vibrations…

25 ஆண்டுகளுக்கு முன்பு. ஸீரோ டிகிரி வெளிவந்த நேரம்.  பல பத்திரிகைகளில் சர்ச்சையாக இருந்தது.  சீ அசிங்கம், மலம்.  இந்த மாதிரி.  தினமலரில் மட்டும் என் நண்பர் ரமேஷ் ஸீரோ டிகிரியிலிருந்து ஐந்து பக்கங்களை எடுத்து வாரமலரில் வெளியிட்டு, மணியார்டரில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள என் விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று புத்தகத்தை முழுமையாகவே படித்து விட்டுத்தான் செய்தார்.  800 மணியார்டர்கள் வந்தன.  (நான்தான் புத்தகத்தை வெளியிட்டவன்.  தமிழில் எந்தப் பதிப்பகமும் அதைப் பிரசுரிக்கத் தயாராக இல்லை.  எல்லா பதிப்பகங்களும் மறுத்து விட்டன!)  

அப்போது மற்றொரு பிரபலமான பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஸீரோ டிகிரி பற்றி ஒரு சிறிய குறிப்பை எழுதி ஆசிரியரிடம் கொடுக்கிறார்.  சர்ச்சை என்பதால் அந்தக் குறிப்பு எல்லோருடைய வாசிப்புக்கும் உரியது என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஆசிரியர் அதைப் படித்து விட்டு அவரிடம் கேட்டார், ஏம்ப்பா, இப்போது நீ எழுதியிருக்கும் இந்தக் குறிப்பை நம் பத்திரிகையில் வெளியிட்டால் புத்தக விற்பனை இன்னும் அதிகரிக்குமா? 

ஆமாம் சார். 

ஓ, அப்படியா என்றவர் உதவி எழுதிக் கொடுத்த குறிப்பை kill பண்ணி விட்டார்.  (பத்திரிகைத் துறையில் கில் என்றால் கிழித்துக் குப்பைக் கூடையில் போடுவது.) 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பெருமாள் முருகனுக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் மிரட்டல் விடுத்த போது நான் நண்பர்களிடம் சொன்னேன், இப்போதுதான் தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கண்டு கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்று.  ஏனென்றால், முருகனுக்கு நடந்தது ஸீரோ டிகிரிக்கே நடந்திருக்க வேண்டும்.  ஆனால் தமிழில் நீங்கள் சாதி, மதம் ஆகியவற்றைத் தொட்டால் மட்டுமே சமூகம் லேசாக நெளியும்.  இல்லாவிட்டால் குஷ்பு மாதிரி மைக்கில் பேச வேண்டும்.  எழுத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அது உங்கள் டயரியில் எழுதிக் கொள்வது மாதிரிதான்.  டயரிக் குறிப்பில் நீங்கள் என்ன எழுதினால் யாருக்குக் கவலை?

இப்படி எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியாத சமூகம் என்பதால்தான் தமிழ்ச் சமூகத்தை நான் அடிக்கடி philistine சமூகம் என்கிறேன்.   ஒரு சவூதி அரேபியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  சவூதி அரசர் அப்துர்ரஹ்மான் முனீஃபை நாடு கடத்தி விட்டாரே?  நம் ஊராக இருந்தால் மூன்று விஷயங்கள் நடந்திருக்கும்.   ஒன்று, முழு முற்றான புறக்கணிப்பு.  இரண்டு, கொலை மிரட்டல்.  மூன்று, (இது கொலையை விட பயங்கரம்), ரேப்பிஸ்டு அல்லது அது மாதிரியான வேறு பாலியல் குற்றம் சாட்டி வாழ்நாள் முழுமைக்கும் காலி செய்து விடுவது.  தருண் தேஜ்பாலுக்கு அதுதான் நடந்தது.  நல்லவேளை, அப்துர்ரஹ்மான் முனீஃபுக்கு நாடு கடத்தல் என்ற தண்டனை மட்டுமே கிடைத்தது.  பிறகு அவர் உலகப் புகழ் பெற்ற பிறகு அரசர் அழைத்தார்.  முனீஃப் மறுத்து விட்டார்.

தமிழ்நாட்டில் நடப்பது முழுமையான புறக்கணிப்பு.  அதுதான் எனக்கு நடந்தது.  இப்போது அராத்துவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.  விகடனில் அசோகமித்திரனை முழுமையாகத் தடை செய்து வைத்திருந்தார்கள்.  அதற்கு அடுத்து சாரு நிவேதிதாவைத் தடை செய்தார்கள்.  இடையில் ஆறு மாத காலம் அந்தத் தடை தளர்த்தப்பட்டது.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டிக்காக விகடன் அலுவலகம் சென்றிருந்தேன்.  ஆசிரியர் கண்ணனை சந்தித்தேன்.  மிகவும் நல்ல மனிதர்.  சமஸ் போன்ற பத்திரிகையாளர்கள் மனம் குளிர்ந்து நன்றி பாராட்டக் கூடிய அளவுக்கு சக பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உதவி செய்தவர் கண்ணன்.  கண்ணன் என்றால் எல்லோருமே நெஞ்சம் குளிரப் பாராட்டுவார்கள்.  ஆனால் நான் வாங்கி வந்த வரம் வேறு மாதிரி அல்லவா?  சொல்லி இருக்கிறேனே?  வள்ளலாராகவே இருந்தாலும் என்னை அந்த வள்ளலார் கத்தியால் குத்திக் கொன்று விடுவார் என்று?  நடமாடும் காந்தி என்று சொல்லத்தக்க வெளி ரங்கராஜனே என்னைத் திட்டி எழுதியிருக்கிறார்.  நான் வெளி ரங்கராஜனை இதுவரை பாராட்டி மட்டுமே எழுதியிருக்கிறேன்.  இன்னும் எழுதுவேன்.  இன்னொரு மகாத்மாவோ என்னைக் கன்னத்திலேயே அறைந்திருக்கிறார்.  அதிலும் பொறி கலங்குகிறாற்போல்.  காரணம் எழுதியிருக்கிறேன்.  என் புத்தகத்தில் ஃப்ரெஞ்ச்சில் குறிப்பு கொடுத்து விட்டேன் என்பதற்காக.  யார் அந்த எழுத்தாளர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது.  இப்படி நம்புவதற்கே சிரமமான விஷயமெல்லாம் எனக்கு மட்டும் நடக்கும். 

விகடன் கண்ணன் சொன்னார், இல்லை, காண்பித்தார்.  அவருடைய கணினியில் காலையில் நாற்காலியில் வந்து அமர்ந்ததும் சாரு ஆன்லைன் கண்களில் தெரியும்படி கணினியில் கொண்டு வந்து வைத்திருந்தார்.  அதைப் படித்து விட்டுத்தான் மற்ற வேலையெல்லாம்.  நானும் அப்போது தினமும் சாரு ஆன்லைனில் எழுதுவேன்.  அப்போது மனம் கொத்திப் பறவை விகடனில் வரவில்லை.  என் தொடர் எதுவுமே விகடனில் வந்ததில்லை.  எஸ்.ரா. தொடர்ந்து விகடனில் எழுதிக் கொண்டிருந்தார்.  எஸ்.ரா.வின் தொடர் நிறைவடையும் போது விகடனிலேயே யாராவது உதவி ஆசிரியர் எழுதுவார்.  எனக்கு அழைப்பே இருந்ததில்லை.  கண்ணன் என்று மட்டும் இல்லை.  என் மதிப்புக்குரியவர்களாக இருந்த ராவும் மதனும் இருந்த போது கூட எனக்கு அழைப்பு இல்லை.  இதனால் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் எழுதுவதில் ரொம்பத் தீவிரமாக இருந்தேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.  ஆனால் நாற்பது ஆண்டுக் காலமாக ஏன் பிரபல பத்திரிகைகள் ஏன் என்னை ஒதுக்குகின்றன என்ற ஆர்வம் எனக்கு இருந்தது.  இத்தனைக்கும் நாஞ்சில் நாடன், வண்ணதாசன் எல்லாம் தொடர்ந்து விகடனில் எழுதியவர்கள். 

கண்ணன் என் நண்பரும் கூட என்பதால் சிரித்துக் கொண்டே கேட்டேன்.  நீங்கள் இத்தனை விரும்பி என்னைப் படித்தும் எனக்கு ஏன் விகடனில் வாய்ப்பு தருவதே இல்லை?  அவர் சொன்ன பதிலை நான் இங்கே எழுத விரும்பவில்லை.  அந்த பதில் என்னை மிகவும் உயரத்தில் வைக்கக் கூடிய ஒரு பதில். 

கண்ணனைச் சந்தித்ததும், அவர் தினமும் சாருஆன்லைன் படிப்பதும் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  ஒருநாள் மது அருந்தியிருந்தேன்.  நள்ளிரவு.  மனத்தடையெல்லாம் நீங்கியிருந்தது. ஒரு கட்டுரை அளவுக்கு நீண்ட ஒரு மெஸேஜை கண்ணனுக்கு அனுப்பினேன்.  இரண்டு நாட்களில் எனக்கு அழைப்பு வந்தது.  மனம் கொத்திப் பறவை தொடரும் வந்தது.  சரியாக ஆறு மாதம்.  அதோடு சரி.  இன்று வரை நான் அங்கே தடை செய்யப்பட்ட எழுத்தாளன்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.  இனிமேல் அழைப்பு வந்தால் எழுத மாட்டேன்.  என் பயணத்தின் திசை மாறி விட்டது.

இன்னொரு சம்பவம்.  இலக்கியத் தரகரும் மிக நல்ல முறையில் புத்தகங்களை வெளியிட்டவருமான க்ரியா ராமகிருஷ்ணனின் சீடரான இன்னொரு தரகர்.  அவருக்கு சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பு ஒன்றைத் தொகுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தரகர்களுக்குத்தான் அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கும்.  தலையணை சைஸ் புத்தகம்.  அறிஞர் அண்ணா பி.ஏ.விலிருந்து ராஜாஜி, கல்கி, ஜெயமோகன், எஸ்.ரா., இமையம், விழி.பா. இதயவேந்தன் வரை தமிழில் சிறுகதை என்று எழுதிய அத்தனை பேரின் சிறுகதையும் அந்தத் தொகுப்பில் இருக்கிறது.  சாரு நிவேதிதா என்ற பெயரைக் காணோம்.  இவர் போடாவிட்டால் என் இலக்கிய வாழ்க்கை அஸ்தமித்து விடும் என்று நினைத்து விட்டது அந்த பனியா ஏஜண்ட். 

எனக்குக் கிடைத்தது போன்ற அதே விதமான புறக்கணிப்புக்கு ஆளானவர் அராத்து.  அத்தனை பேரும் திட்டுகிறார்கள்.  பிஞ்ஜ் செயலியிலும் அறிஞர் அண்ணா பி.ஏ.விலிருந்து கல்கி, லா.ச.ரா., சாண்டில்யன், இந்துமதி, சிவசங்கரி, ராஜேஷ்குமார், பெருமாள் முருகன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, ப. சிங்காரம், எஸ். செந்தில்குமார், அபிலாஷ் சந்திரன் என்று இருநூறு முந்நூறு பேர் எழுதுகிறார்கள்.  ஆனால் அராத்துவுக்கு மட்டும் தடை உத்தரவு.  நாற்பது அத்தியாயத்தோடு போறும் சார்.  இவருக்கா கேட்க வேண்டும்.  இருட்டுக் கடை அல்வா சாப்பிட்டது போல தனக்குக் கிடைத்த தடையை விருது போல் நினைத்து எடுத்துக் கொண்டார்.  

இத்தோடு போயிருந்தால் இந்தப் பதிவை எழுதியே இருக்க மாட்டேன்.  அராத்துவோடு சேராதீர்கள் என்று வேறு நெருக்கடி.  கெட்டுப் போய் விடுகிறேனாம்.  என் வயது 68.  என்னைக் கெடுக்கும் அளவுக்குப் பெரிய ஆளா சீனி என்று நினைத்துக் கொண்டேன்.  நான்தான் இரண்டு ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியிலேயே போகவில்லையே? அவர் எப்படிக் கெடுக்க முடியும்? 

Vibrations என்று பதில் வந்தது.  ஓ, நித்தியானந்தாவை விடப் பெரிய ஆளா சீனி?  அப்படியானால் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் அவரோடு பேசுவதில்லை.  எப்படிப் பேசுவது?  அவர் காலை ஆறு மணிக்குத் தூங்கி மதியம் இரண்டுக்கு எழுந்து கொள்பவர்.  காலையில் வாக்கிங் போகும்போது பேசலாம் என்றால் அது பற்றி நினைக்கக் கூட இயலாது. 

எனக்குமே சீனியோடு பழகுவது பிடிக்கவில்லைதான்.  ஆனால் வைப்ரேஷனெல்லாம் காரணம் இல்லை.  அவருக்குத் தோழிகள் அதிகம்.  அதனால்தான் அவரோடு சகவாசம் வைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.   துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது மூத்தோர் மொழி.  கடந்த பதினைந்து ஆண்டுகளாக எனக்குத் தோழி கோழி எதுவும் கிடையாது.  இதை என் உயிர் மூச்சாகக் கருதும் எழுத்து மீது சத்தியமாகச் சொல்கிறேன்.  வுட்டேன்.  வுட்டேன்.  ஆக, நம்மிடம் இல்லாதது இன்னொருத்தனிடம் இருந்தால் பிடிக்குமா?  அதனால்தான் சீனியைப் பிடிக்காது.  இன்னொரு முக்கியமான காரணம், சத்தமாகப் பேசுவது.  சத்தமாகப் பேசுபவர் யாரோடும் நான் நட்பு பாராட்டுவதில்லை. 

ஆனாலும் மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் சகித்துக் கொண்டு ஏன் சீனியோடு பழகுகிறேன் என்றால், அவர் இடத்தை நிரப்ப ஆள் இல்லை.  உதாரணமாக, அவர் சொன்ன உபாயத்தைப் பின்பற்றியதால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீலே செல்ல முடிந்தது.  இல்லாவிட்டால் சீலேவும் செல்லாமல், இந்தக் கொரோனாவும் வந்திருந்தால் மனசு வெம்பி வெம்பியே செத்திருப்பேன்.  அம்மாதிரி ஒரு உபாயத்தைச் சொல்ல என் வாழ்வில் சீனியை விட்டால் வேறு ஆளே இல்லை.  இது லௌகீகம் அல்ல.  சீலே என் இலக்கிய ஈடுபாட்டோடு சம்பந்தப்பட்டது. 

லௌகீகமாகவும் அவர் அளவுக்கு எனக்கு ஆலோசனை சொல்ல ஆள் இல்லை.  ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.  உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.  அதனால் இலக்கிய உதாரணத்துக்கே சென்று விடுவோம்.  ஔரங்கசீப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  மது, மாது விஷயங்களின் பக்கமே செல்லாதவர்.  மட்டுமல்ல.  நகைச்சுவை உணர்வும் இல்லாத கடுமையான ஆள்.  அவரது முதல் திருமணத்தின் போது ஹென்னா வைபவத்தில் ராஜபுத்திரப் பெண்கள் அவரைக் கடுமையாகக் கிண்டல் செய்கிறார்கள்.  எல்லாம் பாலியல் கிண்டல்.  அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத ஔரங்கசீப்புக்கு அத்தனை பெண்களின் கேலி கிண்டலையும் கேட்டு வேர்த்து விறுவிறுத்துப் போய் விடுகிறது.  அந்தப் பெண்களின் கேலிக்கு பதில் சொல்ல வேண்டும்.  ஆதி சங்கரர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அரசனின் சரீரத்தில் வாழ்ந்து பதில் சொல்லி விட்டார்.  ஔரங்கசீப் சாதாரண மனிதர் ஆயிற்றே? 

இந்தப் பாலியல் கிண்டல் கேலியெல்லாம் எங்கள் ஊரில் சுண்டு விரல் சமாச்சாரம்.  பெண்களிடம் கேட்டால் ஆயிரம் பக்கத்துக்கு அள்ளி விடுவார்கள்.  நானுமே கிட்டத்தட்ட ஔரங்கசீப் மாதிரிதான் வாழ்ந்து வருவதால் ஒரு எழவும் தெரியவில்லை.  பாலியல் ரீதியாக என்ன மாதிரி கிண்டல் செய்வார்கள்.  என்ன மாதிரி பதில் சொல்வார்கள்.  ராஸ லீலாவில் பிரித்து மேய்ந்திருப்பேன். ஒரு பெண்மணி ஒரு அப்புராணியிடம் விபூதிச் சிமிழை நீட்டுவாள்.  இவன் விரலை உள்ளே விடுவான்.  எட்டாது.  இன்னும் நன்னா விடுங்கோ சீனிவாசன், அப்போதான் எட்டும் என்பாள் அந்தப் பெண்.  நட்ட நடு ஹாலில்.  அத்தனை ஆண்களின் எதிரே.  சீனிக்கு மானம் போய் விடும்.  இது ஸ்டெனோ சீனி.  நம்முடைய சீனி அல்ல. அது ஒரு காலம்.  இப்போது நானே ஔரங்கசீப்.  என்ன எழுதுவதென்று புரியவில்லை.  நானும் சீனியின் (நம் சீனி) வைப்ரேஷன்ஸை நினைத்து அவரைத் தவிர்த்து விட்டு, வேறு யார் யாருக்கோ போன் போட்டு சிச்சுவேஷனை சொல்லி வசனம் கேட்டேன்.  எல்லோரும் கடவுளே கடவுளே என்றும் அல்லாஹ் அல்லாஹ் என்றும் கதறியபடி சிதறி ஓடி விட்டார்கள்.  ஒரு பெண்ணையும் கேட்டேன்.  அட போங்கப்பா, உங்களுக்கு எத்தனை வயசுங்கிறதே அடிக்கடி மறந்து போய்ட்றது என்று அலுத்துக் கொண்டார் அவர்.  சே சனியன்களா என்று மனதில் திட்டியபடி bad vibrations வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து சீனிக்கே போன் போட்டேன்.  மாலை மணி நான்கு.  சிச்சுவேஷன் சொன்னேன்.  இதோ, இப்போதுதான் காலைக் கடன்களை முடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் அழைக்கிறேன் என்றார்.  காலையில் தூங்க எட்டு மணி ஆகி விட்டதாம்.  நாலரைக்கு அழைத்து பதினைந்து வெவ்வேறு சீண்டல்களைச் சொன்னார்.  (இதற்குத்தான் தோழிகள் சூழ இருக்க வேண்டும் என்பது என்று நினைத்துக் கொண்டேன்!)

இந்த மாதிரி ஆயிரக்கணக்கில் உதாரண சம்பவங்களைச் சொல்லலாம்.  இப்போது இதை எழுதக் காரணமான விஷயத்தைச் சொல்ல வேண்டிய இடம் வந்து விட்டது.  ஆறு மாதத்துக்கு முன்பு இன்னொசெண்ட் என்று ஒரு வெப் சீரீஸ் உள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.  நான் ஒரு வெப்சீரீஸ் ரசிகன்.  முக்கியமான வெப்சீரீஸ் அனைத்தும் பார்த்து விட்டேன்.  கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பார்க்கவில்லை.  எட்டு எபிசோட்தான் சீக்கிரமே முடிந்து விடும் என்றார்.  மற்ற சீரீஸ் எல்லாம் ஒரு சீசனுக்கு முப்பது எபிசோட் என்று எட்டு சீசன் இருக்கும்.  சின்னது என்பதால் அவர் சொன்னதுமே பார்க்க முயன்றேன்.  அரை மணி நேரத்துக்கு மேல் பார்க்க முடியாமல் விட்டு விட்டேன். 

இடையில் ஒருமுறை சொன்னார்.  பார்க்கிறேன் என்றேனே தவிர பார்க்கவில்லை.  இரண்டு நாட்களுக்கு முன்பு போன் செய்து பாருங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார்.  சீனி வெப்சீரீஸ் பார்ப்பவர் அல்ல. வெப்சீரீஸ் பார்க்கும் பழக்கம் உள்ள நண்பர்கள் எனக்கு ஏராளம்.  ஆனால் அவர்கள் சொன்ன ஒரு சீரீஸ் கூட இதுவரை எனக்குப் பிடித்ததாக இருந்ததில்லை.  ஜீஓடி மட்டும் விதிவிலக்கு.  அது ஒரு தனி ரகம்.  ஈடு இணையில்லாதது.  சீனி இத்தனை நிச்சயமாகச் சொன்னதால் நேற்று பார்க்க அமர்ந்தேன்.  எனக்கு ஔரங்கசீப்பிலிருந்து ஒரே ஒரு நாள் விடுப்பு தேவைப்பட்டது. 

எட்டு எபிசோட்.  பல இடங்களில் நெஞ்சு வலி வந்து, சீரீஸை நிறுத்தி விட்டு, பத்து நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகுதான் பார்க்க முடிந்தது.  இப்படி ஒரு த்ரில்லரை இதுவரை பார்த்ததில்லை.  அது மட்டும் அல்ல.  மரியோ பர்கஸ் யோசாவின் நாவல் படிப்பது போல் இருந்தது.  என்னுடைய வெப்சீரீஸ் அனுபவத்திலேயே ஜீஓடிக்கு அடுத்து சொல்லக் கூடியது இன்னொசெண்ட்தான்.  ஒரு கமர்ஷியல் த்ரில்லரே பேரிலக்கியம் போல் இருந்ததைப் பார்த்தேன்.  பல இடங்களில் நெஞ்சு ரணகளம் ஆனது.  இனிமேல் செக்ஸ் க்ளப்புகளில் பார்க்கும் பெண்களை இந்த சீரீஸை நினைக்காமல் பார்க்க முடியாது.  நேரம் இருந்தால் இந்த சீரீஸ் பற்றி நிறைய எழுத முடியும்.  மொத்தம் எட்டு பாத்திரங்கள் தங்களைப் பற்றிச் சொல்லுகின்றன.  அதில் ஒருத்தன் – தன் மகனைப் பறி கொடுத்தவன் – தன் மகனைக் கொன்றவன் மீது வெறுப்பு கொண்டு எப்படியெல்லாம் சீரழிகிறான் என்ற எபிசோடில் வெறுப்பு எத்தனை கொடிய நோய் என்பது நமக்குப் புரிகிறது.  இன்னொசெண்ட் ஒரு கமர்ஷியல் க்ளாஸிக்.  தெ இன்னொசென்ட் என்று தேட வேண்டும்.  வெறும் ‘இன்னொசெண்ட்’ என்ற பெயரில் ஒரு மொக்கை சீரீஸ் உள்ளது.  அதில் நுழைந்து விடாதீர்கள்.  தெ இன்னொசெண்ட். 

சீனியின் வைப்ரேஷன்ஸை நினைத்து பயந்து பழகாமல் விட்டால் இதையெல்லாம் யார் சொல்லுவார்?  Goddamnit.