இன்று தமிழில் பெருவாரியாக எழுதப்படும் எதார்த்த பாணி எழுத்து எப்படிப்பட்டது? அவ்வகை எழுத்தை உருவாக்குபவர்கள் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவத்தைப் போல் காண்பவர்கள் என்று கருதுகிறேன். மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது. அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கதைதான். ஆனால் சொல்லுகின்ற வடிவத்தை மாற்றியாக வேண்டும். உள்ளே இருக்கும் பாடுபொருளை மாற்றியாக வேண்டும். பார்க்கின்ற பார்வையை மாற்றியாக வேண்டும். இலக்கியத்தில், பிளாஸ்டிக் குவளைகளைப் போல் வண்ணத்தை மட்டும் மாற்றி மாற்றி ஒரே அச்சில் குவளை குவளையாக வார்த்துத் தள்ளிக் கொண்டிருக்க முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு கேலிச் சித்திரத்தைப் பார்த்தேன். எத்தனைக் காலம் ஆனாலும் மறக்க முடியாத சித்திரம் அது. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், இம்மானுவல் காண்ட், தெக்கார்த்தே, தாமஸ் அக்வினாஸ், ஸ்பினோஸா போன்ற தத்துவவாதிகள் ஒரு வட்ட மேஜையைச் சுற்றி அமர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மேஜையின் அடியில் ஒரு ஆள் வெடி குண்டு வைத்துப் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் கார்ல் மார்க்ஸ் என்று எழுதியுள்ளது. பேச்சளவில் இருந்த தத்துவத்தைச் செயல்பூர்வமாக மாற்றியவர் மார்க்ஸ். மார்க்ஸுக்கு முன்னதாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுரண்டக் கூடாது என்றும், மனிதர்கள் எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்றும் யாரும் சொன்னதில்லை. இவ்வாறாகவே புனைவெழுத்தில் பெரும் மாற்றத்தை, பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் எழுத்தையே நான் இலக்கியம் என்று கருதுகிறேன்.
நான் எழுதி வரும் பிறழ்வெழுத்து (Transgressive writing) அப்படிப்பட்டதுதான். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட எழுத்து வந்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது. மஹாபாரதம் முழுக்கவே பிறழ்வெழுத்துதான் என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றபடி இந்திய இலக்கியத்தில் பிறழ்வெழுத்து அறவே இல்லை. மேற்கில் கொஞ்சம் உள்ளது. மார்க்கி தெ ஸாத், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்களைச் சொல்லலாம். ஆனாலும் இவர்களையெல்லாம் படிக்க இயலவில்லை. சலிப்பூட்டுவதாக உள்ளது. இப்படிச் சொல்வதால் பிறழ்வெழுத்தை மட்டுமே நான் ஏற்றுக் கொள்பவன் என்று அர்த்தம் அல்ல. உலகின் மதிப்பீடுகளைக் கேள்வி கேட்க வேண்டும். தி. ஜானகிராமன் கேட்டார். எம்.வி. வெங்கட்ராம் கேட்டார். லா.ச.ரா. கேட்டார். (கேட்டது போல் தோன்றாது, ஆனால் கேட்டார். ஜனனி, பாற்கடல் எல்லாம் அப்படிப்பட்டதுதான்.) சி.சு. செல்லப்பா கேட்டார். (ஜீவனாம்சம்) நகுலன் கேட்டார். கு.ப.ரா. கேட்டார். கரிச்சான் குஞ்சு கேட்டார். க.நா.சு. கேட்டார். தஞ்சை ப்ரகாஷின் பொறா ஷோக்கு, கரமுண்டார் வூடு போன்ற படைப்புகளில் பிறழ்வெழுத்தின் சுவடுகள் உண்டு. மேலே குறிப்பிட்ட எல்லா எழுத்தாளர்களை விடவும் தஞ்சை ப்ரகாஷின் எழுத்து வீரியம் மிக்கது. அசோகமித்திரன் நேரடியாகக் கேட்கவில்லை. அவர் கேள்வி சூக்ஷ்மமானது. மானுட வாழ்வின் ஆதாரமான தத்துவச் சிக்கல்களை மேலோட்டமான சம்பவங்களை வைத்து எழுதிய மேதை அசோகமித்திரன்.
இதிலிருந்து நாம் எது இலக்கியம் என்று தெரிந்து கொள்ளலாம்.மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம். அராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும். ஓப்பன் பண்ணா நாவலின் வடிவம் பின்நவீனத்துவப் பாணியில் இருந்தாலும் அது ஒரு பின்நவீனத்துவ நாவல் அல்ல. அதில் வரும் உப பாத்திரமான உதவி இயக்குனர் அறிவானந்தத்தின் காதலி இந்த நாவலைப் பின்நவீனத்துவத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் ஏற்கனவே நாவலை வேறு ஒருவன் எடுத்துக் கொண்டு விட்டான். அவன்தான் இந்த நாவலையே இயக்கிக் கொண்டிருக்கிறான். அதனால் அவன் தன் உதவி இயக்குனனின் காதலியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னுடைய கதையைச் சொல்ல நம்மை அழைத்துக் கொண்டு போகிறான்.
இருந்தாலும் நாவலில் பின்நவீனத்துவத் தருணங்கள் ஏராளமாக உண்டு. உதாரணமாக, அறிவானந்தத்துக்கும் ஸ்ரீனிவாசனின் மனைவி நுகல்யாவுக்குமான ’நட்பு’ ஒரு அட்டகாசமான பின்நவீனத்துவச் சாயல் கொண்ட உறவு. தமிழ் நாவலுக்கும் தமிழ் வாழ்க்கைக்குமே அந்தத் தருணம் புதிது. ஏனென்றால், இதுவரை நாம் பார்த்தது ’ஒன்றும் ஒன்றும் ரெண்டு’ என்ற காவியக் காதல். அதில் மூன்றாவது நுழைந்தால் கள்ளக் காதல். எத்தனை தட்டையான வாழ்க்கை. எத்தனை தட்டையான பார்வை. இதை எழுதும் இலக்கியப் படைப்பும் தட்டையாகத்தானே இருக்க முடியும்?
ஆனால் ஓப்பன் பண்ணாவில் வரும் மூவர், நுகல்யா, ஸ்ரீனிவாசன், அறிவானந்தம். இந்த மூவரும் வரும் போது மட்டும் நுகல்யாதான் பிரதானம். அவள் தன் கணவன் ஸ்ரீனிவாசனையும், அறிவானந்தத்தையும் எப்படிக் கையாள்கிறாள் என்பது ஒரு முழு நாவலுக்கானது. அதை எழுதியிருந்தால் இது ஒரு பின்நவீனத்துவ நாவல். ஒரு இரவு நேரத்தில் நுகல்யாவும் அறிவானந்தமும் தோட்டத்தில் தனியாக மது அருந்திக் கொண்டிருக்கும் ஒரு காட்சியை மறக்கவே முடியாது. அப்போது நுகல்யாவும் அறிவானந்தமும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். எதிரே வெகு தொலைவில் இவர்களைப் பார்க்க முடியாத தூரத்தில் பால்கனியில் தனியாக ஸ்ரீனிவாசன். பின்னொரு நாள் அறிவானந்தத்திடம் ஸ்ரீனிவாசன் அந்த முத்தக் காட்சி பற்றிப் பேசுகிறான். திடுக்கிடும் அறிவானந்தத்திடம் சிரித்துக் கொண்டே ஸ்ரீனிவாசன் சொல்கிறான், ”என்னிடம் நுகல்யா எதையும் மறைக்க மாட்டாடா.” ஒரு மின்னல் தெறிப்பாக இந்த முக்கோண உறவின் அந்தத் தருணத்தை மட்டும் எழுதி விட்டு நாவல் ஸ்ரீனிவாசனின் பின்னால் விரைந்து ஓடுகிறது. அந்தத் தனியான மனிதனின் ’ஆன்வி’தானே இந்த நாவல்?
இங்கே இன்னொரு விஷயம். அராத்துவின் பொண்டாட்டி ஒரு அச்சு அசலான பின்நவீனத்துவ நாவல். ஆனால் அதை நாம் க்ளாஸிக் என்று வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், பின்நவீனத்துவ க்ளாஸிக் என்று சொன்னால் அது oxymoron. பின்நவீனத்துவத்தில் க்ளாஸிக்குகள் இல்லை. பின்நவீனத்துவ சிந்தனையே க்ளாஸிக்குக்கு எதிரானது. ஆனால் ஓப்பன் பண்ணா ஒரு துயர காவியத்துக்கான எல்லா மூலகங்களையும் உள்ளடக்கிய ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக். இந்த நாவலைப் படித்தவர்கள் இதன் நாயகன் ஸ்ரீனிவாசனையும் உதவி இயக்குனர் அறிவானந்தத்தையும் மறக்கவே இயலாது.
ஓப்பன் பண்ணா எப்படி ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் நாவல் ஆகிறது? எக்ஸிஸ்டென்ஷியலிஸத் தத்துவத்தின் மூன்று கருதுகோள்கள்: அபத்தம் (absurdity), பயம் (angst), ennui. இதில் மூன்றாவது விஷயத்தைப் பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறது ஓப்பன் பண்ணா.
‘அபத்த’மும் உண்டுதான். ஆனால் அது நாவலில் பிரதானம் இல்லை. முக்கியமாக ஒரு இடம். கோடிகளில் சம்பளம் வாங்குபவன் இயக்குனர் ஸ்ரீனிவாசன். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானவன். சம்பளம் பூராவும் நுகல்யாவுக்குச் சென்று விட இவன் கையில் பரம் பைசா இல்லாமல் குடிப்பதற்காக மட்டுமே அறிவானந்தம் அறைக்கு அடிக்கடி போகிறான். ஒரு உதவி இயக்குனரின் அறை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட அறைக்குப் போக வேண்டியிருக்கிறது கோடீஸ்வரன் ஸ்ரீனிவாசனுக்கு. அறிவானந்தத்திடம் எப்போதுமே பணம் இருக்காது. எங்கெங்கோ தேடிப் பிடித்து இரண்டு குவார்ட்டருக்குத் தோது பண்ணி குடிப்பார்கள். ஒருநாள் ஸ்ரீனி இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வருகிறான்.
டேய் அறிவு, இன்னிக்கு நாம் ஃபாரின் சரக்கே அடிப்பம்டா.
இருவரும் படு குஷியாக மதுக்கடைக்குப் போகிறார்கள். அங்கே போய் பணத்தை எடுத்தால் இருநூறு ரூபாய் நோட்டு. ஸாரிடா, நுகல்யாவுக்குத் தெரியாமல் அவள் பர்ஸிலிருந்து எடுக்கும் போது எது எந்த ரூபாய்னு தெரியாமப் போச்சுடா.
இந்தச் சம்பவத்தை என் மனதில் ஒரு ஆயிரம் முறையாவது திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்த்ததுண்டு. இப்படிப்பட்ட ‘அபத்தத்’ தருணங்கள் நாவலில் ஏராளமாக உண்டு. ஆனாலும் நாவல் ஸ்ரீனிவாசனின் ‘ஆன்வி’ நோக்கித்தான் ஓடுகிறது.
தமிழில் நான் வாசித்த அளவில் ஒப்பன் பண்ணாவில் பேசப்பட்ட அளவுக்கு ennui என்ற விஷயம் வேறு எந்த நாவலிலும் பேசப்பட்டது இல்லை. சொல்லப் போனால், ’ஆன்வி’ என்ற விஷயமே தமிழ் இலக்கியத்தில் இல்லை. ஏனென்றால், ’ஆன்வி’ என்ற அனுபவமே தமிழ் வாழ்க்கையில் இல்லை. இத்தனை சிறிய நிலப்பரப்பில் ஒன்பது கோடி மக்கள் வசித்தால் எப்படி ‘ஆன்வி’ வரும்?
Ennui என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தையின் பொருள் boredom. பாருங்கள், போர்டம் என்ற வார்த்தைக்கே தமிழில் வார்த்தை இல்லை. ஏனென்றால், அந்த அனுபவமே இங்கு புதிது. ஓப்பன் பண்ணாவின் கதையை அராத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் – முழு இரவும் பேசிக் கொண்டிருந்தோம் – சொன்னபோது இதை எழுதினால் மிக நிச்சயமாக ஒரு கிளாஸிக்காக அமையும் என்றேன். அதேபோல் வந்திருக்கிறது.
நாவலில் ஒரு கட்டம், கதை நாயகன் இயக்குனர் ஸ்ரீனிவாசன் மூன்று தினங்கள் ஒரே அறையில், ஒரே இடத்தில் அமர்ந்தபடி குடித்துக் கொண்டே இருப்பான். சாப்பிடக் கூட மாட்டான். சிகரெட்டும் உண்டு. தூக்கம்? அப்படியே நாற்காலியில் சாய்ந்தபடி சிறிது நேர உறக்கம். பின்னர் குடி. இத்தனைக்கும் அதே அறையில் அவனுடைய காதலி – பேரழகியான ஒரு நடிகை – கூடவே இருப்பாள். அவள் பாட்டுக்கு அவள் வேலையைப் பார்த்துக் கொண்டு இவனைப் பார்த்து அதிசயித்தபடி, துயரம் மேலெழ – அது துயரமாக இருக்கலாம் என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும் – போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பாள். அந்த மூன்று தினங்கள் நாவலில் வரும் இடம், உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.
‘ஆன்வி’ என்ற வார்த்தை அராத்துவுக்குத் தெரியாது. கதை நாயகன் ஸ்ரீனிவாசனுக்குத் தெரியாது. தேவையும் இல்லை. ஏனென்றால், பின்நவீனத்துவக் கதைகளை எழுதிய போர்ஹெஸ் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையை அறிந்திருக்க மாட்டார்.
ஆல்பெர் கம்யூவின் அந்நியன் நாவலை ’ஆன்வி’யின் உதாரணமாகச் சொல்கிறார்கள். ஆனால் ’ஆன்வி’ பற்றிய அந்நியனே என்னைப் பெரும் ‘ஆன்வி’யில் தள்ளியது. ஓப்பன் பண்ணாவில் அந்த சோகம் இல்லை. ஓப்பன் பண்ணாவின் ’ஆன்வி’ படு சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது இந்த நாவலின் கூடுதல் சிறப்பு.
சாரு நிவேதிதா சாந்தோம் 28.10.2021.
ஓப்பன் பண்ணா நாவல் விரைவில் ஸீரோ டிகிரி வெளியீடாக !