சுமார் இரண்டு வார காலமாக நான் இந்தப் பக்கம் வரவில்லை. ஒரு வாரம் வெளியூர் சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தனை நாட்களுக்கு நான் வெளியூர் சென்றது இதுவே முதல் முறை. இது போக ஏர்டெல் இண்டர்நெட் தொடர்பு ஒரு வாரமாக இல்லை. எவ்வளவோ புகார் செய்தும், ட்விட்டரில் திட்டியும் ஒரு பயனும் இல்லை. எல்லோரும் அரசு அலுவலகங்களைத் திட்டுவார்கள். விகடனில் ஒரு ஆயிரம் ஜோக்காவது படித்திருப்பேன். ஆனால் தனியார் நிறுவனங்கள் படு பயங்கரம். அரசு அலுவலகத்திலாவது சிபாரிசு, லஞ்சம் போன்றவற்றால் காரியம் நடக்கும். தனியார் நிறுவனங்கள் ரோபோக்களால் நடத்தப்படுபவை. அங்கே பணியாற்றுவோர் பெரும்பாலும் ரோபோக்கள். அவர்கள் கொடுக்கும் மன உளைச்சலில் போன் செய்தால், மிக இனிமையான குரலில், மிக அழகிய ஆங்கிலத்தில் நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று கேட்பார் ஒரு பெண். ஒரு வார காலம் இணைப்பு இல்லாமல், ஒரு நூறு போன் செய்து, மனம் நொந்து கிடக்கையில் அப்படி ஒரு குரலில் கேட்பார் பெண். அவருக்கு நாம் சொல்லும் எதுவுமே புரியாது. அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான் பேசுவோம். ஆனாலும் புரியாது. அப்புறம் ஆங்கிலத்திலேயே ஓத்தாம்பாட்டு விட்டால்தான் பதறுவார். ஐயோ, உங்களுக்கு என்ன பிரச்சினை என்பார்.
இதிலெல்லாம் ஈடுபடுவது நான் அல்ல. எல்லாம் அவந்திகாதான். எனக்கு இண்டர்நெட் இல்லாவிட்டால் புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவேன்.
கடைசியில் இன்று ஏர்டெல்லில் ஒரு நல்லவர் போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்டு ஐந்து நிமிடத்தில் சரி செய்தார். ஆக, ஐந்து நிமிடத்தில் சரி செய்யக் கூடிய பிரச்சினையைத்தான் ஏர்டெல் ரோபோ மனிதர்கள் ஒரு வாரம் இழுத்தடித்தார். நேற்று ஏர்டெல் இணைப்பையே திருப்பிக் கொடுக்க விண்ணப்பம் அனுப்பிய பிறகு இப்படி ஒரு நல்லவரை அனுப்பியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதை ஏன் ஐயா ஒரு வாரத்துக்கு முன்னாலேயே செய்திருக்கலாமே?
ஆனால் வாடிக்கையாளர்களை வதைப்பதில் ஹாத்வேயை யாராலும் மிஞ்ச முடியாது. அது தனிக் கதை.
நான் எங்கே எங்கே என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நண்பர்களுக்கு நன்றி…