன்னை விட எட்டு வயதே மூத்தவர் என்றாலும் காந்தி தாகூரை குருதேவ் என அழைத்தார். எழுத்தாளர்களை குரு என்றும் ஆசான் என்றும் அழைக்கும் மரபைச் சேர்ந்தவர் காந்தி. இலக்கியத்தால் மட்டுமே தன்னையும் தன் தத்துவங்களையும் உருவாக்கிக் கொண்டவர் காந்தி என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவருடைய அஹிம்சைத் தத்துவத்தை உருவாக்கியதில் திருவள்ளுவருக்கும் பங்கு இருக்கிறது.
ஆனால் தமிழில் இலக்கியம் என அறியப்படுவது வணிக எழுத்து. மேலே நான் குறிப்பட்டவை அல்ல. அதனால்தான் இங்கே பாரதி காலத்திலிருந்தே வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் தீராத போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் மடிந்தவர் புதுமைப்பித்தன். கல்கிக்கு எதிராக நடந்தது அந்தப் போர். ஜனரஞ்சகமாகப் பலரும் படிப்பதே இலக்கியம் என்று கல்கி வாதிட, புதுமைப்பித்தன் அதற்கு எதிராக நின்றார். ஆனால் தமிழ்ச் சமூகத்தின், புதுமைப்பித்தனின் துரதிர்ஷ்டமும் அவலமும் என்னவென்றால், அந்தக் கல்கியே கடைசியில் புதுமைப்பித்தன் வறுமையில் வாடிய போது பணம் சேகரித்துத் தரும்படி ஆனது.
அதற்காக புதுமைப்பித்தன் கல்கிக்கு நன்றிக் கடன் பட வேண்டுமா என்ன? நடப்பது போர். வணிக எழுத்து இலக்கியம் அல்ல, பொழுதுபோக்குக்காக எழுதப்படும் குப்பைக் கூளம் என்பதைத் தொடர்ந்து இங்கே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
அதனால்தான் சி.சு. செல்லப்பா தன் பிதுரார்ஜித சொத்தை விற்று, தன் மனைவி கொண்டு வந்த ஏராளமான நகைகளை விற்று எழுத்து பத்திரிகையை நடத்தினார். எழுத்து இல்லாமல் இருந்தால் நான் இல்லை, இன்று இலக்கியம் எழுதும் ஒருத்தருமே இல்லை. எழுத்து பத்திரிகையை மூட்டையாகக் கட்டி தோளில் சுமந்து கொண்டு ஒரு கிழவர் கல்லூரி கல்லூரியாக நடந்து சென்று விற்றார் என்பது ஒரு போராளியின் செய்கை இல்லையா? என் நட்புக் கண்மணி ஒன்று நேற்று சே குவேராவின் பிறந்த நாள் என்று செய்தி அனுப்பியிருந்தது. டேய் தம்பி. பழுப்பு நிறப் பக்கங்கள் நூலில் செல்லப்பா பற்றி நான் எழுதியிருந்ததைப் படித்திருக்கிறாயா?
நாங்களே பத்திரிகை நடத்தினோம். நாங்களே நாவல்களும் சிறுகதைகளும் எழுதி வெளியிட்டோம். விற்றோம். விமர்சித்தோம். இப்படித்தான் ஒரு ஆயிரம் பேர் இலக்கியம் வளர்த்தோம். இங்கே வந்து ஏதோ சாணி மாதிரி எழுதி விட்டு இலக்கியம் அது இது என்று உளறுகிறீர்களே, அதை எதிர்ப்பதற்காக என் குடும்பம், என் உறவு, என் நட்பு, என் உயிர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருப்பேன்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai