தஸ்தயேவ்ஸ்கியைச் சூதாடி எனச் சொல்லுங்கள்…

என் வாசகர் வட்ட நண்பர்கள் வெறும் குடிகாரர்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள், சாருவின் அல்லக்கைகள் என்று பல நண்பர்கள் என்னிடமே சொல்லக் கேள்விப்படுகிறேன். என்னையே இத்தனை நாள் தமிழ்ச் சமூகம் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருந்தது? சமீபத்தில் கூட ஒரு சின்னப் பையன் அப்படித்தானே சொன்னான்? சின்னப் பையன்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தச் சின்னப் பையர் ஒரு மதிப்புக்குரிய சிறு பத்திரிகை/இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும், என் மதிப்புக்குரிய பல எழுத்தாள நண்பர்களுக்கு அந்தச் சின்னப் பையர் ஆப்த நண்பராகவும் இருந்ததால்தான் மன உளைச்சல் ஆனது. அவர் மீது ஒரு கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்குத் தொடுப்பதாக இருந்தேன். அதற்குப் பத்து லட்சம் ரூபாய் நீதி மன்றத்தில் கட்ட வேண்டும். தாங்கள் கட்டுவதாக நண்பர்கள் முன்வந்தனர். இப்படி போகிற போக்கில் எழுத்தாளர்கள் மீது சாணி அடிப்பதை நிறுத்த அந்த வழக்கு உதவும் என்று நம்பினேன். பணம் இருந்தாலும் நேரம் இல்லை. அதை விட முக்கியமான காரணம், அந்த ஒரு வழக்கின் மூலம் அந்தச் சின்னப் பையர் சே குவேரா ரேஞ்சுக்கு ஹீரோ ஆகி விடுவார் என்று தோன்றியது. ஏற்கனவே அபிலாஷ் போன்ற நண்பர்கள் அவரை ஹீரோ லெவலுக்குக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் ஹீரோ ஆகலாம். அது தங்கள் உழைப்பின் மூலம் நடக்க வேண்டும். ஆனால் என் மீது சாணி அடித்து, அதை நான் எதிர்ப்பதன் மூலம் ஹீரோ ஆவது குறுக்கு வழி. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். இப்போது அன்னாருக்குப் பரிவட்ட மரியாதை நடக்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நல்லதுதான். அப்படித்தான் நடக்க வேண்டும்.

இப்போது இந்தக் குடிகாரக் கும்பலுக்கு வருவோம். என் வாசகர் வட்டத்தின் குடிகாரர்கள். எனக்குத் தெரிந்து ஷோபா சக்தி கடும் குடிகாரர். ஆனால் நவீனத் தமிழ்ச் சிறுகதையின் மிக முக்கியமானவர் என்று இன்றைய எழுத்தாளர்கள் எல்லோராலும் விசேஷிக்கப்பட்டவர். அவர் குடித்தால் என்ன, குடிக்காவிட்டால் என்ன? அ. மார்க்ஸ் ஒருமுறை சொன்னார், சாரு மாதிரி யாருமே குடிக்க முடியாது என்று. ஏன் செல்லக்குட்டிகளா, குடிப்பதை வைத்தா இலக்கியத்தை அளக்கிறீர்கள்? தி. ஜானகிராமனும் அவரது இன்ன பிற சகாக்களும் மைலாப்பூர் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் வெற்றிலையும் புகையிலையும் போட்டுக் கொண்டு இரவு பூராவும் பேசிக் கொண்டிருக்கவில்லையா? மௌனியும் அவரது சகாக்களும் (க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், இன்ன பிறர்) சிதம்பரத்தில் அவர் வீட்டில் இரவு பகல் பாராது பேசிக் கொண்டிருக்கவில்லையா? அதில் மௌனி மட்டும் இடைக்கிடையே போய் சாராயத்தை ஊற்றிக் கொண்டு வந்து விடுவாராம். நகுலனுக்கு பிராந்தியும் சாராயமும் சுவாசம் மாதிரி. இன்னும் இதேபோல் ஐம்பது பக்கம் எழுதிக் கொண்டே போகலாம்.

என் வாசகர்களில் பாதிப் பேர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இல்லை.

என் எழுத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலர் உளர். ஆரம்பமே ஷோபா சக்திதான். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலைப் படித்துத்தான் தானும் எழுதலாம் என்றே தோன்றியதாக அவர் சொல்லியிருக்கிறார். பிறகு கருந்தேள் ராஜேஷ், அராத்து, சாதனா (பெர்லின்), வளன் அரசு,காயத்ரி ஆர் என்று பலர் உண்டு. பலருடைய பெயர் என் ஞாபகத்தில் கூட இல்லை. இவர்களில் சாதனாவும் வளனும் மிகவும் இளையவர்கள். இப்போது கூட யூதாஸ் என்ற வளனின் நாவலைப் படித்தேன். ஒரு தஸ்தயேவ்ஸ்கி நாவலைப் படிப்பது போல் இருந்தது. சாதனா பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்னும் நீங்கள் பெயர் அறியாதவர்களாக ஏகப்பட்ட பேர் உண்டு. உதாரணமாக, சிசிஃபஸ் என்ற பெயரில் எழுதி வரும் கார்த்திக் பிச்சுமணி. இவர் ஒரு புத்திஜீவியும் கூட. எனக்கு ஏற்படும் பல சந்தேகங்களை நான் கார்த்திக்கிடம்தான் கேட்கிறேன். நிர்மலும் என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவரே. கத்தரில் வசிக்கிறார்.

எத்தனையோ பேர் எழுத்தாளர் ஆகலாம். ஆனால் என்னிடமிருந்து உருவானவர்கள் வாழ்க்கையையும் எழுத்தையும் புதிய பாணியில், புதிய முறையில் காண்கிறார்கள். அந்தப் பார்வை, அந்தப் பாணி, அந்தக் கோணம் இதுவரையிலான 3000 ஆண்டு இலக்கியப் பாரம்பரியத்தில் இல்லாதது. அதை அவர்கள் என்னிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், கடற்கரை என்ற கதையில் ஆலன் ராப் க்ரியே என்ன செய்திருக்கிறார்? அது இலக்கியத்துக்குப் புதிது. அது உத்தி அல்ல. வாழ்க்கை பற்றிய புரிதல். உத்தி என்று புரிந்து கொள்பவர் பழமைவாதி.

இப்படி என் பள்ளியில் பயின்று இன்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒரு டஜனுக்கும் மேலே இருப்பார்கள். உங்களுக்கு நான் சொல்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், தற்கொலைக் குறுங்கதைகள் என்ற புத்தகத்துக்கு நான் எழுதியுள்ள நீண்ட முன்னுரையைப் படியுங்கள். புரியும்.

எல்லாவற்றையும் விட என்னுடைய முக்கியமான சாதனை என நான் கருதுவது என்னவென்றால், என்னுடைய வாசகர் ஒருத்தர் கூட அப்துல் கலாம் எத்தனை பெரிய சிந்தனையாளர் தெரியுமா என்று உளற மாட்டார். ராஸ லீலா படித்திருக்கிறீர்களா? அதில் வரும் சந்த்ரு என்ற குமாஸ்தா சூர்யாவிடம் வந்து நீர்யானையின் குரலில், “Are you come for lunch, Arivalagan?” என்று கத்துவான். அப்படிப்பட்ட அசட்டு மூடர்களையே நான் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் காண்கிறேன். என்னுடைய ஒரு வாசகர் கூட அப்படிப்பட்டவர் அல்ல என்பதில் நான் பெருமையே கொள்கிறேன்.

எனவே திரும்பத் திரும்ப தன் வாசகர்களால் சாரு கெட்டுப் போகிறார், சாருவின் வாசகர்கள் குடிகாரர்கள் என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதீர்கள். அது உங்கள் அறியாமையைக் காண்பிக்கிறது. மேலும், எனக்குத் தெரிந்து சாக்ரடீஸின் மீதும் இப்படிப்பட்ட புகார்கள் வந்தது உண்டு. இளைஞர்களைக் கெடுக்கிறார் என்பது அதில் முக்கியமான புகார். எனக்கான புகார் தலைகீழ். வாசகர்கள் என்னைக் கெடுக்கிறார்கள்!

பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்களெல்லாம் எப்படி வாழ்ந்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள் ஐயா. நான் என்ன பஜனை மடமா நடத்திக் கொண்டிருக்கிறேன்? நான் செய்வது ஒரு வகையான decanonization. அதாவது, புனிதப்படுத்தலுக்கு எதிரான செயல். Deificationக்கு எதிரான செயல். எல்லா வகையான புனிதப்படுத்தலையும் என் எழுத்து எதிர்க்கிறது. இதில் குடும்பங்களாகச் சேர்வது கடினம். ஏனென்றால், நான் குடும்ப அமைப்புக்கே எதிரானவன். குடும்பம் என்பதே புனிதப்படுத்தப்பட்ட ஒரு இறுக்கமான அமைப்புதான். எனவே மேல்பார்வைக்கு என் நண்பர்கள், வாசகர்கள் குடிகாரர்களைப் போல்தான் தெரிவார்கள். அவர்கள் குடிகாரர்கள் என்று குற்றம் சொல்பவர்கள் இனிமேல் தஸ்தயேவ்ஸ்கியைச் சூதாடி என்று எழுதுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன், தமிழில் ஆலன் ராப் க்ரியே அளவுக்கு மிகப் புதிதான பார்வையையும் – இது வரையிலான கதை சொல்லல் முறையை அடித்து நொறுக்கி விட்டுப் புதிய சொல்லாடலையும் முன்வைத்த எழுத்தாளர்களை உருவாக்கிய ஒரே தமிழ் எழுத்தாளன் நான்தான். எனவே இவர்களையெல்லாம் படிக்காமல் திரும்பத் திரும்ப குடிகாரர்கள், குடிகாரர்கள் என்றே உளறிக் கொண்டிருக்காதீர்கள்.

***

இந்த மாதம் நான் காணாமல் போனதால் சந்தா/நன்கொடைகளும் காணாமல் போய் விட்டன. பூனை உணவுக்கான செலவு தலைக்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது.

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai