சாரு,
வணிக எழுத்தும் இலக்கியமும் படித்து மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால், இதே பிரச்சினை பற்றி நீங்கள் குறைந்தது நூறு முறையாவது எழுதியிருப்பீர்கள். இன்னும் கூட இதை எழுதித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்தான். இந்தச் சிறிய கட்டுரையைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். அதையெல்லாம் கேள்விகளாகத் தொகுத்திருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் எங்களுக்கு நேரிலேயே பலமுறை விளக்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் பலருக்கு இந்தச் சந்தேகங்கள் எழலாம் என்பதால் கேட்கிறேன்.
1.நன்றி என்ற குணம் என்னிடம் அறவே கிடையாது என்கிறீர்கள். இது பலராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். நன்றி என்பது மிக உயர்ந்த குணம் என்பதே எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் திருவள்ளுவரால் கூட. விளக்கம் தேவை.
2. வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் யுத்தம் என்றால், நீங்கள் ஏன் பாக்கெட் நாவல் பதிப்பகத்தின் மூலம் ஸீரோ டிகிரி நாவலைக் கொண்டு வந்தீர்கள்? தினமலரில் பல காலமாக எழுதினீர்கள்? இப்போதும் பிஞ்ஜில் பாலகுமாரனும், பட்டுக்கோட்டையும், ராஜேஷ்குமாரும், இவர்களோடு நீங்களும் எழுதுகிறீர்கள். இல்லையா? இதை எப்படிப் புரிந்து கொள்வது?
3. இலக்கியம் பல்லாயிரக்கணக்கான பேரைச் சென்றடைவது தவறா?
ஸ்ரீராம் சோமசுந்தரம், சென்னை.
டியர் ஸ்ரீராம்,
கேள்விகளுக்கு நன்றி. பொதுவாக மைய நீரோட்டத்தில் புழங்கும் ஒரு வார்த்தையை இலக்கியவாதியும் பயன்படுத்துகிறார் என்றால், அதை ஒரே அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. எப்படி ஜனரஞ்சகமாகப் பயன்பாட்டில் இருக்கும் வார்த்தை ஆன்மீகவாதிகளிடம் வேறு அர்த்தத்தைப் பெறுகிறதோ அப்படி. அதே மாதிரிதான் நன்றியும். உதாரணமாக, ஒரு கலைஞனின் வாழ்க்கை எந்தத் தருணத்திலும் சமரசம் அற்றதாக இருக்க வேண்டும் என்று எனக்குக் கற்பித்த ஆசான் சுந்தர ராமசாமி. ஒரு கனவானாகவும், எல்லோராலும் மதிக்கப்படுகின்றவராகவும் அறியப்பட்ட சு.ரா. அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததும் அகிலனை மலக்கிடங்கு என்று வர்ணித்தார் இல்லையா? அகிலனே மலக்கிடங்கு என்றால் பாலகுமாரன் அதற்கும் கீழே என்றுதான் சொல்ல வேண்டும். அசோகமித்திரன் கூட என்னிடம் சொன்னார், ”இப்படியெல்லாம் திட்ட வேண்டுமா, அகிலன் எவ்வளவு நல்லவர், எல்லோரும் ராமசாமி மாதிரி எழுத வேண்டும் என்று நினைப்பது அராஜகம் இல்லையா, ஒரு சமூகத்தில் எல்லா விதமான எழுத்தும் இருந்து விட்டுத்தான் போகட்டுமே, ஏன் இலக்கியவாதிகள் எல்லாம் இப்படி குரூரமாக இருக்கிறார்கள்?”
அசோகமித்திரனுக்கு நான் பதில் சொல்லவில்லை. பெரியவர்களிடம் நான் தர்க்கம் செய்வதில்லை. ஆனால் அசோகமித்திரன் வெறும் எழுத்தாளர் மட்டும்தான். ஆனால் சு.ரா. சமூகத்தில் ஒரு கலாச்சார மாற்றத்தை வேண்டிப் போராடும் போராளிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர். பாரதி, புதுமைப்பித்தன், செல்லப்பாவிலிருந்து தொடங்கி வந்துள்ள பெரும் பயணம் அது. அந்தப் போராட்டத்தில் அசோகமித்திரன் காலத்திய போராளி சு.ரா. அதனால் அப்படி எதிர்வினை செய்தார் சு.ரா.
அகிலன் நல்லவர் என்பதற்காக ஞானபீடம் கொடுக்கப்படவில்லை. இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட பரிசு. மலத்தைப் போல் எழுதிய ஒருவருக்கு அப்பரிசு அளிக்கப்பட்டதன் மூலம் தமிழின் கலாச்சார சீரழிவு இன்னும் தீவிரமடைந்தது. அதை எதிர்த்துப் பேச ஒருத்தராவது இருந்தாரே என்பதுதான் நம்முடைய நல்லூழ்.
ஆனால் அதே சுந்தர ராமசாமி ஜே.ஜே. சில குறிப்புகள் என்று ஒரு சராசரி நாவலை எழுதி இலக்கியம் என்று சொன்னபோது நான் அதை எதிர்த்து, விமர்சித்து ஒரு தனிப் பிரசுரமே போட்டேன். ஐயோ, என் ஆசானாயிற்றே என்று மலைத்து நிற்கவில்லை. சமரசம் செய்து கொள்ளவில்லை. எதிர்க்கக் கற்பித்ததே சு.ரா.தானே? ஆனால் சு.ரா. தன்னுடைய நாவல் இலக்கியம் என்று நம்பினார். அது முக்கியம். நம்பாமல் அவர் பொய் சொல்லவில்லை.
அதே சமயம் அசோகமித்திரன் தன் வாழ்வில், தான் நம்பிய அறத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. சமூக அநீதிகளை எதிர்த்து அவர் கட்டுரை எழுத மாட்டார். அவர் போராளி அல்ல. அவர் ஒரு சாதாரண கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த, ஒரு பயந்த பிராமணன். எனவே சு.ரா.விடம் காணும் அறச் சீற்றத்தையெல்லாம் அசோகமித்திரனிடம் காண முடியாது. அசோகமித்திரனின் ஒரே கவலை, சைக்கிள் டயர் மாற்ற வேண்டும். அதற்குக் காசு வேண்டும். ஹிண்டுவில் கட்டுரை வந்து ஒரு வாரம் ஆயிற்று. பாழாப்போனவன் எப்போ மணியார்டர் அனுப்புவானோ என்று போஸ்ட்மேனையே பார்த்துக் கொண்டிருப்பார். அந்தக் காலத்தில் போஸ்ட்மேன்தான் அவருடைய கடவுள். ஆனாலும் அவர் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை. ஆனந்த விகடன் பத்திரிகை அவரை வாழ்நாள் பூராவும் தடை உத்தரவு போட்டிருந்தது. விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனை கரைந்த நிழல்கள் நாவலில் ஒரு பாத்திரமாகப் படைத்து விட்டார் அசோகமித்திரன். அதை விகடன் ஆசிரியர் ரசிக்கவில்லை. (யார்தான் ரசிப்பார்?) வாழ்நாளுக்கான தடை உத்தரவு போட்டார். ஆனால் அதே விகடன் மூலம் ஜெயகாந்தன் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். அசோகமித்திரன் பாலசுப்ரமணியனின் தந்தையிடம் பணி புரிந்தவர். வாசனும் அசோகமித்திரனின் தந்தையும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். அதை வைத்துக் கொண்டு அசோகமித்திரன் ஒரு நடை விகடன் அலுவலகம் சென்று பாலசுப்ரமணியனிடம் ஸாரி சொல்லியிருந்தால் அசோகமித்திரனின் வறுமையே அகன்றிருக்கும். பாலசுப்ரமணியன் மிகவும் தாராள குணம் கொண்டவர். எழுத்தாளர்களை வாழ வைத்தவர். அசோகமித்திரன் அதைச் செய்யவில்லை. செய்யவில்லை என்ன செய்யவில்லை? நினைத்தது கூட இல்லை.
நன்றி பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். நித்யானந்தாவை நம்பினேன். நெருக்கமான நண்பர்கள் ஆனோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் போலி என்று தெரிந்ததும் விலகினேன். குமுதத்தில் தொடர் கட்டுரை எழுதினேன். அவர் தரப்பிலிருந்து தொடரை நிறுத்திக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் வந்தது. அதற்குப் பதிலாக இரண்டு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவு ஒரு தொகையும் தருவதாகச் சொன்னார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. கொஞ்சம் காரத்தையாவது குறையுங்கள் என்று கேட்டு, அதற்கும் ஒரு மாபெரும் தொகை பேசப்பட்டது. நான் அப்போதுதான் என் ப்ளாகில் “வீட்டில் அரிசி இல்லை. வாசகர்கள் பணம் அனுப்பினால் நான் லௌகீகக் கவலைகளை மறந்து எழுத வசதியாக இருக்கும்” என்று எழுதினேன். தமிழ் ஸ்டுடியோ அருண் மாதாமாதம் நான் அரிசி கொண்டு வந்து தருகிறேன் என்று பல வருடங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொருத்திப் பாருங்கள். ஐநூறு ரூபாய்க்காக ப்ளாகில் பிச்சை எடுக்கிறேன். மூன்று கோடி தருகிறேன் என்கிறார் ஒரு சாமியார். அதை மறுப்பது என் அறம். ஆனால் அருணுக்கும் நான் நன்றியாக இருக்கவில்லை. சென்ற ஆண்டு அநீதிக் கதைகள் என்று தன்னுடைய சிறுகதைத் தொகுப்பை அருண் அனுப்பினார். நீங்கள் படித்தால் மகிழ்ச்சி அடைவேன் சாரு என்றும் சொன்னார். இன்னும் படிக்கவில்லை. நான் ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். 1700-ஆம் ஆண்டு ஒரு இத்தாலியப் பயணி ஔரங்கசீப்பை சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறான். பொடி எழுத்தில் 900 பக்கம். ஐந்து தொகுதிகள். எஸ் என்ற ஆங்கில எழுத்து எஃப் என்ற எழுத்து போல் அக்காலத்தில் அச்சாக்கம் செய்தார்கள். மண்டை உடைகிறது. நான் எங்கே அருணுக்கு நன்றியுடன் இருப்பது? ஆனால் அருணுக்குத் தெரியும். அவர் அதை எதிர்பார்க்க மாட்டார். ஆனால் சராசரி மனிதனாக இருந்தால் நிச்சயம் என்னை நன்றி கெட்டவன் என்றுதான் நினைப்பான். அதனால்தான் குறிப்பிட்டேன், மைய நீரோட்ட மொழிக்கும் இலக்கியவாதிக்கும் மொழிக்கும் வித்தியாசம் உண்டு என்று. காரணம், அணுகுமுறையும் மதிப்பீடுகளும் வேறு வேறு. இந்தக் காலகட்டத்தில்தான் ஞாநி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் “சாரு நிவேதிதா ஒரு இண்டர்நெட் பிச்சைக்காரன்” என்று எழுதினார். என்னை காசுக்கு விற்பதை விட பிச்சைக்காரனாக இருப்பது மேல் என்றே எண்ணினேன். என் அறத்தையும், என் மதிப்பீடுகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பிச்சை எடுப்பது தவறாகத் தெரியவில்லை.
திமுக ஆட்சியில் நான் துக்ளக்கில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அரசியல் வேண்டாம் என்று சோ சொல்லி விட்டதால் பொதுவாக எழுதினேன். ”எங்கே உன் கடவுள்?” என்ற தொகுப்பில் அக்கட்டுரைகள் உள்ளன. ஆனால் தேர்தலுக்கு இரண்டு மாதம் இருக்கும்போது ஒரே ஒரு அரசியல் கட்டுரை எழுத அனுமதி வாங்கிக் கொண்டேன். அதில் துல்லியமாக திமுக வாங்கக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை, அதிமுக எண்ணிக்கை இரண்டையும் எழுதினேன். சோ என்னை நேரில் அழைத்து, “என்ன இது, ஒரேயடியாக அடித்து விட்டிருக்கிறீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். எல்லா பத்திரிகைகளும் திமுக தான் வரும் என்று எழுதின. நான் 25 தொகுதி என்று எழுதினேன். அதிலும் தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பு. ”நான் அதிமுக சார்பு உள்ளவன் அல்ல. அப்போதைய நிலை அப்படி” என்று விளக்கினேன். அவர் அதிமுக பார்டரில்தான் ஜெயிக்கும் என்றார்.
முதல்வர் ஆன பிறகு ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேண்டாம் என்று மறுத்து விட்டேன். சந்தித்திருந்தால் ஒரு வீடோ சில கோடிகளோ கிடைத்திருக்கும். அப்படி வாங்கிய ஒரு நண்பரையும் எனக்குத் தெரியும். மேலும், ஜெயலலிதா எழுத்தாளர்களிடம் வேறு மாதிரி பழகுபவர். தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலும் திமுக சார்பு உள்ளவர்கள் என்பதால் ஜெயலலிதாவின் அந்த முகம் தெரியாமலே போயிற்று. இரண்டு மூன்று கோடிகளை விட என் சுதந்திரம் பெரிது என்று தோன்றியது எனக்கு.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக் கொண்டிருந்தால் எப்போதோ நான் எம்.பி. ஆகியிருக்கலாம். ஒருபோதும் நான் லௌகீக ஆதாயங்களுக்காக என் சுதந்திரத்தை இழக்க நினைத்தது இல்லை.
இதுதான் நான் நம்பும் அறம். மேலும், கலைஞர்களிடம் நீங்கள் நன்றியே எதிர்பார்க்கலாகாது. உதாரணமாக, ஒரு ஆன்மீகவாதியை உங்கள் இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை செய்வதற்கு இரண்டிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் கட்டணம். ஆனால் எழுத்தாளர்கள் ஆன்மீகவாதிகளை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். நான் சொல்லவில்லை. மகா பெரியவர் சொல்கிறார். ஒரு ஆன்மீகவாதியே ஒரு தேசத்தின், ஒரு பண்பாட்டின், ஒரு மொழியின் அடையாளமாக ஒரு ஆன்மீகவாதியைச் சொல்லவில்லை. ஒரு எழுத்தாளனைச் சொல்கிறார். அப்படியிருக்கும்போது நான் எப்படி உங்களுக்கு நன்றி பாராட்ட முடியும்? நான் சாமிக்கு பாலாபிஷேகம் பண்ணினேன், காவடி எடுத்தேன், தினமும் விளக்கு ஏற்றினேன், சாமிக்கு நன்றியே இல்லை என்று ஒருத்தர் சொல்லலாமா?
நான் சாமியைப் போன்றவன்.
ஆனால், ஸ்ரீராம், நான் என் அறத்தை மீறி, சாமியாரிடம் காசு வாங்கிக் கொண்டு, அவரோடு ஒத்துப் போயிருந்தால் நீங்கள் என்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாம். சாரு என் ஆசான் ஆயிற்றே என்று நன்றி பாராட்டக் கூடாது. என்னை மறுத்து விட்டு என்னைத் தாண்டி நீங்கள் போக வேண்டும். அப்படி நான் என்னை விற்றிருந்தால் நீங்கள் நன்றி மறந்தே ஆக வேண்டும். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. பணம் வாங்கிக் கொள்ள மறுத்து, தொடர்ந்து எழுதியதால் சாமியார் என் மீது பெங்களூரில் வழக்குப் போட்டார். மூன்று கிரிமினல் வழக்குகள். எட்டு ஆண்டுகள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போய் நீதிமன்றத்தில் காலையிலிருந்து மாலை வரை நின்று கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமை ஹியரிங் என்றால், கையில் போதுமான மாத்திரைகள் வைத்திருப்பேன். ஒவ்வொரு முறையும் பெயில் வாங்க வேண்டும். ஒன்றிரண்டு முறை போகாத போது கர்னாடகா போலீஸ் அரெஸ்ட் வாரண்டோடு வீட்டுக்கு வந்து விட்டது. ஒருமுறை வீட்டிலிருந்து தப்பியோடினேன்.
ஏன்?
சமரசம் செய்து கொள்ள மறுத்ததால். உலகம் பூராவும் எழுத்தாளர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். எனக்காக ஒரு நண்பர் வீடு கட்டிக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்வோம். நான் அவருக்கு வாழ்நாள் பூராவும் நன்றி பாராட்ட வேண்டும். ஆனால் அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்றால், அவரையே நான் ஒதுக்கித்தான் தள்ளுவேன்.
ஏற்கனவே எழுதியிருக்கிறேனே, எனக்கு உலக இலக்கிய வரைபடத்தில் இடம் பிடித்துக் கொடுத்த என் ஆங்கிலப் பதிப்பாசிரியர். நான் வாழ்நாள் முழுமையும் நன்றி பாராட்டியிருக்க வேண்டும். பாராட்டவில்லை. Granta பத்திரிகையில் தமிழ் சமகால இலக்கியத்தின் அடையாளமாக அவர் ராஜேஷ்குமாரையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். அது pulp fiction ஆந்த்தாலஜி என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அது ஒரு இலக்கியத் தொகுப்பு. அதற்கு மேலே குறிப்பிட்ட pulp எழுத்தாளர்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொடுத்தபோது, நான் வாழ்நாள் முழுதும் நன்றி பாராட்டியிருக்க வேண்டிய பதிப்பாளரை நோக்கி, “நீங்கள் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மீது மூத்திரம் அடித்து விட்டீர்” என்று எழுதினேன்.
நன்றி பாராட்டவில்லை. எனக்கு எது உயிர்மூச்சாக இருக்கிறதோ அது அவமானப்படுத்தப்படும்போது நான் போராளியாக மாறுகிறேன்.
இதற்கும் மேல் இது பற்றி எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
உங்கள் இரண்டாவது கேள்விக்கு பதில்தான் மூன்றாவது கேள்வி. பாக்கெட் நாவல் அசோகன் ஸீரோ டிகிரியை வெளியிடவில்லை. நான்தான் வெளியிட்டேன். நான்கைந்து மறுபிரசுரத்துக்குப் பிறகு அசோகன் அதை பத்து ரூபாய் மலிவுப் பதிப்பாக வெளியிட்டார். எனக்கு அதிலெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு வார்த்தை மாறாமல் வந்தது நாவல். நான்தான் பிழைதிருத்தம் செய்தேன். அசோகனின் அலுவலகத்தில் தட்டச்சு செய்பவருடன் ராப்பகலாக ஒரு வாரம் தங்கி அதைச் செய்தேன். பல ஆயிரம் பேரை என் எழுத்து சென்றடைவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எல்லா எழுத்தாளருக்குமே அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். குமுதத்திலும் நான்கு ஆண்டுகளாக எழுதுகிறேன். எதை எழுதுகிறேன் என்பதுதான் முக்கியம். பிஞ்ஜில் நான் எழுதிய அ-காலமும் ஔரங்கசீப்பும் சீரியஸ் இலக்கியம். பல்ப் ஃபிக்ஷன் அல்ல. இதுதான் முக்கியம். உயிர்மையில் எழுதியதையே குமுதத்தில் எழுதுகிறேன். பிஞ்ஜில் எழுத மாட்டேன் என்று சொல்வது பாலகுமாரன் வசிக்கும் தெருவில் வசிக்க மாட்டேன் என்று சொல்வதற்குச் சமம். எங்கே எழுதினாலும் என் எழுத்து ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஆனால் எது இலக்கியம், எது ஜனரஞ்சகம் என்ற பாகுபாடு தெரிய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கு அந்தப் பாகுபாடு தெரிவதில்லை. ஹேமா ஆனந்ததீர்த்தன், பி.வி.ஆர்., ஜெகசிற்பியன், வே. கபிலன், புஷ்பா தங்கதுரை, புனிதன், லட்சுமி, சாவி போன்ற வணிக எழுத்தாளர்களின் பெயர் இப்போது யாருக்குத் தெரியும்? வணிக எழுத்தின் காலம் அந்த எழுத்தாளர் உயிரோடு இருக்கும் வரைதான். ஆனால் இலக்கியம் அது எழுதப்பட்ட மொழி வாழும் வரை வாழும்.