ஹெல்லோ…

சிலருக்கு இளைய ராஜாவைப் பார்த்தாலே உணர்ச்சி மிகுதியில் அழுகை வந்து விடும். சிலர் அவரைப் பற்றிப் பேசும்போதே அழுது விடுவார்கள். சிலர் அவரைப் பார்த்ததுமே காலில் விழுந்து விடுவார்கள். அவர்களின் ரத்த ஓட்டமாக இருப்பவர் இளைய ராஜா. எம்.எஸ். விஸ்வநாதனைப் பலருக்கும் பிடிக்கும். ஆனால் ராஜா அளவுக்கு யாரும் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை.

நான் தமிழில் சிந்தித்து, தமிழில் பேசி, தமிழில் எழுதினாலும் அந்நியன். எனக்கு இந்த ராஜா மேட்டர் எல்லாம் புரிவதே இல்லை. அது எப்படி ஐயா, எங்கள் ரஜினியை உங்கள் நாட்டில் அப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று ஒரு ஜப்பானியரைக் கேட்டேன். ”தில்லி சாந்த்னி சௌக் பகுதியில் இன்னமும் மரத்தடியில் காது குரும்பி வைத்து காது அழுக்கு எடுக்கிறார்கள். மரத்தடியில் சவரம் செய்கிறார்கள். ரோட்டின் குறுக்கே மாடு சாவகாசமாக நடந்து போகிறது. இதெல்லாம் எங்களுக்குப் படு வியப்பாக இருக்கின்றன. அந்த மாதிரிதான் ரஜினியின் அங்க அசைவுகளும் பிடிக்கின்றன. மற்றபடி சினிமா நடிகர்களுக்கு ஜப்பானில் எந்த வரவேற்பும் இல்லை.”

“ஐயோ அப்படியா? என் நண்பரும் எங்கள் குரஸவா ரசிகருமான இயக்குனர் மிஷ்கின் குரஸவா சமாதியை முத்தமிட்டு, சமாதியிலேயே ஸாக்கே எல்லாம் குடித்துக் கொண்டாடினாரே, அதெல்லாம் அங்கே தலைப்புச் செய்தியாக வரவில்லையா?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டேன்.

என்னை அந்த ஜப்பானியர் பரிதாப உணர்ச்சியுடன் பார்த்து, “குரஸவாவா? திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்த பெயர் அது. நாங்களெல்லாம் புத்தகப் புழுக்கள். முராகாமிதான் எங்கள் ஹீரோ. குரஸவா இல்லை” என்றார்.

“ஐயோ, சென்னையிலிருந்து பறந்து சென்று குரஸவா சமாதியை முத்தமிட்டானே என் நண்பன் மிஷ்கின். அதை யாரும் பார்க்கவில்லையா? இங்கே பத்திரிகையில் புகைப்படம் வந்ததே?”

“பார்த்திருப்பார்கள். ஐயோ பாவம், பார்க்க நன்றாக இருக்கிறார். இப்படி wierdஆக நடந்து கொள்கிறாரே என்று நினைத்திருப்பார்கள்…”

ஆனாலும், உணர்ச்சிவசப்படுவது மனித இயற்கை. நீங்கள் ராஜாவுக்கு உணர்ச்சிவசப்படுவது போல, மிஷ்கின் குரஸவாவுக்கு உணர்ச்சிவசப்படுவது போல நான் லயனல் ரிச்சியின் இந்தப் பாடலுக்கு வசப்படுவது.

இந்தப் பாடலை இதே உணர்வுடன் பாடுகின்றவர்களுக்கு ”நான்தான் ஔரங்கசீப்…” வெளிவந்ததும் ஒரு பிரதி என் கையெழுத்திட்டு மேடைக்கு அழைத்துக் கொடுப்பேன். உச்சரிப்பில் ஒரு பிசகு இருக்கக் கூடாது.

(145) Lionel Richie – Hello (Live) – YouTube